வசந்ததீபன் கவிதைகள்
சாத்தியங்களைப் பின் தொடர்ந்து…
******************************************
விற்பது லாபத் தேட்டம்
வாங்குவது தேவைகளின் வெற்றிடம்
பொருள்வயின் பிழைப்பது
பெரும் பிழை
மரணத்திற்குப் பிறகு
மனிதனை நினைத்துத்தான் பார்க்கமுடியும்
ஆயிரங்கால் மண்டபத்தில்
இறந்த என் நண்பனைப் போல
ஆங்கிலேயர் ஒருவர்
நானாகி இருக்கமாட்டேன்
நானை மறக்கமாட்டேன்
நானாக வாழமாட்டேன்
வளைந்து வளைந்து போகிறது மலைப்பாதை
நெளிந்து நெளிந்து
விரைகிறது பேருந்து
ஒடிந்து ஒடிந்து பயணிக்கிறேன் நான்
படித்துக் களித்து உறங்குவதற்கல்ல
வெடித்து கிளர்ந்து உக்கிரமாவதற்கே
கலை கவிதை எழுத்து எல்லாம்
மீதி சில்லறை வாங்கும் நான் அற்பம்
கொடுக்கத் தயங்கும் நீ மேன்மை
சல்லிக்காசானாலும் என்னுடமை ஏய்க்க அனுமதியேன்
பறக்கும் மனது
தவக்கும் உடல்
ஊரோ ரெம்ப தூரம்
எனக்கும் உனக்குமான இடைவெளி குறுகியது
யாராலும எதாலும் அதனை நிரப்பமுடியாது
நானும் நீயும் வேண்டுமானால் வார்த்தைகளால் இல்லாது செய்யலாம்.
மூடுதிரை
*************
எழுதும் மெளனத்துள்
பிரளய சப்தம்
திணறுகிறது
விடுபட
புல்லாங்குழல் ஏந்தியவன்
மனதில் பூந்தோட்டம்
மூங்கில் காட்டின்
மரண ஓலம் காற்றில்
மெளனமாய் இருக்கிறீர்களே !
பிணங்களா நீங்கள் ?
உயிர் உள்ளதென்று
சப்தமிடுங்கள் உரத்து
உழுதவனுக்கு மிச்சமாய்
பட்டினியும் பசியும்
உழைத்தவனுக்கு மீதியாய்
நோயும் நொம்பலமும்
சூடும் சுரணையும் ஆறிப்போச்சு
கொதிப்பும் ஆவேசமும் தணிஞ்சு போச்சு
சீக்கிரம் போயி முன்னால க்யூல நிக்கணும்
இசையும் கவிதையும் பணத்தை விளைவிக்கின்றன
கதையும் நாடகமும் காசுகளைத் தருவிக்கின்றன
நெல்லோ? புல்லோ?
மாடுகள் மேய்கின்றன
மது நெடியில் கவியரசர்கள் பிறந்தனர்
கஞ்சாப்புகையில் மகாகவிகள் உதயமாயினர்
வேர்வை வாசத்தில் மனிதக்கலைஞர்கள் உதித்தெழுந்தனர்.