எறும்பு -தமிழ் திரைப்படம் இயக்குநர் சுரேஷ் ஜி இயக்கத்தில் சார்லி எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘எறும்பு’. சுரேஷ் குணசேகரன் தயாரித்துள்ள இப்படத்துக்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் அளவான கதாபாத்திரங்களுடன் கதைக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது யூ டியூபில் பார்க்கலாம். (இந்து தமிழ் ) கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் விவசாயக் கூலியான அண்ணாதுரை (சார்லி). முதல் மனைவி இறந்துவிட, மகள் பச்சையம்மா (மோனிகா சிவா), மகன் முத்து (சக்தி ரித்விக்), இரண்டாம் மனைவி கமலம் (சூசன் ஜார்ஜ்), அண்ணாதுரைக்கும் கமலத்திற்கும் பிறந்த கைக்குழந்தை, அண்ணாதுரையின் தாய் பொம்மி (பரவை சுந்தராம்மாள்) ஆகியோருடன் கடனிலும் வறுமையிலும் நாள்களைக் கடத்தி வருகிறார் அண்ணாதுரை. இந்நிலையில், கந்துவட்டிக்காரர் ஆறுமுகத்திடம் (எம்.எஸ்.பாஸ்கர்) வாங்கிய முப்பதாயிரம் ரூபாய்க் கடனை அடைக்க முடியாததால், ஆறுமுகத்தின் தகாத வசவுகளால் ஊர் முன் அவமானப்படுகிறார். மொத்த கடனையும் வட்டியுடன் அடைக்க, அண்ணாதுரையும் கமலமும் 15 நாள்களுக்கு வெளியூருக்குக் கரும்பு வெட்டும் வேலைக்குச் செல்கிறார்கள். அந்த இந்த இக்கட்டான சூழ்நிலையில் அக்குடும்பத்தின் ஒரே சொத்தாக இருக்கும் ஒரு கிராம் மோதிரத்தை முத்து தொலைத்துவிட, சித்தி கமலத்தின் வசவுகளுக்குப் பயந்து அக்கா பச்சையும் தம்பி முத்துவும் செய்வதறியாது நிற்கின்றனர். சித்தி வீடு திரும்புவதற்குள்…