விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது கவிதை – வசந்ததீபன்
விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது
***************************************************
வண்ணத்துப்பூச்சி
வெளியேற முடியாத அறை
பறந்து பறந்து சுழல்கிறது
கழிவிரக்கம் மேலிடுகிறது
அவன் வயரைக்கடித்து இறந்து போனான்
சுவிட்சு போர்டுக்கும் வயருக்கும் தண்டனை
பறத்தல் பறவைகளுக்கானது மட்டுமல்ல
விடுதலையாகிப் பறக்கின்றன
எருக்கம் விதைகள்
கட்டு மீறிக் களிக்கிறது மனசு
வெறிநாய் எதிர்ப்படுகிறது
காருண்யம் உனக்கு உதவாது
கொல்வதைப் பற்றி யோசி
விழித்துக் கொள்
அறம் செத்த தேசம்
நீதி பிறழ்ந்து திரியும்
ஜன்னலை மட்டும் திறந்து விட்டால் போதாது
கதவுகளையெல்லாம் திறந்து விடுங்கள்
வெளிச்சம் வீட்டில் நிரம்ப வேண்டும்
எனக்கான விடுதலை
நீ தான் எழுத வேண்டும்
நாம் தான் கொண்டாடுவோம்
ரத்தக்கறை படிந்த சட்டை கிடந்தது
விபத்தா? அல்லது பலியா?
புரிபடாமல் இருப்பதே நல்லது
நோய்கள் எல்லோருக்கும் வருகின்றன
வைத்தியம் சிலருக்குத்தான் கிடைக்கிறது
ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை இப்படித்தான்
குழாயடியில் குடமும் நீரும் சந்தித்தன
இசைக்கச்சேரி ஆரம்பமானது
ரசிக்காமல் எல்லோரும் சண்டையிடுகிறார்கள்.