கணம் கோர்ட்டார் அவர்களே!
காவல்துறை தலைவர் அவர்களே!!

நீங்கள் இப்படி ஒரு உத்தரவை அறிவிக்கலாமா? ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊர்வலத்தையும் மக்கள் ஒற்றுமை காக்கும் மனித சங்கிலி இயக்கத்தையும் நீதித்தராசின் ஒரே தட்டில் வைத்து எடை போடலாமா?

தேச விடுதலைக்காக போராடிய பகத்சிங் லாகூர் சதி வழக்கில் நீதிபதியிடம் பேசுகிற பொழுது செயலை நோக்கத்திலிருந்து பிரித்துப் பார்க்கக் கூடாது என்று வாதிட்டார்.

கொலை செய்யும் கொலைகாரணையும், யுத்த களத்தில் போரிடும் ராணுவ வீரனையும் செயலை மட்டும் வைத்து எடை போடலாமா?

எலியை பிடிக்க விஷம் வைக்கலாம் மனிதனுக்கு கூட அந்த விஷம் மரணத்தை ஏற்படுத்தும்.? விஷம் வைத்த நோக்கத்தை விட்டு விட்டு செயலை மட்டும் பார்ப்பது நியாயமாக இருக்காது என்று தேசவிடுதலைக்காக போராடியவர்களையும் கிரிமினல் குற்றவாளிகளையும் ஒன்றாக எடை போடுவதை எதிர்த்தார்.

இப்போது தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதின் நோக்கம் மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து கலவரத்தை நடத்துவதற்காக என்று தெள்ளத் தெளிவாக தெரிகிற நோக்கம். கடந்த கால வரலாறும் அதுதான்.

மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தக்கூடிய மனித சங்கிலி இயக்கம் மக்களிடையே ஏற்படுத்தக்கூடிய பிணக்குகளை நீக்கி ஒற்றுமை உணர்வை உருவாக்கக் கூடியது.

இரண்டு அமைப்புகளின் நோக்கத்தை கவனியாமல் செயலை மட்டும் வைத்தது தடை விதிப்பது எப்படி நியாயமாகும்.

கன்னியாகுமரியில் மண்டைக்காடு நடைபெற்ற மதக்கலவரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நடத்தும் வன்முறை போன்று இருந்தது என்று அப்போது எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் நீதிபதி வேணுகோபால் தெரிவித்து இருந்தார்.

கோவையில் தென்காசியில் திருவல்லிக்கேணியில் என பல இடங்களில் நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு எல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்காயாக தெரியும்.

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆரம்பித்து பிறகு தான் மத கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

அதுவரை இந்தியாவில் மத நெகிழ்வுத் தன்மை இருந்த வரலாற்றை காண முடியும்.

அக்பருக்கு இந்து படை தளபதியும் ராணா பிரதாப் சிங் மன்னருக்கு இஸ்லாமிய படை படைத்தளபதியும் சத்ரபதி சிவாஜிக்கு பீரங்கி படைக்கும் கப்பற்படைக்கும் இஸ்லாமிய படைத்தளபதியும் இருந்தனர் என்பதை வரலாறு அறியும்.

1925 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் ஆரம்பிக்கப்பட்ட பிறகு திட்டமிடப்பட்ட மதக் கலவரங்கள் நடத்தப்பட்டது.
1927 ஆம் ஆண்டு நாக்பூரில் கலவரத்தை உருவாக்கினார்கள்.
1927 28 ஆம் ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட மத கலவரங்கள் மகாராஷ்டிராவில் நடைபெற்றது.
1929 ஆண்டு பம்பாய் ஆயில் மில்லில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தை மத கலவரமாக மாற்றினார்கள்.
1932, 1935, 1937 ஆண்டுகள் பம்பாயில் தொடர் மதக்கலவரங்கள் அரங்கேற்றப்பட்டது.
1948 ஆம் ஆண்டு பிரிவினைவாத காலத்தில் மதக் கலவரங்கள் நடைபெற்றது நாடறியும்.

1960 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சங்கிகளின் திட்டமிட்ட செயலால் மத கலவரங்கள் பெருகியது.

1968 ஆம் ஆண்டு மட்டும் 348 கலவரங்கள் நடைபெற்று உச்சத்தை எட்டியது. இந்த ஆண்டுதான் டெல்லியில் தங்கி இருந்த பெருந்தலைவர் காமராஜர் ஆர் எஸ் எஸ் காரர்களால் தாக்கப்பட்டார்.

1969 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தில் 660 பேர் மரணம் அடைந்தனர் இதில் 430 பேர்கள் இஸ்லாமியர்கள்.
1969 ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற கலவரத்தில் 184 பேர்கள் மரணமடைந்து இதில் 164 பேர்கள் இஸ்லாமியர்கள்.
1970 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 512 பேர்கள் மரணம் அடைந்ததில் 417 பேர்கள் இஸ்லாமியர்கள்.

இந்த கலவரத்தில் இஸ்லாமியர்களின் 6071 வீடுகள் பிடிக்கப்பட்டு சேதம் அடைந்தது என்பதையும் இது போன்ற திட்டமிட்ட தாக்குதலை இந்துத்துவவாதிகள் அரங்கேற்றினார்கள் என்று அஸ்கர் அலி இன்ஜினியர் தொகுத்த புத்தகத்தில் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.

1980ல் மொராதாபாத் 1985இல் குஜராத் 1987ல் மீரட் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்ட கலவரங்கள் நிகழ்த்தப்பட்டது.

1983 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் நெல்லியில் மூன்று மணி நேரத்தில் 21 91 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பத்தாயிரம் பேர் வரை இறந்திருப்பார்கள் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது.

1989 ஆம் ஆண்டு பகல்பூரில் நடைபெற்ற மத கலவரத்தில் ஆயிரம் பேர்கள் இறந்தனர் இதில் 900 பேர்கள் இஸ்லாமியர்கள்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 1044 பேர் மரணம் அடைந்தவர்களில் 790 பேர்கள் இஸ்லாமியர்கள் என்று விகாரப்பூர்வ பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இறந்தவர்கள் 2000 பேர்கள் வரை இருக்கும் இதில் இஸ்லாமியர்கள் 1800 பேர் வரை அடங்குவார்கள் என்று அதிகாரப்பூர்வ மற்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1992 இல் நடைபெற்ற மும்பை கலவரத்தை உலகம் அறியும்..
2013 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் தலைவராக அமித் ஷா பொறுப்பேற்றவுடன் முசாபர் நகர் மாவட்டத்தில் மட்டும் 62 பேர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் இதில் 42 பேர் இஸ்லாமியர்கள்.

2020 ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தில் 52 பேர் இறந்ததில் 32 பேர் இஸ்லாமியர்கள்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இதைவிட கொடூரமா ஆர்எஸ்எஸ் இன் இந்துத்துவா சக்திகள் வெடிகுண்டு கலாச்சாரத்தை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதுதான்.
2006 மாலேகான் குண்டு வெடிப்பு,
2007 ல் சம்சுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2008 மொடசர் ஆகிய இடங்களில் சங்கிகளால் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளால் மொத்தம் 121 பேர் மரணம் அடைந்தார்கள் என்பதை கணம் நீதிபதி அவர்களும் தமிழக காவல்துறை தலைவரும் அறிந்திருப்பார்கள்.

இப்படிப்பட்ட நாசகர நோக்கத்தோடு செயல்படுகிற அமைப்பையும் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க கூடிய அமைப்புகளையும் அதன் நோக்கங்களை அறிந்து கொள்ளாமல் நீங்கள் முடிவு எடுப்பது மனித குலத்திற்கு உகந்ததல்ல.

– அ.பாக்கியம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *