இந்திய தலைநகர் டெல்லி போராட்ட களமாக மாறியுள்ளது. போராட்டம் நடத்துபவர்கள் யாரோ அல்ல, குடிமக்களின் பஞ்சம் பட்டியைப் போக்கும் மாண்புமிகு விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், என்கிற ஒற்றைக் கோரியுடன் போராடினாலும், இந்தப் போராட்டத்திற்கு இந்திய முழுமைக்கும் ஆதரவு இருக்கவே செய்கிறது. இந்தியாவின் பல மூலைகளிலிருந்தும்,  பல அமைப்புகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மைய அரசு நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்பிரச்சனையை மத்திய உள்துறை அமைச்சர் கையாள்பவராக இருக்கிறார். விவசாயிகள், தரப்பில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறுவது ஒன்றே தீர்வு என்கிறார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விவசாயத்திற்கு ஆதரவான நன்மை பயக்கும் ஷரத்துகள் இச்சட்டத்தில் உள்ளன, என்கிறார். 

வேளாண் பிரச்சனையும், விவசாயிகளின் பிரச்சனையும் உணவுடன் தொடர்புடைய ஒன்று. உணவுத் துறையினர் இப்பிரச்சனையை கையாள்வதும், பேச்சுவார்த்தை நடத்துவதும், பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுமே சரியாக இருக்கும். உணவுத் துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் இறந்ததைத் தொடர்ந்து, இப்பிரச்சனையை உள்துறை அமைச்சர் கையாள்கிறார். உள்துறை பிரச்சனையைக் கையாள்வதைப்போல வேளாண் பிரச்சனையை கையாள முடியாது. உண்மையில், வேளாண் பிரச்சனையும், வேளாண்குடி பிரச்சனையும் இந்தியாவின் உள்துறை பிரச்சனையைப்போல புறம் வழியே உள் நுழையும் அகப்பிரச்சனை அல்ல. அகத்தினுள்ளே நுழையும் அகப்பிரச்சனை. இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதிலும், தீர்ப்பதிலும் இலகுவான அணுகுமுறை தேவையாக இருக்கிறது. இதில் மத்திய உணவுத் துறை அமைச்சகத்தின் பங்கு என்னவாக இருக்கிறது, என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

இந்தியாவில் உணவுத்துறை அமைச்சர் உருவாக்கத்திற்கும் பின்னே, ஒரு வரலாறு உண்டு. இது இரண்டாம் உலகப் போருடன் தொடர்புடைய வரலாறு இது. 1943 ஆம் ஆண்டு டி.எஸ். சொக்கலிங்கம் ‘ அன்ன விசாரம்’ என்றொரு நூல் எழுதினார். இந்நூல் அவ்வாண்டில் தலைவிரித்தாடிய கடும் பஞ்சதையும், அப்பஞ்சத்தை எதிர்கொண்ட பிரிட்டிஷார் நிர்வாகத்தையும், அதை முன்னிட்டு உருவாக்கப்பட்ட உணவுத் துறை பற்றியும் பேசுகிறது.

இரண்டாம் உலகப்போரில் வெற்றி முகமாக இருந்த ஜெர்மனி திடீரென மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்ததற்கும், ஜப்பான் அப்போரில் மிகப்பெரிய வீழ்ச்சியான இரு நகர பேரழிவுக்குப் பின்னும் உணவுப் பஞ்சத்தால் தடுமாறாமல் உணவுத் தன் நிறைவுபெற்று முன்னேறியதற்கும் உணவுத் துறைக்கென்று தனி இலாகா ஜப்பானில் இருந்ததும், ஜெர்மனியில் இல்லாததுமே காரணம். ஜெர்மனியைப் போல ஜப்பான் ஆயுதங்களைத் தயார் செய்துகொண்டதோடு இரண்டாம் உலகப்போரில் குதித்துவிடவில்லை. அந்நாடு போரில் குதிப்பதற்கு முன்பாக  அரிசி,  கோதுமை உணவுப் பொருட்களை தன்னிறைவு செய்துகொண்டும் போதுமான அளவைவிடவும் கூடுதலாக கைவசம் வைத்துக்கொண்டும் போரில் குதித்தது. அதாவது இரண்டாம் உலகப் போர் அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியது  1939 செப்டம்பர்  3.  ஆனால் ஜப்பான் போரில் குதித்தது  1941  டிசம்பர் 8.

இரண்டாம் உலகப் போர் காலத்திலும், போர் முடிவுற்று அமைதிக்கு பிறகும் உணவுப் பஞ்சத்தின் நீட்சி இந்தியாவில் இருந்தது. இந்திய விவசாயிகளே உணவுக்காக தத்தளித்துக்கொண்டிருந்த காலத்தில், இங்கிலாந்து தன் பிடித்து வைத்திருந்த போர்க்கைதிகளை இந்திய சிறைகளில் கொண்டுவந்து அடைத்தது. ஆகவே, உணவுத் தட்டுப்பாடு மேலும் அதிகரித்தது. இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்படுகையில் இந்தியாவின் அண்டை நாடுகளான பர்மா, மலேசியா , ஆஸ்திரேலியா நாடுகளில் அத்தகைய பஞ்சம் ஏற்பட்டிருக்கவில்லை. இத்தனைக்கும் அன்றைய இந்தியா நூற்றுக்கு 73 பேர் விவசாயிகளைக் கொண்ட நாடாக இருந்தது. உணவுப் பொருட்கள் கையிருப்பில் சென்னை மாகாணம் ஓரளவு தன்னிறைவு பெற்றிருந்தது. இதைக் காரணமாகக் கொண்டு, மாகாண ஆட்சியாளர்கள் ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் போர்க்கைதிகளை சென்னை மாகாண சிறைகளில் அடைத்தது மட்டுமல்லாமல், நேசநாடுகளின் போர் வீரர்களுக்கு இங்கேயிருந்து உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய பொறுப்பையும் ஏற்றிருந்தது. இந்த முடிவுக்கு எதிராக இந்தியர்கள் போராடத் தொடங்கினார்கள். 

Pin en History in Black & White: WW II

பிரிட்டிஷாரின் இந்திய அரசாங்கம், உணவுப் பொருள் தட்டுப்பாட்டை போக்க, நாடாளுமன்றத்தில் அவசர சட்டமொன்றைக் கொண்டு வந்தது. அனைத்து உணவுப் பொருட்களின் விலையையும் பத்து விழுக்காடு அளவிற்கு உயர்த்துதல், என்கிற சட்டம் அது. உணவுப் பொருட்களின் விலை, தேவை, இருப்பு, வேளாண் நிலங்கள், தரிசு நிலங்கள் இவற்றை உள்ளடக்கிய புள்ளி விவரங்களை அரிசி வர்த்தகம்என்கிற பெயரில் நூலாக அன்றைய இந்திய சர்க்கார் வெளியிட்டதுஇந்நூல் தந்த தகவலின்படி, சென்னை மாகாண நெல் சாகுபடி நிலங்கள் 104 லட்சம் ஏக்கர். சாகுபடிக்கு லாய்க்கற்ற நிலம் 150 லட்சம் ஏக்கர். மாகாண மக்களுக்கான அரிசி தேவை 54 லட்சம் டன். விளைந்தது 47 லட்சம் டன். தேவையான 7 லட்சம் டன் அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது. இதுவே  இந்தியா முழுமைக்கும் அரிசி தேவை, 270 லட்சம் டன்இதில் பர்மாவிலிருந்து  இறக்குமதியானது  14 இலட்சம் டன். இந்தியாவின் விளைச்சல் 245 லட்சம் டன். பற்றாக்குறை  25 லட்சம் டன் என்கிற அளவில் இருந்தது. 

உணவுப் பொருட்களில் அரிசிக்குத்தான் இந்த தட்டுப்பாடு. கோதுமை ஓரளவு போதுமான அளவு கையிருப்பில் இருந்தது. இந்தியா முழுமைக்கும் கோதுமையின் தேவை  104 லட்சம் டன். இந்தியாவில் விளைந்தது 110 இலட்சம் டன். ஆக, இந்தியாவின் அத்தியாவசிய அவசர தேவையாக இருந்தது,  அரிசிதான்

உணவுப் பொருட்களின் அதிரடியான விலையேற்றம், மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. டெல்லி வைஸ்ராய் மாளிகையைச் சூழ்ந்து மக்கள் போராடத் தொடங்கினார்கள். நாடாளுமன்றத்தில் உணவுப்பொருள் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இந்திய வணிக  மந்திரி  ஸ்ரீ அமெரி,  1942 ஜூலை 14 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசினார். உணவு பஞ்சமே உணவுப் பொருள் விளையேற்றத்திற்கு காரணமென்றார். உணவுப் பொருள் தட்டுப்பாட்டிற்கு இரண்டு விசித்திர காரணங்களை அவர் முன்வைத்தார். . விவசாயிகள் விளைச்சலை விற்பனைக்குக் கொண்டுவராமல் பதுக்குகிறார்கள். மற்றொரு காரணம், முந்தைய காரணத்தை விடவும் விசித்திரமானது.  இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இரண்டு காரணங்களையும் அன்றைய பிரிட்டிஷ் இந்திய நாடாளுமன்றம், எந்தவொரு எதிர்ப்புமின்றி உறுப்பினர்களால் ஏகப்போக ஆதரவுடன் ஏற்றுக்கொண்டது, கவலைக்குரியது. இதில் இரண்டாவது காரணத்தை பிரிட்டிஷார் சொன்னதோடு முடியவில்லை. பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் இதையே சொன்னார். உலக நாடுகளில் உணவுப் பொருள் விலைவாசி உயர்வுக்குக் காரணம், இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள், என்று.

அன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்க, பிரிட்டிஷ் அரசு ‘ யுனைடெட் கிங்டம் கமர்ஷியல் கார்ப்போரேஷன்’ என்றொரு அமைப்பைத் தொடங்கியது. இதன்  கிளைகளே சுதந்திர இந்தியாவின் இன்றைய உணவுப்பொருள் வழங்கும் அங்காடி.  இந்த கிங்டம் கமர்ஷியல் கார்ப்போரேஷன், சில முக்கிய முடிவுகளை வரையறுத்தது. இந்த அமைப்பு உருவாக்கத்திற்கு முன்பு, உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை தேவைக்கு அதிகமாக இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கி வந்தது. அவர்கள் எந்த மாகாணத்திலும் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம், என்கிற நிலை இருந்தது. இவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் பொறுப்பை அந்தந்த மாகாணத்திடம் ஒப்படைத்தது. ஓர் இராணுவ குடும்பத்திற்கு எவ்வளவு அரிசி கோதுமை தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே வழங்கினால் போதுமானது. அதற்கும் மேல் அரிசி வாங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது, அந்த மாகாணத்தின் பொறுப்பாக இருந்தது. மேலும் ராணுவத் தேவையைத் தவிர வேறெந்த ஒரு காரணத்திற்காகவும் உணவுப் பொருட்கள் வழங்கக்கூடாது, என்றும் அறிவித்தது. சோளம், கம்பு, ராகி போன்ற தானியங்களைத் தேவைக்கேற்ப வெளி மாகாணங்களில் ஏற்றுமதி, இறக்குமதி செய்துகொள்ளலாம். அண்டை நாடுகளிலிருந்து அரிசி, கோதுமை வரவழைத்துக் கொள்ளலாம், என்றும் அறிவித்தது.

இத்துடன், புதிய நிலங்களில் நெல் சாகுபடி கூடாது, என யாரும் தடுக்கக்கூடாது. அதிக உணவு உற்பத்தி செய்ய மின்சக்தி வசதி கேட்டால், அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். உழவர்களுக்கு கலப்பை, இரும்பு சாமான்கள், வண்டிகள், சக்கர பட்டை போன்றவற்றை உபகரணங்களை வழங்க வேண்டும். உழவுத் தொழிலுக்கான மாடுகளின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி, மாடுகள் வெளி மாகாணத்திற்கு ஏற்றுமதியாவதைத் தடுத்து, மாடுகள் கட்டுப்படியான விலையில் சந்தைகளின் வழியே கிடைக்கும்படியாகச் செய்ய வேண்டும், போன்ற புதிய யோசனைகளை முன் வைத்தது. 

நம்ம ஊர்: தினம் ஒரு தகவல்: மெட்ராஸ் பஞ்சம் (வரலாற்று சுவடுகள்)

இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுகையில் சென்னை மாகாணம் ஓரளவு தன் கையிருப்புகளால் நிலைமையைச் சரிசெய்துகொண்டது. ஆனால் வங்காளம், ஒரிஸா மிகக் கடுமையான பஞ்சத்தை நோக்கித் தள்ளப்பட்டது. குப்பைத் தொட்டிகளில் கிடந்த எச்சில்களையும், கெட்டுப்போன உணவுகளையும் சாப்பிட, அதனால் உயிரிழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். வங்கம், ஒரிஸா மாநிலங்களை பஞ்சத்திலிருந்து அவசரமாக மீட்டெடுக்க வேண்டிய நிலைக்கு பிரிட்டிஷ் இந்திய அரசு தள்ளப்பட்டது. ஆகவே அவசரமாக அண்டை நாடுகளான பர்மா, ஆஸ்திரேலியா நாடுகளுடன் வணிக உணவு ஒப்பந்தம் செய்துகொண்டது. 

பர்மா நாட்டுடனான உறவு இந்தியாவிற்கு நல்ல நிலையில் இருந்ததால், அந்நாட்டிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்துகொள்வதில், சட்டக்குறுக்கீடோ, சிக்கலோ இருந்திருக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவிடமிருந்து உணவுப் பொருட்கள் பெறுவது பெரும் சவால்மிக்கதாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது அந்நாடு ஜப்பானுடன் கொண்டிருந்த வர்த்தக உறவும், ஒப்பந்தமும், ஒப்பந்த மீறலுமே அதற்குக் காரணம். ஆகவே, அந்நாடு இந்தியாவுடன் உணவு வர்த்தகம் செய்துகொள்ள அந்நாட்டில் தனி இலாகாவாக கொண்டிருப்பதைப்போல இந்தியாவிடமும் தனி இலாக எதிர்பார்த்தது. இதன் மூலமே எக்காலத்திலும் உணவுத் துறை சார்ந்த வணிகத் தொடர்பை சீரான நிலையில் கொண்டுப்போக முடியும் என நம்பியது. அதற்காக அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசு உணவுத் துறைக்கென்று, 1942 டிசம்பர் 2 அன்று தனி இலாகாவை உருவாக்கியது.  இந்த இலாகாவிற்கு  தனி அமைச்சரை நியமிக்காமல், வணிகத் துறையிடம் இணைத்தது. இதன்படி இந்தியாவின் முதல் உணவுத் துறை அமைச்சரானார், வணகத் துறையைக் கவனித்து வந்த அமைச்சர் ஸ்ரீ அமெரி அவர்கள். இவரது ஒப்பந்தம், ஆலோசனையின்படியே உணவு பஞ்சம், தட்டுப்பாடு பிரச்சனைகள் கையாளப்பட்டு வந்தன. 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில், உருவாகப்பட்ட இந்த உணவு துறை அமைச்சகம் உணவுப் பொருட்களை விளைவிக்கும் இன்றைய வேளாண்குடி பிரச்சனைகளை முன்னின்று தீர்க்கவும், அவர்களின் கோரிக்கையை உள்வாங்கவும், அவர்களின் சந்தேகங்களைப் போக்கவும், தேவையாக இருக்கிறது. இந்தியாவில் வேளாண்மை என்பது தேசத்தின் ஓர் உறுப்பு அல்ல. அதுவே இதயம்.

( டிசம்பர் 2, உணவுத் துறை இலாகா உருவாக்கப்பட்ட தினம்)

எழுத்தாளர் அண்டனூர் சுரா

மகாத்மா நகர்

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்

9585657108.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *