ப. தனஞ்ஜெயன் கவிதைகள்1
என் கற்பனை கப்பலை
பிரபஞ்சத்தில் செலுத்தினேன்
அது வைரமழையில்
நங்கூரமிட்டது
நெப்டியூன் எழுதுகிறது
அடர்ந்த மூடுபனியால்
ஒரு கவிதை.2
நடை வண்டி பயிலும்
குழந்தை வரையும்
கோடற்ற ஓவியம்
இதயத்தில்
அப்படியே பதிந்து
மழலை மொழியை
கற்பிக்க தொடங்குகிறது
அதன் உவகையான கண்களை
ரசித்தலற்று தயங்கியே
நகர்ந்துகொண்டதுதான்
இருக்கிறது இந்த வாழ்வு
ஒரு மழலை மொழி
ஒரு மழலை விளையாட்டு
ஒரு மழலை எடுக்கும் பாடம்
கவனித்தலில்
பெரிய சுகம் உண்டு.3
சிலுவைகள் செய்துகொண்டுதான் இருக்கிறோம்
போதி மரங்கள் நட்டுக்கொண்டுதான்
இருக்கிறோம்
புறாவை வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்
இயக்கங்கள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்
யாரும் இயேசுவாக முயலவில்லை
யாரும் புத்தனாக முயற்சி செய்யவில்லை
அமைதியைத் அனைவரும் தேடவில்லை
குறைகள் அனைத்தும் தீர்க்கும் தலைவனாக முடிவதில்லை

ஏழைகளின் இதழில்
புன்சிரிப்பும் இல்லை
எளியவன் நெஞ்சத்தில்
நம்பிக்கையும் இல்லை

எதுவுமே ஆகாமல்
கொஞ்சக் காலங்கள் இப்படியே செல்லட்டுமே
ஞான விதைகள்
எதாவது முளைக்கிறதா பார்ப்போம்
துளிர்த்துதெழுவோம் என்கிற
பெயரில்
ஏழையின் கண்ணீரும்
நிலமகளின் வலிகளும் தான் திருடப்படுகிறது
புகார் பெட்டியும்
பாவமன்னிப்பும் நிரம்பி வழிகிறது
விதைகளுக்குக் காது செய்து கொண்டிருக்கிறது இயற்கை.4

எவ்வளவு
மழை பெய்தாலும்
மூழ்கும் கடலுக்கு
மூச்சு திணறுவதில்லை
அதனால்தான் என்னவோ
கரைக்கு வந்து
மூச்செடுத்து செல்கிறது அலை
கரையில் மனிதர்கள்5

சில்லென்று
நுண் நீர்த்துளிகளாய்
வீசும் காற்றில்
மனம் நனைத்து
கரையோரக் கடல் நீரில்
கால் பதித்து
கரையொதுங்கிய
கிளிஞ்சிலைச் சட்டென
கையில் தூக்கிய விரல்
எழுதிய கவிதை
கடலுடையது!

–ப.தனஞ்ஜெயன்