இந்தியாவெங்கும் வணிகப் பொருளாக மாறியிருக்கும் தண்ணீர் – நீலத்தங்கம் | நூல் மதிப்புரை – தோழர். ராம்கோபால்

தோழர் இரா. முருகவேள் மிக விரிவாக பலவற்றையும் பதிவிட்டு உள்ளார். 90களில் தொடங்கிய உலகவங்கி, ஐ.எம்.எப் ஆகியவையோடு தொடங்கிய முதலாளித்துவம் எப்படி தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து சாதாரண மக்களை விழுங்க எத்தனிக்கிறது என்பதையும். எப்படி இந்தியாவெங்கும் தண்ணீர் வணிகப் பொருளாகி இருக்கிறது என்பதையும், அதன் பின்னே உள்ள பன்னாட்டு பகாசுர கம்பனிகள் குறித்தும் பல தகவல்கள் சொல்லி இருக்கிறார். சில புதிய அதிர்ச்சிகர இதுவரை அவ்வளவாக கவனத்திற்கு வராத தகவல்களும் உள்ளே இருக்கின்றன. மிக முக்கியமான நேரத்தில் வந்திருக்கிற சரியான புத்தகம்.

இந்த புத்தகத்தை யாரெல்லாம் படிக்கலாம்? கோயமுத்தூர் வாசிகள் முதலில் படிக்க வேண்டும். நம் ஊரில் என்ன நடக்கிறது அதன் பின்னணி என்ன என்பதை நாமே அறியாவிட்டால் எப்படி? அடுத்து திருப்பூர் நாகர்கோவில் வாசிகள் மற்றும் சென்னை வாசிகள். அப்புறம் என்ன, விரைவில் தமிழகமெங்கும் குடிநீர் விநியோகம் தனியார் மயமாக உள்ளதால் எல்லா தமிழக மக்களும். ஸ்மார்ட் சிட்டி கோதாவில் பல விஷயங்கள் நடந்து வரும் புதுச்சேரி மக்களுக்கு இந்த அபாய பின்னணி தெரியவேண்டிய ஒன்று.