ஜெர்மன் சினிமா – இரண்டு

– விட்டல்ராவ்

புதிய ஜெர்மன் சினிமா இயக்குனர்கள் ஹாலிவுட் சினிமாவின் கதைக்கூறல் முறையுடன் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஸ் புதிய அலை சினிமாவின் கூர்மையான நவீனத்துவத்தையும் யதார்த்தத்தையும் இணைத்த நூதனமான ஜெர்மன் வகைமையாக உண்டாக்கிக் காட்ட முயற்சித்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ரெய்னர் வெர்னர் ஃபாஸ் பைண்டர் (Rainer Werner Fassbinder) பாஸ்பைண்டர் புதிய அலை ஜெர்மன் சினிமாவின் முதன்மையான சக்தியாகக் கருதப்படுபவர். தமது பதினான்கு வருட திரைப்பட பயணத்தில் 40 திரைப்படங்களையும் தொலைக் காட்சி நாடகங்களையும் எழுதி மேடையேற்றியவர். 1945இல் ஜெர்மனியின் பவேரியாவில் பாஸ் பைண்டர் பிறந்தார். இவரது குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் தனிமையிலேயே கழிந்திருந்த சமயம் ஏராளமான திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார். தனது 21வது வயதிலேயே இவர் ஒரு முழுமையும் எளிமையுமான நவீன நாடகக் கம்பெனியை நடத்திக் கொண்டிருந்தவர். நாடகங்கள் எழுதுவதும் அவற்றை இயக்குவதுமாயிருந்த பாஸ்பைண்டர் தமது முதல் திரைப்படத்தை 1969ல் இயக்கினைார். இதன் மூலம் சர்வதேச கவனத்தையும் பெற்றார். ஆனால் இவரது சொந்த வாழ்க்கை அவ்வப்போது கஷ்டங்களுக்குள்ளாகி முதலில் குடியில் மூழ்கியவராயும் பிறகு இறுதிவரை மீள முடியாத மீளவிரும்பாத போதை மருந்துக்கு அடிமையானவராயும் தமது 37வது வயதிலேயே மரணமடைந்தார்.

Bioscope Karan 27th WebSeries by Vittal Rao. This Series About Germany movies தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

1947இல் பாஸ்பைண்டர் இயக்கிய  Ali: Fear Eats The Soul எனும்  படம், Douglassirk என்பவர் 1955இல் இயக்கிய  All that Heaven Allows  எனும்  திரைப்படத்தின் பாதிப்பைக் கொண்டது. 1972இல் பாஸ்பைண்டர்   The Bitter Tears of petra vonkant  எனும் அரிய திரைப்படத்தின் மூலம் பெரிதும் கவனம் பெற்றார். இவரது மிக முக்கியமான திரைப் படம்  The marriage of maria Braun (1979) மிகப் பெரிய வெற்றியைத் தந்த யுத்தப் பின்னணியிலான படம். இவர் 1980இல் தயாரித்து இயக்கிய  Berlin Alexanderplatz எனும் தொலைக் காட்சித் தொடர் சித்திரம் மறக்க முடியாத ஒன்று. ஜெர்மனிய கலாச்சாரத்தின் அடிநாதமாய் அமுங்கியுள்ள மன இறுக்கங்களை வெளிக் கொணரும் தருணங்களில் பாஸ்பைண்டர், ஐரோப்பிய கலைப் பாரம்பரியத்தின் மெலோடிராமா வகை உணர்ச்சிபூர்வ வெளிப்பாட்டை வெற்றிகரமாய் சினிமாவாக்கித் தருகிறார்.

Bioscope Karan 27th WebSeries by Vittal Rao. This Series About Germany movies தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

Ali: Fear Eats the soul (1974) எனும் திரைப்படம், அலி எனும் 40 வயது அரேபிய தொழிலாளிக்கும், 60வயது எம்மி குரோவ்ஸ்கி எனும் போலந்தில் பிறந்து ஜெர்மனியில் நிரந்தரமான சுத்திகரிப்பு பணிபுரியும் பெண்ணுக்கும் இடையேயான காதல் உறவாகும். எம்மி விதவை. மகளைத் திருமணம் செய்து அனுப்பிவிட்டு  தனியாளாயிருப்பவள். அலி, தன்போல அரேபிய பகுதிகளிலிருந்து வந்து பணிபுரியும் ஐவரோடு ஓர் அறையிலிருப்பவள். எம்மி, தன் வேலை முடிந்து வீடு திரும்புகையில் மழை பிடித்துக் கொள்ளவே, மழைக்கு ஒருஅரேபிய பார் ரெஸ்டாரண்டில் ஒதுங்குகிறாள். அங்கு மதுவருந்தும் பாரில் பணிபுரியும் அலிக்கும் எம்மிக்கும் அறிமுகம் ஏற்பட்டு அவனது வேண்டுகோளுக்கிணங்கி அவள் அவனோடு நடனமாடுகிறாள். இருவருக்குமிடையே உறவு மலர்கிறது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். எம்மியின் திருமணமான மகளும் மருமகனும் இதை விரும்புவதில்லை. கடைக்காரர்களும், மதுவருந்துமிடங்களிலுள்ளவர்களும் இந்த உறவைப் பிரிக்கும் யத்தனிப்பில் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஒரு நாள் பொறுக்காத வயிற்று வலியால் அலி மயங்கி விழுந்துவிட அவனை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். எம்மியும் அலியும் வெளியுலகத்தின் அச்சுருத்தலுக்கு மத்தியில் பயந்தபடியே மகனாக பாஸ்பைண்டரே நடிக்கிறார். பாஸ்பைண்டருக்கென்று பிரத்தியேகமானதொரு காட்சி ரூபம் உண்டு. இதை அவரது வித்தியாசமான காமிரா நமக்கு ஒளிப்பதிவாளர் ஜுர்கென் ஜுர்கெஸ் வழியாக புலப்படுத்துகிறது. காமிரா, அசைவற்ற நிலையான முகங்களைக் காட்டுகிறது. இந்தியாவில் மணிகவுலின் உஸ்கி ரோட்டி” முதலான திரைப்படங்களில் கே.கே.மகாராஜன் கையாண்ட காமிரா கோணங்கள், நகர்வுகளை கூடவே நினைவுக்கு கொண்டு வருகின்றன. தொழிலாள வர்க்கத்தின் அன்றாட செயல்பாடுகளினின்று கிரகித்துக் கொண்டதாய் இப்படத்தின் போக்கு நமக்குப்படுகிறது. ஓட்டலில் ஜுக் பாக்ஸ் இசைப் பெட்டியிலிருந்து வரும் பாமர நயமான பாடலும், அலியாக வரும் எல்ஹெடி பென்சலேம் (El Hedi Ben Salem) என்ற அரேபிய கலைஞரின் நடிப்பும், எம்மியாக வரும் பிரிஜெட் மைராவின் நடிப்பும் அந்தக் கூற்றை மெய்ப்பிக்கின்றன.

பாஸ்பைண்டரை ஜெர்மனியின் ஜார்ஜ் கூக்கர் எனலாம். அமெரிக்க திரைப்பட இயக்குனர் ஜார்ஜ் கூக்கர் பெண் பாத்திரங்களில் பிரதானமான கதைகளைத் திரைப்படமாக்கியதில் முதன்மையானவர் Gas Light, Camille, Bowani Junction, My Fair Lady) அவரைப் போலவே ரெய்னர் வெர்னர் பாஸ்பைண்டரும் பெண் பாத்திரங்களை முதன்மைப்படுத்திய ஜெர்மன் திரைப்படங்களைக் கையாண்டிருப்பவர். அவற்றில் முக்கியமான படம் மரியா ப்ரானின் திருமணம் (Marriage of Maria Braun) 2-ம் உலகப் போர் இறுதிக் கட்டத்தை அடைந்த நாளில் ஜெர்மனியின் கீழ் மத்திய வர்க்க மக்களில் பெரும்பாலும் ஆண்கள் போருக்குச் சென்று விட்டார்கள். ஏராளமானோர் போரில் மாண்டுவிட்ட நிலையில் ஜெர்மனியில் பெண்கள் எண்ணிக்கை அதிகம் என்றிருந்ததை இப்படத்தின் தொடக்கத்தில் மரியா தன் அம்மாவிடம் வெளியில் போய்விட்டு வந்தவளாய் பேசும் வசனத்தில் பாஸ்பைண்டர் வெளிப்படுத்துகிறார்.

திருமணத்துக்கான பெண் உடைகள் வேண்டியிருக்கவில்லை. பெண்கள் அதிகமாயுள்ளனர். கல்யாணங்கள் நடப்பது குறைவாயிருக்கு. எனறு கூறுகிறாள் மரியாப்ரான் படத்தின் தொடக்கத்தில் மரியாவுக்கும் ராணுவ சீருடையிலேயே இருக்கும் ஹெர்மனுக்கும் குண்டுவீச்சு நடக்க நடக்க பதிவுத் திருமணம் நடக்கிறது. ஜெர்மனிமீது பயங்கர வான்வழி தாக்குதல் நடைபெறுகிறது. பதிவுத் திருமணம் நடக்கிறது. ஜெர்மனி மீது பயங்கர வான் வழிதாக்குதல் நடைபெறுகிறது. பதிவுத் திருமண அலுவலக கட்டிடம் தகர்க்கப்படுகையில் திருமணப் பதிவு அதிகாரி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறார். மணமகன் ஹெர்மன் அதிகாரியை மடக்கி திருமணப் பதிவுக்கான சான்றிதழில் கையெழுத்தும் முத்திரையும் போட வைக்கும் காட்சி நல்ல நகைச்சுவை. ஆனால் ஹெர்மன் போரிலிருந்து திரும்பவில்லை. போர் ஓய்ந்து உலகம் அமைதி நிலைக்கு திரும்புகையில் மரியா வசிக்கும் பெர்லின் அமெரிக்க ராணுவத்தின் கீழ் வருகிறது. போர் அரங்குகளிலிருந்து கப்பலில் தினமும் வந்திறங்கும் சிப்பாய்களில் தங்கள் கணவன், சகோதரர்கள், பிற உறவுகளில் யாரும் இருக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து அப்படியான நபரின் பெயர் எழுதப்பட்ட அட்டையை கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு அலைகிறார்கள். மரியா ப்ரானும் அவர்களில் ஒருத்தி போருக்குப் போன தங்கையின் கணவன் முழுசாகத் திரும்பி வந்தவன், ஹெர்மன் இறந்துவிட்டான், என்று மரியாவிடம் சொல்லுகிறான். மரியா கூறுகிறாள், ஆனால், காதலுக்கு சாவே கிடையாது என்று.

காபரே, விடுதியொன்றில் மரியா வேலை செய்கிறாள். அதே சமயம் இளமையோடிருக்கும் மரியாவின் விதவைத்தாய் மறுமணம் செய்துகொள்ளத் தயாராகிறாள். காபரே விடுதியில் அமெரிக்க சிப்பாய்கள் விடுதிப் பெண்களோடு சல்லாபம், நடனமென்றிருக்கையில் தனிமையிலிருக்கும் மரியாவுக்கும் ஒரு கருப்பு அமெரிக்க சிப்பாய்க்கும் உறவேற்படுகிறது. அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் அவனுக்கு கட்டிலில் இடம் கொடுத்து கற்பமும் பெறுகிறாள். இருவரும் அந்தரங்கமாயிருக்கையில் தன் எதிர்கால கருப்புக் குழந்தை குறித்து பேசுகிறாள் மரியா.

மரியா ரயில் பயணத்தின்போது ஆஸ்வால்டு எனும் பிரெஞ்சு தொழிலதிபரைக் கவர்கிறாள். இவளது அறிவையும் கண்டு தனக்கு அந்தரங்க காரிய தரிசியாக மரியாவை ஆஸ்வால்டு நியமித்துக் கொள்ளுகிறார். மரியா பதவி உயர்ந்து நிறைய சம்பாதிக்கிறாள். மரியாவைத் திருமணம் செய்து கொள்ளவிருப்பம் தெரிவிக்கும் ஆஸ்வால்டின் முடிவை நிராகரித்த அவள் இன்னொருமுறை திருமணம் செய்ய முடியாதென்கிறார் ஆஸ்வால்டுக்கு ஆசை நாயகியாய் இருந்து வருகையில் அவனை கருப்பு அமெரிக்க சிப்பாய் நெருங்கும் ஓர் இரவில் எதிர்பாராத நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. போரில் செத்துவிட்டதாய் சொல்லப்பட்ட அவள் கணவன் ஹெர்மன் திரும்பி வருகிறான். சிப்பாயிக்கும் அவனுக்கும் சண்டை நடக்கையில், மரியா நீக்ரோவை பலமாய் தலையில் தாக்கிச் சாகடிக்கிறாள், போலீஸ் வருகையில் தான் தான் கொன்றதாகக் கூறி ஹெர்மன் ஆயுள் தண்டனையில் சிறை செல்கிறான் மரியா அடிக்கடி சிறைக்குச் சென்று அவனை சந்திக்கிறாள். ஆஸ்வால்டு நிறைய பணம் கட்டி ஹெர்மனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். ஆனால் மரியாவை ஏற்பதில் உறுதியில்லாத ஹெர்மன் தென்னமெரிக்க நாடொன்றுக்குப் போய் விட்டு மீண்டும் அவளிடம் வருகிறான். அந்த சமயம் ஆஸ்வால்டு இறந்துபோகிறார். தன்னுடைய தொழிற்கூடங்கள் பணம், சொத்து எல்லாவற்றையும் மரியாவுக்கும் ஹெர்மனுக்கும் எழுதிவைத்திருக்கிறார் ஆல்வால்டு. அந்த உயிலை அவரது வக்கீல்கள் படித்துக் காட்டிவிட்டு வைத்துப் போகிறார்கள். அவர்கள் கேட்டைக் கடப்பதற்குள் பயங்கர வெடிச் சத்தத்தை தொடர்ந்து மரியாவின் வீடு எரிகிறது. அவளது அஜாக்கிரதையால் சமையல் எரிவாயு வெடித்து தீப்பற்றி மரியாவும் ஹெர்மனும் சகலமும் எரிந்து கருகுகின்றன.

படம் மெலோடிராமாதான். ஆனால் அதையே எவ்வளவு இயல்பாகவும் யதார்த்தமாயும் இயக்கியிருக்கிறார் பாஸ்பைண்டர். அவர் மெலோடி ராமா வகைக்காரர்தான் என்பது புதியதுமல்ல ஆனால் படம் தரும் நம்பகத்தன்மைக்கான நுணுக்க விவரணைகள் அசத்துகின்றன. மரியா ப்ரானாக ஹன்னா ஸ்கைகுல்லாவும்  Hanna Schygulla ஹெர்மனாக க்ளாஸ் லோவிட்ஸ் என்பவரும் ஆஸ்வால்டாக காட்பிரைடு ஜானும் Gottfred John மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.

Bioscope Karan 27th WebSeries by Vittal Rao. This Series About Germany movies தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்கு பொறுப்பான காமிரா கலைஞர் மைகேல் பால்ஹாஸ் (Michael Ballhaus).

ரெய்னர் வெர்னர் பாஸ் பைண்டரின் ரியோ தஸ் மோர்டஸ் எனும் படம் 2001இல் வெளியானது. அவ்வாண்டின் சிறந்த படமென்று அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது ஓரளவுக்கு இன்றைய ஜெர்மனியின் இளம் தலைமுறை ஆண் பெண்களின் வாழ்க்கை முறையை உரசிச் செல்லும் படம். நமக்கு காதல் உணர்வென்பது திருமணத்துக்கும் உடலுறவுக்கும் முகமன் கூறும் விசயமாக நமது கதாசிரியர்கள், சினிமா பெரும்பான்மைகளில், தெய்வீகம்” என்றும் தியாகம் என்றும் அர்ச்சிக்கப்பட்ட மேம்பட்டதொன்றாகக் கொள்ளப்பட்டதொன்று அதே சமயம், இந்த நூற்றாண்டின் தொடக்ககாலப் படமான இதில்

பாஸ்பைண்டர் காட்டும் ஐரோப்பிய காதலென்பது உடலுறவு பாலியல் சமாச்சாரங்கள் அப்பட்டமாய் உள்ளிட்ட விவகாரமாகவே இருக்கிறது.

ஹன்னா இளம் பெண், அவளது ஆண் உறவுமைக் என்பவன். இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பன் குந்தர். ஹன்னாவும் மைக்கும் அவ்வப்போது உடலுறவு கொள்ளும் காதலர்கள். மைக் மகா முரடன். குந்தர் கருப்பின கலப்பினர். கொஞ்ச காலம் கடற்படையில் சேவை புரிந்து உலகின் பல்வேறு துறைமுகங்களை மிதித்திருப்பவன். இவ்விருவரும் கிடைத்த வேலையைச் செய்பவர்கள். ஒரு வீட்டில்  சில்லகை கட்டிடவேலை கிடைத்தாலும் செய்வார்கள். குளியலறை சுவர்களுக்கு செராமிக் ஓடுகளை ஒட்டும்  வேைலயின் போது கூட அலுப்பையும் சலிப்பையும் கொள்ளுகிறார்கள். மைக் எப்போதும் எதிலும் எங்கும் பொறுமை காப்பவனில்லை. இந்த குணநலன்களை இந்த பாத்திரங்கள் வாயிலாக மிக நேர்த்தியுடன் வெளிக்கொணர்கிறார் பாஸ்பைண்டர். போலவே, அப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் நடிகர்களும், ஹன்னாவாக  ஸ்கைகுலா (Schygula) மைக்காக கோனிக், மற்றும் குந்தராக காஃப்மனும் (Kaufmann) மிகச் சிறப்பாக அதை நடிப்பில் வெளிப்படுத்துகின்றனர். ஹன்னாவை படம் ஆரம்பிக்கும் காட்சியில் பொய்யளாய், நரிக்குணமுடையவளாய்  காட்டுகிறார். இயக்குனர் முக்கால் நிர்வாண கோலத்தில் அவள் பாலியல் உணர்வைத் தூண்டும் பாடலொன்றைப் போட்டுக் கேட்டபடியே தன் அம்மாவிடமிருந்து வந்த தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்கும் காட்சி பிரமாதம். அம்மாவின் கேள்வி நமக்குக் கேட்கவில்லை மகளின் பதிலைக் கொண்டே தாயின் கேள்விகளை இயக்குனர் நமக்குத் தெரிய வைக்கும் நல்ல உரையாடலை ஏழுதியவர் பாஸ்பைண்டரே. இச்சமயம் ஹன்னா சிகிரெட் புகைத்தபடியிருப்பாள். இச்சமயம் ஹன்னா சிகிரெட் புகைத்தபடியிருக்கிறாள்.

இல்லேம்மா, நான் வெறும் வயித்தில சிகிரெட்” புகைக்கிறதில்லே. என்கிறாள் ஹன்னா. அப்போதுதான் அவள் அலாரம் டைம் பீஸின் பித்தானை அமுக்கி நிறுத்திவிட்டு எழுந்து சிகிரெட் பற்ற வைத்தவள். அம்மா எப்போது டெலிபோன் செய்தாலும் ஹன்னாவின்  கல்யாணத்தையே ஞாபகமூட்டுவது ஹன்னாவுக்கு சலிப்பும் எரிச்சலுமாயிருக்கிறது.

மைக்கும் குந்தரும் ஒன்றுமேயில்லாத விசயத்தில் வாக்குவாதம் ஆரம்பித்து அடித்துப் புரண்டு கிட்டதட்ட கொலையே நிகழ்ந்து விடுமளவுக்கு உச்சத்துக்குப் போய் சண்டையை நிறுத்துகிறார்கள். இவர்களிருவரும் ஜெர்மனியிலிருந்து வெளியேறி தென்னமெரிக்க நாடான பெருவில், ரியோ தஸ்மோர்டெஸ் பகுதியில் மாயர்களால் புதைக்கப்பட்டிருப்பதாய் நம்பும் பதயலைத் தேடிப் புறப்படத் திட்டமிடுகின்றனர். அவர்களின் பயணத்துக்கு முக்கியமாய் வேண்டியிருப்பது ஏராளமான பணம். ஹன்னாவிடம் தன் திட்டத்தைச் சொல்லி பணம் புரட்டித்தர வேண்டுகிறான். அவளையும் தங்களோடு பெருவுக்கு அழைத்துப்போக இருப்பதாய்க் கூறவே, அவள் தன் மாமா ஒருவரிடம் அழைத்துப் போகிறாள். மாமா முந்தைய தலைமுறை மனிதர். குடுமிகட்டி, அங்காங்கே கிழித்து விட்டுக் கொண்ட ஜீன்சில் பரதேசிக் கோலத்தில் இன்றைய ஹிப்பி கலாச்சார ரத்து இளைஞர்களைச் சகல கோணங்களிலும் ஒவ்வாமையுணர்வோடேயே பார்ப்பவர் ஹன்னாவின் மாமா.

பெருவின் வரைபடம் (M.A.P) இருக்கா?” என்று கேட்கிறா MAP என்று எதுவுமில்லையே,” என்று கூறும் மைக் மாமாவின் அடுத்தடுத்த கேள்விகள் எதற்குமே இல்லை என்ற மாதிரியான பதில்களையே தந்து, பணம் இல்லை என்ற மாதிரியான பதில்களையே தந்து, பணம் இல்லை என்று அவர் கூற எழுந்து போய்விடுகின்றனர். எப்படியோ இறுதி முயற்சிகளில் அவர் உதவி செய்து விடுகிறார். நண்பர்களிருவரும் ஹன்னாவிடமும் சொல்லிக் கொள்ளாமல் விமான நிலையத்துக்கு ஓடுகிறார்கள். ஹன்னாவும் கோபங்கொண்டு பின் தொடருகிறாள். இவள் விமானத்தையடையும்போது மைக்கும் குந்தரும் விமானத்தை நெருங்கிவிடும் தருணம் ஹன்னா கைப்பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து அவர்களை குறிபார்த்தபடி இருவரையும் சுட்டுவிடுவதாகக் கத்துகிறாள். அவர்கள் விமானத்தின் நுழைவாயிலை நெருங்கிவிடும் நிலையில், பாஸ்பைண்டர் படத்தை முடித்துக் கொள்ளுகிறார். இப்படத்தின் கதைக்கான மூலக்கரு ஓல்கர் ஸ்குலோண்டோர்ஃப்  Volker, schlondorf)  என்பவரிடமிருந்து பாஸ்பைண்டருக்குக் கிடைத்தது.

படத்தின் உயரிய காமிரா கோணங்களை ஒளிப்பதிவாக்கியவர் பீட்ரிச் லோஹ்மன் (Dietrich Lohmann).

Bioscope Karan 27th WebSeries by Vittal Rao. This Series About Germany movies தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

(Tin drum)”, தகர டமாராம் என்ற அற்புத ஜெர்மன் நாவலை 1959இல் குந்தர் கிராஸ் எழுதி வெளிவந்ததும் பலத்த புழுதிப் புயலைக் கிளப்பிற்று. குந்தர் கிராசுக்கு 70களில் இலக்கியத்துக்கான நோபல்பரிசு அளிக்க விவாதிக்கப்பட்டபோது அவரைகம்யூனிஸ்டு என்று ஓரம் கட்டி மற்றொரு ஜெர்மன் எழுத்தாளர் ஹைன்ரிச்பாய்ல் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. குந்தர் கிராசுக்கு 1999இல் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தது. அதே சமயம், 2006இல் கிராஸ் தாம் 2ம் உலகப் போரின்போது ஹிட்லரின் கொடிய படைப் பிரிவான Waffen-ss இல் சேர்ந்து சேவை செய்ததாக தாம் எழுதிய, Peeling the Onion என்று தலைப்பிட்ட நினைவுகள் தொகுப்பில் ஒப்புக் கொண்டு பலத்த கண்டனத்துக்கு ஆளானவர்.

புத்தகங்கள் என்றாலே புனிதமானவை தான். மோசமான புத்தகங்களும் புத்தகங்களே. எனவே அவையும் புனிதமானவை, என்று தகர டமாரம் நாவலில் வருகிறது. குந்தர்கிராசின் Dogs years, The Cat and Mouse, Local Anaesthetic என்பவையும் உயரிய நாவல்களே, லோகல் அனீஸ்தெடிக் என்ற நாவலின் ஒரு காட்சி விவரிப்பு, நான் எழுதிய சில அமர்வுகளும் ஒரு முடிவும், என்ற சிறுகதை உருவானதற்கு ஓர் உந்துதலை அளித்தது. குந்தர் கிராஸ் 2012இல் ஒரு நீண்ட வசன கவிதை எழுதினார். அதில் அவர் இஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு மிகப் பெரிய அச்சுருத்தளிக்கும் நாடு என்று சொல்லியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. குந்தர் கிராசின் கவிதைத் தொகுப்பிலுள்ள Inside the egg என்ற அற்புதமான கவிதை 70களில் மொழி பெயர்க்கப்பட்டு இலக்கிய சிற்றிதழ் கசடதபற-ல் வெளிவந்தது முட்டையினுள் என்று மொழி பெயர்த்தவர் ஆர். சுவாமிநாதன். இந்தியாவுக்கு வந்த குந்தர் கிராஸ், 80களில் பல மாதங்கள் கல்கத்தா பெருநகரில் தங்கியிருந்தார். கல்கத்தா பெருநகரில் தங்கியிருந்தார். கல்கத்தா தமக்கு மிகவும் பிடித்த நகரம் என்றார் கிராஸ் அப்போது தேசிய விருது பெற்ற திரைப்படக்காரர் கெளதம் கோஸ், ஓவியர் சிவப்பிரசன்னா அருகிலிருக்க குந்தர் கிராஸை ஓர் ஆவணப் படம் செய்திருக்கிறார் கிராஸ் தமது கல்கத்தா அனுபவங்களை, Show Younger Tongue உன் நாக்கைக் காட்டு” என்ற தலைப்பில் நினைவலைகளாய் எழுதியுள்ளார். நாக்கைக் காட்டு என்று கல்கத்தா காளியின் தோற்றச் சித்தரிப்பைக் குறியீடாக்கிக் காட்டுகிறார் கல்கத்தா காளியுருவங்கள் தொங்கப் போட்ட நாக்குகளோடு சித்தரிக்கப்படுபவை.

குந்தர் கிராஸ் 2015-ல் ஜெர்மனியில் காலமானார். டின் ட்ரம் மிகச் சிறப்பான திரைப்பட வடிவம் பெற்று 1979-ல் வெளியானது. நாவலின் காட்சி விவரணைகள் ரீதியாகவே திரைப்படம் இருந்தது. நாவலை வாசிக்கையில் விவரமறிந்த வாசகன் தான். ஒருவித மாந்திரீக யதார்த்தப் போக்கில் பயணமாய்க் கொண்டிருப்பதாய் உணரக்கூடும். அந்த உணர்வை நீக்கிவிட்டு எளிய வடிவில் திரைப்படமாக்கியிருக்கிறார் ஜெர்மன் திரைப்பட இயக்குனர் வோல்கெர் ஸ்லோன்டோர்ஃப் (Volker Sch Londoref) ஆஸ்கார் மெட்ஸெராத் (oskar Medzerath) என்பவனின் சுய வரலாறாக எழுதப்பட்டுள்ள டின் ட்ரம் நாவலைப் படமாக்கியிருப்பதும் அவ்வாறே. 30 வயதான ஆஸ்கார் மனநிலை மருத்துவ மனையில் தான் செய்யாத ஒரு கொலைக் குற்றத்துக்காக சேர்க்கப்படுகிறான். ஆஸ்கார் தாயின் வயிற்றிலிருந்து வெளியில் வருவதற்கு சில தினங்கள் முன்னால் கருப்பைக்குள்ளிருந்தவாறே, தன் பெற்றோர்கள் அவனுக்கான எதிர்காலத் திட்டங்களைப் பேசிக் கொள்ளுவதை ஒட்டுக் கேட்டு விட்டு அதை தவிடுபொடியாக்க முடிவு செய்வதாக நாவலும் படமும் தொடர்கிறது. இந்நிகழ்வின் போது காமிரா காட்சியமைப்பு அற்புதம். ஒளிப்பதிவாளர் ஐகோர் லூதர் காமிரா மாய உலகை சிருஸ்டித்திருக்கிறது. குந்தர் கிராசின் முட்டையினுள்” கவிதையில், முட்டைக் குள்ளிருந்தவாறு கரு பேசும் சங்கதியை, ஆண்கார் தாயின் கருப்பைக்குள்ளிருந்தவாறு சொல்லும் வார்த்தைகளாய்த் தோன்றுகின்றன. பிறவியிலேயே வளர்ச்சியின்றி, முதிர்ச்சியடைந்த மனத்தைக் கொண்டவனாயிருக்கிறான் ஆஸ்கார். அவன் மூன்று வயதில் படிகளில் உருண்டு விழுந்து முதுகெலும்பில் அடிபட்டதன் காரணமாக உடல் வளர்ச்சி அத்தோடு நின்றுபோய் பல ஆண்டுகளுக்கு மூன்றடி உயரமும் குழந்தையின் பேச்சும் கொண்டு வாழ்கிறான். மூன்றாவது வயதில் அவனுக்கு அம்மா முதல் தகர டமாரத்தை வாங்கித் தருகிறாள். இறுதி காலம் வரை அதை வாசித்தே தன் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துகிறான். அதைவிட்டு ஒருகணமும் ஆஸ்கார் பிரியமாட்டான். அத்தோடு அவனுக்கு இயற்கையிலேயே ஒரு விசித்திர சக்தி கண்ணாடிகள் உடைபட்டு நொறுங்கி விழச் செய்ய வல்ல சக்தி கொண்டது. டாக்டரிடம் காட்டப்படுகையில் எரிச்சல் கொண்ட ஆஸ்கார் கத்தவும் டாக்டரின் அறையிலுள்ள சுவர் கடிகாரம் முதல், திரவங்களில் வைக்கப்பட்ட பிராணிகள், முதலியன அடங்கிய கண்ணாடி ஜாடிகள், வரை உடைந்து, அதிலிருந்த பிராணிகளின் உடல்கள் வெளியில்
விழுகின்றன.

ஆஸ்காரைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புகிறார்கள். ஆஸ்காருக்கு தன்டமாரத்தை விட்டுப் பிரியவே முடியாது. கர்ணனின் கவச குண்டலம் போன்றது உறங்கும்போதும் அதைக் கழுத்தில் மாட்டிக் கொண்டிருப்பான் சூழ்நிலைக்குத் தக்கவாறு, தன்னுள் ஏற்படும் மனவோட்டத்துக் கேற்ப டமாரத்தைக் குச்சிகளால் அடிப்பான். அவனது டமாரதாள நயம் சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப பல்வேறு ரிதம்களை உண்டு பண்ணக்கூடிய வகையில் டமாரமடிப்பான். வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்துவதில் அவனுக்கு ஒரு வித இசை நயம் கிட்டியதால் விடாமல் டமாரமடிக்கிறான். டமாரமடிக்கக் கூடாதென்று ஆசிரியை எவ்வளவு சொல்லியும் அவன் நிறுத்தாததால், அவள் அதைப் பிடுங்குகிறாள். ஆஸ்கார் தன் கடைசி ஆயுதமாய் உச்சஸ்தாயிடமும் கத்துகிறான். ஜன்னல் கண்ணாடிகளும் ஆசிரியையின் மூக்குக் கண்ணாடியும் தூள் தூளாக உடைந்து சிதற அதுவே அவனுடைய படிப்புக்கும் முற்றுப்புள்ளியாகிறது. மனம் வளர்வதுபோல உடல் வளர்வதில்லை. ஒரு டமாரம் பழுதானால் இன்னொரு டமாரம் வருகிறது.

நாஜிகளின் பேரணியும் பெரும் பேச்சும் ஏற்பாடு செய்யப்படுகையில் சிறுவர் சிறுமியர் சீருடையில் டிரம், பியூகிள் வாசித்து, ஹை ஹிட்லர்” பாணி சல்யூட் செய்கிறார்கள். படைகள் ராணுவ நடையில் போட்டிக்கு மறைவிடத்திலமர்ந்து ஆஸ்காரும் தகர டமாரம் கொட்டுகிறான். அவனது வாசிப்பு வித்தியாசமாயிருக்க சிறுமிகள் வேறு திசையில் ஹை ஹிப்லர் நீட்டுகின்றனர். இராணுவ நடையில் பிசிறு தட்டி, தவறாக அடியெடுத்து வைத்து பேரணி அபஸ்வரமாகிறது.

ஆஸ்கார் உடல் ரீதியாய் வளராவிடினும் மன முதிர்ச்சியடைகிறான். பாலுணர்வு மலர்கிறது. அவனது குறுகிய உடல் வடிவு வழியே ஆஸ்கார் தன்னைச் சுற்றியுள்ள வளர்ந்த பருவத்தினரை அவர்களின் காதல், பாலியல் உறவுகளை ஆர்வத்தோடு கவனிக்கிறான். அவனது அம்மா உறவினன் ஒருவனோடு கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை ஆஸ்கார் பார்த்துவிடும் கட்டம் அருமையாய்ப் படமாக்கப்பட்டுள்ளது. அவள் தன் கருவைக் கலைக்க பச்சை மீன்களை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு வாந்தியெடுத்து மரணமடைகிறாள். தந்தை மிகச் சிறிய பெண்ணை வைப்பாட்டியாகக் கொள்ளுகையில் ஆஸ்காருக்கும் அவள் வயதே- பதினாறு. அவள் பேரில் காதல், ஆஸ்காரும் அவளும் உடலுறவு கொள்ளுகின்றனர். அவளுக்கு ஆண் குழந்தைப் பிறக்கையில், அது தன்னால் உண்டானதென்று நம்புகிறான் ஆஸ்கார்.

ஹிட்லர் காலத்து ஜெர்மன் வாழ்க்கையை டின்ட்ரம் ஆஸ்காரின் பார்வையில் நக்கல் நையாண்டி செய்கிறது. ஹிட்லரும் கோபத்தில் கிறீச்சிட்டு கத்துவார். அப்போது பலரின் உள்ளமும், உடலும் ஊரும் கட்டிடங்களும் உடைந்து சிதறியது போர்க்கால யதார்த்தமன்றோ. யுத்தம் வருகையில் ஆஸ்காரின் தந்தை போலீஸில் சேர்ந்து நாஜிடூட்டி பார்க்கிறார். நாஜி ராணுவத்தினருக்கு குஸிப்படுத்தும் வகையில் கேளிக்கைகள் நடத்தப்படுகின்றன. ஊரில் பெரிய சர்க்கஸ் வருகிறது. சர்க்கஸ் பார்க்க ஆஸ்காரை அழைத்துப் போகின்றனர். சர்க்கஸ் குள்ளர்கள் ஆஸ்காரை கவரவும், அவர்களைச் சந்திக்கிறான். ஆனால் அந்தக் குள்ளர்களும் அவர்கள் உடல் கூறும் ஆஸ்காரின் உடல் கூறும் மனவளர்ச்சியும் வேறு வேறு. 53வயது தலைமைக்குள்ளர் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. இராணுவத்துக்கான கேளிக்கை நிகழ்ச்சியொன்று பிரத்தியேகமாக சர்க்கஸ் குள்ளர்களைக் கொண்டு நடத்தப்படுகையில் ஆஸ்காரையும் சேர்க்கின்றனர். அவனும் மேடையில் தோன்றி டமாரம் அடித்தும், கிறீச்சிட்டுக் கத்தி கண்ணாடி மது கோப்பைகளை உடைய செய்தும் மிகப் பெரிய கைத் தட்டல் ஆரவாரத்தைப் பெறுகிறான்.

ஓர் அழகிய குள்ளியின் உறவும் கிடைத்து நெருங்கிப் பழகி உடலுறவும் கொள்ளுகிறான். உலகப் போர் முடிவுக்கு வருகையில் பெர்லின் ரஸ்ய படைகளால் சூழப் படுகையில் ஆஸ்காரின் தந்தையும் குள்ளக் காதலியும் குண்டடிபட்டுச் சாகின்றனர். அவனது தந்தையின் சவ அடக்கத்தின்போது சவக்குழியில் மண்போடுகையில் தன் தகர டமாரத்தையும் குழிக்குள் எறிந்துவிட்டு இனி டமாரம் வேண்டாம் என்கிறான் ஆஸ்கார். ஆஸ்காரும் தாக்குதலில் அடிபட்டு முப்பது வயதையடைந்த நிலையில்தான் செய்யாத கொலையொன்றுக்காக கைதாகி மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறான். திரைப்படத்தில் ஆஸ்காராக நடித்திருக்கும் சிறுவன் டேவிட் பென்னெண்ட் David Bennent) அதி சிறப்பாக செய்திருக்கிறான். இயக்குனர் ஓல்கர் ஸ்க்லோன்டோர்ஃப் பல இடங்களில் முத்திரை பதித்திருக்கிறார்.

கடினமான கதையமைப்பு கொண்ட டின் ட்ரம் மிக எளிமையாக திரை வடிவம் பெற்றிருக்கிறது. படத்தின் உயரிய ஒளிப்பதிவை பல இடங்களில் வியக்க வைத்திருப்பவர் காமிரா கலைஞர் இகோர் லூத்தெர் படத்துக்கு மூவர் இசையமைத்திருக்கின்றனர். லோதெர் ப்ரூஹீனெ (Lother Bruhne) மாரிஸ் ஜேர் (Maurice Jarre) மற்றும் ஃப்ரீட்ரீச் மேயெர் (FreidrichMeyer) என்பவர்கள். இவர்களில் மாரிஸ் ஜேர் அமெரிக்க சினிமாவின் David Leen இயக்கிய பிரம்மாண்ட படங்கள் லாரன்ஸ் ஆஃப் அரேபியா, டாக்டர் ஷிவாகோ ரயான்ஸ் டாட்டர், ஏபாஸேஜ் டு இண்டியா என்பனவற்றின் அரிய இசைக் கோர்வையை இயற்றியவர்.

உனக்கு என்னைத் தெரியாது. ஆனால் எனக்கு உன்னைத் தெரியும்” இது தான் 2006ல் வெளிவந்த மகத்தான ஜெர்மன் அரசியல் படம். லத்தீன் அமெரிக்க அரசியல் படங்கள், கோஸ்டர் காவ்ராவின் பிரெஞ்சு அரசியல் படங்கள், ஹங்கேரிய படங்கள் என்பவற்றுக்கு இணையான படம்.

Bioscope Karan 27th WebSeries by Vittal Rao. This Series About Germany movies தொடர் 27: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

2006இல் வெளியான மற்றவர்களின் வாழ்க்கைகள்” Lives of others எனும் ஜெர்மன் திரைப்படம் மிகச் சிறந்த அயல் மொழிப் படம் என்ற ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் பெற்ற ஒன்று. பெர்லின் சுவர் இடிக்கப்படுவதற்கு சிறிது காலம் முந்தி கிழக்கு ஜெர்மனியின் பொது வாழ்வு நிலை குறித்த திரைப்படம். வருடம் 1983. கிழக்கு பெர்லின் பகுதி. அரசியல் ரீதியாக, இப்படியுமிருந்தால், எப்படியிருந்திருக்கும்” என்று திரைக்கதை வடிவம் தந்து படத்தை அதி சிறப்பாக இயக்கிய ஃப்ளோரியன் ஹெங்கெல்வான் போன்னெர்ஸ்மார்க் (Florian Henckelvon Donnersmark) சிந்தித்திருக்கக்கூடும். மற்றவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பதும்,

அந்தரங்கத்தை கவனிப்பதும் ஹிட்லரின் காலத்தில் பயங்கரமாக இருந்திருக்கிறது. ரோமானிய சாம்ராஜ்யத்தில் சீசருக்குப் பின் பல நகரங்களில் பாம்பி உட்பட ஒருவர் அந்தரங்கத்தை மற்றொருவர் ராஜீய ரீதியாக ஒட்டுக் கேட்டிருந்தது வரலாற்றில் கசியும் உண்மை. தங்கள் அதிகாரம் நீடிப்பதற்கும், இருத்தலுக்கும் புகழுக்கும் இடைஞ்சல், ஆபத்து என்று வரக்கூடுமோவென்று கொள்ளும் சந்தேகத்தின் அடிப்படையில் ஓர் அரசு இயந்திரமே தான் அவ்வாறு சந்தேகிக்கும் நபர்களின் பேச்சுமற்றும் அந்தரங்க வாழ்க்கையை ரகசியமாய் கவனிப்பதும் ஒட்டுக்கேட்பதும் அதைக் கொண்டு அரசு இயந்திரங்களை முடுக்கி சிறப்பு காவல்படை முதலியவற்றை ஏவி பல்வேறு சோதனைகள், கைது, விசாரணை, சித்திரவதை சிறை என மேற்கொள்ளுவதும் நிகழ்கிறது. மிக சமீபத்தில் இஸ்ரேல் நிறுவனம் தயாரித்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்றதாகக் கருதப்படும் பயங்கர ஓட்டுக் கேட்கும் கருவி, பெகாசஸ்” பற்றி நம் நாட்டில் பலத்த சர்ச்சைகள், விவாதங்கள், நீதிமன்ற வழக்கு என்று போயிருக்கும் ஓட்டுக் கேட்கும் சமாச்சாரத்தின் ஒருவடிவம்தான் இந்த சிறந்த ஜெர்மன் திரைப்படம்.

ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி அசைவற்ற புன்னகையற்ற முகமும், தன்னை மற்றவர்களின் அன்றாட வாழ்க்கையின் அசைவுகளை, பேச்சை ஓட்டுக்கேட்க நியமித்த டூட்டியில் எந்நேரமும் தலையில் மாட்டிய ஹெட்ஃபோன் சகிதமாய் தோன்றுகிறார். அதே சமயம் இந்த போலீஸ்காரர் எந்த நிலையிலும் உணர்ச்சிவயப்பட்டுவிடலாகாது. 1983 ன் கிழக்கு பெர்லின் அரசின் ரகசிய போலீசான ஸ்டாசி (Stasi)யின் அமைப்பும் நடவடிக்கையும் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் அறிவதற்கு ஒரு சந்தர்ப்பமளிக்கிறது படம். மற்றபடி பிரஜைகள் சராசரி நல்ல வாழ்க்கையையே நடத்திக் கொண்டு போவதாயும் படம் தெரிவிக்கிறது.

இப்படத்தின் கதை ஒரு ஸ்டாஸி அதிகாரியை மையமாக்கிச் செல்லுவதுதான். ஜெர்டு வீஸ்லெர் ஒரு புகழ் பெற்ற ஜெர்மன் நாடக ஆசிரியர் ஜியோர்க் டிரேமன் (Georg Dreman) இவனது அழகிய காதலியும் புகழ் பெற்ற நாடக நடிகையுமானவள் கிறிஸ்டா மரியா சீலண்டு (Christa Maria Sieland) ஆசிரியரிடமிருந்து அரசுக்கு எதிரான விசயங்கள் இருக்கிறதாவென்று அவரையும், அவரது நடிகைக் காதலியையும் ஒட்டு கேட்கும் பணியில் அமர்த்தப்படுகிறான் வீஸ்லர். இவனுக்கு ஒரு பணிமனையை நாடகாசிரியன் டிரேமன் வசிக்கும் ஸ்விட்சுகளுக்குள்ளும், அறைகளின் சுவர்களிலும் அவன் இல்லாத நேரத்தில் வீட்டைத் திறந்து நிறைய ஓட்டுக் கேட்கும் மைக்ரோஃபோன்களை வைத்து அவற்றின் மூலம் ஒவ்வொரு பேச்சையும் விவாதங்களையும் அசைவுகளையும் அந்தரங்க காதல், உடலுறவு ஆகியவற்றையும் கேட்கவும் காணவும் முடியும் வகையில் அமைக்கப்பட்ட மைக்ரோ ஃபோன்களைத் தொடர்பு கொண்டு கவனிக்க ஒலி வாங்கிகளும் காணொளிக்கான டிவியும் மேல்மாடியிலுள்ள வீஸ்லரின் பணிமனையில் பொறுத்தப்படுகின்றன.

ஓட்டுக் கேட்கத் தொடங்கிய சில நாட்களில் அவ்விருவரிடமும் காணப்பட்ட அடிப்படை நாகரிகமான ஒழுக்கமும் மனிதத் தன்மையும் கண்டுவீஸ்லரால் பாராட்டமலிருக்க முடியவில்லை. ஆனால் இந்த திட்டத்தின் முழு நோக்கமும் வேறு. நாடகாசிரியர் டிரேமனுக்கு ஸ்டாசி ஒரு பெயரை ரகசியமாக லாஸ்லோ” என சூட்டி இந்த ஒட்டுக் கேட்கும் ஏற்பாட்டுக்கு, Operation laslo என அழைக்கிறது. இவை யாவும் கிழக்கு ஜெர்மனியின் கலாச்சார அமைச்சர் ப்ரூனோ ஹெம்ப் (Bruno Hempe)பின் கட்டளையின்படி கடத்தப்படுகிறது. மந்திரிக்கு நடிகை கிறிஸ்டாமீது ஆசை. அவளை நிரந்தரமாய் அடைய அவளது, காதலன், நாடகாசிரியர் டிரேமனை ஒழித்துக்கட்ட முடிவு செய்யும் அமைச்சர் அதை ஸ்டாசி மூலம் செய்து முடிக்க நினைத்து இந்த ஓட்டுக் கேட்கும் வலையை விரிக்கிறார். இதனிடையில் இரவில் சாலையில் நடந்துபோகும் கிறிஸ்டாவை வற்புறுத்தி தன் காரில் ஏற வைத்து காரிலேயே வல்லுறவு கொள்கிறார் அமைச்சர். இதனால் அவள் போதை மருந்தை முயற்சிக்கிறாள்.

இந்த சமயம் நிஜமாகவே நாடகாசிரியர் ஸ்டாசியிடம் மாட்டுகிறார். கிழக்கு ஜெர்மனியரசின் சர்வாதிகாரி பிரஜைகள் மேற்கு ஜெர்மனியுடன் ஏதாவது விதத்தில் தொடர்பு கொண்டதாய் கூறி கடுமையான தண்டனை தருகிறது. இதனால் கிழக்கு ஜெர்மனியில் நிறைய பேர் தற்கொலை புரிந்து சாகிறார்கள். இதை அரசு காதில் போட்டுக் கொள்வதேயில்லை. ஸ்டாசியின் கொடுமை தாங்காது நிகழும் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. இந்த தற்கொலை விவரத்தை மேற்கு ஜெர்மனியிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரையாக எழுதியனுப்புகிறான் நாடகாசிரியர் டிரேமன். இதற்கெல்லாம் முக்கியமான விசயம் நாடகாசிரியரின் நெருங்கிய அறிவு ஜீவி எழுத்தாளர் Hanser என்பவர் மேற்கு ஜெர்மனியில் நிகழ்ந்த இருந்த ஓர் உரை. அந்த உரையை விரும்பாத கிழக்கு ஜெர்மனி அரசு அவரது பயணத்தைத் தடை செய்வதால் மனமொடிந்த அவர் தற்கொலை செய்து கொள்ளுகிறார். இது அந்த கட்டுரையின் மையமாகிறது. கட்டுரையை ரகசியமாய் அனுப்ப சிவப்புநிற நாடாவில் டைப் செய்ய வகை செய்த வெளிநாட்டு டைப்ரைட்டிங் மிசின் ஒரு முக்கிய தடயமாகிறது. அந்த சின்ன மிசினை நாடகாசிரியன் தன் வீட்டு தரையில் ஒளித்து வைப்பதை காதலி கிறிஸ்டாவும் பார்க்கிறாள். இப்போது கிறிஸ்டாவை ஸ்டாசி குறிவைக்கிறது. அவளை அழைத்து வந்து தனியறையில் வீஸ்லெர் விசாரிக்கிறார். அவரது கேள்விகளில் சிக்குண்ட நடிகை அந்த தட்டெழுத்து இயந்திரம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சொல்லிவிடவும் அவளைவிட்டு விடும் ஸ்டாசி மீண்டும் டிரேமனின் வீட்டை சோதிக்கிறது. கிறிஸ்டா குறிப்பிட்ட இடத்தில் தரையில் பலகையை அகற்றிப் பார்க்க அங்கு மிஷினில்லை.

அந்த சிறிய இயந்திரம் அங்கு இருந்ததற்கான ஒரு தடயமுமில்லை. மன்னிக்க கோரி விட்டுஸ்டாசி குழு வெளியேறுகையில் வீஸ்லெர் ஓரிடத்தில் நின்று கிறிஸ்டா வெளியேறி நடப்பதை கவனிக்கிறார். தூரத்தில் நிற்கும் சிறு லாரியையும் கவனிக்கிறார். திடீரென கிளம்பி வேகமாய் வந்த அந்த வண்டி கிறிஸ்டாவை இடித்துத் தள்ளுகிறது. அவள் அந்த இடத்தில் மரணமடைகிறாள். அது விபத்து என்றாகிறது. மறுவருடம் சோவியத் யூனியன் உடைபடுகிறது. பெர்லின் சுவர் தகர்க்கப்படுகிறது. ஜெர்மனி ஒன்றாக இணைக்கப்படும் கட்டம். கிழக்கு ஜெர்மனியின் கலாச்சார மந்திரியாயிருந்த ப்ரூனோ ஹெம்ப் நாடகாசிரியரை இறுதிச் சந்திப்பாக சந்திக்கும் காட்சியும் நெகிழ்ச்சியானது. ஓட்டுக் கேட்கும் பணியிலமர்த்தப்பட்ட போலீஸ் அதிகாரி வீஸ்லெர், இந்த முழு நாடகமும், கலாச்சார அமைச்சர் நாடக நடிகை கிறிஸ்டா மீது கொண்ட இச்சையால், அவளது காதலன் நாடகாசிரியர் டிரேமனை கண்காணித்து அவன் மீது ஏதாவது தேசதுரோக குற்றத்தை சுமத்தி ஒழித்துக் கட்ட பின்னப்பட்ட ஒன்று என்பதை அறிய வருகையில் தன் உயர் அதிகாரியிடம் வேதனையோடு கேட்கிறார், இதற்காகவோ நம்மை இந்த ஆபரேசனில் அமர்த்தினார்? என்று, வீஸ்லர் நடைபாதையில் மெதுவாக நடந்து போகையில் கண்ணாடிக்குள் ஒரு விளம்பரத்தைக் கண்டு நிற்கிறார். அது நாடகாசிரியரின் Georg Dreyman-ன் பெரிய கண்ணப்படம், அவன் எழுதியிருக்கும் புதிய நூல் ஒன்றுக்கான விளம்பரம். அது அவனது நினைவலைகளைக் கொண்ட புதிய வெளியீடு. அந்த இடம் புகழ் பெற்ற புத்தக நிலையம். வீஸ்லெர் உள்ளே நுழைந்து அந்தப் புத்தகம் தனக்கு வேண்டுமெனக் கேட்டு அதற்கான விலை மதிப்பைத் தருகிறார். கடைக்காரர் கேட்கிறார், பரிசுக்கான பொட்டலமாகக் கட்டித்தரவா? என்று இல்லை, என் சொந்த உபயோகத்துக்குத் தான். அப்படியே தாருங்கள்,” என்கிறார் வீஸ்லெர் படம் முடிகிறது.

ஜெர்டு வீஸ்லெராக உயரிய நடிப்பைத் தருபவர் உக்ரிச் முஹே (Ulrich mijhe) நாடகாசிரியர் ஜியார்க் ட்ரேமனாக செபாஸ்டியன் கோச் கிறிஸ்டா மரியா சீலண்டாக மார்டினா ஜெடெக்கும் (Martina Gedek) சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கலாச்சார அமைச்சராக தாமஸ் தியெம் அப்பழுக்கின்றி நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப் பதிவு ஒப்பற்றது. ஒவ்வொரு உருவமும் பின்னணியோடு கலந்து நிற்கிறது. ஹேகன் போக்டான்ஸ்கி யின் காமிரா அசத்தலானது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *