பால புரஸ்கார் விருதும் சாகித்ய அகாடமியும் – தசிஎகச கண்டனம்.
வணக்கம்,

2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் பால சாகித்ய புரஸ்கர் திருமதி. ஜி.மீனாட்சி எழுதிய ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஸ்கர் என்பது சிறார் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ’மல்லிகாவின் வீடு’ நூல், பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கதை ‘அப்பாவை ஏன் பிடிக்கும்?’. இதற்கு மிகச் சாதாரணமான பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கதையின் முடிவாக ஒரு மாணவர்,”எங்கப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! ஏன்னா, அவர் எங்கம்மாவைக் கல்யாணம் செய்துக்கிட்டாரே!” என்று சொல்கிறார். பட்டிமன்ற நகைச்சுவைத் துணுக்கு போன்ற இதை, சிறுவர் கதை என்கிற முடிவுக்கு தேர்வுக் குழுவினர் எப்படி வந்தனர்?

இப்படி இத்தொகுப்பில் உள்ள முக்கால்வாசி கதைகளில் கதைத்தன்மையே இல்லை. மொத்தத் தொகுப்பும் ஆரம்பகட்ட சிறார் கதைகள் எழுதுபவரின் முயற்சியைப் போலுள்ளது. 1980களில் வந்த புத்தகத்தினைப் போல எந்த வகையிலும் நவீனத்துவம் (இடையிடையே ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவது நவீனத்துவம் ஆகி விடாது) சிறிதும் இல்லாத தொகுப்பாக இருக்கிறது. புதிய முயற்சியாகவோ, புதிய கதை சொல்லும் பாணியிலோ, இதுவரையில் யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல முற்பட்டதாகவோ தெரியவில்லை.

விருது என்பது தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டால்தான் அந்தத் துறை வளர்ச்சிபெறும். ஆனால், பால சாகித்ய புரஸ்கார் தேர்வுக் குழுவினரோ, தமிழில் நவீன சிறார் இலக்கியம் வளரக் கூடாது என நினைப்புடன் இந்நூலைத் தேர்ந்தெடுத்துள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது.

விருது கொடுக்கப்பட்டுள்ள நூலாசிரியரின் கதைகள், நூல்கள் தமிழ் சிறார் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவோ, முன்னுதாரணப் படைப்பாக அடையாளம் பெற்றதுபோலவோ தெரியவில்லை. இந்த விருது வழங்கப்படுவதற்கு முன் எந்த வகையிலும் சிறார்களையோ, சிறார் இலக்கியப் படைப்பாளிகளையோ இந்தக் கதைகள் சென்றடைந்ததுபோலவும் தெரியவில்லை. பால சாகித்ய புரஸ்கார் என்பது சாகித்ய அகாடமி ஆலோசனைக் குழுவினர், தேர்வுக் குழுவினருக்கு நெருக்கமானவர்களுக்கே பெரும்பாலான நேரம் கொடுக்கப்பட்டுவருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனம் செய்யப்பட்டுவருவதை, உறுதிப்படுத்துவதுபோல் இந்த ஆண்டு விருதுத் தேர்வும் அமைந்திருக்கிறது.

இதை சாகித்ய அகாடமியின் தலைமை அலுவலகப் பார்வைக்கும் சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கொண்டு செல்லும். இதற்குக் காரணமான தமிழ் பால சாகித்ய புரஸ்கார் தேர்வு குழுவுக்கு கடும் கண்டனங்களை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது. எதிர்வரும் காலத்தில் தகுதியான நூலுக்கு விருதுகளை அளிக்கும்படி சாகித்ய அகாடமி அமைப்பினரைக் கேட்டுக்கொள்கிறது.

எதிர்காலத்தில் சாகித்ய அகாடமியின் பால சாகித்ய விருதுத் தேர்வு மேம்பட்ட வகையில் அமைய கீழ்க்கண்ட பரிந்துரைகளை முன்வைக்கிறோம்:

1. சமகாலச் சிறார் இலக்கியத்தோடு நேரடித் தொடர்புடையவர்களை மட்டுமே விருதுத் தேர்வுக் குழுவுக்குத் தேர்வுசெய்ய வேண்டும்.

2. தற்போது இறுதிக் குறும்பட்டியல் மட்டும் வெளியிடப்படுகிறது. அதே நேரம், இறுதிப்பட்டியலுக்கான நூல் தேர்வு செய்யப்பட்ட முறை, அவற்றைப் பரிந்துரைத்த தேர்வாளர்கள் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிட வேண்டும்.

3. சாகித்ய அகாடமி அலுவலர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு சமகாலத்தில் என்ன மாதிரியான சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்கிற விவரம் தெரிந்திருக்க வேண்டும்.

4. விருதுத் தேர்வு முறை நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதை உத்திரவாதப்படுத்த, வெளிப்படைத்தன்மை வேண்டும்.

5. விருதுக்குரிய நூல் இறுதிப் பட்டியலிலுள்ள மற்ற நூல்களைவிட எந்த வகையில் தகுதியானது என்பது குறித்து விருதுக் குழு நடுவர்களின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

நன்றி,
விழியன் | செயலாளர்

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
+91 90940 09092 / +91 94438 81701
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.