1984 சீக்கிய எதிர்ப்புக் கலவரத்தைக் கடந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்(74) தான் கடந்த விதத்தை விவரிக்கிறார்.

இந்தியா விடுதலை பெற்ற நள்ளிரவுக்கு ஒரு வருடம் முன்பாகப் பிறந்த நான்,  நமது அன்புக்குரிய தேசத்துடன் வயதாகிக் கொண்டே செல்கிறேன்.  இந்த நாடு பல நெருக்கடிகளை சந்தித்ததை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் இத்தகைய அளவிலான ஒரு பேரழிவு நம்மைத் தாக்குமென்று நான் கற்பனை கூடச் செய்ததில்லை.  தற்போதைய நோய்த்தொற்றில் இழந்த உயிர்களைக் கண்டு நான் ஆழ்ந்த வருத்தமடைகிறேன், ஆனால் அதைக் கண்டு சிரித்துக் கொண்டு அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும், அடிபணிந்து விடக் கூடாது என்று என் அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.  

எனது பாதுகாப்பு, எனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்த கவலையுடன் நான் வீட்டில் முடங்கிப் போன இன்னொரு நேரம் என் வாழ்வில் இருந்தது.  அது நமது நாடு சீக்கிய எதிர்ப்புக் கலவரத்தை சந்தித்த அக்டோபர் 1984.  அதற்கு சில மாதங்களுக்கு முன், ஜூன் 1 அன்று ஷார்ஜாவில் கிரிக்கெட் பயனாளிகள் நிதித் தொடரில் நிதி பெற்ற இருவரில் நான் ஒருவன்.  இன்னொருவர் இம்ரான் கான்.  அந்தப் பணத்தைக் கொண்டு நான் தில்லியில் ஒரு விவசாய நிலத்தை வாங்கியிருந்தேன்.  அங்கு அமைதியான கிராமப்பகுதியில்  குடியேறும் நம்பிக்கையில் அதை வாங்கினேன்.  ஆனால் தலைநகரில் வாழ்வது கூட எங்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லையெனும் போது, புறநகரில் தனிமையான பகுதியில் வாழ்வது என்பது ஒரு சீக்கியக் குடும்பத்தால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது.  சுமார் ஒன்பது மாதங்களுக்கு எங்கள் குடும்பம் தங்குவதற்குத் தலைக்கு மேல் கூரை கூடக் கிடையாது.  சில நேரங்களில் எங்களை விருந்தாளியாக அழைக்கும் நண்பர்கள் வீட்டில் தங்குவோம், மற்ற நேரங்களில் என் நிறுவனமான செயிலின் விருந்தினர் இல்லத்தில் தங்குவோம்.  

எனது எதிர்காலம் குறித்த அச்சத்துடன் நான் எனது மூத்த அதிகாரி ஒருவரிடம் சென்றேன்.  அவர் ஒரு கிரிக்கெட் நிர்வாகியுமாவார்.  அவர் அப்போது ஜனாதிபதி மாளிகையில் பணியிலிருந்தார்.  நான் என் நிலத்தை விற்று விட்டு எனது ஊரான அம்ரிஸ்தருக்குச் சென்று குடியேறி விடுவது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் ஆனால் அங்கு நான் செய்வதற்கு எந்த வேலையும் இருக்காது என்றும் சொன்னேன்.  மற்றொரு வாய்ப்பு, நாட்டை விட்டு வெளியேறுவது.  அவர் எனது நிலை கண்டு பரிதாபம் கொள்வார், ஒருவேளை எனக்கு தில்லியில் அரசாங்கக் குடியிருப்பு பெற்றுத் தருவார் என்று நினைத்தேன்.  ரொம்பவும் சிந்திக்காமல் அவர் என்னிடம் சொன்னார், “பிஷன், நான் மட்டும் நீயாக இருந்தால், நான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன்.”  யோசித்துப் பாருங்கள், ஜனாதிபதி மாளிகையில் பணியிலிருக்கும் நாட்டின் ஒரு மூத்த அதிகாரி, ஒரு முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனைப் பார்த்து நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார்!

நான் ஒரு வார்த்தையும் சொல்லா விட்டாலும், மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தேன்.  நான் எதுவும் பதிலளிக்காமல் வீடு திரும்பி என் மனைவிடம் ’நிலம் விற்பனைக்கு’ என்ற அறிவிப்பை எடுத்து விடுவோம் என்றும், நாம் அங்கு வீடு கட்டுவோம் என்றும் சொன்னேன்.  “நான் கொல்லப்படுவேன் என்றால் அது அப்படியே நடக்கட்டும்.  நான் இந்த நாட்டை விட்டுப் போக மாட்டேன்.  இங்கு வசிப்பதற்கு எனக்கு எல்லா உரிமையும் உள்ளது.”  நான் விடாப்பிடியாக இருக்க, அங்கு வீடு கட்டப்பட்டு, நாங்கள் குடியேறினோம்.  நீங்கள் ஒரு மூலைக்குத் தள்ளப்படும்போது, உங்கள் உயிருக்கு அஞ்சுகிறீர்கள்.  எனினும், நீங்கள் சவாலை ஏற்றுக்கொண்டு, தீயாக மேலெழும்போது, மோசமான காலங்களைக் கடக்க உங்களுக்கு வலு ஏற்படும்.  இது வைரஸ் தாக்கும் நேரம், ஆனால் எனக்கு, இதற்கான எதிர்ப்பு மருந்து அதுவேதான்.

Revisiting The Gruesome History Of Anti-Sikh Riots Of 1984 And ...

இந்தியா ஈடுபட்ட போர்கள் அதிகமான படுமோசமான காலங்களைக் கொண்டு வந்தன.  1965 இந்தியா பாகிஸ்தான் போர் பற்றிய எனது நினைவுகள் ஒரு வேடிக்கையான நிகழ்வை நினைவூட்டுகின்றன.  அந்த வேடிக்கையான நாளில் ஒரு சிவில் பாதுகாப்பு வார்டனான எனது தந்தை அம்ரிஸ்தரில் எங்களது சுற்றுப்புறத்தில் ஒரு போர்ப்பயிற்சிக்காக எளிமையான மனிதர்களைக் கூட்டினார்.  முதலில் ஒவ்வொருவருக்கும் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்த பிறகு, சுடும் பயிற்சிக்காக அனைவரையும் கீழே படுக்கச் சொன்னார்.  நானும் ஊக்கத்துடன் துப்பாக்கிக் குதிரையைத் தட்டிக் கொண்டிருந்த என் தந்தையைப் பார்த்து அவருடன் சேர்ந்து அவரைப் போலவே செய்ய முயற்சித்தேன்.  அந்தக் கனமான துப்பாக்கி சுட்டபோது, எனது தோளைப் பின்புறமாகத் தாக்கியதானது என்னை துப்பாக்கியைத் திருப்பிக் கொடுக்க வைத்தது – “எனக்கு பந்தைத் தூக்கிப் போட வேண்டும், இந்தாருங்கள் உங்கள் துப்பாக்கி.”

1971-72இல் பங்களாதேஷ் போரின்போது நாங்கள் ஆஸ்திரேலியா டூரில் இருந்தோம்.  நான் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்தபோது, பின்னணியில் துப்பாக்கி வெடிக்கும் சந்த்தம் கேட்டுக் கொண்டிருந்தாலும், என் தந்தை எல்லாம் நன்றாக இருப்பதாகக் கூறினார்.  ஆனால் அதற்குப் பிறகு பேசிய என் தாய், அமுக்கமான குரலில் ரகசியமாகக் கூறினார், “நாம் திரும்பவும் சந்திப்போமா என்று கடவுளுக்குத்தான் தெரியும்.”  அவர்களது முரண்பாடான வார்த்தைகள் என்னைக் குழப்பி விட்டன.  பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்த அதிர்ச்சியான நாள் குறித்து நான் சிரிக்கலாம்.  ரம்மியமான தருணங்களை நினைவில் வைத்திருக்கவும், மோசமான காலங்களை அழித்து விடுவதுமான மனித மனத்தின் பாகுபாடு நாம் வாழ்வில் முன்னேறிச் செல்ல உதவுகிறது.  காலங்கள் செல்லச் செல்ல, இதுவும் கூடக் கடந்து போகும் – தொற்றுநோயின் அதிர்ச்சி மறைந்து போகும்.

Between 22 yards - The Hindu

எனினும், இப்போது மனதை நொறுக்கும் சில பிம்பங்கள் என் தலையில் தங்கி விட்டன – தனது நோயுற்ற தந்தையுடன் 1000 கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணித்த ஒரு மகளின் பிம்பத்தைப் போன்றவை.  இது திடீரென முழு அடைப்பைத்  திணித்த நமது அரசியல்வாதிகளின் கருணையின்மையைக் காட்டுகிறது.  கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரைப் பற்றிப் பேசுகையில் நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் கூட இல்லாமல் இருக்கின்றன.  நான் எந்த அரசியல் கட்சியையும் குறை கூறவில்லை.  ஆனால் நான் கேட்கிறேன், “எண்ணிக்கையை மறைக்க வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது?  நீங்கள் ஒன்றும் இந்தத் தொற்றை உருவாக்கவில்லையே?”  அவர்கள் உண்மையை மட்டும் கூறியிருந்தால், இந்த நோய்த்தொற்றை நன்றாகவே கையாண்டிருக்க முடியும்.

எனினும் அவர்கள் வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்கள்.  நமது நாட்டில் நமக்கு சிந்திக்கும் உரிமையும், வெளீப்படையாகப் பேசும் உரிமையும், உறுதிப்பாடும் நமக்கு இருக்கிறதா?  இதுவரை இல்லை – இத்தகைய தாராளவாத சிந்தனைகள் காலத்துடன் வேரூன்றும்.  நாம் இன்னும் இளமையாக இருக்கிறோம், நாம் கற்றுக் கொள்வோம்.  ஆனால் நாம் முதலில் கல்வியின்மையுடனும், வறுமையுடனும் போராட வேண்டிய தேவை இருக்கிறது.  இப்போதெல்லாம் நான் மிகவும் கவலையுடன் இருக்கிறேன்.  நாம் மிகவும் பிற்போக்காகவும், குருகிய எண்ணமுடையவர்களாகவும் ஆகிவிட்டோம்.  அன்று நான் ஈத் முபாரக் என்று ட்வீட் செய்தேன்.  ஆனால் எனது டைம்லைனில் இப்படிப்பட்ட பதிவுகள் வந்தன: “பேடி சாகேப், கபி ஹிந்தூஸ் கோ பி கர் தியா கரோ.”  (வாங்க பேடி சார், அப்பப்போ இந்துக்களுக்கும் வாழ்த்து சொல்லுங்க.)  ஐயா, இது ஈத் பெருநாள், முஸ்லிம்களின் பண்டிகை!

ஆனால் அனைத்துக்கும் மேலாக, இந்த நாட்டை உண்மையில் கீழே இழுத்தது, முகத்துதி.  நான் இதில் முன்பே அனுபவப்பட்டிருக்கிறேன், இப்போது எப்போதுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  நான் செயிலில் வேலை செய்தபோது, இராணுவம் தங்கக் கோயிலில் நுழைந்த சம்பவத்துக்குப் பிறகு, ஒரு நிருபர் என் கருத்தைக் கேட்டு என்னிடம் வந்தார்.  நான் அவரிடம் சொன்னேன், “ஒவ்வொரு சீக்கியனும் பயங்கரவாதி அல்ல, ஆனால் தங்கக் கோவிலுக்குள் இராணுவம் நிழைந்ததால் ஒவ்வொரு சீக்கியனும் மனதில் காயமடைந்துள்ளான்.  நானும் அவர்களில் ஒருவன்.”  அதில் ஒன்றும் கூடுதலுமில்லை, குறைவுமில்லை.

அது செயிலுக்கு பொறுப்பான அமைச்சரின் காதுக்குச் சென்றது.  அவர் ஒருமுறை கூட என்னிடம் பேசாமல், என்னைப் பணியிடைநீக்கம் செய்தார்.  நம்பிக்கையின்மை நிலவிய அந்த நேரத்தில் சீக்கிய சமூகத்தின் உணர்வு இப்படியிருந்தது: “பிஷன் சிங் பேடி நீங்கள் தியாகியாகி விட்டீர்கள்.”  அரசாங்கம் இப்போது விளையாட்டு வீரர்களைக் கூட விட்டு வைப்பதில்லை.  விரைவில் எனது படம் அமெரிக்கா, கனடாவிலுள்ள குருத்வாராக்களின் சுவர்களில் வரத் தொடங்கியது.  எனது பணியிடை நீக்கத்தின் விளைவுகள் செயிலில் இருந்தவர்களைக் கவலையில் ஆழ்த்தியது.  எனவே உயர் அதிகாரி ஒருவர் என்னை அழைத்துக் கேட்டார்: “என்ன நடந்து கொண்டிருக்கிறது பிஷ்?”  நான் அதைத்தான் சரியாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னேன். தனது நிலையிலிருந்து கீழிறங்கிய அந்தப் பெரிய மனிதர் என்னை சமாதானப் படுத்தும் தொனியில் சொன்னார், “என்னை எண்1, சஃப்தர்ஜங் சாலையிலிருந்து யாரும் கேள்வி கேட்பதற்கு முன், நான் என் கடமையைச் செய்து விட்டேன்.”

நீங்கள் மேலே இருப்பவர்களை எல்லாம் மகிழ்ச்சிப் படுத்துவது குறித்தே சிந்திக்கும் போது, நீங்கள் தவறு செய்கிறீர்கள், அடிமையாகி விடுகிறீர்கள், சுயமரியாதையை இழக்கிறீர்கள்.  அது இன்றும் நடக்கிறது.  எனது தொழிலில் கமெண்டரி பாக்சில் பேசும் இடத்துக்குக்காக சுற்றிச் சுழலும் ஒருவரை எனக்குத் தெரியும், தனது முதுகை நிர்வாகிகளை மகிழ்விக்கக் குனிவாகவே வைத்திருக்கிறார் – இதெல்லாம் அவமதிப்பாக அல்லாமல் வேறு எதுவாகவும் இல்லாத ஒன்றைச் சொல்வதற்காகத்தான்.  அவருக்கு நிர்வாகத்தை எதிர்க்கத் தயாரான ஒரு மேடை இருக்கிறது.  ஆனால் அதற்கான துணிவோ, உறுதிப்பாடோ அவரிடம் இல்லை.  அவர் பிசிசிஐ வேலைக்காகக் கெஞ்சுவதைப் பார்ப்பது என்னை அஞ்சச் செய்கிறது.

1984 Anti-Sikh Riots Cannot Be Wished Away- The New Indian Express

நாம் மிக அதிகமான சதவீதத்தில் இளைஞர்களையும், முற்போக்கு மனங்களையும் கொண்ட நாடு என்பது நமக்குத் தொடர்ந்து நினைவூட்டப் படுகிறது.  எனக்கு அது ஒரு கானல்நீர் மட்டுமே.  இளைஞர்களும், படித்தவர்களும் கூட அரசியல் புதிரில் சேர்கிறார்கள், தமது குரலை உயர்த்தத் தயங்குகிறார்கள்.  காரணம்: முகத்துதி.

அதிர்ஷ்டவசமாக எனக்கு அறிவுக்கூர்மையும், வலுவான குணமும் இருக்கிறது.  நான் இளைஞனாக இருந்தபோது இந்தியாவும் அப்படி இருந்தது.  என்னால் எழுந்து நின்று என் கருத்தைக் கேட்க வைக்க முடிந்தது.  ஆனால், இப்போது என் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்.  ஆனால் நான் எதிர்மறை சிந்தனை கொண்டவனல்ல.  எனது ஆன்மீகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு, எனக்கும் நம்பிக்கை உண்டு.  நாம் போர்களையும், படையெடுப்புக்களையும் கடந்து பிழைத்திருக்கிறோம், நாம் அரசியல் நோய்த்தொற்றையும் கடந்து பிழைப்போம்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ். ஆகஸ்ட் 9, 2020

எழுதியவர்: பிஷன் சிங் பேடி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்.

தமிழில். கி.ரா.சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *