நமது நாடு தனது 72ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் இது வழக்கமான குடியரசு தினத்தைப் போல அல்ல. கொரோனா தொற்றுக்குப் பிறகு உருவாகியுள்ள பொதுவான நெருக்கடி, தொழில்கள் முடக்கம், விவசாயிகளின் எதிர்காலம், பொருளாதாரம் மந்தம், குழந்தைகளின் எதிர்கால கல்வி குறித்த அச்சம், அண்டை நாடுகளுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் ஆகிய அம்சங்களிடையே தான் இந்த குடியரசு நாளை இந்த தேசம் எதிர்கொள்கிறது. முப்பது ஆண்டுகளாக அமலாக்கப்பட்டு வந்த நவீன தாராளமயக் கொள்கைகள், பொதுவாக ஒரு சிறு முன்னேற்றத்தை அளித்திருக்கிறது எனச் சொல்லப்பட்டாலும் கூட அரசு நிறுவனங்களை நலிவடையச் செய்வதையும், பொது முதலீட்டைச் சுருக்குவதையும், தனியார் மூலதனத்தை வளர்ப்பதன் மூலம் இந்தியப் பெருமுதலாளிகளை உலக முதலாளிகளாக முன்னேற்றுவதையுமே இக்கொள்கைகள் தனது உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவம் வளர்கிற போது தன்னை சுற்றியுள்ள ஒரு சிறு பகுதியையும் முன்னேற்றிவிடுவதன் மூலமே தானும் வளரும் என்பதே அதன் பொதுவான விதியாகும். அப்படியாகத்தான் ஒரு சிறு பகுதியினருக்கு உயர்கல்வி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு,  கணிசமான ஊதியம் ஆகியவை கிடைத்திருக்கிறது. ஆனாலும் பெரும்பகுதி மக்களுக்குக் குறிப்பிடத்தகுந்த பலன்கள் எதையும் முதலாளித்துவத்தால் உறுதி செய்யமுடியவில்லை.

ஏற்கனவே உருவான நெருக்கடியிலிருந்து மீண்டதைப் போலவே, தற்போதைய நெருக்கடியிலிருந்தும் நாடு மீண்டுவிடும் என முதலாளித்துவ பொருளாதார வாதிகள் மதிப்பீடு செய்கிறார்கள். 2021-22 இல் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியென்பது 8.7% அளவில் இருக்கும் என அவர்களால் மதிப்பிடப்படுகிறது. ஆனால் இத்தகைய மீட்சியென்பது இயல்பாக நடைபெறாது. மாறாக ஏழை உழைப்பாளிகள் மீது தொடுக்கப்படும் மூர்க்கமான தாக்குதல் மூலமே முதலாளித்துவம் தனக்கான நெருக்கடியிலிருந்து மீளும் என்பதைக் கடந்த கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இத்தகைய முயற்சிகளைத்தான் மோடி அரசும் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அரசு நிறுவனங்கள், தொழிலாளர் நலன் ஆகியவற்றின் மீது கை வைத்த மோடி அரசின் பார்வை தற்போது விவசாயத்தின் மீதும் திரும்பியிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடுகிறபோது விவசாயத்துறையின் அளவு 23% ஆகும்.  59% நாட்டு மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். விவசாயத்தையும், அதையொட்டிய தொழில்களையும் இணைத்துக் கணக்கிட்டால் 70% மக்கள் விவசாயத்தைச் சார்ந்திருக்கிறார்கள். மொத்த விவசாயிகளில் 82% பேர் சிறு – குறு விவசாயிகளே ஆவர்.

2017-18 இந்தியாவில் மொத்த தானிய உற்பத்தியென்பது 275 மில்லியன் டன்களாகும். உலக அளவிலான உணவு தானிய உற்பத்தியில் இந்திய உற்பத்தியின் அளவு 25% ஆகும். உலக நுகர்வோரில் 27% பேரைக் கொண்ட நாடு நமது இந்தியா. 14% அளவிற்கு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது இந்தியா. பால் உற்பத்தியின் அளவு 165 மெட்ரிக் டன் ஆகும். உலக அளவில் கால்நடை வளர்ப்பில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 190 மில்லியன்களாகும். இவ்வளவு பரந்து விரிந்த விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதற்காகத்தான் தற்போது விவசாய சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. சீர்திருத்தங்கள் எனும் பெயரால் கொண்டுவரப்படும் சட்டங்கள் உண்மையில் விவசாயிகளுக்கும், விவசாயத்தை நம்பியிருக்கும் மக்களுக்கும் எதிரானவை என்பது மட்டுமின்றி கார்ப்பரேட்டுகள் வசம் விவசாயம் அடகுபோனால் விவசாயத்தை நம்பியுள்ளவர்கள் மேலும் ஓட்டாண்டியாவார்கள். மோடியின் ஒரு நாடு, ஒரு சந்தை நுகர்வோருக்குப் பயன்தராது. சீர்திருத்தம் என்று சொன்னால் உடனே கம்யூனிஸ்ட்டுகள் கூச்சல் போடுவார்கள் என ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரைச் சீர்திருத்தம் என்று சொல்கிற போது அது எந்த வர்க்கத்தினரின் நலன்களுக்கானவை என இயல்பான கேள்வியிருந்து தான் நிலைப்பாட்டை எடுக்கிறார்களே தவிரச் சீர்திருத்தங்களைக் கண்மூடித்தனமான எதிர்ப்பவர்களல்ல கம்யூனிஸ்ட்டுகள் என்பதையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பட்டினியில் மக்கள்

சீர்திருத்தம் என்ற பெயரால் விவசாய திருத்தச் சட்டங்களை அரசு முன்மொழிகிற அதே வேளையில் தான், உலக அளவில் ஊட்டச்சத்து குறைவாக கிடைப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களின் அளவு 19 கோடி ஆகும். மேலும் உலக பட்டினிக் குறியீட்டிலும் இந்தியா மிகவும் கீழ்நிலையின் தான் உள்ளது. உலக அளவிலான ஊட்டச்சத்து உறுதி செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் 130 நாடுகளில் இந்தியாவிற்கான இடம் 114 ஆகும். ஊட்டச்சத்து குறை
பாட்டால் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகிறபோது மொத்தம் பட்டியலிடப்பட்டுள்ள 187 நாடுகளில் இந்தியா 170வது இடத்தில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களில் 50% பேரும், குழந்தைகளில் 60% பேரும் இத்தகைய ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவை எப்படி ஒரு வளர்ச்சியடைந்த நாடாகக் கொள்ள முடியும். ஏற்கனவே நிலைமை இப்படியிருக்க, விவசாய சீர்திருத்தம் என்ற பெயரால் மேலும் நிலைமைகள் சிக்கலுக்குள்ளாவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஏழைகளுக்கு உணவென்பது கனவாகவும், நடுத்தர மக்களுக்கு தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களின் மீதான கடுமையான விலையேற்றம் ஆகியவையே விவசாய திருத்தச் சட்டங்களின் விளைவுகளாக இருக்கப் போகின்றன.



நெருக்கடியில் ஜனநாயகம்

தற்போது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது மிகவும் சுருக்கப்பட்டு, ஒரு ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கிறது. பொதுவாக நமது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பொறுத்து ஜனாதிபதியோ, அல்லது மாநில ஆளுநர்களோ ஒரு அவசரச் சட்டத்தை அமைச்சரவையின் பரிந்துரையின் படி பிறப்பிக்க முடியும். ஆனால் இத்தகைய அவசரச் சட்டங்கள் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவையாகும். நேரு பிரதமராக இருந்த போது அன்றைய சபாநாயகர் மாவ்லங்கர் அவசரச் சட்டங்களென்பது ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகும் எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் அன்றிலிருந்து இன்று வரையிலும் தொடர்ந்து இத்தகைய அவசரச் சட்ட முயற்சிகளை எதிர்த்தும், எச்சரித்தும் வருகிறார்கள்.

ஆனால் மோடி பிரதமரானதற்குப் பிறகு இதுவரையிலும் மொத்தம் 31 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய அவசரச்சட்டங்களெல்லாம் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவையாகும். அவசரச் சட்டங்கள் நேரடியாக நாடாளுமன்ற அவைகளுக்கு விவாதங்களுக்கு வந்தாலும் தங்களுடைய பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுவிடும். இது மிகவும் மோசமான ஒரு நடைமுறையாகும். இத்தகைய அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கும் நடைமுறையென்பது உலகத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் தான் நடைமுறையில் உள்ளது. இந்த தேசங்களை ஆட்சி செய்த பிரிட்டிஷ் நாட்டிலும் கூட இத்தகையதொரு நடைமுறை இல்லை. நாடாளுமன்றத்தைக் கூட்டித்தான் சட்டங்களைப் பிறப்பிக்க முடியும். இப்படியாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் புறக்கணித்து அவசரச் சட்டங்களின் மூலமே ஒரு ஆட்சி நடைபெறுமெனில் எதற்காகத் தேர்தல்களை நடத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். கடந்த ஜூன் 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட விவசாயம் தொடர்பான அவசரச் சட்டங்கள், நாடாளுமன்றத்தில் போதுமான விவாதங்களின்றியும், முறையான வாக்கெடுப்பு இன்றியும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்விக்குள்ளாகும் நீதி

ஒருபுறம் அரசு சீர்திருத்தங்கள் என்ற பெயரால் தொழிலாளர் – விவசாயி வர்க்கங்களின் மீது மிக மூர்க்கமான தாக்குதல்களைத் தொடுக்கிறபோது, அதற்கு இசைவான முறையிலேயே நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. பொதுவாக ஒரு அரசு முற்போக்கு திசைவழியில் செயல்படுகிறபோது தான் நீதிமன்றங்களும் நியாயமாக நடந்து கொள்ள முடியும். மாறாகப் பெருமுதலாளிகளின் நலன்களுக்காக அரசு செயல்படுகிறபோது, நீதிமன்றங்களும் அவர்களின் வர்க்க நலன்களைப் பாதுகாப்பதையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்கூடாக தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய நீதிமன்றங்களின் போக்கில் ஒரு மாற்றம் உருவாகியிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்களில் நீதிமன்றம் தலையிட்டு, அரசு மற்றும் விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்குமான முறையில் ஒரு பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைக்கப் பரிந்துரைத்திருக்கிறது. இது அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலை மீறிய ஒரு விந்தையான தலையீடாகும். அதை விட விந்தையான அம்சமென்பது நீதிமன்றம் பரிந்துரைத்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் அரசின் கொள்கைகளை ஆதரிப்பவர்களே என்பதாகும். மேலும் இக்குழுவில் உள்ளவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால் நல்வாய்ப்பாகப் போராடும் விவசாயிகள் இந்த பேச்சுவார்த்தை குழுவிடம் நாங்கள் பேசப்போவதில்லை என உறுதியாக மறுத்திருக்கிறார்கள் என்பது வரவேற்கக்கூடிய அம்சமாகும்.



எட்டாக்கனியாகும் கல்வி

சென்ற ஆண்டு மார்ச் 20ஆம் தேதியிலிருந்து நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று ஒரு காரணமென்றாலும் கூட இந்த ஆண்டு முழுவதும் நமது மாணவர்கள் கல்வியிலிருந்து முழுமையாக விலக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில், இத்தகைய நிலை தொடர்ந்தால் சுமார் 20% மாணவர்கள் கல்வியிலிருந்து விலகி விடும் ஆபத்து உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள்
கல்வியிலிருந்து விலக்கப்படும் அவர்கள் முறைசாரா தொழிலாளர்களாக, கூலியுழைப்பாளிகளாக மாற்றப்படுவார்களென்பதேயாகும். இந்நாட்டின், தமிழகத்தின் முழுமையான நிலைமை என்ன என்பது நமக்கு முழுமையாகத் தெரியாவிட்டாலும் கூட கல்வி கற்பதற்கான வாய்ப்புகளைப் பெரும்பாலானவர்கள் இழக்கப்போகிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கப் போகிறது. கற்றவர்களை எதிர்கொள்வதை விட கல்லாதவர்களை மிக எளிதாக மூலதனத்தால் எதிர்கொள்ள முடியும் எனக் குறிப்பிடுவார் மாமேதை மார்க்ஸ். இந்திய முதலாளிகளும் கூட அத்தையதொரு நிலையை நோக்கித்தான் நகர்கிறார்கள். கல்வியென்பது அனைவருக்கு மானதல்ல. அது ஒரு சாராருக்கானது தான் என்பதே உலக மூலதனத்தின் நிலைப்பாடாகும். உலகில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடு எனச் சொல்லப்படும் அமெரிக்காவில் கூட 21% மக்கள், அதாவது 4.3 கோடி மக்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதையும் இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசியல் சாசனத்தைக் காப்போம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சாசனம், ஒட்டு மொத்த மக்களுக்குமான கல்வி, உணவு, தனிமனித சுதந்திரம், நீதி என அனைத்து உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தையும் பறிக்கிற மிக மோசமான பாதையில் மோடி அரசு சென்று கொண்டிருக்கிறது. எனவே குடியரசு நாளை கொண்டாடும் இத்தருணத்தில் தேசத்தின் மாண்புகளை, மேன்மை மிக்க நமது அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் என அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் சார்பில் அறைகூவல் விடுக்கிறோம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *