நூல் அறிமுகம்: ஒரு நிகழ்விலோ ஒரு நொடியிலோ நிற்பதல்ல வாழ்வு – ப. க. புகழ்ச்செல்வி  (இந்திய மாணவர் சங்கம்)

நூல் அறிமுகம்: ஒரு நிகழ்விலோ ஒரு நொடியிலோ நிற்பதல்ல வாழ்வு – ப. க. புகழ்ச்செல்வி  (இந்திய மாணவர் சங்கம்)

ஆசைப்பட்டு பிடிக்க போகும் வேளையில் பட்டாம்பூச்சி பறந்துப்போகுமே அதை நீங்கள் அனுபவித்ததுண்டா? சில நேரங்களில் நமது கை மீதே அது அமர்ந்திருக்கும் ஆனாலும் கைக்குள் அகப்படாது. ஆனபோதும் நமது முயற்சியை மேலும் ஆர்வத்தோடு தொடருவோமே அன்றி கைவிட மாட்டோம். நம் கையுக்கு எட்ட இயலாத தூரம்  செல்லும்போதும் அது நமது மனத்தையும் ஆட்கொண்டே போகும். கிடைக்காத பட்டாம்பூச்சிக்கு சிறு பிள்ளை ஆசைப்படுவதைப் போன்று ஒருத்தி மீது அவளது கட்டுக்கடங்காத இறவாத காதலின் மீது ஆசைப்பட்டான் அவன்.

உயிர்ப்புள்ள சித்திரம்

அதில் தவறொன்றுமில்லை. ஆசைப்படக் கூடாதென்று விதி ஒன்றுமில்லை ஆனால் ஆசைப்பட்ட அனைத்தும் கிட்டிவேண்டுமென்ற கட்டாயமும் இல்லையே?  அவனது வாழ்க்கையில் (ஆம், புத்தகமாக இதை நான் கருதவில்லை. உயிருள்ள ஒருவனின் நியாயமான ஆசைகள் மற்றும் வலிகள் நிறைந்த அனுபவமாக உணர்கிறேன்) அவளின் பெயரை அவன் உரைத்த அளவிற்கு வேறெவரின் பெயரையும் உரைத்திருக்க மாட்டான். ஆம் அப்பெயர்தான் நாஸ்தென்கா . ஒரு சில வெண்ணிற இரவுகளே ஆனாலும் அவனுள் ஆழமாக பதிந்தாள் அவள். வாசிக்கும்போது அவன் அவளை அழைக்கும் ஒவ்வொரு முறையும் நாஸ்தென்கா உங்களுள்ளும் வந்து செல்வாள். அதுவரை அவன் கண்ட கனவுகளின் கொண்ட ஏக்கங்களின் உருவம் அவள். இது மெய்தானா என்று அவர்களுக்குள்ளே எழும் வினாக்களும் ஏன் இப்படி நிகழ்ந்தது என்று நமக்குள்ளே பதைபதைப்பையும் ஒருங்கே கொண்டு வந்த தாஸ்தோவ்ஸ்கியின் உயிர்ப்புள்ள சித்திரம் அவர்கள்.

வெண்ணிற இரவுகள் / Vennira Iravugal ...

நடை பழகும் வயதில் தடுமாறி விழுகிறோம் என்பதற்காக நடப்பதையே கைவிடுகிறோமா? ஒரு முறை உணவு உண்ணும் போது கடித்துக் கொள்கிறோம் என்பதற்காக உண்பதையே விட்டுவிடுகிறோமா? அப்படிதான் அவனும். ஒவ்வொரு முறையும் அவனது கனவுகள் உடைந்து விழுகிற போதும் அவற்றை எல்லாம் ஒட்டவைத்து வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறான். ஆனால் அவனது மனம்? அவ்வளவு எளிதன்றே, மனம் உடைந்த போது துகள்கள் கீறி, குருதி வந்து ஆறிய வடுக்கள் மறைவது. இருப்பினும் அவனது தனிமையை போக்க, மனத்தின் வடுக்கள் மறைய, இனிமையாக தன்னோடு பேச ஓர் மனிதரை எதிர்பார்த்து மீண்டும் தனது ஆசை கோட்டைகளைக் கட்டுகிறான். கவிநயமிக்க அவனது பேச்சுக்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒருவேளை நீங்கள் அவனை புரிந்துகொள்ள முற்பட்டால் அந்த கவிநயமிக்க சொற்களுக்கு பின்னே மறைந்துள்ள பல வருடகால ஏக்கம் மற்றும் ஆற்றாமையை புரிந்துகொள்ள முடியும். பீட்டர்ஸ்பர்க் நகர வீதியில் உள்ள வீடுகள் சன்னல்கள் அவனிடம் உரையாடுவது போன்ற பிம்பம் உருவாகும் அளவிற்கு தனிமை நிறைந்ததாக இருக்கிறது அவனது வாழ்வு.

அவனைப் போலத்தான் அவளும்! விரும்பிய ஒருவரின் பாராமுகம் தாங்காது உடைந்து அழுபவள். தான் விரும்பிய ஒருவர் ஒரு வருடத்தில் தன்னைக் காண வருகிறேன் என்று கூறியவர்  தன்னை காண வரவில்லையே, தனக்கு கடிதம் கூட எழுதவில்லையே  என்னவாகியிருக்கும் என்று ஒருவகை அச்சத்துடனேயே அத்துணை இரவுகளிலும் காணப்படுகிறாள்.

பகிர்தலின் சுகம்

மனத்தில் உள்ள கனாக்களை, குறைகளை, சிறு சிறு ஆசைகளைக் கூட மனம் விட்டுப் பேச யாருமில்லாத சூழல். அப்படிப்பட்ட நிலையில் அவனின் அறிமுகம் கிடைத்த அவளுக்கு ஓர் நல்ல நண்பன், சகோதரன் இவைகளைத் தாண்டி தான் கூறுவதைக் கேட்க, தனது குழப்பத்தைத் தீர்க்க, தன்னை புரிந்து கொண்ட ஓர் உயிர் கிடைத்த ஆறுதல். ஒருபுறம் தன்னை பற்றி சிந்திக்காத ஒருவர் இன்னொருபுறம் தனக்கு ஆறுதல் தரும் ஒருவர். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் தனக்கு கிடைத்த ஒரு ஏமாற்றத்தில் மனம் தடுமாறி அவள் எடுக்கும் முடிவு இருவரையும் இறுதியில் சொல்லிலடங்கா துயருக்கு உள்ளாக்குகிறது. ஒரு சில நேரங்களில் நமக்கு வேண்டியது பற்றி ஆழ்ந்து தெரிந்து முடிவே எடுத்தாலும் சூழ்நிலையின் காரணத்தால் தடுமாற்றம் கொள்கிறோம். அப்படி தடுமாறி உணர்ச்சி வசப்பட்டு அவள் எடுத்த இந்த முடிவு அவனை மேலும் காயத்திற்கே உள்ளாக்கியது. நம்மில் பலர் அவர்களைப் போல் உணர்ச்சி வசப்பட்டு இருப்போம், ஏக்கம் கொண்டு இருப்போம், இந்த தனிமை அகன்று நான் பேசுவதைக் கேட்க எனக்காக ஒருவர் இருக்க மாட்டாரா என்று நினைத்து இருப்போம், நமது சூழ்நிலையின் காரணமாக பிறரை காயப்படுத்தி இருப்போம், இப்படி நம்மையே நம்முன் காட்டும் கண்ணாடியாக அவர்கள் இருக்கிறார்கள்.

இருப்பது ஓர் வாழ்க்கை எவ்வளவு வலிகள், ஏமாற்றங்கள், இன்னல்கள் இருப்பினும் அதை கடந்து நம்மை மீட்டுருவாக்கம் செய்துதான் வாழ வேண்டும் என்பதை ஆழமாகவே பதிய வைக்கிறார்கள். இறுதியில், அவளின் தடுமாற்றத்தால் வலிகளுக்கு உள்ளாகும் அவன், அவளை வெறுக்கவில்லை. இந்த முடிவை எதிர்பார்த்து ஏற்கனவே அவன்  தன்னை பக்குவப்படுத்தி வைத்தானோ இல்லை இதற்கு மேல் ஆசைப்பட்டு மேலும் காயத்தை உருவாக்கி கொள்ள வேண்டாம் என்று நினைத்தானோ தெரியவில்லை. ஆனால் ஒன்றைத் தெளிவாக உணர்த்தி செல்கிறான். வாழ்வு என்பது ஒரு நிகழ்விலேயோ, நொடியிலேயோ நிற்கிற ஒன்று அல்ல. என்ன நேர்ந்தாலும் அது நகர்ந்து கொண்டேதான் இருக்கும். நாமும் அதோடு இணைந்து நகர்ந்துதானாக வேண்டும்.

மதியின் வெளிச்சத்தில் மதி மயங்கி உரையாடிய அவர்களின் வாழ்க்கை அனுபவமாக மனித இயல்பின் கண்ணாடியுமாக வெண்ணிற இரவுகள் பிரதிபலிக்கிறது.

– ப. க. புகழ்ச்செல்வி
புத்தகம் – வெண்ணிற இரவுகள்
வெளியீடு – புலம், சென்னை
ஆசிரியர் –  ஃபியோதர் தாஸ்தோவ்ஸ்கி
தமிழிலி –  ரா. கிருஷ்ணையா
பக்கங்கள் – 96
விலை – 90/
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *