தொகுப்பில் உள்ள ஒரே ஒரு கதை மட்டும் புக் டே இணைய தளத்தில் வாசித்து உள்ளேன்.. இது குறித்து தோழர் உமரிடம் கேட்டுத் தான் தெரிந்து கொண்டேன்..

இந்த நூலை வாசிக்கும் போது அப்படியொரு தேவை எழவில்லை.. இஸ்லாமிய கலைச் சொல் அகராதி போல நாம் அறிந்து கொள்ள பல புதிய வார்த்தைகள் இருந்தன.. அடைப்புக் குறியீட்டில் அதற்கான பொருளும் சொல்லப் பட்டிருக்கிறது..

புதிய வார்த்தைகள் மட்டும் அல்ல. இஸ்லாமிய குடும்பங்களில் பெண்களின் வலி மிகுந்த, நாம் அறியாத அவர்களின் வாழ்க்கை பக்கங்களையும் வாசித்து அறிய முடியும்..

சிறு வயதில் திருமணம், வரதட்சணை, மதத்தின் பெயரால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என பொதுவாக பேசத் தயங்கும் விசயங்களை பேசி இருக்கிறார் அராபத் உமர்.. அதுவும் தனது முதல் தொகுப்பில்..!

மாணவர் பருவத்தில் இருந்தே வாசிப்பும் எழுத்துமாக வலம் வந்தவர் தோழர் அ.உமர் பாரூக் . குறைந்த வயதில் அதிக நூல்கள் எழுதியதற்காக பாராட்டுப் பெற்றவர்..

அவருடைய தூண்டலும் துணையும், கூடவே அவரது சுய வாசிப்பும் தேடலும் அராபத் உமர், தேனி மாவட்டத்தில் “முதல் இஸ்லாமிய பெண் சிறுகதை எழுத்தாளர்” என்கிற முத்திரை பதிக்க உதவி இருக்கிறது..

ஒரு சிலர் எழுதிக் கொண்டிருந்தாலும் தேனி மாவட்டத்தில் “நசீபு” தான் ஒரு பெண் சிறுகதை எழுத்தாளர் எழுதி வெளிவந்துள்ள முதல் தொகுப்பு எனும் போது பாராட்ட வார்த்தைகள் இல்லை..

மாவட்டத்தில் மட்டுமல்ல மாநிலத்திலேயே இஸ்லாமிய பெண் சிறுகதை எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு தான்..

சரி , கதைகளுக்கு வருவோம்.. தொகுப்பில் உள்ள 7ல் நான்கு கதைகள் குடும்பங்களில் ஏற்படும் இறப்புகள், அதனால் குடும்பங்களில் ஏற்படும் உளவியல் சிக்கல்கள், மனப் போராட்டங்கள் குறித்து மிக யதார்த்தமாக பதிவு செய்யப் பட்டிருக்கின்றன..

பரக்கத் மட்டும் மோசமான யதார்த்தத்தை மாற்றி அமைக்கும் பெண்ணாக வருகிறாள். ஆயிஷாவும் கூட தடைகளை உடைக்கும் ஆய்தமாக கல்வி இருக்கும் நம்புகிறாள்.. அதைத் தன் குழந்தைக்கு அளிக்க விரும்புகிறாள்.. ஆனால் அந்த குடும்பமே இணைந்து அவளது கனவைப் பொசுக்கி மண்ணறைக்கு அனுப்புகிறது.. ஆயிஷாவின் கனவுக்கு தடையாக இந்த கதையில் இருப்பது போல சமூகத்திலும் சில குழுக்கள் இருக்கின்றன என்பதைத் தான் கர்நாடகாவில் ஒரு இசுலாமிய பெண்ணுக்கு எதிராக நின்று ஒரு கும்பல் கோசமிட்ட சம்பவம் நினைவூட்டுகிறது..

ஈமான் கதை , பொது முடக்கக் கால துயரத்தை பேசுகிறது.. கோழிக் கறி வெட்டி சம்பாதித்து, அதில் குழந்தைகளுக்கு துணி எடுத்துக் கொண்டு செல்லும் அகமது, தன் வீட்டிற்கு பயறு குழம்பு வைக்க சாமான்கள் வாங்கும் இடம் பெருந்துயரம்.. அந்த கடைக்கார அக்கா தான், மனித மனங்களில் ஈவு இரக்கம் இன்னும் வற்றிப் போய் விடவில்லை என உணர்த்தும் விதமாக, கறி எடுக்க பணம் கொடுத்து அனுப்புகிறார்.. கனமான கதை..! அறிஞர் அண்ணா எழுதிய செவ்வாழை கதை எனக்கு நினைவு வந்து மீண்டும் அதை இணையத்தில் தேடி வாசித்தேன்..

தொகுப்பில் கதைகளை வாசிக்கும் போது இஸ்லாமிய குடும்பங்களில் இவ்வளவு ஆணாதிக்கம் நிலவுகிறதா என்ற சிந்தனை தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. அதே போல அவர்களது அன்றாட வாழ்வில் இரண்டற கலந்திருக்கும் மத நடைமுறைகள் ஆண்களுக்கு துணையாக, பக்க பலமாக இருக்கிறது…

ஜெனி தன் அம்மா ரோஜாவிடம் கேட்கிறாள்.. “இத்தா எல்லாம் ஆண்களுக்கு கிடையாதா? இந்த ஹதீஸ், சட்டமெல்லாம் எழுதியது ஆம்பளைகளாம்மா..?!”

எல்லாம் நம்ம தலையெழுத்து (நசீபு – என்பதன் அர்த்தமும் அது தான்..!) என்று தான் பெண்கள் பொழப்பு நடத்த வேண்டி இருக்கிறது.. மூன்று நான்கு தலைமுறை நிகழ்வுகளை, தன் பேரனின் மனைவி செரினாவுடன் பகிர்ந்து கொள்ளும் சுபைதா பாட்டி கடைசியில் வெத்திலை, பாக்கை ஓங்கி ஓங்கி இடிக்கும் இடம் நம் உள்ளங்களில் அதிர்வை உருவாக்குகிறது..

சிறுகதை உலகில் நல்லதொரு இடம் காத்திருக்கிறது.. தோழர் அராபத் உமர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்…

நூல்: நசீபு
ஆசிரியர்: மு. அராபத் உமர்
பக்கம்:  103
விலை: ரூபா 120/
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

– தேனி சுந்தர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *