Pen andrum indrum 3 webseries by Narmatha devi அத்தியாயம் 3: பெண் அன்றும், இன்றும் - நர்மதா தேவி

சும்மா இருப்பவர்கள்

வர்க்க சமுதாயத்தில் ’வீட்டளவில் பெண் ஆணுக்கு அடிமை’ என்கிற நிலை உருவானதும், அதுவரை பெண்கள் செய்து வந்த வீட்டுவேலைகள் அனைத்தும் அவற்றின் சமூகத் தன்மையை இழக்கின்றன. பெண்கள் செய்யும் வேலைகள் சமூகத்திற்கான வேலைகள் என்கிற மதிப்பை இழந்து வெறும் ’தனிப்பட்ட குடும்ப ஊழியம்’ மட்டுமே என்றானது. அதனால்தான், பெண்கள் இடுப்பொடிய 10 மணி நேரம், 16 மணிநேரம் வீட்டு வேலை செய்தாலும் ’எங்கம்மா வீட்டுல ’சும்மாத்தான்’ இருக்காங்க!’…, ’என் பொண்டாட்டி வீட்டுல ’சும்மாத்தான்’ இருக்கா!’…, என்கிற  ’புருடா’வையெல்லாம் நாம் இன்னமும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

எனவே, வர்க்க சமுதாயத்தில் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்வது என்பது கட்டாய உழைப்பாக்கப்பட்டிருக்கிறது; பெண்கள் குடும்பத்திற்காக எவ்வளவு வேலைகளைக் செய்தாலும் அவற்றிக்கு எந்தவித மதிப்போ, அங்கீகாரமோ கிடையாது-இன்னும் சொல்லப்போனால் பெண்கள் செய்யும் குடும்பவேலைகள் ஒரு வேலையாகவே கருதப்படாது என்கிற நிலை உருவாக்கப்பட்டது. அதனால்தான், ’மாட்டைவிட’ அதிகம் வேலை செய்கிற நமது பெண்களைப் பார்த்து, இதயமே இல்லாமல் ’சும்மா இருப்பவர்கள்’ எனச் சொல்கிறோம். 

எனவே, அநாகரிக சமூகத்தில் ஒரு கட்டத்தில் உருவான வர்க்க சமுதாயத்தின் புதிய ஏற்பாடுகளில் ஒன்றாக, குடும்ப அமைப்பின் மூலமாகப் பெண்களின் உழைப்பைச் சுரண்டும் முறை – பெண்ணடிமை முறை உருவானது. இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

வாரிசுரிமையின் தோற்றம்
வர்க்க சமுதாயத்தில் தனிச்சொத்து உருவானதும் ஆண்களுக்கு தங்களுடைய வாரிசுரிமையை நிறுவ வேண்டும் என்கிற தேவையும் பிறக்கிறது. ஒரு பெண்ணோடு தனக்கிருக்கிருக்கும் மண உறவினால் பிறந்த ’என்னுடைய குழந்தைகள்’ என தங்களுடைய வாரிசுகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கு ஏற்படுகிறது. எனவே, தன்னுடைய மனைவியாகிய பெண் தனக்கு மட்டுமே ’உடைமையானவள்’, தன்னைத் தவிர வேறு யாருடனும் அவள் உறவுகொள்ளக்கூடாது என்கிற விதி ஆண்களுக்குத் தேவைப்பட்டது. குடும்பத்தில் ‘கற்பு’ ஒழுக்கம் என்பது மனைவிக்கு இருக்க வேண்டிய முக்கிய விதியாக உருவாக்கப்பட்டது. 

ஆனால், தன்னுடைய மனைவியிடம் மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்ற அதே கட்டுப்பாடு ஆண்களுக்கு இல்லை. குடும்பத்துக்கு வெளியே ஆண்களின் காம இச்சைக்கு இரையாக ’காமக்கிழத்திகள்’, ’பரத்தையர்கள்’, ’விபச்சாரிகள்’ என்கிற பெண்கள் வகையினர் உருவாக்கப்பட்டார்கள். உலகெங்கிலும் இருந்த வர்க்க சமூகங்களில் இதுதான் நிலை. ’திருமணத்திற்குப் பிறகு கணவன் ’பரத்தையருடன்’ உறவுகொண்டு வீட்டுக்கு வரும்போது, அவனை எதிர்த்துச் சண்டையிடும் உரிமை மனைவிக்கு இருந்தாலும், அவள் அப்படிச் செய்வது முறையல்ல’ – இப்படித்தான் தமிழகர்களின் மிகத் தொன்மையான இலக்கியமான தொல்காப்பியம் கூறுகிறது. (“சொல் லெதிர் சொல்லல் அருமைத் தாகலின் – அல்ல கூற்றுமொழி அவள்வயி னான” -தொல்காப்பியம்-களவு-பாடல் 108). ’கற்புக்கரசி கண்ணகி’ இவ்வழி உருவாக்கப்பட்டவள்தான். 

வர்க்க சமுதாயத்துக்கு முன்பிருந்த சமுதாயங்களில் குழந்தைகள் தாயின் வழியாகவே அடையாளம் காணப்பட்டுவந்தார்கள். எல்லோரும் சேர்ந்து கூட்டாக உழைத்துச் சேர்த்த எளிய சொத்துகள் அனைவருக்குமானது என்கிறபோது, ’உரிமை’ என்கிற வார்த்தைக்கு அங்கு இடமேயில்லை. எனவே, அந்தச் சமூகத்துக்கு ஏற்றவாறு அப்போது நிலவிய திருமண முறைகளும், குடும்ப வடிவங்களும் தாயையே பிரதானமாகக் கொண்டிருந்தன. 

உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப வளர்ச்சியடைந்து வந்த மனிதசமூகத்தின் ஒவ்வொரு சகாப்தமும், அதற்கு முன்பு நிலவிவந்த குடும்ப அமைப்புகளிலும், திருமண முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வந்தன. 

காட்டுமிராண்டி காலம் தொடங்கி, நாகரிக காலம் வரை வரை 1) ரத்த உறவுக் குடும்பம் (Consanguine Family) 2) புனலுவா குடும்பம் (Punalauan family) 3) இணைக் குடும்பம் அல்லது ஜோடிக் குடும்பம் (Pairing family) 4) இறுதியாக ஒருதாரக் குடும்பம் (Monogamous family) என நான்கு வகையான குடும்பங்கள் இருக்கின்றன என்றும், காட்டுமிராண்டி நிலைக்கு குழு மணம் (Group Marriage), அநாகரிக நிலைக்கு இணை மணம் அல்லது ஜோடி மணம் (Pairing marriage), நாகரிக நிலைக்கு ஒருதார மணம் (Monogamous marriage) என மூன்று வகையான திருமணங்கள் இருக்கின்றன என்றும் எங்கெல்ஸ் ’குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலில் குறிப்பிடுகிறார்.

அமெரிக்கா, ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என உலகின் அனைத்து கண்டங்களிலும் வாழ்ந்த மக்கள் சமூகங்களில், ரத்த உறவுகளை அழைப்பதற்காகப் பயன்படுத்திய உறவுப்பெயர்களை எல்லாம் ஆராய்ந்து, அந்தப் பெயர்களைப் பின்தொடர்ந்து, முந்தைய காலங்களில் அவர்களிடம் இருந்த வழக்கொழிந்துபோன மணமுறைகளையும் விரிவாக ஆய்வு செய்து, இந்நூலில் எங்கெல்ஸ் விவரித்திருக்கிறார். ”தென்னிந்தியாவில் உள்ள தமிழர்களின் ரத்த உறவுகளைக் குறிக்கும் சொற்களும், நியூயார்க் மாகாணத்திலுள்ள செனீகா இரோகுவாய் பூர்வகுடிகளின் ரத்த உறவுகளைக் குறிக்கும் சொற்களும், இருநூறுக்கும் மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் ஒன்றாகவே இன்றுவரைக்கும்கூட இருந்து வருகின்றன” – இப்படித் தமிழர்களின் உறவுமுறைகளைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார் எங்கெல்ஸ். ‘1884-ஆம் ஆண்டில் அவரால் எழுதப்பட்ட நூல் இது’ என்பதை நினைக்கும்போது, ’அந்தக்காலத்திலேயே எவ்வளவு செய்நேர்த்தியுடன் தமிழகத்தில் நிலவிய உறவுமுறைகள், திருமணமுறைகளை எல்லாம் ஆராய்ந்திருக்கிறாரே!’ என்கிற வியப்பு மேலிடும். 

சரி, திருமணமுறைகள் குறித்த கதைக்குத் திரும்ப வருவோம். இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. ’அய்ய…ச்சீ…ஆய்’ என்கிற ’அருவருப்பான’ மனநிலையைக் கடந்து, ’இதுதான் மனிதசமூகம் கடந்துவந்த பாதை’ என்கிற பக்குவத்தோடு குடும்பமுறையின் வரலாற்றை நாம் படிப்பது அவசியம். அப்போதுதான் மனிதவரலாறு குறித்த உண்மைகளைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். 

இன்னார் இன்னாரோடுதான் பாலுறவு கொள்ளலாம் என்பதை சமூகம் நிர்ணயிப்பதிலிருந்துதான் திருமண முறைகள் உருவாக்கப்படுகின்றன. பாலுறவுகளைப் பொறுத்தவரை பெற்றோர்களும், குழந்தைகளும்கூட இணையர்களாக இருக்கலாம் என்கிற வரைமுறையற்ற நிலை, மிகமிக ஆரம்ப காலத்தில் மட்டுமே இருந்துள்ளது. வெகு சீக்கிரமாகவே மனிதர்கள் இந்த முறைக்கு முடிவு கட்டி அடுத்த நிலைக்குச் சென்றார்கள் என்கிறார் எங்கெல்ஸ். 

காட்டுமிராண்டி சமூகத்தில் இந்தப் பழக்கம் முதலில் ஒழிக்கப்பட்டு ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குள்தான் பாலுறவு இருக்க முடியும்- அதாவது, ஒரு தலைமுறையினர்களுக்குள் மட்டுமே ஒருவருக்கொருவர் கணவன் மனைவிகளாகவும், சகோதர சகோதரிகளாகவும் இருக்க முடியும் என்கிற முதல் வரம்பு கொண்டுவரப்பட்டது. ’ரத்த உறவுக் குடும்பம்’ என்கிற இந்த வகையான குடும்பங்களில், பாட்டன் பாட்டிகள் என்ற முதல்தலைமுறையினர் அனைவரும் தங்களுக்குள் சகோதர சகோதரிகளாகவும், கணவன் மனைவிகளாகவும் இருந்தார்கள்.

அவர்களுக்குப் பிறந்த இரண்டாம் தலைமுறையினர் அனைவரும் தங்களுக்குள் சகோதர சகோதரிகள் & கணவன் மனைவிகள். இவர்களுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறையினர் அனைவரும் தங்களுக்குள் சகோதர சகோதரிகள் & கணவன் மனைவிகள். இந்த முறையில் சகோதர்கள் அனைவரும் ஒரு குழுவிற்குள் ’பொது கணவர்கள்’, சகோதரிகள் அனைவரும் ஒரு குழுவிற்குள் ’பொது மனைவிகள்’ என வாழ்ந்தார்கள். இப்படி ’ஒரு குழுவிற்குள் அனுமதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் கணவன் – மனைவி’ என்ற அடிப்படையில் இந்தத் திருமணமுறை இருப்பதால், இந்த வகையான திருமணமுறையை ’குழு மணம்’ (Group marriage) என்றழைத்தார்கள் மார்கனும், எங்கெல்ஸும். 

இந்த வகையான குடும்ப முறையில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் வட்டத்திற்குள் உள்ள எல்லாக் கணவர்கள், மனைவிகளுக்கும் இடையே ’பொது உறவு’ இருந்தது. அதனால், இந்த வகையான குடும்பங்களில் குழந்தைகளுக்கு இன்னார்தான் தகப்பன் என உறுதியாகக் கூற முடியாது. எனவே, குழந்தைகள் தாயின் வழியாகவே அடையாளம் காணப்பட்டார்கள். 

காட்டுமிராண்டி நிலையில் இருந்து அநாகரிக நிலையின் இடைக்கட்டம் வரைக்குமான காலத்தில் இந்த வகையான ரத்த உறவுக் குடும்பம் (Consanguine Family) இருந்தது என்கிறார் எங்கெல்ஸ்.

குடும்பம் மற்றும் மண உறவின் வளர்ச்சிக் கட்டத்தில் இரண்டாவது கட்டமாக சகோதர சகோதரிகளுக்குள் பாலுறவு கொள்ளும் முறை தடுக்கப்படுகிறது. முதலில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள் உறவுகள் தடுக்கப்பட்டது. பிறகு, ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்றுவிட்ட என தூர சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவுகளும் தடுக்கப்பட்டன. சகோதர சகோதரிகளுக்குள் உறவுகள் கூடாது என்கிற கட்டுப்பாடுகளால், ஒரு சில தலைமுறைகளிலேயே ஆதிகாலத்திய பெருங்குடும்பத்தைப் பிரித்துப் பல கிளைகளை உருவாக்க வேண்டிய தேவை உருவானது. 

எந்தெந்த கிளைகளுக்குள் திருமணங்கள் நடக்கலாம், நடக்கக்கூடாது என்கிற வரையரைகள் எற்படுத்தப்பட்டன. (நம்மூரில் ’உறவுமுறை’, ’பங்காளிகள்’ என்று சொல்வதை ஒட்டிய அமைப்பாக இவற்றைக் கருதலாம்). இந்த வழக்கம் குலம், கணம் (Clan, Gen) என்கிற ஸ்தாபனங்கள் உருவாவதற்கு வழிவகுத்தன. அநாகரிக சமூகத்தின் முக்கிய அஸ்திவாரங்களாக இந்தக் கணங்களே இருந்தன. ஆனால், இந்தக் காலகட்டத்திலும் குழு மண முறையே நீடித்தது. எந்தெந்த பிரிவுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் குழுவாக ஒருவருக்கொருவர் கணவர்களாக, மனைவிகளாக வாழ முடியும் என்கிற விதியில் சகோதர-சகோதரிகள் விலக்கப்பட்டார்களே ஒழிய, குழு மணமுறை தொடர்ந்தது. 

அமெரிக்காவின் இரோகுவாய் பழங்குடிகளில் ’புனலுவா’ எனப்படும் இந்த வகையான குடும்பமுறை இருந்துள்ளது. சில சகோதரிகள் – அவர்கள் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாகவோ அல்லது ரத்த சம்பந்தமுள்ள பல தாய் வயிற்றுக் குழந்தைகளாகவோ இருக்கலாம் – இவர்கள் தமது ’பொதுவான கணவர்’களின் ’பொதுவான மனைவி’களாக இருந்தார்கள். ஆனால், இந்த உறவில் இருந்து அவர்களுடைய சகோதரர்கள் விலக்கப்பட்டார்கள். இதில் கணவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரகள் இல்லை; ‘புனலுவா’ எனப்படும் அந்தரங்கப் பங்காளிகள் என ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டார்கள். இதேபோல், ஒரு தாய் வயிற்று மகன்களோ, அல்லது ரத்த சம்பந்தமுள்ள பல தாய் வயிற்று மகன்களோ உள்ள ஒரு குழுவினர், பல பெண்களைப் ’பொது மணம்’ செய்துகொண்டார்கள். இந்த மணமுறையில் இருந்து இந்த ஆண்களின் சகோதரிகள் விலக்கப்பட்டார்கள். இதில் மனைவிகளும் ஒருவருக்கொருவர் புனலுவா எனப்படும் அந்தரங்கப் பங்காளிகள்.

இந்த வகையான குடும்ப முறையிலும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் வட்டத்திற்குள் உள்ள எல்லாக் கணவர்கள், மனைவிகளுக்கும் இடையே ’பொது உறவு’ உண்டு. அதனால், இந்த வகையான குடும்பங்களில் குழந்தைகளுக்கு இன்னார்தான் தகப்பன் என உறுதியாகக் கூற முடியாது. எனவே, குழந்தைகள் தாயின் வழியாகவே அடையாளம் காணப்பட்டார்கள். 

ரத்த சொந்தத்துக்குள் திருமணம் நடப்பதை கணங்கள் மேலும் மேலும் குறுக்கிக்கொண்டே வந்தன. பரஸ்பரம் மணம் செய்துகொள்ள முடியாமல்போய்விட்ட சகோதரர்களின் பிரிவுகளும், சகோதரிகளின் பிரிவுகளும் போகப்போக அதிகரித்துக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் இணைக் குடும்பம்/ஜோடிக் குடும்பம் எனும் முறை குழு மணத்திற்குப் பதிலாகத் தோன்றியது. இந்தக் கட்டத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் வாழ்வது என்ற நிலை உருவானது. மண உறவுக்கு வெளியிலான உறவுகள் ஆணுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது; பெண்களுக்கு அப்படிப்பட்ட உறவுகள் இருந்தால் தண்டிக்கப்படும் வழக்கம் இருந்தது. திருமண பந்தத்தைத் துண்டிக்கும் உரிமை இருவருக்கும் இருந்தது என்றாலும், விவாகரத்துக்குப் பிறகு குழந்தைகள் எப்போதும்போலத் தாயின் உரிமையாகத் தாயுடனே இருந்தார்கள். 

”காட்டுமிராண்டி நிலைக்கும் அநாகரிக நிலைக்கும் இடைப்பட்ட எல்லைக்கோட்டில்தான் இணைக் குடும்பமுறை உருவானது. முக்கியமாக காட்டுமிராண்டி நிலையில் தலைக்கட்டத்திலும், இங்குமங்கும் என அநாகரிக காலத்தின் கடைக்கட்டத்திலும் காணப்பட்டது. அதற்கு முந்தைய காலகட்டத்தில் இம்முறை கிடையாது. காட்டுமிராண்டி சமூகத்தின்  அம்சமாக குழுமணமும், அநாகரிக சமூகத்தின் அம்சமாக இணைக் குடும்பமும், ஒரு தாரமணம் நாகரிக சமூகத்தின் அம்சகமாகவும் பரிணமித்தது” என்கிறார் எங்கெல்ஸ்.

குழுக் குடும்பத்தின் எல்லா வடிவங்களிலும் ஒரு குழந்தையின் தகப்பன் யார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. குழு மணங்களில் தாய் தரப்பில் இருந்து மட்டுமே வம்சாவளியைக் கண்டுகொள்ள முடியும் என்பதால், ’பெண் வழி’ ஒன்றுதான் ஒப்புக்கொள்ளப்பட்டது. எனவே, இம்முறை நிலவிய காட்டுமிராண்டிகள் சமூகத்திலும், அநாகரிக சமூகத்தின் கடைக்கட்டம் மற்றும் இடைக்கட்டதிலும், தலைக்கட்டதின் ஒரு குறிப்பிட்ட அளவு வரையிலும், பெண்கள் சுதந்திரமானவர்களாக மட்டும் இல்லை, மதிப்பிற்குரியவர்களாகவும் இருந்தார்கள்.  பெண்கள் – அதாவது ’தாய்மார்கள்’ உயரிய நிலையில் வைக்கப்பட்டார்கள். வீட்டில் பெண்ணின் மேலாதிக்கம் இருந்தது. 

குழு மணத்திற்குப் பிறகு தோன்றிய இணைக் குடும்பமுறையில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஜோடி என்ற நிலை எற்பட்டபோது, குழந்தைகள் இன்னாருக்குப் பிறந்தவர்கள் என தகப்பன்மார்களை அடையாளம் காணும் நிலை வந்தது. நவீன ஒருதாரக் குடும்பத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய ஏற்பாடுகளைக் கொண்டிருந்த முந்தைய அமைப்பு இது. தகப்பன் யார் எனக் கூற முடிந்தாலும், இந்த இணை மணமுறையிலும் குழந்தைகள் தாய்-வம்சாவழி, தாய்-உரிமை என்ற அடிப்படையில் தாய்க்கு உரிமையானவர்களாகவே இருந்தார்கள். 

அமெரிக்காவின் இரோகுவோய் பூர்வகுடிகளில் செனீகா மக்களிடம் இணைக் குடும்பமுறை வழக்கில் இருந்தது. அவர்கள் மத்தியில் பணியாற்றிய அஷர் ரைட் என்கிற பாதிரியார் இந்தக் குடும்பமுறையில் பெண்களின் நிலையை நேரடியாகக் கண்டு பதிவுசெய்திருக்கிறார். ”பல குடும்பங்கள் வசிக்கும் பழைய நீளமான வீடுகளில் (Long houses), பெண்கள் வேறு குலங்களில் இருந்து கணவர்களைப் பெற்றார்கள். பொதுவாகவே குலத்தில் பெண்கள் தரப்பே வீட்டை ஆட்சிசெய்தது.

குடும்பத்தின் சேகரிப்புகள் பொது. ஒரு கணவனுக்கோ ஒரு காதலனுக்கோ உழைத்துத் தனது பங்கை உறுதிசெய்யக்கூடிய திறமை இல்லையென்றால், அவன் என்னதான் அந்தக் குடும்பத்துக்கு அதற்கு முன்னர் செய்திருந்தாலும், எத்தனை குழந்தைகள் அவனுக்கு இருந்தாலும், ’உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு கிளம்பு!’ என்ற கட்டளையை எப்போது வேண்டுமானாலும் அவன் பெற்றுவிடுவான். அப்படியொரு கட்டளை வந்துவிட்டால், அவன் உடனே கிளம்பி தன்னுடைய கணத்துக்குப் போய்விட வேண்டும். அந்தக் கட்டளைகளை மீறி அவனால் அந்த வீட்டில் இருக்கவே முடியாது; வீட்டுச் சூழல் மிகவும் கொதிப்பாக இருக்கும்” என்கிறார். 

இணை மணம்/ஜோடி மணத்தில் குழந்தைகளுக்குத் தகப்பன் இன்னார் என சொல்லக்கூடிய நிலை இருந்தாலும், குழந்தைகள் தாய்க்கு உரிமையானவர்கள், சொத்துகள் பொது என்கிற வழக்கமே இருந்துள்ளது. இதை நேரடியாகப் பாதிரியார் ரைட் கண்ட சாட்சி, ’குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குடும்ப அமைப்புகளில் ஆண்கள்-பெண்கள் இருபாலருக்கும் இடையிலான அதிகார நிலைகளில் உண்டான மாற்றங்கள் ஒரே இரவில் நடந்திடவில்லை.  அவர்கள் வாழ்ந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், நிலவிய பொருளாதார, சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு தாய்–உரிமையில் இருந்து தந்தை-உரிமைக்கு அதிகாரம் படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் மாறியது; மாற்றப்பட்டது. ’தாய் உரிமை’ என்கிற பதத்தை பாகோபன்தான் முதன்முதலில் பயன்படுத்துகிறார். தாய் மூலம் வம்சாவளியை அங்கீகரிப்பதையும், அதிலிருந்து காலப்போக்கில் வெளிவந்த வாரிசு உறவுகளையும் மட்டுமே அவர் ’தாயுரிமை’ என்ற சொல்லால் குறிப்பிட்டார். சுருக்கத்தைக் கருதி தானும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதாகவும்,  மற்றபடி சட்டரீதியான அர்த்தத்தில் ’உரிமை’ என்று குறிப்பிடக்கூடியது எதுவும் இந்த சமுதாயக் கட்டத்தில் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையும் எங்கெல்ஸ் தெளிவுபடுத்துகிறார். 

வர்க்க சமுதாயங்களின் குடும்பங்களின் அடிப்படையான குணாம்சமாக, ஆண்-பெண் சமத்துவமற்ற நிலை இருக்கிறது என்பதே அடிப்படையான உண்மை. ”தாயுரிமை தூக்கியெறியப்பட்டது என்பது பெண்ணினம் உலகவரலற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். வீட்டின் அதிகாரத்தையும் ஆண் கைப்பற்றிக்கொண்டான்; பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள்; பணிமகளாக்கப்பட்டாள்; ஆணின் காம இச்சை தீர்க்கும் அடிமையாக்கப்பட்டாள்; கேவலம் குழந்தைகள் பெறும் இயந்திரமாகவே மாற்றப்பட்டாள்” என எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். பெண் ஏன் அடிமையானாள்? எப்படி அடிமையாக்கப்பட்டாள்? என்பதை சரித்திரப் பூர்வமாக விளக்கும் மிகச் சிறந்த சமூக விஞ்ஞான நூலாக எங்கெல்ஸின் ’குடும்பம், தனிச்சொத்து, அரசு’ ஆகியவற்றின் தோற்றம் நூல் விளங்குகிறது. 

-தொடரும்…

ஆதார நூல்கள்: 1. குடும்பம், தனிச்சொத்து, அரசு-ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ்

  1. மாதர் அரங்கில் நமது கடமைகள் – பெண்களது பிரச்சனைகள் மற்றும் கடமைகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கருத்தோட்டம் பற்றிய ஆவணம், 2005

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


2 thoughts on “அத்தியாயம் 3: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி”
  1. அருமையான உரை தெரிந்த பலவற்றை ஒரு கோர்வையாக படிக்கும்போது அதை மக்களிடம் கொண்டுச்செல்ல உதவும் குறிப்பாக பெண்களிடம்.. வாழ்த்துக்கள் 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *