penandrum-indrum-webseries-17 -by-narmadha-devi அத்தியாயம் 17: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி penandrum-indrum-webseries-17 -by-narmadha-devi அத்தியாயம் 17: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவிpenandrum-indrum-webseries-17 -by-narmadha-devi அத்தியாயம் 17: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

பெண்கள் முழுமையான தொழிலாளிகள் கிடையாதா?

எவ்வளவு தொழிலாளர்கள்? எவ்வளவு பெண் தொழிலாளர்கள்?

இந்தியாவின் மக்கள்தொகை 1931-ல் 35 கோடி. ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தோராயமாக 15.5 கோடி. விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கை இது. அன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் தோட்டத்தொழில், சுரங்கம், தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளையும் சேர்த்து, ‘மொத்தம் 50 லட்சம் முறைசார் தொழிலாளர்கள் உழைத்திருப்பார்கள்’ என்றது 1931 மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை.

35 கோடி மக்கள் தொகையில், ஒட்டுமொத்தமான 15.5 கோடி தொழிலாளர்களில், வெறும் 50 லட்சம் பேர்தான் ‘முறைசார்’ தொழிலாளர்கள் என்பது மிகமிகக் குறைவு! பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையே, ‘இந்தியாவின் மக்கள்தொகை அளவோடு ஒப்பிடும்போது, முறைசார் தொழிலாளர்களின் (Organised labour) எண்ணிக்கை மிகமிகக் குறைவானது’ என்று சுட்டிக்காட்டியது. இந்தியாவின் தொழில் வளர்ச்சியும், தொழிலாளர் நிலையும் அன்றைக்கு எவ்வளவு பரிதாபகரமாக இருந்தது என்பதை இந்தக் கூற்றில் இருந்து உணர முடியும்.

இந்த 50 லட்சத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் தொழிற்சாலை சட்டத்திற்குள் வந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தோராயமாக வெறும் 15 ½ லட்சம்.  இந்தத் தொழிலாளர்களின் நிலையே அன்றைக்குப் படுமோசமாகத்தான் இருந்தது. அப்படியிருக்க ‘முறைசார்’ தொழிலாளர்கள் என்று அன்றைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வரையறுத்த 50 லட்சம் தொழிலாளர்களில், தொழிற்சாலை சட்டத்திற்குள் வராத, பிற தொழிலாளர்கள் நிலை எப்படி இருந்திருக்கும்? பெரும்பாலோனோர் நிலை, ‘படுமோசத்திலும் படுமோசமாகவே’ இருந்தது.

“பதிவுசெய்யப்படாத தொழிற்சாலைகள் வயதுவந்த ஆண்களைக் காட்டிலும் பெண்களையும், குழந்தைகளையுமே பெரும்பாலும் பணியில் அமர்த்தின. இடைவேளையே இல்லாமல், விடுமுறையும் இல்லாமல், வேலை நேரத்தைக் கடந்தும் இவர்கள் வேலை பார்த்தார்கள். ஆபத்தான, சுகாதாரமற்ற சூழலில் இவர்கள் பணியாற்றினார்கள். 10 பேருக்கு மேல் வேலை பார்த்தாலும், பதிவேடுகளில் குறைவான எண்ணிக்கையைக் காட்டி தொழிற்சாலை சட்ட வரம்பிற்குள் வராமல் இந்த தொழிற்சாலைகள் பார்த்துக்கொள்கின்றன. இதுவரை வெறும் ஒரு டஜன் ஆலைகளுக்கு மட்டுமே எங்களால் நோட்டீஸ் அனுப்ப முடிந்தது. பணியாளர் பற்றாக்குறையால் எங்களால் ஆவண செய்ய முடியவில்லை”, என சென்னை மாகாணத்தின் தொழிற்சாலைகளுக்கான தலைமை கண்காணிப்பாளர் ராயல் கமிஷனிடம் (1929) அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.

1931 கணக்கெடுப்பில் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையான 15.5 கோடி என்பது, 1) ஊதியம் வாங்கிய தொழிலாளர்கள் மற்றும் 2) ‘உழைப்பைச் செலுத்திய சார்ந்திருந்தவர்களை’ (Working dependants) உள்ளடக்கியது. ஒட்டுமொத்த தொழிலாளர்களில் ஆண்கள் தோராயமாக 10.5 கோடி. பெண்கள் கிட்டத்தட்ட 5 கோடி. ‘உழைப்பைச் செலுத்திய சார்ந்திருந்தவர்களில்’ பெண்கள் மிக அதிகம். ஊதிய உழைப்பில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஆண்களைக் காட்டிலும் பெண்களில் மிகக் குறைவு. அதுவே, முறைப்படுத்தப்படாத, ஆபத்தான பணிகள் என வரும்போது ஆண் தொழிலாளர்களைக் காட்டிலும், பெண் தொழிலாளர்களும், குழந்தைகளும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை தலைமை கண்காணிப்பாளர் கூற்றில் இருந்து உணர்கிறோம்.

சுரண்டலில் பெரும் சுரண்டல்

இந்திய சமூகத்தில், ‘பெண்களின் வீட்டு உழைப்பை நம்பித்தான் குடும்ப உறுப்பினர்களின் இருத்தல்’ என்ற நிலையில், பெண்கள் வீட்டுவேலைகளில் பெரும்பாலும் மூழ்கியிருந்தார்கள். மூழ்கடிக்கப்பட்டார்கள். வீட்டுவேலையைத் தாண்டி குடும்பம் ஈடுபட்ட விவசாயம், கைவினை உற்பத்தியிலும் அவர்கள் பெருமளவில் பங்கெடுத்தார்கள். கோமான்கள், சீமான்கள் உள்ளிட்ட ஒரு சில உழைக்காத வர்க்கங்களைத் தவிர, அனைத்து உழைக்கும் வர்க்கங்களிலும் பெண்கள் வாழ்வாதார உற்பத்தியில் ஈடுபட்டார்கள். குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கான உற்பத்தியில் இவர்கள் ஈடுபட்டவர்கள்; ஆனால், அதற்காக ஊதிய வடிவில் பலன் பெறாதவர்களாக இருந்தார்கள்/உற்பத்திப் பொருட்களின் சந்தையாக்கலில் பங்கேற்க முடியாதவர்களாக இருந்தார்கள். இப்படிப்பட்ட உழைப்பாளிகளைத் தான் சமூகம் ‘சார்ந்திருந்தவர்’கள் என்றது. 1931-மக்கள்தொகை கணக்கெடுப்பு, ‘உழைப்பைச் செலுத்திய சார்ந்திருந்தவர்கள்’ என்று குறிப்பிட்டது.

ஒட்டுமொத்த 15.5 கோடி உழைப்பாளர்களில், ‘உழைப்பைச் செலுத்திய சார்ந்திருந்தவர்’களையும் உள்ளடக்கிய பெண் உழைப்பாளர்கள் எண்ணிக்கை 5 கோடி என்பது மிகக் குறைவான மதிப்பீடாகத்தான் தெரிகிறது. எவ்வளவு உழைத்தாலும், பெண்களை ‘சும்மா இருப்பவர்கள்’ என்று காலங்காலமாக அழைக்கும் சமூகம் அல்லவா? எனவே, வாழ்வாதாரத்துக்கான ‘உழைப்பைச் செலுத்திய சார்ந்திருந்தவர்கள்’ எண்ணிக்கையில் பெண்களின் பங்கேற்பு முழுமையாக பதிவாகி இருக்காது என்று கூற முடியும்.

சமமான அளவில் பணிசெய்தாலும், கூடுதலாக பணிசெய்தாலும், அவர்கள் முக்கிய உழைப்பாளிகள் இல்லை. இரண்டாந்தர உழைப்பாளிகள், அல்லது உதவியாளர்கள் என்ற நிலை மட்டுமே. அதனால், உழைப்பைச் செலுத்துவது பற்றிய கணக்கெடுப்பில் தங்கள் பங்களிப்பை பெண்களே குறைத்துக் கூறியிருக்க வாய்ப்பு அதிகம். எனினும், 5 கோடி என்ற எண்ணிக்கையும் 32 சதவிகித்தைத் தொடுகிறது. எனவே, மொத்த உழைப்பாளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ‘அங்கீகரிக்கப்பட்ட’ உழைப்பாளிகளாகப் பெண்கள் இருந்தார்கள் எனலாம். மொத்தமாக அன்றைக்கு 1000 தொழிலாளர்களில், பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 317, ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 683 என்று 1931 கணக்கெடுப்பு சொல்கிறது.

சில தொழில்களில் ஆண்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் ஏறத்தாழ சமமாக இருந்தன. தேயிலை தோட்டப் பணிகளில் 456 பெண் தொழிலாளர்களுக்கு 543 ஆண் தொழிலாளர்கள் பணியாற்றினார்கள். அன்றைக்கு நில உடைமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களை உள்ளடக்கிய 1000 சாகுபடியாளர்களுக்கு, 407 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த விவசாயக் கூலித்தொழிலாளர்களில் 457 பெண் தொழிலாளர்களுக்கு, 543 ஆண் தொழிலாளர்கள் பணியாற்றினார்கள்.

சில தொழில்களில் ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. உதாரணத்திற்கு,  உணவு பதப்படுத்துதல் துறையில்

1) சக்கரை, மொலாசஸ் தயாரிப்பில் 1000 தொழிலாளர்களில் பெண் தொழிலாளர்கள் 527, ஆண் தொழிலாளர்கள் 473.

2) தானியங்களை உலர்த்தும் பணிகளில் 626 பெண் தொழிலாளர்களுக்கு வெறும் 374 ஆண் தொழிலாளர்கள் மட்டுமே இருந்தார்கள்.

3) அரிசி குத்துபவர்கள், உமி தூற்றுபவர்கள், மாவு அரவையில் 815 பெண் தொழிலாளர்களுக்கு, 185 ஆண் தொழிலாளர்கள் மட்டுமே.

ஆக, நச்சுப்பிடித்த வேலைகள், பெரிதாக வருமானம், மதிப்பு இல்லாத வேலைகளாக கருதப்பட்ட வேலைகளில் பெண் தொழிலாளர்களின் விகிதம் அதிகமாக இருந்தது. கீழ்ப்பணிந்த நிலையில் நெடுநேரம் வேலைபார்க்க வேண்டும் என்ற வேலைகள் பெண் தொழிலாளர்கள் அதிகம் இருந்தார்கள். இந்தத் தொழில்கள் ‘பெண்மயமாக்கப்பட்டிருந்தன.’ (Feminisation).

பெண் ஆலைத்தொழிலாளி

முறைசார் தொழிலாளர்களில், தொழிற்சாலை சட்டத்திற்குள் வந்த 15 ½ லட்சம் தொழிலாளர்கள் முதலாளித்துவ உற்பத்தி முறையின் நவீன தொழிற்சாலை வேலைவாய்ப்பிற்குள் வந்தவர்கள். இவர்களில் ஆண்கள் 81 சதவிகிதம், பெண்கள் 16 சதவிகிதம், மீதம் 3 சதவிகிதம் சிறுவர்கள் என்பதைப் பார்க்கும்போது, 1930 களில் ஏறத்தாழ 5 நவீன ஆலைத் தொழிலாளர்களில் ஒருவர் பெண் தொழிலாளர் என்ற நிலை இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழிருந்த காலத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சி பரிதாபகரமாக இருந்தது என்றாலும், நவீன உற்பத்தி முறையில் பெண் தொழிலாளர்கள் அன்றைக்குக் கணிசமாகவே இருந்தார்கள் என்பது தெளிவான உண்மை. எத்தகைய சமூகத்தில் இது நடந்தேறியது என்பது முக்கியமான விஷயம்.

14 வயதுக்குக் கீழான பெண் குழந்தைகளுக்கு, 18 வயதுக்குக் கீழான ஆண் குழந்தைகளுக்கு திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டமே 1929-ல் தான் கொண்டுவரப்பட்டது. 1911 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் ஆண்களில் கிட்டத்தட்ட பாதிபேரும், பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேரும் திருமணம் ஆனவர்களாக இருந்தார்கள் என்றது. (46% ஆண்கள், 48% பெண்கள் திருமணமானவர்கள்). திருமணம் ஆகாத மீதி பேரில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்றும், “அதிக வயதினரில், உடல் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், விபச்சாரம் செய்பவர்கள் (Prostitutes), ‘ஆடவரின் காமத்துணைவிகள்’ (Concubines), மதத்துறவிகள் (Religious devotees) தவிர திருமணம் ஆகாதவர்களே கிடையாது” என்றும் இந்த அறிக்கை கூறியது. ஆக, ‘ஒட்டுமொத்தமாக திருமணம் என்பது கட்டாயம்’ என்பதும், அதுவும், ‘குழந்தைப் பருவத்திலேயே திருமணம் முடிக்க வேண்டும்’ என்பதும், ஏறத்தாழ இந்திய சமூகத்தின் விதியாகவே அன்றைக்கு இருந்துள்ளது என்பதை உணர முடியும்.

பெரும்பாலான சமூகங்களில் நிகழ்ந்த குழந்தைத் திருமணம், விதவை மறுமணத்திற்கு இருந்த தடை, பெண்களின் வெளிநடமாட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்- இவை எல்லாம் அன்றைய இந்திய சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் எந்தளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கான அளவுகளாக இருந்தன. இத்தகைய சமூகத்தில் பெண்கள் வீட்டைத் தாண்டி, கிராமத்தைத் தாண்டி, தனிநபர்களாக வெளிவேலைக்கு வரத் தொடங்கியது என்பது இந்தியாவைப் பொறுத்தவரை மிக முக்கியமான முன்னேற்றம்.

புரட்சிதான்ஆனால், போதிய அளவில் இல்லை

இந்த முன்னேற்றம் முதலாளித்துவ முறையின் லாப நோக்கினால் விளைந்தது என்றாலும், நடந்த மாற்றம் அன்றைக்குப் பெண்களுடைய வாழ்க்கையிலும் சரி, சமூகத்தின் வளர்ச்சியிலும் சரி, புரட்சிகரமானது. அதேபோல, இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் இருந்தே முதலில் பெண்கள் வெளிவாய்ப்பிற்குள் நுழைந்தார்கள் என்றாலும், சாதிய, மதவாத, ஆணாதிக்க கட்டமைப்பின் மீது விழுந்த அடிதான் பெண்களின் வெளிவேலைவாய்ப்பு. உண்மையில் இந்த மாற்றம் மளமளவென எல்லாப் பகுதிகளிலும், அனைத்து வர்க்கங்களிலும் நடந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நிகழவில்லை.

காரணம், முதலாளித்துவ முறை மேற்கு ஐரோப்பா மற்றும் பிற முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளில் வளர்ச்சியடைந்தது போல, இந்தியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி நடக்கவில்லை. ‘அந்த நாடுகளில் எல்லாம், முதலாளித்துவத்திற்கு முந்தைய கால சமுதாயத்தின் அமைப்பு, அன்று வளர்ந்துவந்த முதலாளித்துவ வர்க்கத்தால் முதலில் அழிக்கப்பட்டது; முந்தைய கால சமுதாயத்தின் அழிவின் மீதே அங்கெல்லாம் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது’.

‘முதலாளித்துவ சமூகத்தின் சுதந்திரமான வளர்ச்சிக்கு முதலாளித்துவத்திற்கு முந்தைய கால சமுதாய அமைப்பை நொறுக்கித் தள்ளக்கூடிய தாக்குதல்கள் அவசியமாக இருக்கின்றன. இந்தியாவிலோ முதலாளித்துவத்திற்கு முந்தைய கால சமுதாய அமைப்பின்மீது, அதை நொறுக்கித் தள்ளக்கூடிய தாக்குதல்களை இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கவாதிகளும் தொடுக்கவில்லை, அவர்களிடமிருந்து அதிகாரத்தை வாங்கிய இந்திய முதலாளி வர்க்கமும் தொடுக்கவில்லை’

“இந்தியாவில் முதலாளித்துவத்திற்கு முந்தைய கால சமுதாய அமைப்பின் மீது முதலாளித்துவ அமைப்பு மேலிருந்து திணிக்கப்பட்டது. எனவே, இன்றைய இந்திய சமுதாயம் என்பது, ஏகபோக முதலாளித்துவ ஆதிக்கத்துடன், சாதிய, வகுப்புவாத, பழங்குடிமக்கள் ஸ்தாபனங்கள் எல்லாம், நூதனமான முறையில் இணைந்து நிற்கும் ஒரு சமுதாயமாக இருக்கிறது” என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-டின் கட்சித்திட்டம் வரையறுக்கிறது.

ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுத்த தலைவர்களில் முன்னோடியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) -டை உருவாக்கிய நவரத்தின தலைவர்களில் ஒருவருமான தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், இந்தியாவில் முதலாளித்துவம் பழைய சமுதாயத்தின் மீது கட்டப்பட்ட விதத்தையும், இந்திய சமூகத்தின்மீது அது ஏற்படுத்திய தாக்கத்தையும், பின்வருமாறு விளக்குகிறார்:

‘இந்தியாவில் நவீன முதலாளித்துவம் தொடக்கத்தில் பிரிட்டிஷ் மேலாதிக்கவாதிகள், அடுத்ததாக தேசிய முதலாளிகளின் கருவியாக இருந்து, இந்தியாவின் சமூகப்-பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியது…’  ‘பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களின் குறுகிய சுயநலன்களுக்காகச் செயல்பட்டார்கள். என்றாலும், ‘இந்தியாவின் ஆன்மா’ என்று அழைக்கப்பட்டதன் வேரை அறுத்து, பல நூற்றாண்டுகள் பழமையான இந்திய சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களை அவர்கள் கொண்டு வந்தனர் என்ற உண்மையை மறுக்க முடியாது.’ இவ்வாறு இந்திய சமூகத்தில் முதலாளித்துவம் தொடங்கி வைத்த மாற்றத்தை சுட்டிக் காட்டினார் தோழர். இ.எம்.எஸ்.

இந்தியாவின் பழைய சமூகத்தின் மீது முதலாளித்துவ முறை கட்டியெழுப்பப்பட்ட காரணத்தையும், விதத்தையும் பின்வருமாறு விளக்குகிறார்:

‘பிரிட்டிஷ்காரர்கள் தாங்கள் அன்னிய ஆட்சியாளர்களாக இருந்த காரணத்தாலேயே இந்திய சமுதாயத்தில் ஒரு சில வர்க்கங்களையும், அடுக்குகளையும் அவர்கள் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இந்த வர்க்கங்களும் தங்களுடைய நலன்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அந்நிய சக்திகளின் உதவியை எதிர்பார்த்திருந்தவர்கள். பிரிட்டிஷாரால் தங்களுடைய அன்னிய ஆட்சிக்கு ஆதரவாக, இந்தியாவின் உழைக்கும் மக்கள் திரளையோ அல்லது வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தையோ அவர்களால் எதிர்பார்க்கவோ, சார்ந்திருக்கவோ முடியவில்லை.

எனவே, பிரிட்டிஷ் காலத்திற்கு முந்தைய பழைய ஆட்சிக்காலத்தின் பிரதிநிதிகளான- இளவரசர்கள், நிலப்பிரபுக்கள், பழைய, காலாவதியான சாதிய சமூகத்தின் புரோகிதர்கள் உள்ளிட்ட சக்திகள், மதத் தலைவர்கள், கிராம சமூகங்கள்/பழங்குடி சமூகங்களின் தலைவர்கள் ஆகியோருடைய ஆதரவை பிரிட்டிஷ் மேலாதிக்கவாதிகள் திரட்ட வேண்டி இருந்தது. எனவே, பழைய சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அடுக்குகளில் உள்ள அனைவருடனும் அவர்கள் சமரசம் செய்து கொண்டார்கள். சாதிய, வகுப்புவாத, பழங்குடி முதலிய உணர்வையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.’ என்று விளக்குகிறார்.

சாதியமைப்பு, ஆணாதிக்க அமைப்பு, மதப்பழமைவாத அமைப்பில் கட்டுண்டு கிடந்த மக்கள், ‘சுதந்திர’ தொழிலாளர்களாகப் பரிணமிப்பது, நவீன உற்பத்தி முறைக்குள் நுழைவது என்பது முற்போக்கான விஷயம். இந்தியாவில் முதலாளித்துவத்தால் இந்த மாற்றம் தொடங்கியது என்றாலும், பழைய சமுதாயத்தின் பிற்போக்கான அம்சங்களை முற்றாக அழித்து, புரட்சிகர மாற்றத்தை நோக்கி முதலாளித்துவம் நடைபோடத் தயாராக இல்லை.

எனவே, முதலாளித்துவப் பாதையில் இந்தியா வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும்கூட, ‘முதலாளித்துவக் கட்டத்திற்கு முந்தைய சமுதாயத்தின் வலுவான அம்சங்கள் பல, இன்னும் இந்திய சமுதாய அமைப்பிற்குள் இருந்து கொண்டிருக்கின்றன’. சாதியம், ஆணாதிக்கம், மத-ஆதிக்கம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்கின்றன என்பதை உணரலாம்.

சிறப்புநிலை தொழிலாளர்கள்

சரி, மீண்டும் பெண் தொழிலாளர்களின் நிலைக்கு வருவோம்.

பெண்கள் வேலைவாய்ப்பிற்குள் வரத் தொடங்கியதும், பெண் தொழிலாளர்கள் பற்றி அன்றைய சமூகத்திற்கும், ஆளும் வர்க்கத்திற்கும், அரசிற்கும் இருந்த கண்ணோட்டத்தை நாம் கவனிக்க வேண்டும்.  ‘வெளிவேலைக்கும் வர நேரிட்ட குடும்பப் பெண்கள்’ என்றும், ஒரு வகையான ‘சிறப்பு நிலைத் தொழிலாளர்கள்’ என்றும்தாம் பெண் தொழிலாளர்கள் பார்க்கப்பட்டார்கள். முழுமையான தொழிலாளர்களாக அன்றைக்கு அவர்கள் பார்க்கப்படவே இல்லை. இந்தப் பார்வையின் மூன்று மோசமான விளைவுகளைப் பார்க்கலாம்.

1) ‘வெளிவேலைக்கும் வந்த குடும்பப் பெண்கள்’ எனும்போது, வர்க்க சமூகதுக்கே உரிய பெண்களின் ‘அடிபணிந்த, கீழ்ப்படிந்த நிலை’யைப் பயன்படுத்தி பெண் தொழிலாளர்களை தொழிலாளர்களிலேயே மிக மோசமாக சுரண்ட முடியும் என்று முதலாளித்துவம் இறங்கியது.

2) பெண் தொழிலாளரின் ஊதியம், கூலி என்பது, ‘ஒரு தொழிலாளரின் ஊதியம்’ என்று பார்க்கப்படவில்லை. ‘குடும்பத்தின் கூடுதல் வருமானம்’ என்றுதான் பார்க்கப்பட்டது. கூடுதல் வருமானம் என்று கருதியபட்சத்தில், ‘பெண் தொழிலாளர்களுக்குக் குறைவான கூலி கொடுத்தால் போதும்!’ என்ற சிந்தனை வலுப்பெற்றது. ஆண் தொழிலாளிகளின் ஊதியம் குடும்பத்தின் பிரதான வருமானமாகப் பார்க்கப்பட்டது என்றாலும், அது முதலாவதாக, ‘ஆண் தொழிலாளர்களுடைய கூலி’ என்று பார்க்கப்பட்டது என்பதையும் உணர வேண்டும்.

3) பெண் தொழிலாளர்களை முழுமையான தொழிலாளர்களாகப் பார்க்காததன் விளைவுகளில் ஒன்றுதான், ‘சீர்திருத்தம்’ என வரும்போது பெண் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பது.

1881-ல் முதல் தொழிற்சாலை சட்டம் வந்ததில் இருந்து, அரசின், சமூகத்தின் அதிகபட்ச கவனம் பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் மீதே இருந்தது. குழந்தைத் தொழிலாளர் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே நாகரிக சமூகத்தின் அணுகுமுறையாக இருக்க முடியும். ஆனால், உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு படிப்படியாகத்தான் நடக்கத் தொடங்கியது.

பெண் தொழிலாளர்கள் என்பவர்கள் முழுமையான மனிதர்கள். முழுமையான தொழிலாளர்கள். வயதுவந்த தொழிலாளர்களின் வேலையுரிமை என்பது அனைத்து வயதுவந்த மனிதர்களுக்கும் பொருந்தும். எனவே, வயதுவந்த பெண் தொழிலாளர்களுக்கும் பொருந்தும். எனவே, பெண் தொழிலாளர்களின் பிரசவ காலம் என்கிறபோது, ‘ஒரு தொழிலாளிக்கு வேலைவாய்ப்பு எவ்வளவு அவசியம்?’ என்ற அடிப்படையில், முதலில் அவர்களுடைய பணிக்கு உத்தரவாதம் இருந்தாக வேண்டும். அவர்களுக்குத் தேவையான பேறுகால விடுப்பும், விடுப்பு கால ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இது பெண் தொழிலாளர்களுக்கு தரப்படுகிற சலுகை அல்ல. தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்குரிய உரிமை. இதை உறுதிசெய்ய வேண்டியது மூலதனத்தின், அரசின் பொறுப்பு. மூலதனம் தட்டிக் கழித்தாலும், அரசு இந்த உரிமையை உறுதிப்படுத்தியாக வேண்டும்.

ஆனால், பெண் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாத்து, மேம்படுத்தும் எண்ணம் முதலாளித்துவ முறைக்கும் கிடையாது. முதலாளித்துவ முறையின் நலனைப் பிரதானமாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ அரசுகளுக்கும் அன்றைக்குக் கிடையாது. இதுவரையிலும் இந்த உணர்வு இந்த இருதரப்பினருக்கும் கிடையாதுதானே. இந்நிலையில், ‘பெண்ணடிமைத்தனம் புரையோடிப் போயிருக்கும் இந்திய சமூகத்தில், பெண்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு, குடும்பம், கிராம சூழலைக் கடந்த நவீன வேலைவாய்ப்பு என்பது எவ்வளவு அவசியம்?’ -என்கிற அவசியமான, மேம்பட்ட புரிதல் இவர்களுக்கு எப்படி இருக்கும்? சுத்தமாகக் கிடையாது. எனவே, ‘மகப்பேறு, குழந்தை பரிமரிப்பை ஒட்டிய தேவைகளைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும்’ என்று சொன்னவுடன், அதையே சாக்காக வைத்து பெண் தொழிலாளர்களுக்கே முழுக்கு போடும் நிலையைத் தான் இவர்கள் கொண்டு வந்தார்கள்.

திடீர் பாசம் ஏன்?

உண்மையில், 1919 வாஷிங்டன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாட்டிற்குப் பிறகு முதலாளித்துவ அரசுகள் பரவலாக பேசத் தொடங்கிய விஷயங்கள்தான், மகப்பேறு, குழந்தை பராமரிப்பகம் போன்றவை. திடீரென லீக் ஆஃப் நேஷன்ஸ், சர்வதேத தொழிலாளர் அமைப்பு எல்லாம் ஏன் தொழிலாளர்கள் நலன் பற்றிப் பேசத் தொடங்கின என்பதே தனி அத்தியாயத்திற்கான கதை. 1908 ஆம் ஆண்டின் இந்திய தொழிற்சாலை தொழிலாளர் கமிஷன் உதிர்த்த வார்த்தைகள் எவ்வளவு இதயமற்றவை என ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம் (அத்தியாயம் 12). அதுவே 1929-1931 ராயல் கமிஷன் துறை வாரியாக, பகுதி வாரியாக, இந்தியத் தொழிலாளர்களின் துயரங்களைப் பதிவு செய்தததையும் பார்க்கிறோம்.

1908 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறை, ஏன் 1929 வாக்கில் மாறி இருந்தது? திடீரென இவர்களுக்குத் தொழிலாளர்கள் மேல் ஏன் பாசம் பொங்கியது? 1919 வாஷிங்டன் மாநாடு நடந்த காலகட்டத்தை நாம் கவனிக்க வேண்டும். யுகப் புரட்சி நடந்து முடிந்திருந்த காலம் அது. மனிதரை மனிதர் சுரண்டும் கொடூரத்தை ஒழிக்க வேண்டும் என்ற லட்சியத்தில், ரஷ்ய பாட்டாளி வர்க்கம் தோழர் லெனின் தலைமையில் சோஷலிச புரட்சியை நிகழ்த்தி, உலகின் முதல் சோஷலிச அரசை நிறுவிய காலம்.

‘எங்கே பாட்டாளி வர்க்கம் விழிப்படைந்து, முதலாளித்துவ முறைக்கு வேட்டு வைத்துவிடுமோ! இதை அனுமதிக்கக்கூடாது!’ என்ற பதட்டமும், நெருக்கடியும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஏற்பட்டது. அதனால், ‘தொழிலாளர் உரிமைகளில், அவர்களுக்கான நலத்திட்டங்களில் கவனம் செலுத்திட வேண்டும்’ என்ற நிர்பந்தம் அன்றைக்கு முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கும், அவற்றின் அரசுகளுக்கும் ஏற்பட்டது. அதன் விளைவே தொழிலாளர்களையும், சமூகத்தையும் சமாதானப்படுத்தும் ஒரு சில ‘சீர்திருத்த’ நடவடிக்கைகள். அதனால்தான், 1908 ஆம் ஆண்டு கமிஷனுக்கு இருந்த தொனி 1929 காலத்தில் மாறி, மென்மையானது.

அப்படித்தான், இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் மகப்பேறு தொடர்பான தேவைகள் குறித்த கோரிக்கைகள் 1919 வாக்கில் அரசின் கவனத்தைத் தொட்டன. இந்தக் கோரிக்ககைகளை சீர்திருத்தவாதிகள் தொடக்ககாலத்தில் இருந்தே முன்வைத்தார்கள் என்றாலும், அரசு காதுகொடுக்கத் தொடங்கியது 1919க்குப் பிறகுதான்.

1929-ல் பம்பாய் மாகாணம், 1930 -ல் மத்திய மாகாணங்கள் மற்றும் பேரார் பகுதி, 1934-ல் சென்னை மாகாணம், 1939 ல் வங்க மாகாணத்தில் மகப்பேறு பலன் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பிட்ட காலம் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் தொழிலாளர்களுக்கு, அவர்களுடைய பிரசவத்திற்கு முன்பும், பின்பும் குறிப்பிட்ட வாரங்கள் விடுப்பு தர வேண்டும், அவர்கள் வேலைக்கு செல்லாத நாட்களில், ஒரு நாளுக்கு இவ்வளவு அணா என்கிற விகிதத்தில் மாதத்தொகையை நிர்வாகம் அளிக்க வேண்டும் என்ற விதிகளை இந்த சட்டங்கள் கொண்டுவந்தன. சென்னை மாகாணத்தில் ஒரு நாளுக்கு எட்டணா வீதம் 7 வாரத்திற்கு (பிரசவத்திற்கு முன்பு 3 வாரங்கள், பின்பு 4 வாரங்கள்) வழங்கப்பட வேண்டும் என்பது தொடக்க கால விதி.

உரிமை கிடையாதா?

பம்பாய் மாகாண சட்டசபையில் 1928 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகப்பேறு பலன் மசோதா குறித்த விவாதங்களில் அன்றைய சமூகம் பெண் தொழிலாளர்கள் குறித்து கொண்டிருந்த பார்வை வெளிப்படுகிறது. பெண் தொழிலாளர்களுக்கு பேறுகாலப் ‘பலன்’கள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதிநிதிகள் எல்லோருமே, ‘நாட்டின் நலனை முன்னிட்டு, எதிர்காலத் தலைமுறையினரின் நலனை முன்னிட்டு பெண்களுக்கு பேறுகாலப் பலன்கள் தரப்பட வேண்டும்’ என்ற வாதத்தையே முன்வைத்தார்கள். ‘இந்த ஏற்பாடு பெண் தொழிலாளர்களின் உரிமை’ என்ற கருத்து அந்த விவாதங்களில் வெளிப்படவே இல்லை.

ஒரு சில வாதங்களைப் பார்ப்போம்:

‘ஒரு தாய் தன்னுடைய புனிதக் கடமையான தாய்மையை செவ்வனே நிறைவேற்ற அவர் முதலில் முறையாக நடத்தப்பட வேண்டும்’

‘அவமானகரமான குழந்தை மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இது அவசியம்’

‘ஏழைத் தாயின் நலனை முன்னிறுத்தி அல்ல, நாட்டின் நலனை முன்னிறுத்தி இந்த இக்கட்டான நிலையில் பெண்களை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும்’

‘நம்முடைய தாய்மார்களுக்கு, விசுவாசமற்ற, துரோகம் இழைக்கிற மகன்களாக நாம் இருக்கலாமா?’

‘நம்முடைய பிரகாசமான எதிர்காலமாக இருக்கிற அடுத்த தலைமுறையினர் நமக்கு முக்கியம் இல்லையா?’

‘தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரசவத்திற்கு முந்தைய காலத்திலும், அதற்குப் பின்னும் தாய்க்கு ஒய்வு வழங்கப்பட வேண்டும்’

இப்படி, இந்திய தேசத்தின் தாய்மார்கள்’, ‘அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் புனிதப் பணியை செய்பவர்கள்’ என்ற கண்ணோட்டத்தில்தான் அன்றைக்கு பெண் தொழிலாளர்கள் பார்க்கப்பட்டார்கள். ‘பெண்களின் விசேஷ குறைபாடுளுக்கு நஷ்டஈடு என்றுதான் இந்த மசோதா கருதப்பட்டது, உரிமையாகப் பார்க்கப்படவில்லை’ என்கிறார், ஆய்வாளர் அம்ரிதா சாச்சி.

ஆக, அன்றைக்குப் பெண் தொழிலாளர்கள் வெறும் பெண்களாகத்தான் பார்க்கப்பட்டார்கள் எனலாம். பெரியார் மொழியில் சொல்வதென்றால், ‘வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாகப்’ பார்க்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் காலங்காலமாக வர்க்க சமூகங்களுக்கு பெண்கள் குறித்து இருந்துவந்த பார்வை. சீர்திருத்தம், பாதுகாப்பு என்று சொல்லத் தொடங்கியதும், ஒப்பீட்டளவில் முற்போக்கான முதலாளித்துவ சமூகத்திலும் இந்தக் கண்ணோட்டமே மேலெழுந்தது.

‘ஆரம்பகால சீர்திருத்தவாதிகளின் கண்ணோட்டம் இப்படித்தானே இருந்திருக்கும்’ என்று கருதலாம். ஆனால், ‘பெண்களின் முதல் கடமை குழந்தைகளைப் பெற்று, வளர்ப்பதே’ என்ற இந்த சிந்தனை, இன்றைக்கு வரை நவீன இந்தியாவின் பெண்களை வெளிவேலைவாய்ப்பிற்குள் வரவிடாமல் தடுத்துத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

உண்மையில், இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில், ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் மக்கள் காலங்காலமாக உழைக்க வேண்டியிருந்தது. நவீன முதலாளித்துவ சமுகத்தில், சீர்திருத்தத்தை முன்வைத்த திருவாளர்கள் பெரும்பாலும் மத்திய வர்க்கப் பார்வையான ‘பெண்ணின் இடம் வீடு’ என்ற கருத்தோட்டத்தைக் கொண்டவர்கள். ஏதுமற்ற வர்க்கத்தின் மேல், ‘ஆண்தான் சம்பாதிக்க வேண்டும், பெண் வீட்டில் இருக்க வேண்டும்’ என்ற இந்தக் கருத்தோட்டத்தை திணித்தார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த விவாத்தில் பெண் தொழிலாளர்கள் பிரசவத்திற்கு யார் உதவ வேண்டும்? பிறக்கப் போகும் குழந்தையின் தந்தையா? பெண்ணைப் பணியமர்த்தும் நிர்வாகமா? அரசா? என்ற மூன்று கேள்விகள் முன்னுக்கு வந்தன. டாக்டர். அம்பேத்கர் பம்பாய் மாகாண சட்டமன்ற உறுப்பினராக இந்த விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். “இந்த சுமைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் எனும்போது, மக்கள் நலனைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்பதால், இது அரசாங்கத்தின் பொறுப்பு” என்று குறிப்பிட்டார். கடைசியில் நிர்வாகங்களுக்குத் தான் பொறுப்பு என்று பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்டது.

விளைவு என்ன?

1911 1924க்கு இடைப்பட்ட காலத்தில் பம்பாயில் மொத்த தொழிலாளர் படையில் பெண் தொழிலாளர்கள் ஐந்தில் ஒரு பங்கு வகித்தனர்; 1925-1931-ல் கால் பங்கில் இருந்து, ஐந்தில் ஒரு பங்கு வரை இருந்தார்கள். 1930க்குப் பிறகு 1947 வரை தொடர்ச்சியாகப் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. மொத்த தொழிலாளர்களில் பத்தில் ஒரு பங்காக சுருங்கிப் போனார்கள்” என்று ஆய்வாளர்கள் பதிவுசெய்தார்கள். இதற்கெல்லாம் காரணம், புதிதாகக் கொண்டுவரப்பட்ட, சீர்திருத்த, பாதுகாப்பு சட்டங்கள்தான் என்று அரசு ஆவணங்கள் சுட்டிக்காட்டின.

1934 ஆம் ஆண்டின் தொழிற்சாலை அறிக்கை, “1920க்கு பிறகு பெண் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகக் குறைவான விகிதத்திற்கு சென்றது இப்போதுதான். மகப்பேறு பலன்கள் சட்டம் அமல்படுத்தப்படுவதும், ஆண் தொழிலாளர்கள் குறைவான கூலிக்குக் கிடைப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பெண்கள் இரவுப்பணிகளில் பணியமர்த்தப்படக் கூடாது என்ற விதியும் பெண்களின் விகிதம் குறைந்ததற்கு இன்னொரு காரணமாக இருக்கலாம்” என்றது. மொத்தத்தில் சீர்திருத்தங்கள் என்று பேசினால், பெண்களின் சீட்டு கிழிக்கப்படும் என்பதுதான் அன்று நிலைமை. இன்றும் அதுதான் நிலைமை. இன்றைய இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் நிலையை அடுத்தடுத்து அலசுவோம்.

ஆதாரங்கள்: Census of India, 1931 Report, Vol. 1. India. Part 1, Census of India, 1911 Report, Vol 1. India. Part 1

Report of the Royal Commission on Labour in India (1929-1931), Vol VII. Madras presidency Part 1, Written Evidence.

Party Programme, CPIM, 1964, 2000- Adopted at the Seventh Congress of the Communist Party of India held at Calcutta, October 31 to November 7, 1964 * Updated at the Special Conference of the Communist Party of India (Marxist) held at Thiruvananthapuram, October 20-23, 2000

  1. M. S. Namboodiripad, Once Again on Castes and Classes, Social Scientist, Vol. 9, No. 12 (Dec. 1981)

Samita Sen, Gender and Class: Women in Indian Industry, 1890-1990, 2008

Implementation of Maternity Benefit Act, Shashi Bala, V.V. Giri National Labour Institute, 2012

Dr. Babasaheb Ambedkar, Writings and Speeches, Vol. 2., Govt. of Maharashtra, Dr. Ambedkar Foundation, 2014 Reprint Edition

Who Is Responsible for Maternity Benefit: State, Capital, or Husband? Bombay Assembly Debates on Maternity Benefit Bill, 1929, Amrita Chhachhi, Economic and Political Weekly, Vol. 33, No. 22 (May 30 – Jun. 5, 1998)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *