தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம்-2
(தாய்ப்பாலூட்டுவதற்கு முன்னோட்டமாக..!)

பேரன்பிற்குரிய தாய்மார்களே, வருக..! வருக..!

நம் சின்னஞ்சிறிய குட்டிப் பையனைப் பாருங்களேன்! இந்தப் பட்டுப்பூச்சிப் போலொரு பாலகனுக்கு நம்முடைய தாய்ப்பால் ஒன்று தானே ஒரே ஜீவிதம்? அத்தகைய தாய்ப்பாலினைப் புகட்டுவதற்கு நாம் முன்னேற்பாடகத் தயாராக வேண்டியது அவசியமல்லவா! ஆகவே தான் தாய்ப்பால் புகட்டுகிற பாலபாடத்திற்கு முன்னால் நாம் சில விசயங்களைப் பற்றித் தெளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதைப் பற்றிய மனநிறைவான ஆசுவாசத்தோடு நுழைவது தானே மிகச் சரியானதாக இருக்கும்?

பிரசவித்த அறையிலிருந்து வார்டிற்கு நுழைந்த பின்னால் நாம்மை முற்றிலுமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கர்ப்பவதியாக முன்போலில்லாமல் இப்போது ஒரு தேவதைகளுள் ஒருவராக, கோடான கோடி தாய்மார்களுள் ஒருவராக நாம் ஆகியிருக்கோம் அல்லவா! சுட்டித்தனத்துடன் கூடிய சிறுபிள்ளையாய் இருந்திருந்து பின் வயதிற்கு வந்த பருவமடைந்த மாற்றத்தை, பருவப் பெண்ணாயிருந்து கர்ப்பவதியாய் மாறிய தருணத்தை, நிறைசூலியாயிருந்து தாயாக மாறிய அற்புதங்களைப் போலவே இப்போது கூட்டுடைத்து சிறகை விரித்த பட்டாம்பூச்சியின் மாற்றத்திற்கிணையாக அல்லவா நம்மை நாம் மெல்ல உணரத் துவங்கியிருக்கிறோம்.

ஆக, முதலில் நாம் பிரசவித்த இடத்திலிருந்த பிள்ளை பெறுவதற்கான மனப்போராட்டத்திலிருந்து, பிள்ளை பெற்றதான உடலின் களைப்பிலிருந்து நம்மை மீட்டெடுக்க வேண்டும். கூடுடைத்த பட்டாம்பூச்சியாய் திறந்த வெளியில் பறப்பதை விட்டுவிட்டு இன்னும் இலை மடிப்புகளில் குருனை போலான கூட்டையே பற்றிக் கொண்டிருக்க முடியாதல்லவா? இத்தகைய மனோபாவத்திலிருந்து விடுபட்ட பின்னால் தானே நாம் இயல்பாக தாய்ப்பாலூட்டும் மனநிலைக்கு வருவதே சாத்தியமாகும்?

நாம் முதலில் தாய்ப்பால் பற்றி இதுவரை புரிந்து கொண்ட, உற்றார் உறவினர்கள் சொல்லிப் பயமுறுத்திய விசயங்களில் இருந்தெல்லாம் கொஞ்சம் விடுபட்டு இயல்பான நிலைக்கு வருவோம். நீண்ட மூச்சுத்திணறலுக்குப் பின்பான பெருமூச்சைப் போல இப்போது உடலிலிருந்து இறக்கி வைத்துவிட்ட பிள்ளையை நினைத்தபடி நிதானமாக மூச்சைவிட்டு நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். வயிற்றிலிருந்து இறக்கிய பிள்ளையைக் கொஞ்ச காலம் தோளிலும், மீதி காலம் இடுப்பிலுமாக தூக்கிச் சுமப்பதற்கு இன்னும் காலங்கள் இருக்கிறதே தாய்மார்களே! அதுவரை நாம் ஏன் தாய்ப்பால் பற்றிய குழப்பங்களை, குழந்தைகள் பற்றிய பதட்டங்களை மூளையில் ஏற்றி வைத்துக் கொண்டு சுமக்க வேண்டும்?

முதலில் இத்தகைய தாய்ப்பால் பாடம் கற்றுக் கொள்வதற்கு நிதானமான மனநிலையை உருவாக்கிக் கொள்வோம். பிள்ளை பெறுகிற வரையிலும் சுகப்பிரசவமா சிசேரியனா, பிள்ளை எப்போது பிறப்பார்கள், ஆரோக்கியமாகப் பிறந்துவிடுவார்களா, பிரசவ வலி உயிரையே கொண்டு போகுவளவிற்கு இருக்குமா என்பதான மனக்குழப்பங்களினால் கட்டுண்ட சிந்தனைகளை இறக்கிவிட்டு நம் வீட்டு முற்றத்தின் குருத்துச் செடியில் பூத்திருக்கிற மலர்களை இரசிப்பது போல் நம் பிள்ளைகளையும் பார்த்துக் குதூகலமாய் கொண்டாடுவதற்குத் தயாராகுங்கள்.

நம் பிள்ளையை எவர் வேண்டுமானாலும் தூக்கிக் கொஞ்சலாம், அப்படியே நாங்கள் தான் பாட்டிமார்கள், தாத்தாக்கள், மாமன்மார்கள் என்று யார் வேண்டுமானாலும் உரிமையும் கொண்டாடலாம். ஆனால் எவராலும் பிள்ளைக்குத் தாயாக மட்டும் ஆகிவிட முடியாதல்லவா! தாய்ப்பால் மட்டுமே ஊட்டமளிக்கக் கூடிய அவர்களுக்கு அம்மாக்களாகிய உங்களையன்றி வேறு யார் இருக்கிறார்கள்? ஆதலால் தாய்ப்பால் புகட்டுவது தொடர்பாக நேர்மறையான எண்ணங்களை கூடிய சீக்கிரத்திலேயே வளர்த்துக் கொள்ளுங்கள்.

தாய்ப்பால் எனக்கு கட்டாயம் சுரக்கும், என்னால் நிச்சயமாக எவ்வித இடருமின்றி என் பிள்ளைக்குப் பாலூட்டிவிட முடியும், எவ்வித துன்பங்கள் வந்தாலும் எவர் என்ன கூறினாலும் என் பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டுவதை நான் எக்காரணம் கொண்டும் தவிர்க்கப் போவதில்லை என்று நமக்குள் நாமே உறுதிபட, நம் ஆன்மாவிற்கு நேர்மையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்பாக எப்படி நிம்மதியான, அமைதியான, நிதானமான மனநிலை வேண்டுமோ, அதேபோல தாய்ப்பால் புகட்டுவது தொடர்பான நல்ல எண்ணங்களும் உறுதியான மனதைரியமும் மிகமிக அவசியம். ஆதலால் தன்னம்பிக்கையோடு தாய்ப்பால் புகட்ட தயாராகுவது மட்டும் தான் இப்போதைய நமது முதல் நோக்கமாக இருக்க வேண்டும். மற்றபடி தாய்ப்பாலைச் சரியாகச் சுரக்கச் செய்யும்படி வழிகாட்டுவது மருத்துவர்களின் வேலையும், அதை கவ்விக் குடித்து நிம்மதியாக தூங்க வேண்டியது பிள்ளையின் வேலையும் தான். சரிதானே தாய்மார்களே?

தாய்ப்பால் புகட்டுவதற்கு கற்றுக் கொள்ளுகையில் முதன் முதலாக எப்போதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் புகட்டுகிற விசயத்தில் மட்டும் எவ்வித அவசரமோ பதட்டமோ தேவையேயில்லை. தாய்ப்பால் புகட்டுவது தொடர்பாக எப்போது சந்தேகம் எழுந்தாலும், எத்தனை கேள்விகள் இருந்தாலும், அதை உடனடியாக மருத்துவர்களிடம் கேட்டு அதைக் களைந்து கொள்வதுதான் மிக முக்கியம். ஒரு சிறிய குழப்பமென்றாலும்கூட அப்போதே அழைத்து செவிலியர்களிடம் அதைச் சரிசெய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மருத்துவமனையிலிருக்கிற வரையிலும்தான் நமக்காக அவர்கள் அருகிலிருந்து கற்பிக்க முடியும். வீட்டிற்குச் சென்ற பின்னால் நமக்கு வழிகாட்ட நேரில் சொல்லிக் கொடுப்பதற்கு அவர்களும் இருக்க மாட்டார்கள் அல்லவா! ஆக, எப்போதும் நாம் வெளிப்படையாக மருத்துவர்களிடம் பேசிக் கலந்தாலோசித்துக் கொள்வதே நல்லது.

அதேசமயம் நாம் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாகவே தாய்ப்பால் புகட்டுகிற எல்லா வழிமுறைகளையும் பற்றி விளக்கமாக எதைச் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதான விசயங்களில் பயிற்சி பெற்று சிறப்பு நிபுணராகிவிட வேண்டும். இதனால் கூடுதலாக நம்மைப் போலவே பிள்ளை பெற்று தாய்ப்பால் புகட்டத் துவக்க நிலையிலிருக்கிற தாய்மார்களுக்கு அருகாமையிலிருந்து ஒரு செவிலித்தாயாக நாமும் உதவ முடியுமே! நாம் பெற்ற கல்வி இன்னொரு அபலைத் தாயிற்கும் கிட்டட்டுமே!

தாய்ப்பால் புகட்டும் பயிற்சியைப் பொருத்தவரையில் மெதுமெதுவாகத்தான் கற்றுக் கொள்ள முடியும். சட்டென்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவிட முடியாது. ஏனென்றால் தாய்ப்பால் புகட்டும் வழிமுறையைக் கேட்டுப் புரிந்து கொள்வது என்னவோ மிக எளிதானது தான். அதற்கு சில மணித்துளிகளே போதுமானது. ஆனால் அதைச் சரியாக நம் பிள்ளைக்குப் பொருத்தி அவர்கள் வயிறு நிறைய பாலைப் புகட்டி வளர்த்தெடுப்பதற்குத்தான் கிட்டத்தட்ட நான்கிலிருந்து ஆறு வாரம் வரையிலும் ஆகிறதென்று பல ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது பிரசவித்த தருணத்திலிருந்து துவங்கி முதல் வகுப்பறை, இரண்டாம் வகுப்பறை அப்புறமாக வீட்டுப்பாடம் முடிகின்ற நாற்பத்தியிரண்டு நாட்கள் வரையிலான காலம் தான் அது. ஆகையால் எனக்குத்தான் தாய்ப்பால் சரியாக புகட்டத் தெரியவில்லையோ என்றெல்லாம் கண்கள் கலங்கத் தேவையில்லை, தாய்மார்களே. நாம் அடிப்படையில் கற்றுக் கொள்வதற்கான நிதானத்தையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டாலே போதுமானதுதான்.

துளித்துளியாய் சுரக்கிற சீம்பால் முதலாவது வாரத்தில் தான் நன்கு பெருகி மார்பில் முழுக்கொள்ளளவை எட்டுகிற அளவிற்கு ஊறவே செய்யுமாம். அப்படியிருக்க தாய்ப்பால் கசிந்து, ஊற்றாகி, பெருகி, நிறைந்து, மடையைத் திறந்துவிடுவதற்கான எச்சரிக்கை விடுமளவிற்கு வருவதற்கே ஒரு வாரகாலம் எடுக்கிறதென்றால், முன்னே எவ்வித அனுபவமும் இல்லாமல், தாயப்பால் புகட்டுவது பற்றிய பரிட்சயமே இல்லாமல் இருக்கிற அம்மாவுக்கும் குழந்தைக்கும் இதையெல்லாம் புரிந்து கொண்டு பிள்ளையைத் தூக்கி, மடியில் கிடத்தி, அவர்களை மார்பில் பொருத்தி, தாய்ப்பால் அருந்தச் செய்து, வயிறு நிறைந்துவிட்டதா என்று உன்னிப்பாகக் கவனித்து, ஏப்பம் விடுமளவிற்கு தோளில் சாய்த்து அவர்களைத் தட்டிக் கொடுத்து தாய்ப்பாலருந்திய அசதி கலையாதவாறு படுக்க வைத்து நாமும் கொஞ்சம் கண்ணயர்ந்து தூங்கப் பழகுவதற்கு ஒன்னரை மாதம் காலம் எடுக்கத்தானே செய்யும் தாய்மார்களே!

ஆக, நாம் தாய்ப்பால் புகட்டுகிற பயிற்சியின் போது ஒவ்வொரு விசயங்களாக பார்த்துக் கேட்டு கலந்தாலோசித்து படிப்படியாக பயிற்சியில் முன்னேற வேண்டும். மேலே சொன்னபடி பிள்ளைகளைத் கைத்தாங்களாக பிடித்துத் தூக்குவதிலிருந்து அவர்களை பாலூட்டி தூங்க வைக்கிற வரையிலும், எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதான நுணுக்கமான விசயங்களை நாம் கவனித்து குறித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளும் வித்தியாசமானவர்கள் என்பதை நாம் இக்கணத்திலே மனதாரப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கை சூப்புவதில்கூட சுண்டுவிரலை மட்டும், கட்டைவிரலை மட்டும், இரண்டு விரல்களை அல்லது முழுவிரல்களையும், பாபா வடிவில், கால்விரல்களையும்கூட என்று எத்தனையோ வித்தியாசங்களில் விரல்களைச் சவைத்துக் கொள்கிற குழந்தைகள் இருப்பதைப் போல, தாய்ப்பாலருந்திக் குடிப்பதிலும் ஒவ்வொரு குழந்தையும் விந்தையான குணாதியத்தைக் கொண்டிருப்பார்கள். அதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தாய்ப்பால் சுரப்பதிலும், புகட்டுவதிலும், பிள்ளைகள் குடிப்பதிலும் யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள் தாய்மார்களே!

சில குழந்தைகள் மார்பில் விளையாடியபடியே பால் குடிப்பார்கள், இன்னும் சிலர் பால் குடிப்பதாக ஏமாற்றிக் கொண்டு வெறுமனே காம்பைக் கவ்வியபடி விளையாடிக் கொண்டிருப்பார்கள், சிலர் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவார்கள், ஒருசிலர் ஒரு மணி நேரம் வரையிலும் மெதுவாக குடிப்பார்கள், வேறுசிலர் மார்பில் போட்ட அடுத்த நிமிடங்களிலே போர்வெல் தண்ணீர் இறைப்பதைப் போல சர்ர்ரென்று உறிஞ்சிக் குடித்துவிடுவார்கள், மெல்ல சிரித்தபடியே பாலருந்தும் குழந்தைகளும் இருக்கிறார்கள், உம்மென்று பாலை உதப்பி உதப்பி குடிப்பவர்களும் இருக்கிறார்கள், விடிய விடிய தூங்கவிடாமல் மார்பிலேயே கிடக்க வேண்டுமென்று அலாரம் வைத்தார் போல இரவிலேயே பால் குடிக்கிற பிள்ளைகளும் இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ வித்தியாசமாக தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளை நாமும் பார்த்திருக்கிறோம் அல்லவா!

ஆகையால் தான் தாய்மார்களே! தாய்ப்பால் புகட்டுகிற பயிற்சி வகுப்பிற்கு முன்னால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நாமும் பெரும் புத்தகப்பையைச் சுமப்பது போல நம் பிள்ளையை அள்ளிக் கொண்டு சமத்துப் பிள்ளையாக போய் இரண்டாம் வகுப்பில் வந்து உட்காருவோம். அட, பிள்ளையோடு சேர்ந்து அம்மாவும் பள்ளிக்கூடம் போவது ஒரு அற்புதமான விசயமல்லவா!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *