12 வயது இந்திரனைப் பார்த்து, 72 வயது இந்திரன் சிரித்துக்கொள்கிறார்..

12 வயது இந்திரனைப் பார்த்து
72 வயது இந்திரன் சிரித்துக்கொள்கிறார்.
**********************************************
புக் டே இணைய இதழில் கலை இலக்கிய விமர்சகரும் கவிஞருமான இந்திரன் அவர்கள் 12 வயதில் எழுதிய குழந்தைப் பாடல் ஒன்றைப் பிரசுரிக்கிறோம்.
அந்த வயதிலேயே  அவர் நடத்திய கையெழுத்துப் பிரதி ‘வானவில்’ இதழின் சில மாதிரிகளையும் பிரசுரிக்கிறோம்.
Image
இனி இந்திரன் வார்த்தைகளில்…..
யோசித்துப் பார்த்தால் நான் 12 வயதில் – 6ம் வகுப்பு – என்ன செய்தேனோ அதைத்தான் இன்று முகநூலில் செய்து கொண்டு இருக்கிறேன்.நேற்று (72 வயதில்) FBயில் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு பற்றி பதிவு போட்டேன். மதுரை ஓவியர் ரபீக் வாட்சப்பில் நான் எனது 12 வயதில் நானே தயாரித்து நானே படித்துக் கொண்ட “வானவில்” எனும் எனது கையெழுத்து பத்திரிகையிலிருந்து சில பக்கங்களை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் பார்த்தால் நோபல் பரிசு பற்றி ஒரு பக்க தகவல் வெளியிட்டு இருக்கிறேன்.அதற்கு கலர் பென்சிலால் படம். மற்றவர்கள் பரிசு பெற்றால் எனக்கு ஏன் சந்தோஷம்?கூகுள் இல்லாத காலத்தில் நோபல் பரிசு பற்றிய செய்தியை எங்கிருந்து வாசித்தேன்? இன்று நினைவில்லை.
Image
நோபல் பரிசுக்கும் ஒரு 12 வயது சிறுவனுக்கும் என்ன சம்பந்தம்? புரியவே இல்லை. கதை மன்னர்கள் – எனும் ஒரு பகுதியை உருவாக்கி அதில் லூயிகாரல் எனும் மேல்நாட்டு எழுத்தாளர் பற்றி எழுதி இருக்கிறேன். அதே போல் சிறுவர் பாடல் எழுதியிருக்கிறேன். நானே ஒரு சிறுவன். ஆனால் சிறுவர் பாடல் எழுதியிருக்கிறேன். ”வாண்டுகள் மாநாடு” என்று ஒரு நகைச்சுவைப் பகுதி. அதில் சிறுவர்களை நானே கிண்டல் அடித்து இருக்கிறேன். என்னை நினைத்தால் எனக்கே சிரிப்பு வருகிறது.
Image