இந்த வருடம் பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு-2022(CUET-2022) நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் ஐந்து தனியார் பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இது தேசிய கல்விக் கொள்கை 2022 பரிந்துரையின் அடிப்படையில் தேசியத் தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டது. உயர்பட்ட மேற்படிப்புக்கான தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அதனடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே சென்ற வருடம் மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வு (CUCET-2021) நடத்தப்பட்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த வருடம் அனைத்து மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், அதன் கல்லூரிகளுக்கும் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாக (CUET-2022) இது மாற்றப்பட்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்த வருடம் மாநிலப் பல்கலைக் கழகங்கள் இதை அமுல்படுத்தத் தயாராக இல்லாத காரணத்தால் மத்தியப் பல்கலைக் கழகங்களில் மட்டும் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வருட சேர்க்கையில் தற்போது கிடைத்த தகவலின்படி மாநிலத் தேர்வு வாரியங்களில் படித்தவர்களை விட அதிக அள்வில் சி பிஎஸ்ஸி யில் படித்த மாணவர்கள் மத்திய பல்கலைக் கழகங்களில் அதிகம் இடம் பெற்று உல்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் டெல்லி பல்கலைக் கழகத்தின் ஒரு கல்லூரியில்(இந்து கல்லூரி) அரசியல் விஞ்ஞானப் படிப்பில் 120 கேரளா மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள். இந்த வருடம் ஒரு மாணவர் மட்டுமே இது வரை சேர்ந்துள்ளனர் என்று வயர் இதழ் கூறுகிறது.

வருடந்தோறும் சிபிஎஸ்ஸி மாணவர்களே அதிகமாக, 80 சதவீதத்திற்கு மேல், சேரும் போது கடந்த வருடத்தில் கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா சுமார் 1500-1800 மாணவர்கள் சிபிஎஸ்ஸி க்கு அடுத்தபடியாக சேர்ந்திருந்தனர். கேரளா மாநில கல்வி வாரிய மாணவர்களே பிற மாநிலங்களை விட அதிகமாகச் சேர்கிறார்கள் என்றும் கேரளாவில் அதிக மார்க்குகள் போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் சொல்லப்பட்டது. இந்த வருடம் தற்போதைய நிலவரப்படி அனைத்து மாணவர்களும் 95 சதவீத்திற்கு மேல் சிபிஎஸ்ஸி போன்ற மத்திய கல்வி வாரியத்தில் படித்தவர்களே அதிகம் சேர்ந்துள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் என்சிஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி வடிவமைக்கப்படுவதும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி பெறுவதும் தான் என்கிறார்கள்.சுமார் 39 மாநிலக் கல்வி வாரியங்களின் மாணவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்த வருடம் ஹரியானா மாநிலக் கல்வி வாரிய மாணவர்கள் அதிக இடம் பிடித்துள்ளனர். ஆனால் ஹரியானாவை யாரும் குற்றம் சாட்டவில்லை என்கிறார்கள் வயர் இதழில் எழுதியுள்ள அபூர்வானந்த், முனைவர் அனிதா ராம்பால்.

தேசிய தேர்வு முகமையும் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளும்:

தேசிய தேர்வு முகவை என்பது ஒன்றிய அரசின் கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். தேசிய கல்விக் கொள்கை 2020ன் பரிந்துரையின்படி இது உருவாக்கப்பட்டுள்ளது.1860ம் வருட கூட்டுறவு பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தலைவர் உட்பட 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது நிதி உட்பட அனைத்திலும் சுயமாக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

உயர்கல்விக்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளும் இனிமேல் இந்த முகமை மூலமே நடத்தப்பட உள்ளது. இதுவரை சிபிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட நீட் தேர்வு தற்பொழுது இந்த முகமை மூலமே நடத்தப்படுகிறது. தற்போது கலை அறிவியல் பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தியுள்ளது. எதிர்காலத்தில் அனைத்து உயர்கல்வி பொறியியல், விவசாயக் கல்வி உள்ளிட்ட அனைத்தையும் இம் முகமை நடத்தும் எனவும் தெரிகிறது.

நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு ஏன் தேவை என்பதற்கு யுஜிசி கூறும் காரணம் என்னவென்றால் உயர்கல்விக்கு வரும் பள்ளி மாணவர்கள் பல்வேறு போர்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வருவதால் அதிக கட் ஆஃப் மார்க்குகளைப் பெற்ற மாணவர்கள் உயர்கல்வியை கைப்பற்றுகின்றனர். பிறர் விடுபடுகின்றனர். எனவே பொது நுழைவுத்தேர்வு மூலம் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான தேர்வு முலம் உரிய மாணவர்கள் உரிய உயர்கல்விச் செல்ல வாய்ப்பிருக்கும் என்கிறது.

இப்பொழுது நமது கேள்வி என்பது பல்வேறு போர்டுகளின் மதிப்பீட்டு முறையில் ஒழுங்குமுறை கொண்டு வந்து மாணவர்கள் மதிப்பீட்டு முறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்குப் பதிலாக மற்றொரு மைய மதிப்பீட்டு முறையின் மூலம் மாநில தேர்வு மாணவர்களை வடிகட்டும் முறை எதற்கு என்பது தான். இந்த மையத் தேர்வு என்பது தனியார் பயிற்சி மையங்களில் அதிக அளவில் பணம் கட்டிப் படிக்கும் மாணவர்களே அதிக மதிப்பெண் எடுத்து உள்ளெ நுழைவதும் ஏழை மாணவர்கள் இதில் வெளியேற்றப்படுவதும் தான் நடைபெறுகிறது. இதைத் தான் நீட் தேர்வு கடந்த வருடங்களில் நிரூபித்து வருகிறது. எனவே மைய நுழைவுத் தேர்வு தீர்வு அல்ல.

பொது நுழைவுத் தேர்வின் சவால்கள்:

பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான கேள்வித்தாள் என்பதே இந்தி, ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே இந்த வருடம் நடத்தப்பட்டது. அப்படியானால் அந்தந்த மாநிலங்களில் தாய்மொழியில் படித்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்களா? மத்திய பல்கலைக் கழகத்தில் சேர்வதிலிருந்து இவர்களை நுழைய விடாமல் தடுத்து நிறுத்திவிடப் பட்டிருக்கிறார்கள் அல்லவா?

இந்தியாவில் ஏற்றத் தாழ்வுமிக்க சமூக அமைப்பு, முழுமையற்ற பள்ளிக் கல்வி கட்டமைப்பு, உறுதி செய்யப்படாத ஆசிரியர்-மாணவர் விகிதங்கள், ஆசிரியர் பற்றாக்குறை, பல்வேறு வகைப் பாடத்திட்டங்கள், பல்வேறு வகை கற்பித்தல் முறை ஆகியன மூலம் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் மூலம் தேர்வை நடத்துவது அராஜகமான அணுகு முறை அல்லவா?

அகில இந்திய பொதுத் தேர்வை நடத்த மிகப்பெரிய கட்டமைப்புத் தேவைப்படுகிறது. இந்த வருடம் ஒவ்வொரு நுழைவுத் தேர்வு மையத்திலும் சுமார் 300 கம்ப்யூட்டர்கள் இருப்பதும் மிக திறன் மிக்க இணய வசதி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இது இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் சாத்தியமாகுமா? வட கிழக்கு மாநிலங்களில் பல பல்கலைக்கழகங்கள் இத் தேர்வு நடத்துவதை கைவிட்டுள்ளனர்.இதனால் அப்பகுதி மாணவர்கள் கர்நாடக உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு சென்று நுழைவுத் தேர்வு எழுதி உள்ளனர் என திரிபுரா பலகலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் சலீம் ஷா குறிப்பிடுகிறார்.

நீட் தேர்வு, ஜேஈஈ, சட்ட நுழைவுத் தேர்வு, நிர்வாகவியல் நுழைவுத்தேர்வு ஆகிய மைப்படுத்தபப்ட்ட தேர்வுகளில் பள்ளியில் படிக்கும் போதே தனியார் பயிற்சியில் அதிகப் பணம் கட்டிப் பயிற்சி பெற்று இந்த இடங்களைக் கபளீகரம் செய்து இருக்கிறார்கள். இது போல் தரமான பல்கலைக்கழகங்களை, கல்லூரிகளை வசதி படைத்தோரே பிடித்தமான படிப்புகளில் சேர முடியும் என்ற நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது அல்லவா? இதற்கான தனியார், பைஜூஸ் போன்ற கார்ப்பொரேட் பயிற்சி மையங்கள் கோட்ட ராஜஸ்தான் போன்ற இடங்கள் மட்டுமில்லாமல் இனி இந்தியா முழுவதும் பரவ வழி வகை செய்யாதா? அவர்கள் மாணவர்களிடம் கொள்ளையடிக்கப் பச்சை விளக்கு காட்டுவது போல் இல்லையா?

உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு தான் முக்கியமென்றால் +2 வரையிலான கல்வியையும், நுழைவுத் தேர்வுக்காக மொழிக் கேள்விகள் கொண்ட இரண்டு பகுதிகள் , ஆறு துறைசார்ந்த படிப்புக்கான கேள்விகள் கொண்ட ஒரு பகுதி மேலும் பொது அறிவு,சமகாலச் செய்திகள், லாஜிக், அனலிடிகல், கணித அறிவு ஆகியன கொண்ட ஒரு பகுதி என நான்கு பகுதி கொண்ட கேள்வித்தாளில் ஒன்பதுக்கு மேற்பட்ட பாட வகையில் மாணவர்கள் மேலும் படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் அல்லவா?

உயர்கல்வி பொதுப்படிப்புகள் பல்வகையாக இருக்கும் பொழுது ஒரே நுழைவுத் தேர்வு மூலம் எப்படி அறிவியல் , வரலாறு, பொருளாதாரம் வணிகம் , வியாபாரம் என உயர்கல்வியில் தேர்ந்தெடுத்துப் படிப்பது? சில சமயங்களில் வேறு படிப்புக்குச் செல்ல விரும்பினால் அதற்கென ஒரு தேர்வும் எழுத வேண்டும் என்பது எப்படி சாத்தியமாகும்?

இறுதியாக:

சமீபத்திய கால்நடைக் கல்லூரிக்கான விளம்பரத்தை நினைவு கூற வேண்டியுள்ளது. அதாவது நீட் தேர்வு எழுதினால் மட்டும் போதுமானது மதிப்பெண் பற்றிக் கவலை வேண்டாம் என விளம்பரம் கொடுத்துள்ளது. கட்டணம் வருடத்திற்கு 5.5 லட்சம் ரூபாய். இதிலிருந்து என்ன தெரிகிறது? உயர்கல்விக்குச் செல்ல வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வு எழுதித் தான் தீர வேண்டும் என்ற கட்டாயம் திணிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாகப் பெற்றால் உயர்கல்வியில் சேர்வதற்கு இது போன்ற தனியார் வணிகமயக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிக்கி சின்னா பின்னமாக வேண்டியது தான். மாணவர்களை மன உளைச்சலுக்குத் தள்ளி உயிருக்கே உலை வைத்து விடும் என்பதை நீட் தேர்வு நமக்கு தீய முன்னுதாரணமாக கண் முன்னே தெரிகிறது.

இந்தியாவில் 54 மத்திய பல்கலைக் கழகங்கள், 1027 மாநில பல்கலைக்கழகங்கள், 126 நிகழ்நிலைப் பல்கலைக்கழகங்கள் 403 தனியார் பல்கலைக் கழகங்கள் உள்ளன.பல்கலைக் கழகங்கள் கீழ் இயங்கும் கல்லூரிகள் சுமார் 42,000 கல்லூரிகள் சுமார் 4 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் என உயர்கல்விக் கட்டமைப்பு உள்ள சூழலில் ஒரே நுழைவுத் தேர்வு எப்படி சாத்தியமாகும். தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்கின்றனர். வெவ்வேறு மாநிலங்களில் பள்ளித் தேர்வு வெவ்வேறு காலங்களில் முடிவடைகிறது. இதனால் ஒரே தேதியில் நடைபெறும் தற்போதைய நுழைவுத் தேர்வு மிகத் தாமதமாக நடைபெற்றுள்ளது.இதுவே ஒரே நாடு ஒரே தேர்வு என்ற முறையின் முதல் தோல்வி எனலாம்.

மொத்தத்தில் கிராமப்புற, ஏழை மாணவர்கள் சாதரணமாக கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கே பெரும்பாடு படும் போது இது போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதி தோல்வி அடைந்து போவதை விட தொலை நிலைக் கல்வி, திறந்த வகை ஆண் லைன் கல்வி என்ற முறைசார உயர்கல்வியை நோக்கித் தள்ளி விடப்படுவது நடக்கும். இதற்காக ஒன்றிய அரசு ஆண் கல்விக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வைத்துள்ளது.

மொத்தத்தில் நிறுவனம் சார் உயர்கல்விக்யில் இருந்து ஏழை மாணவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கே ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு வழி வகுக்கும்.

மேலும் இந்த வருட சேர்க்கையின் விளைவுகளை உற்று நோக்கினால் மாநில கல்வி வாரியத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்கள். மருத்துவ சேர்க்கைக்கு மத்தியத்துவப் படுத்தப்பட்ட நீட் தேர்வுக்கு தமிழகம் தவிர வேறு எந்த மாநிலமும் குரல் கொடுக்காத சூழலில் இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிராக அனைத்து மாநிலங்களில் இருந்தும் குரல் எழுப்பி நீட் உள்ளிட்ட அனைத்து மத்தியத்துவப் படுத்தப்பட்ட தேர்வுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

– பொ.இராஜமாணிக்கம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *