நூல் அறிமுகம்: மோகனா – ஒரு இரும்புப் பெண்மணியின் கதை | கு.காந்திநூலின் பெயர் : மோகனா – ஓர் இரும்புப் பெண்மணியின் கதை
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
விலை: ரூ.120.00
பக்கங்கள்: 144
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/mohana-ore-irumbu-penmaniyin-kadhai/

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்ற மகாகவியின் வார்த்தைகளுக்கு உரம் போட்டு வாழ்ந்து காட்டி இருக்கிறார் பேரா.மோகனா .தமிழ்நாடு அறிவியல் இயக்க நிகழ்வுகளில் அவ்வப்போது பார்த்து விட்டு ஏதாவது பேசிக் கொண்டு விடைபெறுவது தான் அவரின் அறிமுகம் எனக்கு. அவருக்குள் ஏற்பட்ட வாழ்க்கை போராட்டத்தையும் அதனை வென்றெடுத்த மிடுக்கையும் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. காவிரி கரை தாண்டிய முதல் பெண்மனி என்று பதிவு செய்திருக்கிறார். 50களில் சமூக கட்டமைப்பு எப்படி இருந்தது என்பதை யாரும் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை அந்த கட்டமைப்பை அப்போதே உடைத்து ஊடறுப்பு செய்து பயணித்த அனுபவத்தை இன்றைய தலைமுறைகள் படிக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் கூட பெண்களை படிக்க வைத்தால் எவனையாவது கூட்டிட்டு போயிடுவா என்ற அச்சப்பாட்டோடு பெண்களை கல்லூரிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோரை இன்றளவும் பார்க்க முடிகிறது. புத்தகத்தில் பல்வேறு முகங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார். சிலர் வாழ்வின் வழிகாட்டியாகவும் . சிலர் வக்ர புத்தி யோடும் நடந்து கொண்டதை அப்படியே பதிவு செய்திருப்பது அவரின் நினைவாற்றலின் சக்தியாகும். வேலைக்குச் செல்கின்ற பெண்களுக்கு இது ஒரு வழிகாட்டி கையேடு என்று தான் சொல்ல வேண்டும். இந்த புத்தகத்தை வாசிக்கின்ற ஒவ்வொரு ஆண்களும் தங்களை சுயவிமர்சனத்துக்கு இழுத்துச் செல்கிறது என்றால் மிகையாகாது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்கு செய்து கொண்ட வழிமுறைகளை சமூகத்தில் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்ற ஏராளமான பெண்களுக்கு இது பேரூ தவியாக அமையும்.

ஒரு நாள் அதிகாலையில் தோழர் இராம் நாடு வந்திருக்கிறேன் அருகில் இருந்தால் வாருங்கள் என்றார். எந்த அறிவியல் கூட்டமும் இல்லாத நாளில் வந்திருக்கிறார் என்றதும் நானும் என் மனைவியும் சென்று சந்தித்தோம். அப்போதுதான் தாய் சி என்ற தற்காப்பு கலையை கற்றுக் கொண்டிருக்கிறேன் அதன் அறங்கேற்றத்திற்காக வந்திருக்கிறேன் என்றதும் நாங்கள் அதிர்ந்து போனோம். இவங்க ஒரு இரும்பு பெண்மணி என்று என் மனைவிக்குஅறிமுகம் செய்து வைத்தேன். அவர் உடலைத் தான் இரும்பாக வைத்துக் கொண்டார் உள்ளத்தை பூ போன்று வைத்திருப்பார் என்பதை இந்த புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள். வேலை கிடைத்தவுடன் தான் உண்டு வேலையுண்டு என்று பயணித்துக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு இடையே உரிமையை மீட்டெடுக்க போராடாவும் வேண்டும் சிறைவாசம் கொடுத்தாலும் அதனையும் ஏற்றுக் கொண்டால்தான் இழந்த உரிமையை பெறமுடியும் என்பதை தன் வாழ்க்கை மூலம் நிருபித்து இருக்கிறார் பேரா.மோகனா. அவர் பயணம் செய்த ஒவ்வொரு அடியும் இந்த சமூகத்தின் கட்டமைப்பின் மீது விழுந்த சவுக்கடிதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. வாசிக்க வாசிக்க பக்கங்கள் வேகமாக நகர்வதை உணர முடியும். ஒவ்வொரு இளைய தலைமுறையும் வாசிக்க வேண்டிய இரத்தமும் சதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகபுரட்சியாளரின் கதை.

கு.காந்தி
இராமநாதபுரம்