1. மரத்தின் இலையை விட்டு
கீழிறங்க மறுக்கிறது
மழையின் கடைசித் துளி!

2. சிவந்து சிவந்து
கருப்பானது தான் மிச்சம்
அடுப்புக் கறிகள்!

3. வெளிச்சமிடம் நிழலே
எனதெனப் பட்டா போடுகிறது
இருள்!

4. காற்றின் மொழி பேசி
இரு நண்பர்கள் கைகுலுக்குகின்றனர்
மரக்கிளைகள்!

5. தாயைக் காண துளிர் விட்டன
வெட்டப்பட்ட மரத்தின்
விதைகள்!

6. பெட்டியில் சிறை
விடுதலையில் ஒளி
தீக்குச்சிகள்!

7. யாரும் பறிக்கக் கூடாதென்று
சுவர் ஏறிப் பூக்கிறது
கொடி மல்லி!

8. ஈரம் வருமென,
புழுக்கத்தில் காத்திருப்பு
விதைகள்!

9. மேகமில்லாத வானில்
தினமும் மழை
கண்கள்!

10.தொட்டால் தூய்மை கெட்டுவிடுமென்று,
சிணுங்கிக் கொள்கிறது
தொட்டாற் சிணுங்கி!

11. மேகக் கூட்டங்களை ஓட்டிச்சென்று
எந்த ஊரில் கரை ஏற்றுமோ?
காற்று!

12. ஓடி ஆடி களைத்து
போய் விட்டது
கரை ஒதுங்கிய புயல்!

13. பூட்டிய வீட்டில்
புது வீடு
குருவிக் கூடு!

14. பூச்சியை வாசமில்லாமல்
எப்படி ஈர்த்தது
பிளாஸ்டிக் பூ!

15. மின்மினியென்று கண்மணியின்
கண்களை நோட்டமிடும்
சுவர்ப் பல்லி!

16. கனவிலொரு கவிதை
எப்படி எழுதி வைப்பது?
கண்விழித்தா!

17. இறைவன் கசக்கிப் போட்ட
காகித உருண்டை
இவ்வுலகம்!

18. காட்டாற்று வெள்ளத்தால்
கடலில் புதுமனை புகுந்தன
ஆற்றுமீன்கள்!

19. ஒரே வரி
அதுவும் கவிதை
பிரிந்த காதலி!

20. வானவில்லை உரசி,
சிறகை மிழற்றுகிறது
வண்ணத்துப்பூச்சி!

– இளம்பரிதி
தருமபுரி மாவட்டம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *