Nedumudi Venu Unseen Artist - Director Gnana Rajasekaran. நெடுமுடி வேணு: காணக்கிடைக்காத கலைஞன் - இயக்குநர் ஞான ராஜசேகரன்



1980 களில் மலையாளப் படங்களை தொடர்ந்து பார்த்து வந்த நான் ஒரு குறிப்பிட்ட நடிகரின் SUBTLE ACTING இல் என் மனதைப் பறி கொடுத்தேன். கே ஜி ஜார்ஜ் இயக்கிய பஞ்சவடிப்பாலத்தில் ஒரு கிராமப்புற அரசியல்வாதியாக அவர் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்கள். எல்லா படங்களிலும் இரண்டாவது நிலை கதாபாத்திரங்களில் அவர் மின்னினார். அப்பா, நண்பர், ராஜா என்று பல பாத்திரங்கள். எல்லாவற்றிலும் இயல்பான நடிப்பு. நகைச்சுவை உணர்வு. இசை சம்பந்தமான பாத்திரங்களில் அசத்திவிடுகிற நடிப்பு.

உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிற பாங்கு….. அவர்தான் நெடுமுடி வேணு என்கிற பரிசுத்த கலைஞர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக எனது நெருங்கிய நண்பர். நான் எடுத்த முதல் படத்தில் இசை மேதை ரங்கண்ணாவாக நடிக்க அழைத்தபோது மகிழ்வுடன் வந்து சிறப்பித்தவர். மோகமுள் தான் அவர் நடித்த முதல் தமிழ்ப்படம். இது அவர் எனக்களித்த மிகப்பெரிய கௌரவம்.

கும்பகோணத்தில் ஷூட்டிங். ஒருநாள் முன்னதாக வந்தார். நான் கதையையும் அவர் ஏற்கும் கதாபாத்திரத்தையும் விளக்கிவிட்டு உறங்கச் சென்றேன். இரவு ஒரு மணி இருக்கும். என் அறைக்கதவு தட்டப்பட்டது. என்னவோ ஏதோ என்று பதறி கதவைத் திறந்தேன். நெடுமுடி வேணு நின்றுகொண்டிருந்தார்.

அவர் சொன்னார்:” சார்,
ரங்கண்ணாவைப்பத்தி எல்லா விவரமும் சொன்னீர்கள். அவர் சங்கீதத்தில் ஞானி. வாழ்க்கையில் ஒன்றும் சம்பாதிக்காதவர் என்று.
ஆனால் ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர்கள். அவர் சமூகத்தை எவ்வாறு பார்த்தார்? தனக்கு நல்லது செய்யாத சமூகத்தை வெறுப்புடன்
பார்த்தாரா? அல்லது மகிழ்ச்சியுடன் பார்த்தாரா? நடிக்கும்போது இந்த விஷயம் அறிந்தால் நன்றாக இருக்கும் என்று தான் உங்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டேன். மன்னியுங்கள்!”

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு கவலைக்கிடம் | Popular Malayalam actor  Nedumudi Venu's condition serious - hindutamil.in

அவரது கேள்வி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் கேட்பது ரங்கண்ணா ஒரு OPTIMIST ஆ? அல்லது PESSIMISTஆ என்பதைத்தான். நினைத்துப்பாருங்கள். இப்படி ஒரு கேள்வி கேட்கும் நடிகர்கள் எத்தனைப் பேர் இருப்பார்கள்? தாம் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் ATTITUDE ஐ அறிய விரும்பும் நடிகன் ஒரு மாபெரும் கலைஞன் என்பதில் சந்தேகமில்லை.

நெடுமுடி ஒரு தேர்ந்த கலைஞன் மட்டுமல்ல. வாழ்க்கையை எப்போதும் ரசிக்கிற மனிதர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அருகில் இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகளை வெகுவாக ரசிக்கிறவர். அந்த மனிதர் காபி ஆற்றுபவராக இருக்கலாம். அல்லது நாதஸ்வரம் வாசிப்பவராக இருக்கலாம் எல்லாவற்றையும் நுணுக்கமாக கவனித்து ரசிப்பார் அவர்.

கலையை நேசிப்பவர் அவர். சினிமாவில் புதிய முயற்சி செய்பவர்களை
ஊக்குவிப்பவர் அவர். மலையாளத்திலும் பிறமொழிகளிலும் பணம் வாங்காமல் அதிக
OFF BEAT படங்களில் நடித்தவர் அவர் ஒருவராகத்தான் இருப்பார்

நெடுமுடி வேணு ஒரு காணக்கிடைக்காத கலைஞன். அவர் இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாதது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *