கள்ளப் புன்னகை கவிதை  – வளவ. துரையன்

கள்ளப் புன்னகை கவிதை – வளவ. துரையன்




உன் கேள்வியின் பொருள்
எனக்குப் புரிந்து விட்டது.

விடையையும் சொன்னேன்.
உனக்கு விளங்கவில்லை.

தேர்வறையில் அங்குமிங்கும்
பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய்.

கூட்டத்தைவிட்டுப் பிரிந்த
ஒற்றைக் கருப்பு வாத்து போல
அலைகிறாய் மனத்துள்ளே.

இங்கே போட மாட்டார்கள்
எனத் தெரிந்தும் யாசிக்கும்
இரவலனா நீ?

ஒரு கல்லைக் குளத்தில் எறிந்தால்
உருவாகும் நூறு வட்டஙக்ள் போல
நீ உருவாக்கிக் கொள்கிறாய்.

தெளிவான ஓடையினடியில்
தெரியும் கூழாங்கல் போல
என் பதில் தெரிந்தும்
கள்ளப்புன்னகை புரிகிறாய்.

எத்தனை நாள்கள் நடிப்பாய்?

காலம் கண்களை மூடிக்கொண்டு
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

– வளவ. துரையன்

Karkaviyin Kavithaigal 14 கார்கவியின் கவிதைகள் 14

கார்கவியின் கவிதைகள்

பெண் சுதந்திரம் அறிவோம்
**********************************
பெண்ணிற்கு சுதந்திரம் என்பது எல்லா இடங்களிலும் பேசலாம், ஆனால் எப்படி பேசவேண்டும்,என்ன பேசவேண்டும் எந்த விதத்தில் பேச வேண்டும் என்பது அறியாமல் பேசும் பெண்கள் பெண் சுதந்திரத்தை பற்றி பேசும் தகுதியை இழக்கின்றனர்…
ஆடை சுதந்திரம் பெண்ணை போற்றும் படி இருக்க வேண்டும்….!
பேச்சில் சுதந்திரம் பிறர் மனம் கவலைக் கொள்ளாத நிலையில் இருத்தல் வேண்டும்…..!
அனைத்திலும் சுதந்திரம் தேடும் பெண்… அனைத்தையும் நல்வினையில் சாதிக்கும் எண்ணம் கொண்டிருத்தல் வேண்டும்…

சுதந்திரமும் வேண்டும்…
சுற்றமும் தவறாக எண்ணும் அளவிற்கு இருத்தல் வேண்டும் என்றால் எவையும் சரியாகாது….!
வாழ்க்கையை வட்டத்திற்குள் வைக்க வேண்டாம்…
வழிமுறைகளை சரியாக கையாண்டால் போதும்…

பெண்மை..
பல இடங்களில் போற்றப்படுகிறது…!
பல இடங்களில் தூற்றப்படுகிறது…!

ஒவ்வொரு புள்ளியும் முற்றுப்புள்ளியே..!
***********************************************
அதீத தேடலில் நமது மனம் ஒருவரை வெறுக்கும்..
பலரை ஏற்கும்…!
மனித மனம் குரங்கின் பரிமாணம் எப்படியும் பழம் தீர்ந்தபின்பு அடுத்த மரம் பாய்ந்தே தீரும்….!

இருக்கும் வரை இனிக்கும் உறவுகள்..
சில நேரங்களில் இல்லாமை வருத்தம் சார்ந்த இன்ப கவலைகளே….!

நல்லவரை தீயவராக மிகை புரிந்தால் அவர் எவ்வகை நன்மை செய்தினும் தீயவனாகவே அனைவருக்கும் தோற்றமளிக்கிறார்…
தீயவரே ஆனாலும் நன்மை செய்வதை கண்டுவிட்டால் அவர் எத்தீமை செய்யினும் நன்பெயரை பெற்றுக்கொண்டே இருப்பார்….

ஒவ்வொரு சூழலிலும் நமக்குள் உண்டாகும் தயக்கம்…!
ஏதோ ஒரு நல்லதை நாம் தள்ளிபோடும் நிலைக்கு கொண்டு செல்லும்…
மனம் அறியாத பக்கங்கள்….

நேரம் வரும்
****************
நீண்ட நேரமாக வண்டியை உயவினைத் தூண்டும் மனிதனின் வியர்வை சோர்வில் அழுகிறது,
விழி பிதுங்கும் கண்ணீரில் அழுகிறது…!

அதைப் பார்த்துகொண்டே செல்லும் சாலைப்பயணி அருகில் சென்றதும. சற்று குணிந்து சில அடிதூரம் கடந்து தலையை நிமிர்த்துகிறார்…!
யாரும் காணாதது போல் திரும்பிக்கொண்டும், அலைபேசியை காதினில் அடைத்து திணித்துக்கொண்டும் நகர்கிறார்கள்..!
அனைத்தையும் பார்த்து சலித்த அந்த நபர் கோவத்தில் உதைக்கிறார் உயவுபொருள் இயந்திரத்தில் வழிக்கு வந்தது…

என்னவென்றெ அறியாத குழந்தை அருகில் வந்து தாத்தா நான் தள்ளிவிடவா என்றது…
அன்பில் நிறைந்த மனிதம் நம்மைத் தேடி வரும்..
அதற்கான நேரம் வரும்…

Nilaiyillatha kalathin varai padam Kavithai By Vasanthadheepan. நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை - வசந்ததீபன்

நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை – வசந்ததீபன்

கண்கள் தோட்டாக்களை
உமிழத் தயாராகிறது
இதயம் விசையை முடுக்க
தருணம் பார்க்கிறது
குறிக்குத் தப்ப
கனவுகள் முயல்கின்றன
நிலங்களைத் தின்கின்றன தொழிற்சாலைகள்
கிராமங்கள் கரைகின்றன
ஒளிய இடந்தேடுகின்றன பறவைகளும், மிருகங்களும்
துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது
சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும்
காலாற நடந்து செல்வது சுகம்
மர்மமுடிச்சு இறுகுகிறது
புனைவாளனின் மூளை வெடிக்கிறது
புழுக்கள் பேசிக்கொண்டு வெளியேறுகின்றன
எவள் எவளோடவோ திரிந்தவன்
அவளோட சேர வந்திருக்கிறான்
அவனோடு இணைய
அவள் தயாரில்லை
கடந்து தான் செல்ல போகிறோம்
கசிந்து உருகித் தேங்காதே
காட்டாற்று வெள்ளமாய் பிரவகித்திடு
நொடி மணியாக விரைகிறது
மணி பெருகி நாளாய் வழிகிறது
நாள் கடந்து கடந்து
மரணமாய் முடிகிறது
நிறங்களின் உடைவில்
சிறகுகள் துளிர்க்கின்றன
விரிவோடுகிறது வானம்
பெருங்களிப்பின் உற்சவ சீழ்க்கையொலி தெறிக்கிறது.
நீலப்பளிங்காய் மிளிர்கிறது
நீருக்குள் கிடக்கும்
வாளாய் ஒளிர்கிறது
முப்பாட்டனின் முகச்செழுமையாய் மரக்கா மலை
உடைந்த நீர்க்குமிழியாக
மறைந்து போனது பால்யம்
தானியங்கள் கொழித்த
இறந்த காலங்கள்
பேரன்பின் சுடருள் கருமை படர்கிறது
நிலங்கள் வழியாக
வாழ்க்கை நகர்ந்தது
தாவரங்களாகவே மனிதர்கள்
வேரற்று காற்றோடு அலைபடுதல் இக்கால நீங்கா சாபம்.

Karkaviyi kavithaigal 7 கார்கவியின் கவிதைகள் 7

கார்கவியின் கவிதைகள்

கதவிற்கு வெளியே பூட்டு
********************************
என்னை உறக்கத்தில்
போர்த்திவிட்டு
யாரோ ஒருவர் கனவோடு
நடைபோடுகிறார்…..!

உரக்கப் பேசியவர்
என் கதவுகளின் தாழ் சத்தத்தில் மேலும் பிதற்றுகின்றனர்…!

ஏற்காத இடத்தில்
முகத்தில் நீர் ஊற்றாமல்
கலைந்த கனவுகள் ஏராளம்…!

சாவி இடுக்கில் ஏதோ முணுமுணுப்பு
நான்தானா எனக் கேட்கிறது
உடலைப்பிரிந்து காது…!

காற்றாடியின் ஓசைக்கு
வழியிடும் காதுகளுக்கு
வயது முற்றிவிடுகிறது
சலிப்பின் காரணமாக….!

மொத்தம் எடையேறிய
விடயங்களுக்குப்
போர்வையைச் சேர்த்து

விடப்படுகிறது கதவிற்கு
வெளியே பூட்டு….!

அமாவாசையும் அந்த விட்டிலும்
**************************************
மொத்த இருட்டில்
பற்றிக்கொள்ளும் பயம்
ஊருக்கே வெளிச்சமூட்டும்
ஒரு நாள் விட்டில்

இருண்ட உலகில்
மௌன கீதங்கள்
அனாதையானது யாரும்
பயணிக்காத சாலை

இழுத்து அடைக்கப்பட்ட
கதவில்
சிறு வெளிச்சம்
படிந்த கை ரேகையில்
படரும் இருள்

வாசலில் அழைப்பு மணி
வயதாகி விடுகிறது அசதிக்கு
அறையும் வராந்தாவில்
இன்று வாசலிலும்

இருளும் விட்டிலும்
கொடுத்தது வெளிச்சம்
இன்னும் ஐந்து
நிமிடத்தில் ஆட்டம்

காலம் வெல்லும் காதல்
***************************
இரவுகளின் துணை கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டேன்…!
நீ
விளையாட வானத்தில்
நட்சத்திரங்கள் அழைத்து வந்தேன்….!

பிள்ளைகளின்
புத்தகத்தில் பருவப்பாடல் பாடி வந்தேன்….!
கனமான காற்றை
மடித்து கழுத்திற்கு
மணி ஆக்கிவிட்டேன்…!

வகைவகையாய்
இரவை சோடித்து
நட்சத்திரங்களை
ஆங்காங்கே புள்ளிகளிட்டேன்….!

புதிதாக பிறந்த குழுந்தைக்கு
புத்தாடை ஆகிவிட்டேன்…!
பளபளக்கும்
தண்ணீர் தடத்தில்
மீனின் தாகமாய்
மாறிவிட்டேன்…!

எல்லாம் மாறிய
என் குணத்தில்
காதலின் வடுக்களும்

நீ
நடந்து வந்த
தடங்களையும்
கண்ணீரில்
நிரப்பி
கால் நனைத்து
பருகிறேன்…

அன்பே
என்(நம்)
காலம் வென்ற காதலால்….!

கானல் நீர்
************
திடிரென எழும் கரடுமரடான
சத்தங்களுக்கு இடையில்
ரம்யமாக கேட்கிறது
“அ ஆ” பாடல் வரிகள்
ஆத்திச்சூடியை படித்தவாறு  முதுகுச்சுமை ஏற்றிய
குழந்தை நகர்கிறது..

இரும்பு சுத்தியல் கையில் ஏந்தி
அழுக்குத்துணியில்
காக்கை எச்சம் துடைத்து

கண்ணீரில் கரைந்துக் கொண்டே
இருக்கிறது
புத்தகம் ஏந்திய
கனவினை
மாலையடைந்தவுடன்
சம்பளத்தில் இறக்கி வைக்கும்
பள்ளி செல்லா குழந்தையின் கானல் நீர் மனம்….

இனிப்பு
**********
தினம் தினம் பள்ளி சொல்லும் பொழுதெல்லாம்
தானாக திருப்பப்படுகிறது
நாவோடு சேர்ந்த சிரம்…!

அரையனா எட்டனாக்களை சேகரித்து ஒரு ருபாய் மிட்டாய் கேட்கும் குழந்தை மனம்…!
கேட்பதெல்லாம் வாங்கி கொடுக்கும் பெற்றோர் மனம்….

இன்று கடையுண்டு
உள்ளே மனிதனுண்டு
பணமுண்டு அள்ளித்தர மணமுண்டு
பூப்பெய்த மறந்தவள் இல்லை
தினம் தோன்றிய ஆசை இல்லை
கடந்து போன ஆசை இல்லை
எறும்பு மொய்க்காது
புழுக்கள் குறையில்லாது
ஆறடி குழியில் உறங்கிக் கொண்டிருக்கும்…!

எங்கோ பிறந்து
காம எச்சங்களால்
மொய்க்கப்பட்ட
பாலியல் இனிப்புகளில்
சிக்கிய
குழந்தையின் கை இனிப்பு….!

சிறகை விரி சிகரம் தொடு
*******************************
விதைகள் வலிகள் காண்பதில்லை- வான்
மழையோ பெய்தலில் கரைவதில்லை…!

கதிரவன் சோர்வை ஏற்றதில்லை-இயற்கை எவையும் இயல்பற்று கடந்த்தில்லை…!
உயரங்கள் தலை நிமிர்வில் சுருங்குவதில்லை- உன்
அடியை உயர்த்தி வழி நடத்து வழிகள் பிறக்கும் உன் பாதம் தொட்டு…!

வரப்புகளில் இல்லாத ஈரம் பயிர்களுக்கு கண்டிப்பாக உயிர் கொடுக்காது
நம் கோள வடிவ கோளத்தில் குடைகள் எதற்கு
துணிந்தெழு…!

புறாக்கள் எப்போது கழுகாக இயலாது..
கழுகிற்கு பதில் புறாக்கள் வீடடங்காது..
இரவு ஆந்தையாய் மட்டும் வாழ்ந்து விடாதே….!

முதுகெலும்பினை கிழித்தெறி-உன்
நம்பிக்கை சிறகு முளைக்கட்டும்,
உன் வேற்றி சிகரம் தொட பறக்கட்டும்…

முதற்சுழி மழையே
**********************
வீதியெல்லாம்
கோலமானப் பிறகு
மார்கழிக்கு
குறையேதும் இல்லை…!

நிரம்பிய நீரில்
நித்தம்
கோலமாடுகிறது
ஏழைகளின்
வறுமையை
வடம்பிடிக்க வந்த

வகையில்லாத
ஆற்றோட்டத்தில்
வைக்காத புள்ளிகளாய்
ரங்கோலிகளை
வண்ணங்களாய் எடுத்துக் கொண்டு
சிக்கு கோலங்களின்
ஊடு புள்ளிகளை
வகையில்லாமல்
வைத்து செல்கிறது
இந்த மழை எனும்
இயற்கை…..

தாமரையில் விரல் பிடித்த அல்லி
*************************************
ஒவ்வொரு
படிகளையும்
தொட்டுச் செல்கின்றன
தாய்மையும்
சேய்மையும்…!

நிலாக்கள்
நீருற்றிய பாதையில்
வலம் வருகின்றன…!

தாமரை
கரம்பிடித்த அல்லி
புத்தாடை போர்த்திக் கொண்டு
முன்னேறுகிறது
வானை நோக்கி….!

அனைத்து
பாதச்சுவடுகளிலும்
அன்பின் நீர்த்துளிகள்
பருகிச் செல்கின்றன
ஈரம் சுரக்காத
பாறைகள்….!

முன்பின் தெரியாத
பலருக்கு பின்பக்க விதிமுறைகளை மட்டும்
அழகியல் சொல்லி நடக்கிறது
கண்களுக்கு காதல் விருந்தாய்……!
தாயும் சேயுமாய்
அன்புகள் ஆங்கே நடைபயணம்…..!

Kathalithu Paar Poem By Savibi Rosichandra காதலித்துப் பார் கவிதை - சரவிபி ரோசிசந்திரா

காதலித்துப் பார் கவிதை – சரவிபி ரோசிசந்திரா




பேசாத மௌனமொழிக் கவிப்பாடும்
நினைவுகளில் நெஞ்சம் களிப்பாடும்
தென்னங்கீற்றில் சுவாசம் சூடேறும்
சிந்தும் புன்னகையில் தேனூறும்
வட்டில் உணவின்றி வயிறு நிறையும்
கண்ணீரில் மனக்காயங்கள் குறையும்

தியானம் செய்யாமல் தத்துவம் பிறக்கும்
கிறுக்கல்கள் எல்லாம் கவிதையாய் உருவெடுக்கும்
கடுங்கோடையில் பூ மேனிக் குளிரும்
யாருமின்றி அழகியப் பூவிதழ் உளறும்
கட்டாந்தரையில் இனியக் கனவுகள் மிதக்கும்
பிடிக்காதது எல்லாம் இப்போது பிடிக்கும்

காதலித்துப் பார்
உளியின்றி சீரியச் சிற்பம் வடிப்பாய்
உள்ளம் உருகி மெழுகாய் ஒளிர்வாய்
கடிதத்தை எழுதி கசக்கி எறிவாய்
எறிந்ததை மீண்டும் படித்து ரசிப்பாய்
சிறியமுள் வேகமாய்ச் சுற்றிடுவதாக நினைப்பாய்
பாகற்காயைத் தேனமுதாய்ச் சுவைப்பாய்

விண்ணின்றி முகிலில் வெண்ணிலவு
தெரியும்
இரவில் நட்சத்திரங்கள் சீக்கிரம் மறையும்
கைக்கோர்த்து நடக்கையில் சாலைகள்
விரியும்
விழி அசைவில் வலிகள் புரியும்
காத்திருக்கும் சுகத்தினை இதயம் அறியும்
தொலைதூரம் வந்தாலும் நெருக்கம் இணையும்

காதலித்துப் பார்
அலைபேசி உன் ஆருயிர் அம்மாவாகும்
குறுஞ்செய்தி உற்ற உயிர்த் தோழனாகும்
பகலவன் புலராமல் பொழுது அதிகமாகும்
கழுதையின் குரல் இனிய கானமாகும
உடல் மொழி தெளிவாய்ப் புலனாகும்
உள்ளுணர்வுகள் மனக்கடலில் சங்கமமாகும்

தனிமையின் சுகத்தைச் சிலாய்த்து
வர்ணிப்பாய்
உன்னை நீயே உளமாற
விமர்சிப்பாய்
எறிந்தக் குப்பையைச் சேகரித்து வைப்பாய்
சேகரித்ததை நள்ளிரவில் எழுந்து பார்ப்பாய்
குடையை விரித்து மழையைப் பிடிப்பாய்
ஓவியம் வரைந்து தலையணையில்
மறைப்பாய்
காதலித்துப் பார்

Oru Naal Iranthirunthen Poem By Pichumani பிச்சுமணியின் ஒரு நாள் நான் இறந்திருந்தேன் கவிதை

ஒரு நாள் நான் இறந்திருந்தேன் கவிதை – பிச்சுமணி




கடந்த காலத்திற்கும்
இதுவரை நிகழா காலத்திற்கும்
என்னை அவ்வப்போது
அழைத்துச் செல்லும் கனவென்னும்
டைம் மெஷின்..

ஒருநாள்
நான் இறந்த தேதிக்கு
அழைத்து சென்றது

நேற்றும் இன்றும்
என் விருப்பப்படி நடக்காத
சம்பவங்களை மாற்றியமைக்க
தினசரி என்னை அழைத்து செல்லும்
டைம் மெஷின்.

இப்போது நான் எதிர்பார்க்காத
என் இறுதிநாளுக்கு
அழைத்துச் சென்றிருக்கிறது

நான் எப்போதாவது
ஆசைப்பட்டு வருங்கால நாள்களில்
எனக்கான நாள்கள் இதுவென்று
அகமகிழ்ந்து வாழ்ந்து
நிகழ்காலக் காயங்களை
டைம் மெஷின் மூலம்
மழுங்கடித்திருக்கிறேன்.

ஆனால்
இப்போது இறுதிநாளுக்கு வந்திருக்கிறது..
நான் இறந்தது
துக்கமாக கருதாமல்
எனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
நான் சிரித்துக்கொண்டிருந்தேன்.

நான் ஆடாமல்
அசையாமல் இருக்க
கை கால்களை கட்டி வைத்திருந்தார்கள் எதையும் பார்க்காமலிருக்க
எனது கண்களையும் மூடியிருந்தார்கள்.

நான் தோல்வியடையும் போதெல்லாம்
உனக்கெல்லாம் இது தேவையா யென்று
உதாசீனபடுத்தியவர்கள்
எனக்கான ஆறுதல் வார்த்தைகளை
தேடிக் கொண்டிருந்தார்கள்

என்னைத் தேடி வந்தவர்கள்
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
மௌனமாகினர்

சிலர் கண்களில் கண்ணீர்த் துளிகள்
சிலர் கண்களில் ஏமாற்றம்
சிலர் கண்களில் எதிர்பார்ப்பு
சிலர் கண்களில் ஏளனம்
சிலர் கண்களில் சம்பிரதாயம்
சிலர் கண்களில்
சாவுக்கு வந்த கடமையுணர்வு
சிலர் கண்களில் அடுத்த நிகழ்ச்சிக்குச் செல்லும் அட்டவணை
சிலர் கண்களில் அன்றைய தேவையின் ஊதியம்

நேரம் ஆக.. ஆக..
எனது பெயர்
எல்லோரும் மறந்தும் போய்
பூத உடலனாது.

நான் இறந்திருப்பது
எனக்கு தெரியுமென
அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.

தள்ளிப் போடாதே! – முனைவர் இல.சுருளிவேல்

வாழ்க்கை என்பது ஒரு பயணம், இந்த பயணம் பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவடைகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன் தன்னுடைய நேரத்தைச் சரியாகச் செலவிடுகிறானா என்ற கேள்வி எழுகிறது.  நேரம் விலை மதிப்பற்றது…