நூல் அறிமுகம்: கலகல வகுப்பறை சிவாவின் ‘ஆசிரிய வாழ்வினிது’ – இரா.சண்முகசாமி
நூல் : ஆசிரிய வாழ்வினிது
ஆசிரியர் : கலகல வகுப்பறை சிவா
விலை : ரூ.60/-
ஆண்டு : அக்டோபர்-2021.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
பள்ளிகளில் ஆசிரியராய் வாழ்பவர்களுக்கு கிடைக்கும் மகிழ்வான வாழ்க்கை வேறு யாருக்கும் அப்படி அமையுமா என்பதில் சற்று சந்தேகமே.
ஆம் ஆசிரிய வாழ்வை வாழ்ந்து பார்த்தவர்கள் உலகையே புரட்டி போட்ட வரலாறுகள் எல்லாம் இப்போது உலகெங்கும் பரவிக் கிடக்கிறது.
டோட்டோ-சான் தலைமையாசிரியர் கோபயாஷி வாழ்வை வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்.
அமெரிக்க ஆசிரியர் மக்கோர்ட் வாழ்வை வாழ்ந்து ஆசிரிய முகமூடியை அகற்றியவர்கள் எத்தனை பேர்.
எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க? என்று குழந்தைகளின் மனதளவிலும் கேள்விய எதிர்கொள்ளாத ஆசிரியர்கள் எத்தனை பேர்.
இப்போதும் நெஞ்சினில் தன்னுடைய முதல் ஆசிரியரை சுமந்து வாழும் மாணவர்களின் ஆசிரியராய் எத்தனை பேர் உள்ளோம்.
மாணவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர்களின் உள்ளத்தை தொட்ட ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளோம்.
குழந்தைகளின் உள்ளத்தில் சிவப்பு பால்பாயின்ட் பேனா முள் குத்தாத ஆசிரியர்கள் எவ்வளவு பேர் உள்ளோம்.
குழந்தைகளின் மொழிகளை உள்வாங்கி அவர்களின் கற்றலுக்கு துணைபுரியும் ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளோம்.
ஆசிரியர்களை உள்ளன்போடு போயிட்டு வாங்க சார் என்று உருகிய மாணவர்களின் நெஞ்சில் இருக்கும் ஆசிரியர்கள் எவ்வளவு பேர்.
குழந்தைகளுக்கான உரிமைகள் பறிபோகாமல் பார்க்கும் இடத்தில், அவர்களுக்கான உரிய இடத்தினை வழங்கும் ஆசிரியர்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம்.
குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்? என்று உற்றுநோக்கி ஆராய்ந்து விடை கண்ட ஆசிரியர்கள் எவ்வளவு எண்ணிக்கை உள்ளது.
இப்படி நாம் ஆசிரியர் – மாணவர் உறவை தேடிச் சென்றால் ஆசிரியர் மனதில் எப்படியேனும் ஒருதுளி ‘ஆளுக்கொரு கிணறு’ இருப்பது உறுதியாகி விடும்.
அந்தக் கிணற்றை ஆசிரியர்களின் மனதில் இல்லாமல் செய்யவேண்டும் என்றால் அதற்கு மேற்சொன்ன ஒவ்வொரு பத்தியிலும் மறைந்திருக்கும் நூலோடு ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா அவர்கள் எழுதிய ஆசிரிய வாழ் அனுபவமும் நமக்கு பெரிதும் பயன்படும்.
எங்கெல்லாம் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே உரையாடல் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் ஆசிரிய முகமூடி அண்டவே அண்டாது.
அப்படி அண்டாமல் இருந்த உரையாடல்களைத்தான் தோழர் சிவா அவர்கள் நம்மோடு நூலாக பகிர்ந்துள்ளார்கள்.
இப்போதும் ஆசிரியர்கள் சிலர் ஆசிரியர்களோடு நெருங்கி பேசினால்’ ஆமாம் இப்படித்தான் ஒட்டிகிட்டு பேசுவியோ இதுதான் நீ ஆசிரியருக்கு கொடுக்கும் மரியாதையா’ என்று கேட்கும் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மாணவன் ஆசிரியர் சிவா அவர்களிடம் நெருங்கி கையை கட்டிக்கொண்டு பேசியபோது எதிரில் இருந்த ஆசிரியர் அந்த மாணவரை கண்டித்துள்ளார். சிவா அவர்கள் அம்மாணவனின் தலையை வாஞ்சையோடு தடவி என்ன என்று கேட்டபோது அந்த மாணவர் சொன்னது நமக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஆம் ‘என்னுடைய அப்பா செத்துபோயிட்டார் சார்’ என்று அம்மாணவன் கூறியவுடன் சிவா அவர்கள் அதிர்ச்சியாவார். மாணவர்களின் மனதில் எந்த ஆசிரியர் இருக்கிறாரோ அந்த ஆசிரியரிடம் தான் எவ்வளவு துரத்தினாலும் கிட்டேயே வருவார்கள். அனுபவ பூர்வமாக உணர்ந்த ஆசிரியர்களுக்கு இது நன்கு தெரியும்.
ஆசிரியர் சிவா அவர்கள் தன்னுடைய ஆசிரிய பணியில் மாணவர்களோடு வகுப்பிலும், வெளியிலும், போனிலும் நடைபெற்ற உரையாடலை மிக யதார்த்தமாக பதிவிட்டிருப்பார்.
அதில் ஒன்றேயொன்றிற்கு மட்டும் தோழர் சிவா அவர்களிடம் என்னுடைய சந்தேகத்தையும், அவருக்கே முடியாமல் போன காரணத்தையும் கேட்க விரும்புகிறேன். ஆம் அவரிடம் படித்த ஆணாக இருந்த மாணவன் ஒருவன் தன்னுடைய உடல் அணுக்களின் செயலால் பெண்ணாக மாறியபோது 12ஆம் வகுப்பு படித்திருந்தார். தேர்வு நெருங்கும் நேரத்தில் பள்ளிக்கு வராமல் சிலருடன் இணைந்து கடை கடையாக கைதட்டி காசு கேட்டிருக்கிறான். இதை கேள்விபட்ட சிவா அவர்கள் எவ்வளவோ முயன்றும் அம்மாணவரை பள்ளிக்கு வரவழைக்க முடியவில்லை. ‘உனக்கு தனியாக தேர்வறை ஒதுக்கச் சொல்கிறேன் வாப்பா’ என்று அம்மாணவனுடன் புதிய செல் எண்ணை கண்டுபிடித்து பேசியிருக்கிறார். உடன் அம்மாணவன் போனை துண்டித்துவிட்டு அதன்பிறகு போனை எடுக்கவில்லை. அவனுடைய வாழ்க்கை தேர்வாக அது இருக்கும் என்று அந்த உரையாடலை முடிப்பார்.
இந்த உரையாடலை படிக்கும்போது தோழர் #முஆனந்தன் அவர்கள் எழுதிய ‘கைரதி 377’ நூல் நினைவுக்கு வந்தது.
தோழர் சிவா அவர்களிடம் கேட்க விரும்புவது எப்படியாவது அந்த மாணவரை அணுகி நம்பிக்கை அளிக்கும் விதமாக ‘யாரையும் கேளி செய்ய விடமாட்டோம், மாணவர்களை ஒருங்கிணைத்து அம்மாணவருடன் உரையாட வைத்திருந்தால் அம்மாணவரின் வாழ்வில் ஒளி ஏற்பட்டிருக்காதா அதற்கான சாத்தியம் துளிகூட இல்லையா என்பதை தோழர் சிவா அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். சமூகத்தில் இது மிகப்பெரிய சவால் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் ஓர் ஆதங்கம்.
மாணவர்களோடு உள்ளன்போடு தோழர் சிவா அவர்கள் உரையாடிய உரையாடல்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அனைவரும் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.
– இரா.சண்முகசாமி