Uravugal ShortStory By Kavitha. கவிதாவின் உறவுகள் சிறுகதை




அன்று சூரியன் சீக்கிரமே வணக்கம் சொல்லியது மல்லிகை பூ வாசத்தோடு இணைந்த சந்தன வாசமும் ,சாம்பிராணி வாசமும் வீடு முழுக்க பரவி இருக்க கந்த சஷ்டி கவசம் அம்மாவின் அலைபேசியில் ஒலித்துக்கொண்டிருந்தது.

“என்னடா பாலா சீக்கிரமே எழுந்து ரெடியாகிட்ட ” என்று அதட்டலான குரலில் கேட்டார் அம்மா சிவகாமி.

“ம்ம்ம் என்னம்மா நீங்களுமா” என்றபடி அம்மாவின் தோளில் சாய்ந்தான் பாலா.

அம்மா சிவகாமி “ஏண்டா அப்படி சொல்ற?அப்பா ஏதாச்சும் சொன்னாரா “என்று தன் உள்ளங்கையை மெதுவாக பாலாவின் தலையில் வைத்து கேட்டார்.

அப்பா சண்முகநாதன் ஐம்பது வயதைத் தாண்டினாலும்,தன் ஒரே மகனான பாலாவிற்கு நிகரான தோற்றம் கொண்டவர்.

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ,சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் என்றால் அவருக்கு கொள்ளை இஷ்டம். தினத்தந்தி நாளிதழ் படிக்காமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டார், தனக்குப் பிடித்த விஷயங்களை ஒரு டைரியில் குறிப்பு எடுத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்.

“உங்கள பார்த்தா ஐம்பதுவயது மேல இருக்குதுனு யாரும் சொல்ல மாட்டாங்க தாத்தா” என்று தன் பேத்தி சொன்னதை அப்பப்போ சிவகாமியிடம் சொல்லிச் சிரிப்பார்.

“இன்னைக்கு தான் சனிக்கிழமை ஆச்சே. தினத்தந்தியை கூட மறந்து விடுவார்,அவர் பேத்தியை மறப்பாரா…. சின்ன வயசுல நான் ஸ்கூலுக்கு போகும் போது என்னுடைய யூனிஃபார்ம்,ஷூஸ் எல்லாம் எடுத்து வைப்பார், அந்த மாதிரியே இன்னைக்கும் வெச்சாரு. இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் கெளம்பலனா அவ்வளவுதான்” என்றபடி அம்மா சிவகாமியின் கைப்பக்குவத்தில் செய்த வெண் பொங்கல் தளதளக்க நெய் வாசம் மணக்க சாம்பார் வடை உடன் அவசரம் அவசரமாக சாப்பிட்டுக்கொண்டே சொன்னான் பாலா.

“இந்தாடா பாலா இதை ரம்யாவிடம் கொடு, திறந்து பாக்காத அம்மா கொடுத்தாங்கன்னு மட்டும் சொல்லு” என்று பாலாவின் உள்ளங்கையில் வைத்துக் கொடுத்தார் அம்மா சிவகாமி.

பாலா அவற்றை உற்று பார்க்கையில் ரோஜாப்பூ நிறத்தில் இலேசான கனத்துடன் சுருக்கு பை போன்று இருந்தது சிறிய புன்னகையுடன்”ஓகே! ஓகே! மா” என்றவாறு தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தன் சட்டை பாக்கெட்டைத் தடவியவாறு பைக்கில் கிளம்பினான் பாலா.

ராயப்பேட்டையில் உள்ள பொன்னுசாமி உணவகத்தின் முன் தன் ஸ்கூட்டியை பார்க்கிங் செய்துவிட்டு காத்துக் கொண்டிருந்தால் ரம்யா.

“ஏய் வைஷூ ஒழுங்கா நில்லடி” என்றபடி தன் சுடிதார் துப்பட்டாவை சரி செய்து கொண்ட ரம்யா கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்தால் சரியாக மதியம் ஒன்றைக் காட்டியது.

பறந்துகொண்டிருந்த பட்டாம்பூச்சியை பார்த்தபடி தன் அம்மாவின் ஆள்காட்டி விரலை பிடித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி பாலா வருவதை கண்டு “அப்பா” என்று ஓடிப்போய் கட்டியணைத்தாள். இருவரும் முத்தமிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.

வைஷ்ணவியின் கையை பிடித்துக் கொண்டிருந்த பாலா ரம்யாவை பார்த்து புன்னகையுடன்”ஹாய், கொஞ்சம் லேட் ஆயிருச்சு சாரி” என்றான்.பதிலுக்கு ரம்யா “பரவாயில்லை ஏன் சாரி எல்லாம் கேட்கிறீங்க வாங்க போகலாம்” என்று உணவகத்துக்குள் அழைத்துச் சென்றாள்……

பாலா ஆடிட்டராக பணியாற்றிக் கொண்டிருக்கிறான், வருமானத்திற்கு பஞ்சமில்லை, பெரிய பெரிய கம்பெனிகள் பாலாவின் கைவசம் தான்.

சில கருத்து வேறுபாடுகளால் ஒராண்டு காலம் பிரிந்து இருந்த இவர்கள் இப்பொழுது தான் சந்திக்கிறார்கள்…

கால இடைவெளியின் காரணமாக உணவகம் மாறியிருக்கும் என்று யோசித்தாள் ரம்யா… ஆச்சரியம்தான் சிறிது கூட மாறாமல் அப்படியே காட்சியளித்தது உணவகம்.எப்பொழுதும் அமரும் இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்….

பொன்னுசாமி என்றாலே ரம்யாவுக்கு பருப்பு பொடி தான் ஸ்பெஷல். வாழை இலை மேல் சூடான சாதத்தை போட்டு நெய் விட்டு பருப்பு பொடியோடு அப்பளத்தை வைத்து பிசைந்து ஒரு வாய் சாப்பிட்டாலே போதும் அவளையே மறந்து விடுவாள்…. இந்தக் குழந்தைத் தனத்தைத் தான் எப்பொழுதும் ரசிப்பான் அவளிடம்.

எப்பொழுதும்போல் ரம்யாவுக்கு பிடித்ததே இன்றும் ஆடர் செய்தான் பாலா, வைஷ்ணவி “அப்பாவுக்கு எதுவோ அதுவே எனக்கும்” என்று சொல்ல பாலா ரம்யாவை பார்த்து சிரித்தான்.

அப்பா சண்முகநாதனின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க சட்டரீதியாக பிரியாமல்,இருவரும் ஓராண்டு காலம் தனித்து வாழ முடிவெடுத்தனர். இந்த இடைவெளியில் இருவருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்ற திடமான எண்ணத்தின் காரணமாக பிரிய ஒப்புக்கொண்டார்.

பாலா ஆடிட் செய்த கம்பெனியின் முதலாளியான வைத்தியநாதனின் மகள் தான் ரம்யா. படித்தவள், புத்திசாலி அவளின் விருப்படி ஒரு தனியார் ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டார்.பாலாவின் நேர்மையை கண்ட வைத்தியநாதன் தன் மகளான ரம்யாவை மணமுடித்து வைத்தார்.

மூவரும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கையில் ரம்யா பாலாவை பார்த்து “எப்படி இருக்க பாலா, அத்தை ,மாமா எப்படி இருக்காங்க. உன்னோட வேலைகள் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு” என்று கேட்டாள்.

“ம்ம்ம் நல்லா இருக்கேன்,ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க வேலைகள் எல்லாம் எப்பொதும்போல் போயிட்டு இருக்கு “என்றான் பாலா சாப்பிட்டுக் கொண்டே…..

“அத்தைய ரொம்ப மிஸ் பண்றேன் பாலா, அவங்களோட சமையல் எப்பவுமே சூப்பர் தான்”.

“ஆமாம்மா பாட்டியோட அந்த பச்சை தோசை அதுகூட கடலை சட்னி செம காம்பினேஷனா இருக்கும்,தாத்தாக்கும்,எனக்கும் ஸ்பெஷலா செஞ்சி தருவாங்க”

“ஆமாம் வைஷூ, ஆனா, அது முடக்கத்தான் தோசை” என்றான் பாலா அவளின் மழலை பேச்சை ரசித்துக் கொண்டே…….

எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவள் போல் பாலாவிடம் ” நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்க மாட்டாயா பாலா “என்று கேட்டாள். அவள் முகத்தில் சிறியதாக கோபம் அரும்பாக மலர்ந்தது….. இன்று ஆகஸ்ட் 16ஆம் நாள் வைஷ்ணவியின் பிறந்தநாள்.

பாலாவின் மெளனம் ரம்யாவிடம் தொடர்ந்துகொண்டு இருக்கையில் அவளால் அந்த மௌனத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை “ஏதாச்சும் பேசு பாலா”என்று அழுத்தமாக சொல்ல… அருகே அமர்ந்திருந்த வைஷ்ணவியைப் பார்த்து “இன்னைக்கி என்னோட செல்ல குட்டிக்குப் பிறந்தநாள் இல்லையா,அப்பா உனக்காக ஒரு பரிசு கொண்டு வந்து இருக்கேன், கையை நீட்டு” என்றான்.வைஷூவும் கையை நீட்டினாள், தன் சட்டை பாக்கெட்டில் இருந்த நட்சத்திரம் போன்ற மோதிரத்தை எடுத்து அவள் விரலில் அணிவித்து வாழ்த்திய படி நெற்றி பொட்டில் முத்தம் கொடுத்தான்….

“தேங்க்யூ அப்பா”என்றாள் வைஷ்ணவி.

வைஷ்ணவியின் கையை பிடித்த ரம்யா “வா போகலாம்” என்று எழுந்து நிற்க சட்டென்று ரம்யாவின் கையை பிடித்த பாலாவுக்கு மறுகணம் ரம்யாவின் கைகளை நழுவி விட கூடாது என்ற எண்ணம் அவளின் பிரிவால் மலர பாலாவின் மௌனம் முழுவதுமாய் தகர்க்கப்பட்டது.

“டோன்ட் எவர் லீவ் மீ அகேன் ரம்யா”.

என்று பாலா சொன்னதை கேட்டு ஒரு நிமிடம் அவளின் உடல் சிலிர்த்துப்போனது……

நீண்ட இடைவேளைக்கு பிறகு முதல் முறையாக பாலாவின் குரல் அவளுக்கு என்றே ஒலித்தது.

“உனக்கும் வைஷூவுக்கும் எல்லாமே செய்யணும் ,நல்லபடியா பாத்துக்கனும் தான் நினைச்சுக்கிட்டே இருப்ப.உங்களுக்கு தேவையானது எல்லாம் அளவுக்கு அதிகமா செஞ்சேனே தவிர உங்களுக்கு எது தேவைனு புரிஞ்சிக்காம விட்டுட்டேன் எவ்வளவு முட்டாளா இருந்துட்டேன்,தினமும் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும் போது நீங்க இருந்திடமாட்டிங்களா,உங்கள பார்த்துவிடமாட்டோமானு நினைக்காத நாளே இல்ல….எவ்வளவு விஷயங்கள் நீ இல்லாம நான் மறந்து போயிருக்கேனு தெரியுமா?

ரம்யா,எந்தன முறை ஷூஸ் கழட்டாம மறந்து போய் ரூமுக்குப் போயிருக்கேன்,நடுராத்திரில தண்ணி குடிக்க கிச்சன் வரைக்கும் போய் இருக்கேன்….அம்மா பல முறை தண்ணீர் கோப்பையில் தண்ணீர் குடுத்தாலும் அத எடுத்துகிட்டு போக கூட மறந்து போய் இருக்கேன்……..நீ இருக்கும் போது நான் உணராத விஷயங்கள் எல்லாம் இந்த பிரிவு எனக்கு புரிய வச்சுருக்கு…….நான் எதை எதிர்ப்பார்த்தனோ அதையேதான் நீயும் நெனச்சுருக்க…..உனக்கு நான் டைம் ஸ்பென்ட் பண்ணல ரம்யா ஐயம் சாரி” என்று தன் மனதுக்குள் இருந்த எண்ணங்களை அவளிடம் கொட்டினான்.

ரம்யா “இல்ல இவ்வளவு நாள் என் மனசுல இருந்தத சரியான முறையில உங்ககிட்ட நான் சொல்லல அத விட்டுட்டு எப்பவுமே கோவத்தமட்டுமே தானே காமிச்சிருக்கேன். மாமா சொன்ன வார்த்தை இன்னமும் என்னோட காதில் ஒலித்துக் கொண்டே இருக்கு.பொறுமையா இருக்கணும், நிதானமாய் இருக்கணும்னு சொல்லுவார், இத்தனை நாளா எங்கப்பா என்கிட்ட கண்டிப்பாக தான் நடந்துகொண்டார் அம்மா இல்லாத பொண்ணுன்னு ஒரு நாள் கூட நெனைச்சது கிடையாது. ஆனா அத்தை இன்னி வரைக்கும் எனக்கு ஒரு கஷ்டம் கூட கொடுக்காமல்,என்ன ஒரு வேலையை கூட செய்ய விடாமல் பார்த்துக்கிட்டாங்க……என்ன சுதந்திரமா சிந்திக்க விட்டாங்க…… இத்தனை நாளா நான் யாரையுமே புரிஞ்சுக்காம போயிட்டேன் பாலா ஐயம் சோ சாரி”என்று தன்னியல்பை உணர்ந்தாள்.

இருவரும் இருக்கையில் அமர்ந்தப்படி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பேசிக்கொண்டிருப்பதை கண்டு வைஷூ அவர்களை கட்டியணைத்துக் கொண்டாள்.பாலா ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்ய,அம்மா சிவகாமி கொடுக்கச் சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது.தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்ததை எடுத்து அவளிடம் கொடுத்தான்….

ஆச்சரியத்துடன் கையில் இருந்ததை திறந்து பார்த்தாள். அடுத்த கணம் அவள் கண்களிலிருந்து பொலபொலவென்று வழிந்த
கண்ணீர் அவளின் நெஞ்சை நனைத்தது.

பாலா பதறிப்போய்”ஏய் ரம்யா, ஏன் அழுவுற” என்று தன் கைக்குட்டையை எடுத்து அவளின் கண்ணீரைத் துடைத்தான்…அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, “அப்படி என்னதான் ரம்யா அம்மா கொடுத்துல இருந்துச்சு” என்று அவளிடம் கேட்டான்.

தன்னை ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட ரம்யா கையில் இருந்ததை பாலாவிடம் காட்டினாள் அதில் உடைந்து போன பழைய மூக்குக்கண்ணாடி, குங்குமஞ்சிமிழ் மற்றும் கடிதம் இருப்பதை கண்டான்…. உடனே பாலா ” இது உன்னோட மூக்குக் கண்ணாடி தானே ரம்யா” என்று நினைவு படுத்தினான்.

“ஆமா பாலா அன்று நான் செய்த தவறால் உடைந்து போனது… இன்று எனது உள்ளங்கை ரேகையை தழுவிக் கொண்டிருக்கிறது “என்று கூறினாள்,”இத்தனை நாள் என்னை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது இந்த குற்ற உணர்ச்சி என்னால் அதை விட்டுவிலக முடியவில்லை இன்னைக்கு உன்கிட்ட சொல்லியே ஆகணும் பாலா” என்று கதறினாள்.

“என்ன சொல்ற எனக்கு ஒண்ணும் புரியல” என்று பாலா கேட்க, முதல்முறையாக அவனிடம் கூறுகையில்,இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வைஷ்ணவி “அம்மா எதுக்கு அழறாங்க அப்பா “என்று பாலாவிடம் கேட்க ,அவளை ஒரு நிமிடம் சமாதானப்படுத்தி தான் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம்களில் ஒன்றை வாங்கி அவளிடம் கொடுத்து இருக்கையில் அமர வைத்தான்….

ரம்யா தொடர்ந்தாள்……..

“அன்று நான் பெரிய குழப்பத்துடன் எனது அறையில் இருந்தேன், எனது எதிர்காலக் கனவுகள் திருமணத்திற்கு அப்புறம் என்னால் அதில் பயணிக்க முடியவில்லை குழந்தை, குடும்பத்தின் பொறுப்புகள் அனைத்திலும் நான் நிறைந்து இருந்தேன்… எனது இயலாமை வெறுப்பாக மாறியது எனது அறையில் இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்துக் கொண்டு இருந்தேன் தற்செயலாக அத்தை அங்கு வந்தார்.நான் நானாகவே அன்று இல்லை ,எனக்கு ஆறுதல் கூற வந்த அத்தையின் மீது தவறுதலாக எனது மூக்குக் கண்ணாடி அவர்கள் மேல் பட்டு கீழே விழுந்து உடைந்து போனது, பதறிப் போய் விட்டேன் செய்வதறியாது நின்றேன் எங்களுக்குள் இருந்த உரையாடலும் அன்று தான் கடைசி”.
தன் மனதில் இருந்த சுமையை பாலாவிடம் இறக்கி வைத்தாள்.

இதை கேட்டுக்கொண்டிருந்த பாலா….”கவலை வேண்டாம் ரம்யா இந்த விஷயத்தை அம்மா என்றோ எங்களிடம் பகிர்ந்து கொண்டார்…. அதுக்கப்புறம் எத்தனையோ முறை அம்மா உன்னிடம் பேச வரும்போதெல்லாம் ,நமக்கிடையே அவ்வப்போது தோன்றும் கருத்து வேறுபாட்டினால் அவர் அமைதி காத்து வந்தார்” என்று நடந்ததைக் கூறினான்…

“அம்மா கொடுத்த கடிதத்தை எடுத்து படி ரம்யா” என்றான் பாலா.

ரம்யா கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள ரம்யாவுக்கு, உனது அத்தை சிவகாமி எழுதும் கடிதம்,எப்படி இருக்க,வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்பிட்றியா இல்லையா ,எப்படி இருக்கு உனது புதிய மூக்குக் கண்ணாடி? வைஷூவின் மழலை குரல் மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வைஷூவின் புகைப்படம் தற்காலிக ஆறுதலாக இருக்கிறது அவளின் தாத்தாவுக்கு. பொலிவின்றி இருக்கிறது நமது வீடு…..உனது பிரிவு எங்களை வாட்டி வதைக்கிறது ரம்யா.பாலாவையும் விட்டுவைக்கவில்லை…

உன்னோட மாமனார் என்னை பெண்பார்க்க வரும்போது என்னோட சமையல் பிடிச்சு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவர் முதல் முறையா என்னுடன் பேசியவிஷயம். இன்னமும் நியாபகம் இருக்கு “உன்னோட சமையலேயே தெரிஞ்சுகிட்ட நீ கண்டிப்பா என்னோட குடும்பத்த ஆரோக்கியமா பார்த்துப்பேனு”என்று சொன்னார் எனக்கு ஆச்சரியமா இருந்தது.நான் அவரைப்பார்த்து “ என் மேல் அவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு”என்று கேட்டதற்கு அவர் “ஆரோக்கியமான மனநிலையில் செய்த உணவு கூடுதல் சுவையோடு இருக்கும், நாம் பழகாத மனிதர் மேல் நம்மை அறியாமல் ஒரு நம்பிக்கை உணர்வு ஏற்படும் அப்படி ஒரு உணர்வு உன் மீது எனக்கு ஏற்பட்டது. உன் குணத்தை நான் அன்று அறிந்தேன்” என்றார்….

இந்த வார்த்தைகள் தான் நான் துவண்டு போய் இருக்கும் நேரங்களில் எனக்கு நம்பிக்கை ஊட்டும்… அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் தகர்த்து விடக்கூடாது என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதும் இருக்கும் அவர் சொன்ன விஷயம் சின்னதாக இருந்தாலும் அவருடைய உணர்வை நான் மதிக்கிறேன்……நான் அதிகம் படிக்கவில்லை ஆனால் இந்த குடும்பத்தின் ஆரோக்கியம் தான் எனது கனவாக இருந்தது…..இந்த விஷயத்த உன்னிடம் சொல்லணும்னு ஏன் தோணிச்சுன்னா?

உன் மீது நாங்கள் அனைவரும் அளவு கடந்த பாசமும்,நம்பிக்கையும் வச்சுருக்கோம்,சில வார்த்தைகள் நம்மை வழிநடத்தும் ரம்யா,அதேபோல குடும்ப வாழ்க்கையில் பெண்கள் தான் பாலமாக இருக்குறாங்க,புகுந்தவீட்டின் வளர்ச்சி,ஒற்றுமை மற்றும் நம்பிக்கை அனைத்தும் வீட்டிற்க்கு வரும் மருமகளிடம் தான் ஒப்படைக்கப்படுகிறது….அப்போ என் மாமியார்,இப்போ நான்,மற்றும் நீ. ஒவ்வொரு பெண்ணிற்கும் எதிர்காலக் கனவுகள் கண்டிப்பாக இருக்கும்…அது வெவ்வேறு முகங்கள் கொண்டது…எனது கனவு நமது குடுப்பத்தின் ஆரோக்கியம்.எத்தனையோ பெண்களின் எதிர்காலக் கனவுகளுக்கு குடும்ப உறுப்பினர்கள் ஊன்றுகோலாக இருக்கிறார்கள்,இதை நீ மறுக்கமுடியாது. நாங்கள் அனைவரும் உனது நிழலாக இருப்பதை ஏன் நீ மறந்தாய்…உனது உடைந்த மூக்குக் கண்ணாடி தான் உனது ஒராண்டு பிரிவுக்கான முற்றுப்புள்ளியாக இருக்கட்டும். உனது வரவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்…

உனது அத்தை
சிவகாமி…..

உணவகத்தை விட்டு கிளம்பிய பைக்கைப் பின்தொடர்ந்தது ஸ்கூட்டி….

எப்பொழுதும் போல் இல்லாமல் கொஞ்சம் கூடுதலான நறுமணத்தோடு வீடு முழுக்க மல்லிகையோடு சந்தனவாசமும் பரவியிருந்தது. கந்தசஷ்டிகவசப் பாடலுடன் பொலிவுடன் காணப்பட்டது சிவகாமி இல்லம்.

பாலாவின் அன்பு சின்னங்கள் அவளின் கன்னத்தில்,அனைவரின் அன்பும் அவளுக்கு உறுதுணையாக இருப்பதை உணர்ந்தாள்,தினத்தந்தி நாளிதழுடன் சூடான காபியோடு தாத்தாவும்,வைஷ்ணவியும் குதூகலித்தனர்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “உறவுகள் சிறுகதை – கவிதா”
  1. காலம் மாறும் மனம் மாறும் மனிதன் மாறுவான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *