Ninaivugalai Azhikka Thuvangiyavan Short Story by Kumaraguru. குமரகுருவின் நினைவுகளை அழிக்கத் துவங்கியவன் சிறுகதை.




யாருக்கும் என் நினைவு வராதபடி வாழ்வதே குறிக்கோள்!! அதுதானே சாதாரண மனிதனின், சாதாரண வாழ்வின், சாதாரண சாதனையாக இருக்க முடியும்!! யார் நினைவிலும் சிக்கி கொள்ளாமல் வாழ்வதொரு கலையன்றோ? இந்த சாதனையைப் படைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை எப்போதுமுண்டு… இப்போது அது இன்னும் அதிகமாகி கொண்டேயிருக்கிறது…

ஏன்?

இப்போது நான் எங்கே இருக்கிறேன் என்று யாரும் கவலை கொள்ளாதபடி, நான் எங்கே இருந்து என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று யாரும் யோசிக்காதபடிக்கு வாழ்ந்திருக்கிறேன் என்பதை எப்போதும் சொல்லி கொண்டேயிருக்கும் தேவை இருக்கிறது.

ஒரு நாளும் எந்த எலியைப் பற்றியும் இன்னொரு எலி கவலை கொள்வதில்லை. முன்பொரு நாள் நாம் எப்படியெல்லாம் வாழ்ந்தோம் என்று நினைவு பாராட்டுவதில்லை. ஆனால், நாம் எலிகளில்லையே. பூனைகளின் நினைவுகளுக்குள் எலிகள் எப்போதும் உணவாகவே இருப்பதும், எலிகளின் நினைவுக்குள் பூனைகளைப் பற்றிய அச்சம் மட்டுமே பரவியிருப்பதைப் போன்ற நினைவுகளால்தான் என்ன பயன்?

இப்படிதான் அன்று மளிகைக் கடையை நோக்கி நடந்து சென்று கொண்டேயிருந்தேன். கடையின் வாசலில் நின்று கொண்டிருந்த முகம் எனக்கு அவ்வளவு பரிச்சயமாகத் தெரிந்தது. அந்த மூக்கும் காதும் என் கண்களுக்குள் சென்று நினைவுகளைத் துழாவி குழம்பி கொண்டிருந்தது. பிறகு அவர் அருகில் நெருங்கும் போது-நினைவுக்குள் இன்னும் தேடி கண்டுபிடிக்க முடியாதவரை நேரில் பார்த்துவிடுகிற தர்மசங்கடம் இருக்கிறதே?- அவரைப் பார்க்காததைப் போல கடைக்குள் நுழைந்துவிட்டேன். ஆனால், அவர் என்னைப் பார்க்கவே இல்லை என்று என்னால் உறுதியாக சொல்லவும் முடியவில்லை. இவரைத் தேடும் முயற்சியில் மளிகை லிஸ்டை மறந்த மூளைக்கு வாட்ஸாப்பிலிருந்து சொல்லி கொடுத்துப் பிறகு பொருட்களை வாங்கி சென்றேன். வீட்டுக்கு சென்று அன்றிரவு வரை அவர் யாரென்ற நினைவு வரவுமில்லை, இந்த கடன்கார மூளைத் தேடுவதை நிறுத்தவுமில்லை!!…

மற்றொரு நாள் என் நினைவு வந்த என் பால்ய நண்பனொருவன் எனது மற்றொரு நண்பனிடம் பேசி என்னோடு பேச விரும்பி எனது தொலைபேசி எண்ணை வாங்கி என்னை அழைத்திருக்கிறான். நினைவுகள் எவ்வளவு வேலை செய்ய வைக்கிறதென்று பாருங்களேன்? நானோ யாரோ பேங்க்காரன்தான்”கடன் அட்டைத் தருகிறேன்”என்று ஃபோன் செய்கிறான் போல என்றெண்ணி அந்த ஃபோன் காலை கட் செய்ததோடன்றி தொடர்ந்து கால் செய்து கொண்டேயிருந்ததால் ஃபோனையே சைலண்டில் போட்டு விட்டேன். பிறகு அந்த நண்பன் யாரிடம் என் நம்பரை வாங்கினானோ அவனே ஃபோன் செய்து நம்பர் கொடுத்த விசயத்தைச் சொல்லி கான்ஃபிரன்ஸ் காலில் அவனை என்னுடன் பேச சொல்லிவிட்டு துண்டித்து கொண்டான். என் வேலை அவன் வேலை என் குடும்பம் அவன் குடும்பம் எங்கஷ்டம் அவங்கஷ்டம் எல்லாம் பேசி முடித்து ஃபோனைத் துண்டித்த போது, “நம்மைப் பற்றியும் ஒருத்தன் விசாரிக்கிறானே?” என்று பேரதிர்ச்சியாக இருந்தது.

நான் யாரையும் அழைத்து பேசி தொந்தரவு செய்வதில்லை. அதற்கான காரணமும் உண்டு. அது, செல்பேசிகளால் இங்கிதம் குறைந்துவிட்டதாக எண்ணும் எனது பிற்போக்கு புத்தி.

நீங்களே நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒரு சர்ஜன், முக்கியமான சர்ஜரியில் பிசியாக இருக்கும் நேரம் உங்களின் ஒரு நண்பன் அவசரமான பணத் தேவைக்காக அழைக்கிறான். அப்போது உங்கள் செல்பேசி சைலண்டில் இருப்பதற்கான காரணம் நீங்கள் சர்ஜரியிலிருப்பதென்று தெரியாத அவன், அவனின் மற்றொரு நண்பனிடம் சென்று, “அவன் பெரிய டாக்டராயிட்டான், பணங்காசு பார்த்ததும் பழசை மறந்துவிட்டான். ஃபோன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குறான்!” என்று புறம் பேசும் நிலையை இந்த செல்பேசியே ஏற்படுத்துகிறது.

தினமும் தொடர்பிலிருப்பதாகவேத் தோற்றமளிக்க செய்யும்படி ஃபார்வர்டுகளை அனுப்பி “குட் மார்னிங்” சொல்பவர்கள் பதிலுக்கு குட் மார்னிங் சொல்லாதவர்களைக் கெட்டவர்களாக காண செய்கிறது.

செல்பேசிகளுக்குள் நினைவுகளைப் புகைப்படங்களாகவும், குறுஞ்செய்திகளாகவும் சேமித்து வைத்து கொள்ளும் நிலை வந்த பின். மூளையிலிருந்து சில ஜிபி நினைவுகளுக்கான இடம் தொலைந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. குரலற்ற, சதைப்பற்றற்ற, சிரிக்கும் முகமில்லாத வெறும் வார்த்தைகள் அல்லது குரல்களை மட்டும் கேட்டுப் பழகிய குரங்குகளாக நாம் பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பது எத்தகைய அவலம்?

நான் ஒரு கழிவிரக்கவாதி. என்னால் எதையும் முற்போக்காக யோசிக்கவே முடியாது. எல்லாமே என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை. நான் யாருக்குத் தேவையோ அவர்கள் என்னைப் பயன்படுத்தி கொள்வார்கள். எனக்கு யாரெல்லாம் தேவையோ அவர்களை நான் பயன்படுத்தி கொள்வேன்?

பயன் முடிந்ததும் தூக்கியெறியப்பட வேண்டியவர்களை நினைவில் சுமந்து கொண்டு திரிவது எப்படி சரியாகும்? நீங்கள் உங்கள் நினைவுகளில் சுமந்து கொண்டிருக்கும் நான் அப்போதிருந்த நான். இப்போது இப்படி எழுதி கொண்டிருப்பவன் இப்போதிருக்கும் நான். இருவருக்குமிடையிலான காலம் இருக்கிறதே அதில் இல்லாத உங்களால் இன்றைய என்னை எப்படி புரிந்து கொள்ள முடியும்?

நான் பிறந்த போதிலிருந்து என்னைச் சுற்றி என் சம்பந்தப்பட்ட நினைவுகளும் பிறந்து விட்டன. அவை என்னோடே என்னைப் போலவே வளர்ந்து கொண்டேயிருக்கிறன. நான் துரோகமிழைத்தவனின் நினைவில் துரோகியாகவும், நன்மை செய்தவனின் நினைவில் நல்லவனாகவும், ஒவ்வொருவரின் நினைவிலும் என் பயன்பாட்டுக்கேற்ப அப்படியே இருக்கிறேன்.

நான் அதிலிருந்து மாற மாற என்னை வேறொருவனாகவேப் பார்த்து கொண்டிருக்கிறார்கள். வெல்லும் போதென்னைப் பார்த்து “எப்படி இருந்தான் இப்படி ஆகிவிட்டான்?” என்பதைப் போலவே தோல்வியுறும் போதும் “எப்படி இருந்தான் இப்படி ஆகிவிட்டான்?” என்பவர்களின் நினைவிலிருந்து என்னை நீக்கிவிட நடத்தும் போராட்டம்தான் என் வாழ்வு.

செல்பேசியில் அவ்வப்போது மெமரியை சுத்தப்படுத்துவதைப் மோல நினைவுகளையும் சுத்தப்படுத்தி அப்டேட் செய்து கொள்வதே சிறந்த வாழ்வியல் நெறி. நினைவுகளேயில்லாமல் இன்றைக்கு இப்போதிருக்கும் என்னோடு, இன்றைக்கு இப்போதிருக்கும் தங்களிடம் உரையாடுவதே என் முனைப்பு!!

ஆனால், நினைவுகளை ஒவ்வொன்றாய் கழற்றி காயிதத்தில் நிரப்பி எரிக்கும் நினைவிலிருந்து மட்டும், எப்போதும் என்னால் தப்பவே முடியவில்லை!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *