தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்
பக்தவத்சல பாரதி
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 86
விலை : ரூ. 80
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
மானுட வரலாற்றில் எழுதப்பட்டவைகள் தவிர்த்து இன்னும் எழுதப்படாத வரலாற்றுச் செய்திகள் எண்ணற்றுக் கிடக்கின்றன. தமிழர் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட இன்னும் எழுதப்படாத வரலாற்றுச் செய்திகள் நிறையவே இருக்கின்றன. அப்படி எழுதப்பட்ட வரலாற்றில் இந்நூலை அரிதான ஒன்றாகத்தான் பார்க்கிறேன். சமீபகாலமாகத்தான் தமிழர்களின் தொன்மை வரலாற்றைத் தமிழர்களே, சரி என்று ஏற்றுக் கொள்கிற காலம் வந்து கொண்டிருக்கிறது. அண்மைக்கால புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், அறிவியல் வளர்ச்சி, நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், தொடர் முயற்சிகள் போன்றவைகளால் இது சாத்தியமாகியிருக்கிறது. இவ்வகையில் கீழடி அகழ்வாராய்ச்சி தமிழர்களின் மத்தியில் ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது இந்நூலும் வருந்தலை முறைக்கும், தற்கால தமிழர் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
உலக நாகரிகங்களுள் தமிழர் நாகரிகமும், தமிழர் மொழியும், தமிழ் இலக்கியங்களும் மிகப் பழமையானவை என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததே. ஆனால் எப்படி என்ற கேள்விக்கு பரவலான பதில், ” கல் தோன்றி மண் தோன்றா காலத்தே” என்ற புறப்பொருள் வெண்பாமாலை பாடலைத்தான் பதிலாக சொல்லத் தெரிகிறது. ஆனால் தகுதியான சரியான ஆய்வின் அடிப்படையில் தமிழர் வரலாற்றை நிறுவும் முயற்சியில் இந்நூல் வெற்றி பெற்றிருக்கிறது எனலாம்.
பல நூல்களின் ஆசிரியரான எழுத்தாளர் பக்தவச்சல பாரதி அவர்களால் எழுதப்பட்டு; தமிழகத்தின் பதிப்புத்துறையில் முன்னிலையில் இருக்கும் பாரதி புத்தகாலயத்தால் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
தமிழர் வரலாற்றை எப்போதும் சங்க இலக்கியங்களில் இருந்தே தொடங்கிப் பழகிய நமக்கு; ஆறுதலாய் தமிழர்களின் வரலாற்றுக் காலத்தை இன்னும் முன்னோக்கி எடுத்துச் சென்று சிந்துவெளி காலம் தொடங்கி தற்காலம் வரையிலான தமிழர் வரலாற்றை ஆழமான, நுணுக்கமான செய்திகளோடு இந்நூலை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே.
இந்நூலின் பெயரைக் கேட்கும்போதே சற்று நிதானிக்கச் செய்கிறார் இந்நூலாசிரியர். ஆம், தமிழறிஞர் திரு.ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களை நமக்கு நினைவூட்டி அவர் எழுதிய, ‘ஊரும் பேரும் ‘என்ற மிகச் சிறப்பான நூலை நம் நினைவிற்கு கொண்டு வந்து போகிறார்.
அண்மைக்காலங்களில் சிந்துவெளி நாகரிகத்தின் வரலாற்றில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி வரும் குறிப்பிடத்தக்க ஆய்வாளர், இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின், Journey of a civilization: Indus to Vaigai (சிந்து வெளியில் இருந்து வைகை வரை) எனும் ஆங்கில நூலின் வழியே நமக்கான சான்றுகளைத் தருகிறார். சங்க கால மன்னர்களின் பெயர்களும், குடிப் பெயர்களும், தமிழ் கடவுள் முருகன் பெயரும், நிலப் பெயர்களும் தமிழகம் கடந்து சிந்துவெளிப் பகுதிகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்றளவும் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
கொற்கை, ஆமூர் கல்லூர், தொண்டி முதலான பெயர்கள் பாகிஸ்தானில் ஊர்ப் பெயர்களாக உள்ளன என்றும்; நல்லி எனும் பெயர் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பல இடங்களில் ஊர்ப் பெயர்களாக உள்ளன என்றும்; கல்லூர், கலூர் எனும் வழக்குகளும் பல இடங்களில் உள்ளதாகவும்; பசூர் தொண்டி, அரணி மயிலம், ஆமூர், ஊரல் முதலியன ஊர்ப் பெயர்களாக காணப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.
சங்ககாலத் தமிழர்களின் திணை வாழ்வியலில் காணப்படும், ‘ஊர்’ என்ற சொல் மருதத்திணைக்கு உரியதாகவும்; ‘சேரி’ என்பது முல்லைத்திணைக்கு உரியதாகவும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு திணைக்குமான வசிப்பிடங்களின் பெயர்களை பட்டியலிட்டு இருப்பதன் மூலம் பண்டைய தமிழர்களின் நுட்ப அறிவையும், அரசியலையும் அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களில் இதற்கான சான்றுகளைத் தந்துச் செல்கிறார். குடி, சிறுகுடி, குரம்பை, குறிச்சி ஆகிய பெயர்கள் குறிஞ்சித்திணை ஊர்களாகவும்; பாடி, சேரி, பள்ளி ஆகிய பெயர்கள் முல்லைத் திணைப் பெயர்ளாகவும்; சிற்றூர், பேரூர், மூதூர் ஆகிய பெயர்கள் மருதத் திணை பெயர்களாகவும்; சிறுகுடி, பாக்கம், பட்டினம் ஆகியன நெய்தல் திணைப் பெயர்களாகவும்; குறும்பு, பறந்தலை ஆகியன பாலைத் திணைப் பெயர்ளாகவும் குறிப்பிடுகிறார்.
சங்க இலக்கியங்களை நுட்பமாக ஆராய்ந்து சங்ககால குடியிருப்புகளை மூன்று வகைகளில் வகைபடுத்தி உள்ளார். ஒன்று சிதறிய குடியிருப்பு இரண்டு நேர்கோட்டு குடியிருப்பு மூன்று மையம் சார்ந்த அடர்த்தியான குடியிருப்பு. அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்துள்ள குடியிருப்புகளை சிதறிய குடியிருப்பு என்றும்; நேர்கோட்டு குடியிருப்பு முறை முல்லைத் திணையிலும் சில பொழுது குறிஞ்சியிலும் காணப்பட்டது என்றும்; ஓரிடத்தில் தொகுப்பாக அடர்த்தியாக தொடர்ச்சியாக காணப்படும் மையம் சார்ந்த குடியிருப்பு முறை மருதத்திணையில் காணப்படுவதாகவும் தமிழர்களின் குடியிருப்பு முறையை வகைப்படுத்தி உள்ளார் ஆசிரியர்.
மேலும் சிந்துவெளி காலம் தொட்டு இன்று வரை காணப்படும் ஊர்களைப் பற்றிய வழக்காறுகளையும் பட்டியலிட்டுள்ளார். தமிழர்களின் சிந்துவெளி வாழ்விலிருந்தே மேல், கீழ் என்று அழைக்கும் முறை நிலவி வருவதாகவும்; கீழுர், மேலூர், கீழ் சேவூர், மேல் சேவூர் என்று அழைக்கப்படும் வழக்கத்திற்கு, “பண்பாட்டு தொழில் மாதிரி” எனவும் குறிப்பிடுகிறார்.
`சேரி` என்ற சொல் முதன் முதலில் முல்லைத் திணையில் காணப்பட்டாலும் பின்னர் படிப்படியாக பிற திணைகளிலும் காணப்படுவதாகவும்; சங்ககால தமிழகத்தின் மதுரை, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்களில் சேரிகள் இருந்துள்ளதாகவும்; சேரி என்பது ஒத்த வகையின மக்களின் குடியிருப்பு என்றும்; சங்ககாலம் தொட்டு இடைக்காலம் வரை இப்பொருளையே உணர்த்தி வந்த நிலை மாறி பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இழிசினர் வாழிடம் என்னும் பொருள் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஓர் ஊர் மேற்சேரி என்றும்; கீழ் சேரி என்றும் இரு வாழிடங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது பற்றி தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இச்செய்தியின் அடிப்படையில் மேற் சேரி காரர்களுக்கும், கீழ்சேரி காரர்களுக்கும் இடையே கோழிச் சண்டை நடந்ததாகவும் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் வழிநின்று சேரிகள் பற்றி விளக்குகிறார்.
பழங்காலத்தில் `சேரி` என்பது வாழிடம் என்பதற்கான பொதுப்பெயராகவே இருந்துள்ளது. பார்ப்பனர் வாழ்ந்த இடம் பார்ப்பனச் சேரி என்றும்; பறையர் வாழ்ந்த இடம் பறைச்சேரி, என்றும் கம்மாளர்கள் வாழ்ந்த பகுதிகள் கம்மாளச்சேரி என்றும் புலையர்கள் வாழ்ந்த பகுதி புலைச்சேரி என்றும்; கோயில்களில் நடனமாடும் தளிப்பெண்டுகள் வாழ்ந்த இடம் தளிச்சேரி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்திற்குப் பின் கி பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு கால அளவில்தான் சாதிப் படிநிலை இறுக்கமடைந்துள்ளது. “அந்தணன் தலையாக பள்ளன் கடையாக” என்று குடுமியான்மலை கல்வெட்டு கூறுவதன் மூலம் சாதிப் படிநிலை இறுக்கமடைந்துள்ளதை அறிய முடிகிறது. வைதிகம் தமிழகத்தில் காலூன்றிய பின் சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அவைதிக மக்கள் ஊரின் கிழக்குப் பகுதியில் விலகி வாழத் தலைப்பட்டனர். அத்தகைய தனித்த வாழிடங்கள்தான் பின்னாளில் ‘சேரி’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஊரும் சேரியும் இட ரீதியில் விலகியவைதான், ஆனால் செயல் ரீதியில் ஒன்றிணைந்ததாகும். ‘சேரி’ மக்களின் சேவைகள் இல்லாமல் ஓர் ஊரின் அசைவு முழுமை பெறுவதில்லை.
பொதுவாக ஊர் மேற்கிலும், சேரி கிழக்கிலும் அமைந்துள்ளதையும் அறிய முடிகிறது. இது ஒரு பொதுவான அமைப்பு முறையாக இருந்தாலும், சேரி கிழக்காக அமைக்கப்பட்டதற்கு ஒரு காரணம் ஊரின் இடவியல் அமைப்பு முறையே ஆகும். பொதுவாக ஊரின் நில அமைப்பில் மேற்கு உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் இருக்கும். இத்தகைய அமைப்பு சமூகத்தின் உயர்வு தாழ்வுக்கு தேவைப்பட்டுள்ளது. அடித்தள சாதியார் மேற்குப்புறம் வாழ்ந்தால் அவர்கள் பயன்படுத்தும் அழுக்கு நீர் கிழக்கு நோக்கி ஓடிவரும் என்பதும் அதனால் அது உயர்குடியினருக்கு தீட்டாகிவிடும் என்பதும் அதனால்தான் ஊரின் கிழக்கே சேரிகள் அமைக்கப்பட்டதையும்; இதன் காரணமாகவே அடித்தள மக்களை கிழக்காக அமர்த்தி விட்டனர் என்றும் அறிய முடிகிறது. இதனால் அவர்கள் பயன்படுத்தும் நீர் இவர்களுக்கும் கிழக்காக சென்றுவிடும் என்பதால் உயர்சாதியினருக்கு தீட்டு ஆகாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீண்டாமையை தத்துவ ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் அணுகும்போது தீண்டாமை என்பது அசுத்த நிலை சார்ந்தோ அசுத்தமான தொழில்கள் சார்ந்தோ வடிவமைக்கப்பட்டது அல்ல. அது தீண்டுதல் – தீண்டப் படுதல் உணர்வை சார்ந்ததாக இருக்கிறது. தீண்டாமை என்ற கருத்தாக்கம் தீண்டுதலின் மீமெயிய்யலின் விளைவாகவும் தீண்டப்படுவதிலிருந்து தீண்டுவதற்குப் பின் துணையாக்க இடப்பெயர்வின் விளைவாகவும் தோன்றியது என்றும் பல்வேறு காரணங்களை முன்வைக்கிறார். மிக முக்கியமாக தீண்டாமை என்பது படிநிலை தன்மை கொண்டதல்ல என்றும் இது தலை கீழாக்க தன்மை கொண்டதாகதான் இருக்க முடியும் என்ற கருத்தையும் பல்வேறு காரண காரியங்களின் அடிப்படையில் முன்வைக்கிறார் ஆசிரியர்.
உலகெங்கும் நகர நாகரிகங்களைப் பற்றி பேசும்போது; தமிழகத்தில் ஊர்களில்தான் நாகரீகம் சிறந்து விளங்கி இருப்பதைக் காண்கிறோம். தமிழகத்தில்தான் கிராம நாகரிகத்தை காணமுடிகிறது. தமிழர் நாகரிகத்தை பொருத்தவரை உழுகுடி சமூகங்களும், ஊரகப் பண்பாடுகளும் நாகரீகத்தின் முதன்மை பகுதிகளாகும். ஆனால் இன்றைய உலகமயமாக்கச் சூழலில் கிராமப் பொருளாதாரமும், மரபுகளும், பாரம்பரியங்களும் குறைந்து நவீனத்துவம் ஆகியுள்ளது. தமிழர் உணவு முறை மாறியுள்ளது. பாரம்பரிய உணவு தானியங்களை மறந்துவிட்டனர். நுகர்வு கலாச்சாரம் பெருகிவிட்டது. இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதும், மண் சார்ந்த விலங்குகள் வீழ்த்தப்படுவதும் பெருகி உள்ளது. கிராமங்களில் விவசாயம் மெல்ல மெல்ல அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கிராமங்களிலிருந்து நகரம் நோக்கி இடம் பெயர்கிறார்கள்.
எனவே இந்நிலைமையை மாற்றிட தமிழக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்நூலை நிறைவு செய்திருக்கிறார் நூலாசிரியர். இந்நூலை வாசித்து முடிக்கும்போது சிந்துவெளி தொடங்கி சமகாலம் வரை தமிழகத்தின் கிராமங்களை சுற்றி வந்த ஒரு நிறைவு பெறுகிறது. அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய அரிய நூலாகும். வாழ்த்துகளுடன்
– முனைவர் கீரைத் தமிழன்.
([email protected])
9787756551
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
பழந்தமிழர் பண்பாடு நாகரிகத்தை புது நோக்கில்
எடுத்தியம்ப வந்த நூலாக அறிய முடிகிறது.கட்டுரை ஆசிரியர் அற்புதமாக விளக்கிப் செல்கிறார்.