கலாச்சார காவலர்களின்  கன்னத்தில் பளாரென அறைந்து அவர்களின்  கண்ணைத்திறக்கும் ஒரு நூல்தான் மீட்சி. விஸ்வநாத சத்தியநாராயணாவுக்கு கிடைத்த சலுகை ஓல்காவின் கதைகளுக்கு கிடைக்காததன் காரணம் கலாச்சாரத்தை உடைத்து பெண்ணியம் பேசியதே…

ராமாயண கதையை மையப்படுத்தி சீதையை சூத்திரதாரியாக கொண்டு நகர்கிறது கதை…

சூர்ப்பனகையின் கதை

சூர்ப்பனகையின் மூலம் பெண்களின் மீது திணிக்கப்படும் அழகியலை உடைத்திருப்பார்.
இன்றும் நாம் பெண்கள் என்றால் உடலமைப்பையும் நிறத்தையும் வைத்தே பெண்களின் அழகை தீர்மானிக்கிறோம். இயற்கையோடு இணைந்து வாழ்வதுதான் உண்மையான அழகே தவிர அது  உருவத்தில் இல்லை என்பதை இயல்பாக உணர்த்தி விடுவார் ஓல்கா.
சூர்ப்பனகையை ஒரு அரக்கியாக உருவாக்கியதால் அவள் மூக்கையும் காதையும் வெட்டும் போது நாம் கண்டுகொள்ளவில்லை.

சீதையை ஒரு அவதாரத்தின் இணையராக உருவாக்கியதால், ராவணன் சீதையை சிறைபிடித்துச் செல்லும்போது நாம் கோவம் அடைந்தோம். ஆனால் எவ்வாறு இருப்பினும் பாதிக்கப்படுவது பெண்கள் தானே???
இங்கு எந்த சாதி மதக் கலவரத்தின் போதும் போர்களின் போதும் அதிகார தாண்டவத்தின் போதும் பெண்களே முதலில் சிதைக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் பெண்கள் மீது திணிக்கப்படும் புனிதமும் தீட்டுமே ஆகும்.

அகல்யாவின் கதை

இவள் தன் கணவனால் சந்தேகத்திற்கு ஆளாகி, இவ்வுலகத்தின் பழியைச் சுமந்து தனியே வாழும் ஒரு பெண்.. “ஒரு பெண் தவறு செய்தால் தூற்றுவார்கள். தவறு செய்யவில்லை என வாதிட்டால் கருணை பொழிவார்கள். நான் செய்தால் உனக்கு என்ன?? என கேட்டாள் பல கேள்விகள் நம்மீது பாயும்” இவ்வரிகளை கடந்து செல்லும்போது பல கேள்விகள் நம் கன்னத்தில் அறைந்து செல்லும். நீயும் பிற்போக்குத்தனமானவன்தான் என அகல்யாவின் கதை மூலம் பெண்களின் ஒழுக்கத்தை தீர்மானிப்பதில் ஆண்களுக்கு பங்குமும் இல்லை, தகுதியும் இல்லை என உணர்த்திவிடும்.

மீட்சி by ஒல்கா லலிதகுமாரி

ரேணுகாவின்  கதை

இவளோ தன் கணவனின் சந்தேகத்திற்கு ஆளாகி தன் கணவன் இட்ட ஆணையால் தன் சொந்த மகனாலே கழுத்து அறுபட்டவள். என்ன செய்வது சத்ரிய ஆண்களுக்கு கோபம் வந்துவிட்டால் கொல்லவும் தயங்கமாட்டார்களாம்..! அவன் மகனும் ஒரு சத்ரியன் தானே? ஆகையால்தான் தன் தாயின் கழுத்தை அறுக்கவும் அவன் தயங்கவில்லை. ஒரு பெண் என்பதாலேயே அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்கவும் இல்லை. அவள் கூறுவது அவர்களின் செவிகளில் விழவும் இல்லை. சத்திரியர்களுக்கு “தந்தையின் சொல் முக்கியமானது. ஆனால் தாயின் அன்போ கொல்லப்படுகிறது”.

ஊர்மிளாவின் கதை

தன் கணவனால் கண்டுகொள்ளப்படாத ஒரு பெண் தான் ஊர்மிளா. எத்தனை பேருக்கு தெரியும்? லக்ஷ்மணனின் இணையாள் தான் ஊர்மிளா என்று. பெண்களின் காதல் மறுக்கப்படுவதை ஊர்மிளாவின் கதை மூலம் உணர்த்தி விடுகிறார். தாயாக இருந்தால் என்ன? இணையாக இருந்தால் என்ன? பெண்களால் என்ன பயன் என நினைத்துக் கண்டுகொள்ளாத ஆண்களே இங்கு அதிகம். அதிகாரம் செலுத்த பெண்கள் ஒன்றும் பொருள் அல்ல என்பதை உணர்த்துகிறது ஊர்மிளாவின் கதை.

நீங்கள் சொல்லும் உயர்குடியோ தாழ்த்தப்பட்ட நிலையிலோ பிறந்தோம்!! ஆனால் எங்கும் ஒடுக்கப்படும் ஒரு இனமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் “பெண்கள்”.

புத்தகம் :மீட்சி
ஆசிரியர் : ஓல்கா (தெலுங்கு மூலம்)
தமிழில்: கௌரி கிருபானந்தன்
பக்கங்கள்:112
விலை :₹90
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *