இந்தியாவிற்குள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், பெரும்பகுதி எளிய மக்கள் பட்ட துயரினை நாம் நன்கு அறிவோம். நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது, ரயில்கள் ஓடாது, போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கி வைக்கப்படும், இருக்கும் அத்தனை பேரும் வீட்டிற்குள் தான் கிடக்க வேண்டும், அவரவர் தேவைகளை அவரவரே பார்த்துக்கொள்ள வேண்டும்.. இப்படியான அறிவிப்புகள் வந்த கையோடு,  தமிழகத்தின் தென்கோடி கன்னியாகுமரி தொடங்கி இந்தியாவின் வடகோடி மாநிலம் வரையிலான  மக்கள் அனைவரும் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகத் தங்கள் குழந்தைகளின் பசி போக்கிட கிடைப்பவற்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் அடைந்து கிடந்ததை நாம் கண்ணெதிரே பார்த்தோம். கூலி வேலைகளுக்காக வடக்கிலிருந்து கிழக்கிலும், கிழக்கிலிருந்து வடக்கிலும் புலம் பெயர்ந்த மக்கள் தங்களின் தேவைகள் தீர்க்கப்படாத பொழுது சொந்த வீடு நோக்கி நடந்தே சென்ற சம்பவங்கள், செத்த மனித உயிர்கள், ஏற்பட்ட இழப்புகள் எத்தனை சோகம் மிகுந்தது என்பதை நாம் அறிவோம். ஒரு நோய்த்தொற்றின் காரணமாக அரசு அறிவித்த இந்த ஊரடங்கின் ஆற்றாமைகளையே நம்மால் தாங்கிட முடியாத பொழுது, ஒருவேளை நாம் குடியிருந்த வீட்டிற்கு மேல் போர் விமானங்கள் பறந்திருந்தாலோ,  குடியிருக்கும் தெருக்களில் துப்பாக்கிச் சத்தம் கேட்டாலோ, குண்டுகள் வெடிக்கும் ஓசை வீதி எங்கும் நிரம்பிக் கிடந்தாலோ, நம்முடைய மன நிலைமை என்னவாக இருக்கும் கொஞ்சம் யோசிப்போமே…
அப்படி யோசிக்கும் மனநிலைக்குள் நம்மால் செல்ல முடியாத வாழ்நிலைக்குள் நாம் பழக்கப் பட்டிருக்கிறோம். காஷ்மீரத்தின் வீதிகளில் ரத்தம் தோய்ந்த ரோசாப்பூக்களின் கவிச்சை வந்தாலும் நாசித் துவரத்தோடு நவ துவாரத்தையும் மூடி மெளனமாகிக் கிடக்கிறோம் என்பது வேதனையானது மட்டுமே.
இலங்கைத் தமிழர்கள் குறித்தான பிரச்சனையில் உலகம் தன்னுடைய கூர்மை மிகுந்த பார்வையை செலுத்தியது, இல்லை கவனித்தது  என்பது ஆயிரத்தி தொள்ளாயிரத்து என்பத்தி மூன்றுக்குப் பிறகே.. அரசியல் பின்புலம் இருப்பவர்கள் கூட பலரும் பேசியது, அங்கே இருக்கக்கூடிய தமிழ் மக்கள்; சிங்கள மக்கள், தமிழ் மொழி பேசக் கூடியவர்கள்; சிங்கள மொழி பேசக் கூடியவர்கள் இவர்களுக்கான பிரச்சனைகளாக மட்டுமே பேசி  பொதுவெளியில் ஒருவித அவதானிப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் அந்த இரண்டு இன மக்கள் தவிர்த்து மூன்றாவதாக , ஈழ மண்ணை தங்களுடைய உழைப்பால் மேம்படுத்திய முஸ்லீம் இன மக்களை, அவர்களின் வாழ்வியலை, சந்தித்த நெருக்கடிகளை பலரும் பேசவில்லை என்பது பெரும் சோகமே. தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்ட முஸ்லீம் மக்கள், எப்படி தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிர் ஆக்கப்பட்டார்கள் என்பதை எவரும் ஆய்வுக்கு உள்ளாக்காமல் விட்டதுவென்பது அம்மக்களின் கடந்தகால நிகழ்கால, இருப்பின் மிகப்பெரிய ஒரு சோகம் ததும்பியதாகும்.
ஏ.பி.எம். இத்ரீஸ் தொகுத்து இருக்கக்கூடிய இந்தச் சிறுகதை தொகுப்பிற்குள் 18 சிறுகதைகள் இருக்கிறது. கதைகள் அனைத்தும் பத்திரிக்கையாளர்களாக, கவிஞர்களாக, சிறுகதை எழுத்தாளர்களாக, பேராசிரியர்களாக இருக்கக்கூடிய முஸ்லிம் மற்றும் தமிழர்களால் எழுதப்பட்டு இருக்கக் கூடிய மிக முக்கியமான காலத்தின் அரசியல் பேசக்கூடிய சிறுகதைகள். அதிகாரத்தின் மையம் நோக்கி எழுப்பப்படுகின்ற போர்களில் லாபம் பார்ப்பது என்னவோ ஆயுத வியாபாரிகளும் எதிரெதிர் அரசியல் பேசக்கூடிய முதலாளித்துவ அரசியல்வாதிகளுமாவார்.  ஆனால் போரின் போதிலான இழப்புகளும், போர்களுக்கு பின்னாலான சுமைகள் அனைத்தும் சாதாரண எளிய உழைப்பாளி மக்களுக்கு மட்டுமே. அவைகள் இங்கே எழுதப்பட்டு, தொகுக்கப்பட்டிருக்கக்கூடிய சிறுகதைகள் அனைத்தும் எளியவர்களின் வலியோடும் வேதனையோடும் பேசியிருக்கிறது.
எம்.ஐ.எம். றஊப் அவர்களின் “பனிமலை” சிறுகதை  இலங்கையின் அத்தனை இயற்கை சூழலையும் போதி முனிவரான புத்தனின் பார்வையிலிருந்து நமக்கு சிலிர்ப்பூட்டி, பச்சை தேயிலைதனை மேனியெங்கும் பூசி நிற்கும் மலைகளின் உச்சிக்கு அழைத்துச் செல்வார்.. உயர்ந்தும், பருத்தும் இருக்கக்கூடிய மரங்களின் அசைவில் ஆடும் இலைகளின் சிலுசிலுப்பை உணரச்  செய்வார்.. பனியேந்தி வரும் கூதல் காற்றின் தழுவலை உணரச் செய்வார். மோனத்தில் இருப்பவனை பார்க்க வரக்கூடிய மக்களின் கூடைகளில் கிடந்திடும் வெண்மை நிற பூக்களின், கொத்துக்கொத்தாகப் பூத்து எழில் கொஞ்சும் மஞ்சள் பூக்களின் அழகினை ரசித்துக் கிடந்த அந்த சித்தார்த்தன்,  வந்த மக்களின் தமிழ்மொழியின் உச்சரிப்பிலும் சிங்கள மொழியின் தழுவலாலும் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அழகினை அழகாக பதிவு செய்து இருப்பார் ஆசிரியர். அந்திசாயும் வேளையின் மீது இரவும், இரவின் மீது அந்திசாயும் பொழுதும் ஒருவரோடு ஒருவர் காதலாகி கட்டித்தழுவி உச்சி முகர்ந்து முத்தம் தர கூடிய அந்த பொழுதினிலே, பள்ளிவாசலில் இருந்து எழும்பக்கூடிய பாங்கோசையின் ஓலியும்.. ஓங்கி உயர்ந்து எழும்பி இருக்கக்கூடிய யூக்ளிட் பட்டாஸ் இலைகளைத் தழுவி வரக்கூடிய மாதா கோவிலின் மணியோசையும், முருகன் கோவிலில் சூடம் காட்டியதால் பரவும் கற்பூர வாசத்தின் ருசிதனையும்  ஒளியழகினையும் முழுமையாக வாங்கிக்கொண்ட அந்த புத்தன் மகிழ்ச்சியோடு கண்மூடி மோனத்தில் தனை ஒப்புவிக்கிறேன்.
Buddha-and-Bodhi-Tree – Stijn van den Hoven
சித்தார்த்தன் தன்னை மறந்து லயணத்தில் இருந்திட்ட நேரமதில்; போதி மரத்து வீதிகளில் கடை வைத்து, குடும்பம் நடத்தி, ஒருவரின் புன்னகையில் இன்னொருவரின் சிரிப்பை பார்த்து மகிழ்ந்த  தமிழ் மக்களும் சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் ஒருவருக்கெதிராத ஒருவர் நிறுத்தப்பட்டு கைகளில் கொலைவாளினை ஏந்தி தயாராக இருக்கிறார் யார் உயிரை காவு கொள்வது என்பதில். வனப்பு மிகுந்த அந்த புத்தனின் வாசல் எங்கும் ரத்தம் தெறித்து கிடக்கிறது. துளி ரத்தமது சித்தார்த்தன் கன்னத்தின் மீது தெறித்து விழ, விழித்திடும் சித்தார்த்தன் தான் மோனத்தில் லயிப்பதற்கு முன்பாக இருந்த நிலையிலிருந்து; இப்படி ஒருவரின் கையில் ஒருவர் கூர்வாள் தூக்கி விட வைத்தது எதுவென யோசிக்கும் தருவாயில் அங்கே எல்லாமும் நிகழ்த்தப்படுகிறது அவனது காலடியில்.. எல்லா உயிர்களிடத்திலும் அன்பை நேசிக்க சொன்ன சித்தார்த்தனின் கால்களின் கீழ் அமைதியின் வடிவாக ஓடும் ஆற்றினிலே மனிதர்களின் பிணங்களும் குழந்தைகளின் தலைகளும் மிதந்து கொண்டிருக்க.. போதி மரத்தின் இலைகளும் ரத்தம் பிசுபிசுப்பாகவென சிறுகதை ஆசிரியர் முடித்திருப்பார். இன அழிப்பிற்கு முன்பான இலங்கையும் இன அழிப்பிலான இலங்கையும் வலியோடும் வேதனையோடும் பதிவாக்கி இருப்பார் ஆசிரியர்.
பல தலைமுறைகளாக வசித்துவந்த வீட்டிலிருந்து உங்களை நீங்கள் வெளியேற்றிக் கொண்டு சென்றுவிடவேண்டும். செய்யத் தவறினால் உங்கள் உயிருக்கு நாங்கள் உறுதி கொடுக்க முடியாது என உத்தரவு ஒன்று உங்களை நோக்கி வரும் என்றால் நீங்கள் என்ன செய்வீர். உங்களின் கடந்த காலங்களில் நீங்கள் சேர்த்து வைத்திருந்த எதையெல்லாம் உங்களோடு கொண்டு போவீர்கள். எதையெல்லாம் அங்கேயே விட்டுப் போவீர்கள் இப்படி ஒரு பட்டியல் போடுங்களேன் பார்க்கலாம். உடுத்திக்கொள்ள கொஞ்சம் துணி, அதை சுமந்து செல்ல ஏதேனும் ஒரு வண்டி. உங்களோடு இரத்த உறவாக இருக்கக்கூடிய உங்களின் மனைவி குழந்தைகள். குழந்தைகள் அவர்களது தேவைகளுக்காக அவர்கள் கொண்டாடக்கூடிய ஏதோ சில அவர்களால் தன் தலைகளில் சுமக்க முடிந்த அளவிற்கு.. நீங்கள் தலைமுறையாக குடியிருந்து அந்த வீட்டில் உங்களோடு பாசமாக இருந்த வேறு உயிர்களை நீங்கள் அழைத்துச் செல்ல வாய்ப்பு இருக்குமாவென்றால் நிச்சயமாக இருக்காது. ஏனென்றால் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தெரியாது. அங்கே உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படுமா இல்லை அலைக்கழிக்கப்படுவீர்களா..
இவைகள் எதுவுமே நீங்கள் அறியமாட்டீர்கள். அப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் சொல்வதற்கெல்லாம், நீங்கள் பேசியதற்கெல்லாம் உங்களோடு இணைந்து உங்களின் உணர்ச்சிகளை சொற்களின் பிரயோகங்களை புரிந்த, உங்கள் உயிர் வாழ்தலின் ஆதர்சமாக இருந்த காளைகளை, பசுக்களை வாலைக் குழைத்து விளையாடும் நாய்களை, வாஞ்சையோடு உங்கள் மீது பாசம் கொண்ட பூனைகளை என்ன செய்வீர்கள். குடியிருந்து இடங்களிலே குடியிருந்த வீடுகளிலேயே அப்படியே விட்டு ஆணையிட்ட வரின் சொல்கேட்டு, வலியோடு போகும் வேதனை இருக்கிறதே.. அவைகளை எந்த எழுத்திலும் கொண்டு வந்து பதிவு செய்ய முடியாது. அப்படியானதொரு பெரும் சோகம் அது. அந்த சோகத்தை அப்படியே பதிவாக்கி இருப்பார் தன்னுடைய  “ஹனிபாவும் இரண்டு எருதுகளும்” என்கிற சிறுகதையில் அதன் ஆசிரியர் குமார் மூர்த்தி அவர்கள்.
கருக்கலிலேயே வல்லத்தை கடலுக்குள் இறக்கினால்தான் அன்றைய பொழுதின்
பசியை விரட்டிட முடியும்.. கடல் அன்னையும் வஞ்சனையில்லாமல் கடலுக்குள் போகும் நாளனைத்தும் ஏதேனும் ஒரு வகையான மீன்களை நாளுக்கொரு விதவிதாமாக வலைகளுக்குள் கொடுத்தனுப்புவாள் இனமொழி வித்யாசம் காட்டாமல் தனதின் பேரன்பின் வடிவாக. கரைசேரும் மீன்களில் தெரிவது குழந்தைகளின் பட்டினி கிடக்கும் முகம் மட்டுமே ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும். அப்படியான குடும்பங்களை வல்லத்தை கடலுக்குள் செலுத்துக் கூடாது செலுத்தினால் சுடப்படுவீர் என அரசு ஆணை பிறப்பித்தால் என்னாகும் ஏழை மக்களின் வாழ்வு. ஆணைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்திடும் அபூபக்கர் குடும்பத்தின் வேதனையை; நண்டை தொடுவதுவே  “ஹ்றாம்” “மக்கூறு” என வாழ்ந்திடும் குடும்பம்.. வலையில் நண்டு பட்டாக்கூட கழட்டி விட்டக் குடும்பம்.. நண்டுக் கூடு போட்டு நண்டைப் பிடித்து வாழும் நிலைக்குத் தள்ளியதென்பது, எவரோ இருவர் கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலுக்கு நீந்திச் சென்று குண்டு போட்டு நொருக்கிய சம்பவம் ஒன்று.
இச்சம்பவம் ஒட்டுமொத்த கடற்கரையோர கிரமமக்களின் வாழ்வினை சிதைத்துப்போட, உடைத்து வீசியெறியப்பட்ட கட்டுமரத் துண்டுகளாக சிதறிப்போனார்கள் அம்மக்கள். ஒவ்வொரு நாளும் தன் மூத்த மகனின் நண்டு பிடிக்கும் உழைப்பால் ஒரு வேளைக் கஞ்சியோடும்.. பசியோடும் உறங்கப் போய் தூக்கம் தொலைத்த அந்த மீனவக் குடும்பம்.. பசியோடு உறங்கிக் கிடக்கும் குழந்தைகளின் முகத்தை பார்த்து  “எல்லாத்துக்கும் யாறப்பில் ஆலமின்! நீதான் இருக்கே” எனக் கூறி வல்லத்தை கடலுக்குள் பாய்ச்சும் இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிக் குண்டிற்கு எதிராக பட்டினையை முன்னிறுத்தி என  வ.அ.இராசரத்தினம் அவர்கள் எழுதிய “துணிச்சல்” சிறுகதையில் பதிவாக்கி இருப்பார் குழந்தைகளின் பசியில் தெரித்தெழும் வல்லத்தின் துணிச்சலை.
You searched for prayer book
அபூபக்கர் அப்பாவின்.. அம்மாவின் இருதயம் நொருங்கியழும் வேதனையை.
இந்த தொகுப்பின் நன்முத்தே “என்ட.அல்லாஹ்” தான். தங்ஜராசா ஹாஜியரின் வெங்காயக் கடையும்..
வெங்காயமும்.. அதை விளைவித்த குடும்பமும்.. கடை திறந்தன்று நடைபெற்ற கலவரமும்.. கலவரத்தால் கடை மூடப்பட.. விளைவித்து கொடுத்த கணபதி விவசாயக் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தில் குறைய,கையிலிருக்கும் அந்த 1500/- மட்டும் தன் மகன் முஸ்தபாவிடம் கொடுத்தனுப்ப.. முஸ்தபா ராணுவத்திற்கான ஆள்காட்டியென சந்தேகப்பட்டு மூன்று பொடியன்கள் பிடித்திழுத்து ராத்திரி பொழுதினில் கணபதி வீட்டுக்கு வர, வந்ததும் “இவன் உமக்கு 1500/- ரூவாய் கொண்டு வந்து கொடுத்தானா” என கேள்வி எழுப்ப..
கணபதியோ வந்தவர்கள் 1500/- ரூபாய்க்குத்தான் வந்திருக்கிறார்கள் என
நினைத்து, இவனை யாரென்றே தெரியாது என முஸ்தபாவைப் பார்த்துச் சொல்ல..
முஸ்தபாவின் நெற்றிப் பொட்டிற்குள் குண்டு பாய.. அய்யோ.! பொடியன்களாக வந்தவர்கள் யார் என்பதையும்.. அவர்களின் செயல்களையும் முஸ்தபா..கணபதி.. 1500/- வழியாக பதிவாக்கி வாசிப்பவருக்கு வேதனையையும்.. அதுர்ச்சியையும் நிகழ்த்திடுவார் கதையாசிரியர் சக்கரவர்த்தி.
எம்.கே.எம். ஷகீப் எழுத்தில் “மூன்றாவது இனம்”, ஓட்டமாவடி அறாபத் எழுத்தில்
“ரெயில்வே ஸ்ரேஷன்”, எஸ்.நளீம் எழுத்தில் “வண்ணான் குறி”, இப்படி தொகுப்பில் பல சிறுகதைகள் தமிழ் மக்களுக்கும்.. முஸ்லீம் மக்களுக்கும்…சிங்கள மக்களுக்குமான
உறவுமுறையின் மேன்மையை போர்காலத்தில் உறவு முறையின் மேல் தொடரும் நம்பிக்கையின் கடந்த காலத்தை அழகுற, நிகழ்கால வாழ்வின் கொடுமைகளை, எளிய மக்கள்
எதிர்கொள்ளும் வாழ்வியல் சார்ந்த அரசியல் பிரச்சனைகளை அவரவர் சார்ந்த அரசியல் பார்வையோடு காத்திரமான அரசியலை உள்ளடக்கி பதிவாக்கி இருக்கிறார்கள். முஸ்லீம் மக்கள் மற்றும் சிங்கள மக்களின் மன உணர்வுகளை தமிழ் எழுத்தாளர்கள் அப்படியே பதிவாக்கி இருக்கும் போது வாசகன் உணர்வது  இன மொழியைத் தாண்டி எப்படி இலங்கைக்குள் எளிய மக்கள் இருதயத்தோடு உறவாடி வந்தார்கள் என்பதை.
இத் தொகுப்பிற்குள் என்னை உட்புகவே செய்யாத கதைகளாக கடைசியில் நவீனத்தின் பெயரில் தொகுக்கப் பட்டிருக்கும் “குதற்கங்களின் பிதுக்கம், சோனியனின் கதையின் தனிமை, சூன்ய
பெருவெளிக் கதைகள், வெள்ளைத் தொப்பி பற்றிய வேதனையூட்டும் அறிக்கை, மே புதுன்கே தேசய” கதைகளாகும். இன்னும் என்னை வாசிப்பில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறையை விட காத்திரமான அரசியல் பேசும் தொகுப்பிற்குள் இக் கதைகள் இணைப்பு அவசியமா என்கிற எண்ணைதை உருவாக்கி விட்டது. பேசிய கதைகளின் அரசியல் அனைத்தையும் கலைத்துப் போடும் வேலைகளை இக் கதைகள் வாசிப்பவனுக்குள் நிகழ்த்தி விடுமோ என்கிற அச்சம் எனக்குள் எழுந்து நிற்கிறது.
கதைகளுக்கு முன்னுரையாக ஏ.பி.எம். இத்ரீஸ் அவர்களின் “காயங்களை ஆற்றும் கதைகள்” இலங்கைக்குள் நடைபெற்ற அரசியல்.. இன முரன்பாடுகளின் தோற்றம்.. முரன்பாடுகளின் அரசியலுக்குள் அப்பாவிமக்களின் சிதைவுறும் வாழ்க்கை.. கதை பேசிடும் அரசியல்.. பேசவேண்டிய அரசியல் குறித்தான ஒரு புரிதலை வாசகனுக்குள் செலுத்தி அனுப்புகிறார்.
அது வாசகனுக்குள் சிறப்பனதொரு, அவசியாமானதொரு பேச்சையும் தொடக்கி வைக்கும்.. சிறப்பு தோழர் இத்ரீஸ்.!
நல்லதொரு சிறுகதைத் தொகுப்பை
சரியானதொரு அரசியல் பார்வையோடு தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள்.
அழகிய வடிவான முறையில் வெளியிட்டு
அரசியலை நிகழ்த்தி இருக்கிறார்கள்
“ஆதிரை வெளியீடு”. இருவருக்கும்
நன்றியும்.. பாராட்டுதல்களும்.
கருப்பு அன்பரசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *