“Imperialism and its Working in the Post-Cold War Era”- Sitaram Yechury

இது தோழர் சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2009 ல் வெளியிட்ட பயிலரங்க குறிப்பு. பின்னர் வந்த நிகழ்ச்சிப் போக்குகளையும் இணைத்து சிறு நூலாக வெளியிடப்பட்டது. 16 பக்கங்கள்தான் மிக ஆழமான செய்திகளை சொல்கிறது.

தொழிலாளர் இயக்கம் வருமானம், வேலை, உரிமைகள், பொதுத்துறை ஆகியவற்றின் மீது தாக்குதல் தொடுக்கிற உலகமயத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளோம். இருளுக்குள் பயணிக்கிறோமோ என்ற எண்ணம் நமக்கு ஏற்படக் கூடும். இச் சிறு நூல் அகல் விளக்கு போல நமக்கு வழி காட்டுகிறது. நவீன தாராளமயத்தின் பின்புல அரசியலை எளிமையாக எடுத்துரைக்கிறது.

சோவியத் யூனியன்- சோசலிச முகாம்களின் வீழ்ச்சி, பின்னடைவுகளுக்குப் பிறகு உலக வர்க்க பலாபலன்கள் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாக மாறியுள்ள சூழலில் ஏகாதிபத்தியம் எவ்வாறு அரசியல், பொருளாதார, சமுக தளங்களில் புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறது என்பதை இது விவரிக்கிறது. இனி நூலாசிரியரின் கருத்துக்களுக்கு வருவோம்.

லெனின் ஏகாதிபத்தியத்தை “முதலாளித்துவத்தின் கடைசிக் கட்டம்” அதாவது சோசலிசம் நோக்கிய நகர்வின் முந்தைய கட்டம் என்றார். இதைப் பலர் இயந்திர கதியாக முதலாளித்துவத்தின் அந்திமக் காலம் நெருங்கி விட்டது, சோசலிசம் பிறந்து விடும் என்று பொருள் கொள்கிறார்கள். ஆனால் வரலாற்று சட்டகத்தின் ஒவ்வோர் நிலையிலும், ஏகாதிபத்தியமோ அல்லது எந்த சமூக ஒழுங்கோ பல்வேறு கட்டங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பது பற்றிய புரிதல் முக்கியம்.

இந்த கட்டங்களை எது தீர்மானிக்கும்? அடிப்படையான முதலாளித்துவ முறைமையின் இயங்கியல் விதிகளும், மூலதனக் குவியலின் அள்வு மீதான அதன் தாக்கங்களும், குறிப்பிட்ட அரசியல் சூழலும் ஆகிய காரணிகளே ஆகும்.

இதற்கு உதாரணமாக இரண்டாம் உலகப் போரில் பாசிசத்திற்கு எதிரான சோவியத் யூனியன் கண்ட வெற்றி எவ்வாறு பிரான்ஸ், இத்தாலியில் கம்யூனிஸ்ட்டுகள் செல்வாக்கு பெறுவதற்கும், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சமுக ஜனநாயக சக்திகள் தொழிலாளி வர்க்க ஆதரவோடு ஆட்சிக்கு வருவதற்கும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோசலிசம் நோக்கி ஈர்க்கப்பட்டதையும், காலனி ஆதிக்கம் தகர்ந்த நிலையில் மூன்றாம் உலக தேசியம் மலர்ந்ததை குறிப்பிடலாம். இச் சூழலில் முதலாளித்துவம் கீன்ஸிய வழிமுறை, அரசு தலையீடு ஆகியவற்றை நோக்கி நகர்ந்ததென்பது அன்றைய கட்டம். காரணம் அன்று சோசலிசம் ஓர் அச்சுறுத்தலாக முதலாளித்துவத்திற்கு இருந்தது.

ஆனால் முதலாளித்துவம் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை எட்டி, நிதி மூலதனத்தின் குவிப்பு சர்வதேசத் தன்மை கொண்டதாக மாறியவுடன் புதிய கட்டத்திற்கான மேடையைப் போட்டுள்ளது. இதே காலத்தில் சோசலிச முகாம் பின்னடைவையும் சந்தித்தது. அதுவே தற்போதைய ஏகாதிபத்திய கட்டம்.

முதலாளித்துவத்தின் இயல்பு “லாப வேட்டை” (Profit maximisation). இந்த முதலாளித்துவ முனைப்பு அம் முறைமையின் “மூலதனம் குவிதல் மற்றும் மையமாதல் விதிகள்” இயங்குவதை உறுதி செய்து மூலதனக் குவிப்பிற்கு வழி வகுக்கிறது. இதற்காக கழுத்தறுப்பு போட்டி, அதில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெற்றி காணுதல் ஆகியன அரங்கேறுகின்றன. இது பொருளாதாரத்தில் “பணச் சுருக்கத்தை” ஏற்படுத்துவது தவிர்க்க முடியாது. இப் போக்கு நவீன தாராள மய உலகத்தில் மூர்க்கம் கொண்டதாக மாறியுள்ளது.

முதலாளித்துவத்தில் பொருளாதாரமே அரசியலைத் தீர்மானிக்கும். எப்போது மனித குலம் தன்னை முதலாளித்துவத்தில் இருந்து விடுவித்துக் கொள்கிறதோ அப்போதே அரசியல், பொருளாதார நிர்வாகத்தின் உந்து சக்தியாக (Driving force) மாற இயலும்.

Armed with Supreme Court order, Sitaram Yechury meets ailing CPM ...

லெனின் காலத்திய நிதி மூலதனம் “வங்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டதாக, தொழிலதிபர்களால் ஈடுபடுத்தப்பட்டதாக” இருந்தது. அதன் இயக்கம், குறிப்பிட்ட தேசங்களின் கேந்திர நலன்களை நோக்கியதாக இருந்தது. அதனால் ஏகாதிபத்தியங்களின் சந்தைக்கான போர்கள் கூட நிகழ்ந்தன. ஆனால் சர்வதேச நிதி மூலதனம், ஏகாதிபத்திய மோதல்கள் மட்டுப்படுத்துவதற்கு வழி வகுத்துள்ளது. எனினும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் முற்றிலும் மறைந்து விடவில்லை.

சர்வதேச நிதி மூலதனம் முதலாளித்துவ உற்பத்தி முறைமையின் மேல் அடுக்காக உருவெடுத்துள்ளது. அது தொழில் மூலதனத்தோடு தன்னைத் துண்டித்துக் கொள்ளவில்லை. மாறாக அதையும் இணைத்துக் கொண்டே லாப வேட்டையை நிகழ்த்துகிறது.

இந்த புதிய தாக்குதல்களுக்கும், உலக ஒழுங்கை லாப வேட்டைக்கு ஏற்ப மாற்றுவதற்குமான சர்வதேச மூலதனத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுகிற கட்டமே நவீன தாராளமயம்.

இது எப்படி மூலதனக் குவிப்பிற்கு வழி வகுக்கிறது?

1 உள் நாட்டு உற்பத்தியாளர்களை அகற்றுவது. சர்வதேச நிறுவனங்களுக்கு கதவுகளை திறப்பது. 2 பணச் சுருக்க கொள்கைகளை அமலாக்குவது. அரசு முதலீடு குறைப்பு, தனியார் மயம், விவசாயத்திற்கு எதிரான வர்த்தக விதி முறைகள் ஆகியன.

மூன்றாம் உலக முதலாளிகளுக்கு சோசலிச முகாம் பலமாக இருந்த காலத்தில், ஏகாதிபத்திய முகாமோடு இருந்த பேர சக்தி பின்னர் வலுவிழந்ததால் அவர்களுக்கு இருந்த “ஒப்பீட்டு சுய சுதந்திரம்” (Relative autonomy) என்பது “ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைப்பது” (Collaboration) என்ற நிலைக்கு மாறியது.

முதலாளித்துவம் வரலாறு நெடுகிலும் மூலதனக் குவிப்பை இரண்டு வழிகளில் செய்கிறது. ஒன்று, மூலதன விரிவாக்கம். (Appropriation). இரண்டாவது மூர்க்கத்தனமாக மிரட்டி அபகரிப்பது. (Expropriation).

இவ்விரண்டு வழி முறைகளுமே வரலாற்றில் இணைந்தே இருந்து வந்துள்ளன. அன்றைய காலனி ஆதிக்கம் இரண்டாம் வழி முறையை சார்ந்ததே. ( குடியேற்றம், ஆக்ரமிப்பு என இரு வழிகளில் இது நிகழ்ந்தது. 1815 ல் 1.5 கோடி மக்களைக் கொண்டிருந்த இங்கிலாந்தில் இருந்து அடுத்த 100 ஆண்டுகளில் குடியேற்ற நாடுகளில் குடி புகுந்தவர்கள் 1.6 கோடி. இப்படி கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் போய் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்று குடியேறியவர்கள் 5 கோடிக்கும் மேலே. இது தவிர ஆக்ரமிப்புகள். 1.5 கோடி மக்களை கொண்டிருந்த இங்கிலாந்தின் வசம் இருந்த காலனி நாடுகளின் மக்கள் தொகை 43 கோடி)

நவீன தாராளமய காலத்தில் நடந்தேறுவது நவீன காலனி ஆதிக்கம். அன்னிய மூலதனம் தொழிலில் (ஹியூண்டாய், ஃபோர்டு இங்கு வருவது), வியாபாரத்தில் வருவது (வால் மார்ட் போன்றவை) மூலதன விரிவாக்கம் (Appropriation) வகையை சார்ந்தவை.

அரசு நிறுவனங்களைக் கைப்பற்றுவது, இயற்கை வளங்களை – நிலக்கரி சுரங்கங்கள் போல- கையகப்படுத்துவது, சுகாதாரம், கல்வி போன்றவற்றில் தனியார் மூலதனம் தனது பிடியை இறுக்குவது அபகரிப்பு (Expropriation) என்ற இரண்டாம் வகையிலானதாகும். இந்த இரண்டாம் வழி முறை தற்கால ஏகாதிபத்தியத்தின் முக்கியமான முத்திரையாக உள்ளது.

இப்படி தற்கால ஏகாதிபத்தியத்தின் நவீன தாராளமயக் கட்டத்தை விவரிக்கிறார் சீதாராம் யெச்சூரி. நாம் இதன் விளைவுகளை பேசுபவர்கள்தான். ஆனால் முதலாளித்துவத்தின் இயக்கம் பற்றிய வெளிச்சத்தை அவர் பாய்ச்சும் போது எதிர்காலம் பற்றிய திசை வழியையும் நாம் தெளிவாக காண முடிகிறது.

The foundation for international justice is anti-imperialism ...

11 பகுதிகளைக் கொண்ட இச் சிறு நூலில் முதல் இரண்டு பகுதிகள் அடிப்படைகளை விளக்குகின்றன.

பிந்தைய பகுதிகளில்

* உலகமயமாக்கலின் இரண்டு விளைவுகள் – விரியும் ஏற்றத் தாழ்வுகள், வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி

* சந்தை சுருக்கம். அதற்கு நவீன தாராளமயம் கையாள்கிற வழி முறைகள். தற்காலிக உயிர் வாயு ஊட்டும் கடன் – வட்டி விகித மாற்றங்கள் வாயிலான சந்தை தூண்டுதல் முயற்சிகளும் அவற்றின் தோல்விகளும்…

* சர்வதேச நிதி மூலதனத்தின் இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட புதிய நிதிச் சரக்குகள்.

* ஏகாதிபத்திய தலைமையாக உள்ள அமெரிக்கா தொடுக்கும் பன்முகத் தாக்குதல்கள், டாலர் மேலாதிக்க முயற்சிகள்

* உலக நாடுகளின் பொருளாதாரப் பாதைகளை நவீன தாராளமயப் பாதையின் எல்லைகளுக்குட்பட்டு வைத்திருப்பதற்கான நிர்ப்பந்தங்கள். மூலதன பறத்தல் பற்றிய அச்சம் தருதல்.

* அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூன்று இலக்குகள். (சோசலிச உலகத்தை சிதைப்பது, மூன்றாம் உலக தேசியத்தை சக்தியற்றதாக மாற்றுவது, பொருளாதார மேலாதிக்கத்தை நிறுவுவது). இதற்கான போர்கள், பொருளாதார தடைகள்.

* சுமைகளை மூன்றாம் உலக நாடுகளின் தோள்களுக்கு மாற்றுதல். விவசாயிகள், சிறு தொழில்கள் நலனைச் சீரழித்தல்.

இவற்றையெல்லாம் இந்நூல் விவரிக்கிறது.

இந்த நூலின் இறுதி பகுதிகள் இரண்டும் நமபிக்கை அளிக்கின்றன.

உலகம் முழுவதும் ஏகாதிபத்திய முயற்சிகள் மக்களின் கோபத்தை எதிர்கொள்கின்றன. மூலதன ஆட்சிக்கு எதிர் வினைகள் வெளிப்படுகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவம், உலகம் முழுக்க நடந்தேறும் போராட்டங்கள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பிராந்திய பொருளாதார அமைப்புகளின் உருவாக்கம் போன்றவற்றை குறிப்பிடுகிறார்.

இந்த நூலின் கடைசி வரிகள் முக்கியமானவை.

“நெருக்கடிகள் எவ்வளவு அதிகரித்தாலும் முதலாளித்துவம் அதுவாக வீழாது. அது தூக்கியெறியப்பட வேண்டும். தவறான புரிதல்கள் புரட்சிகர தத்துவார்த்த போராட்டத்தை கூர்மையாக்க உதவாது.”

மார்க்சீய- லெனினிய தெளிவு கொண்ட இயக்கத்தின் தலைமையிலான உறுதி மிக்க திரட்டலும், தலையீடும் அவசியம். புற நிலைகள் மாற்றத்திற்கான வேட்கையை உருவாக்கும். ஆனால் அக நிலையை பலப்படுத்தி, அதாவது வலுவான அமைப்பை நம்பகமான மாற்றாக, மக்கள் முன் நிறுத்த வேண்டியுள்ளது.

இது தொழிற்சங்கத்தின் முன்னணி ஊழியர் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் ஆகும். சிறு நூல்தான். ஆனால் கடலை உள்ளே புகுத்தி வைத்துள்ளது.

*******

செவ்வானம்
கே.சுவாமிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *