thodar 26: samakala sutrusuzhal savaalgal- munaivar.p.rammanohar தொடர் 26: சமகால சுற்றுசூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்thodar 26: samakala sutrusuzhal savaalgal- munaivar.p.rammanohar தொடர் 26: சமகால சுற்றுசூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்

ஆபத்தான நிலையில் அரிய ஆமைகள்!

ஆமைகள் விலங்குகள் பற்றிய பல தவறான எண்ணங்களை நம் மனித இனம், உருவாக்கியுள்ளது.குறிப்பாக, இந்தியாவில், தமிழ் நாட்டிலும், சொற்றோடர் ஆக, பழ மொழியாக, அந்த ஊர்வன(REPTILES )விலங்கினை பற்றிய தாழ்வான கருத்துக்களை பாரம்பரியமாக ஏற்படுத்தியுள்ள நிலை வருந்தத் தக்கது. ஆமை புகுந்த வீடு, முன்னேற்றம் அடையாது என்ற மூட நம்பிக்கை எண்ணம் மக்கள் மனதில் பதிந்து ஒரு குறிப்பிட்ட விலங்கினை வெறுக்க வாய்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. எனினும் இத்தகைய நிலை, நாம் நம் உயிரின வளத்தினையும், அவற்றை தேவையற்ற ஒன்றாக கருதி, இயற்கை அறிவியல் உண்மைகளை இயல்பாக ஒதுக்கிவிடுவது வேதனை!!

இந்நிலையில் அரிய ஆலிவ் ரிட்லி (OLIVE RIDLEY )கடல் ஆமைகள் பருவ கால மாற்றம் காரணமாக அழிகின்றன என்பது பற்றி நாம் சற்று அறிந்து கொள்வோம்! இந்திய வங்காள விரிகுடா கடற்கரை பகுதியில், ஒடிசா மாநிலத்தில் ருஷி கல்யாண் கடற்கரை வாழிடத்தில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகம் கூடி இனப் பெருக்கம் செய்கின்றன. சமீபத்தில், அதிக மழை வெள்ளம் காரணம் ஆக இங்கு ஆமைகளின் கூடு கட்டும் கடற்கரை பகுதி பாதிக்கப் பட்டுள்ளது.25%முட்டைகள் முற்றிலும் நாசம் ஆகிவிட்டது. இது பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் தொண்டு நிறுவனம் இயக்குனர் சுமந்த் பிந்து மாதவ் என்பவர் கிட்ட தட்ட 1,00000 ஆமை கூடு பகுதி அழிந்து போனதாக கூறுகிறார்.

உலகின் மற்ற பகுதி கோஸ்ட்டா ரிக்கா, மெக்ஸிக்கோ ஆகிய இடங்களிலும் இந்நிலை இருப்பதாக தெரிகிறது. மழை வெள்ளத்தில், கடற்கரை மண் அதிக அளவில் பொதிந்து முட்டைகள் மண்ணுக்கு அடியில் சிக்கிக்கொண்டு, அவை பொரிந்தாலும்,அவற்றிலிருந்து வெளியேறும் இளம் ஆமை குஞ்சுகள் மண்ணிலிருந்து வெளியேறாமல் இறந்து போகின்றன. டேராடூன் நகரில் உள்ள இந்திய வன விலங்கு கல்வி நிலைய (Wildlife Institute of India ) ஆய்வு மேற்கொள்ளும் சுரேஷ் குமார், ஆமை இனங்கள் அழிய அதிக வெப்பநிலை காரணம் என்கிறார். குறிப்பாக அவற்றின்முட்டைகள் பாதிப்பு அடைய உலக அளவில் வெப்பநிலை உயர்வு முக்கிய பங்கு வகிப்பதாகும். ஆம்!29°C வெப்பநிலைக்குள் முட்டைகள் பொரிந்து வெளியேறும் ஆமைகளின் குஞ்சுகள் அனைத்தும் ஆண் பாலினம் சார்ந்து இருப்பதாக தெரிகிறது. அதே சமயம் 29°C வெப்பநிலைக்கு மேல் உயர்வு நிலையில் குஞ்சுகள் அனைத்தும் பெண் பால் ஆமைகள் ஆக பிறப்பதாக ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது. எனவே பருவ நிலை மாற்றம் பாதிப்பு மூலம் வெப்பநிலை சூழலில் மாறும்போது, கடல் ஆமை இனங்களில் பால் இன விகிதம் மாறு பாடு அடைவது அவ்வினத்தின் எதிர் கால தலைமுறைகளை பாதிக்க நிச்சயம் வாய்ப்புகள் உள்ளது.

பெருங்கடல்களில் வாழும் ஏழு ஆமை சிற்றினங்களில் ஒன்றுதான் ஆலிவ் ரிட்லி ஆமை ஆகும்.இளம் பசுமை நிறம் கொண்ட இந்த உயிரினம், பசிபிக், அடலான்டிக், இந்து மகா பெருங்கடல் iபகுதிகளில் வசிக்கிறது. கடலின் இயற்கை சூழலுக்கு இவை ஏராளமான நன்மைகள் செய்து வருகின்றன. ஆல்கே போன்ற பாசியினங்கள் தம் ஓட்டின் மீது வளர உதவுகின்றன. அதனால் பவளப்பாறை உயிரினங்கள் அதிக வளர்ச்சி பெற தூண்டுகின்றன.

முதுகெலும்பு அற்ற சிறு மிதவை உயிர்கள், மெல்லுடலிகளுக்கும் உணவு பெற ஆமைகள் மறைமுகமாக பணி செய்கின்றன. 2012 ஆம் ஆண்டு ஆய்வுப்படி, 21 ஆம் நூற்றாண்டில், ஆலீவ் ஆமைகள் கொஸ்டேரிக்கா நாட்டில் வெப்பம் அதிகம் ஆகிவிட்ட காரணத்தினால் 7% குறைந்துவிட்டது. பருவ கால மாற்றம், வெப்பநிலை உயர்வு, கடல் மட்ட உயர்வினால் மட்டும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் 2050 ஆம் ஆண்டில் முற்றிலும் அழிந்து விடும் என்ற அச்சம் உள்ளது. 2018 ஆம் ஆண்டு கொஸ்ட்டாரிக்கா நாட்டில் 35°C வெப்பம் உயர்வு காரணமாக எந்த ஒரு முட்டையிலிருந்தும் ஆமை குஞ்சுகள் வெளிவரவில்லை.

கடல் மட்ட உயர்வு அடைவது, புவி வெப்பமயம் ஆகியதால் வந்த விளைவு ஆகும். அதனால் ஆமைகளின் கடற்கரை வாழிட நிலை மாற்றம் ஏற்பட்டு கூடு கட்டுதல், இனப்பெருக்க செயல்பாடுகள் தடைகள் ஏற்படுகின்றன. 2050 ஆம் ஆண்டில் முழுமையாக ஆமைகள் கூடு கட்டுமிடங்கள் , கடல் மட்ட உயர்வினால் அழிந்து விடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பன்னாட்டு அளவில் விஞ்ஞானி குழு ஒன்று ஆஸ்திரேலியா, பிரேசில், கோஸ்ட்டாரிக்கா, கியூபா, டோமினிக்கன் ரிபப்ளிக்,இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் கடற்கரை அமைப்பு, சாய்வு சரிவு நிலை பற்றி ஆய்வு செய்தனர். ஆமைகள் கடல் வாழிடம், எவ்வாறு கடல் மட்ட உயர்வு, அரிப்பு ஆகியவற்றால் பாதித்து வருவது பற்றி (DIGITAL ELEVATION MODEL ) சாய்வு மாதிரி முறை வழியில் ஆராய்ந்து வந்தனர். மேலும் LIGHT DETECTION LIDAR முறையும் பின்பற்றி வந்த நிலையில், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி கழகம் (INDIAN INSTITUTE OF SCIENCE )விஞ்ஞானி கார்த்திக் சங்கர் என்பவர் கூற்றுப் படி கடல் மட்ட உயர்வு பாதிப்புகள் ஒரு பருவ நிலை மாற்றம் விளைவு என்பது மட்டும் அல்லாமல், குறிப்பிட்ட கடல் உயிரினம் பாதித்தல் என்பது தாண்டி அனைத்து கடல் உயிரினங்கள், அவற்றின் வாழிடம் பாதிப்புக்கள் பற்றியும் ஆய்வு தொடர்ந்து தேவைப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, நமக்கு முன்னரே, இந்த பூவுலகில் வசித்து வரும் ஆமைகள் பற்றிய முழுமையான புரிதல் வேண்டும். கடலின் இயற்கை உணவு சங்கிலி, மற்றும் உணவு வலை பற்றிய போதுமான அறிவு சார் தகவல்கள் மக்கள் மத்தியிலும், மீனவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு செய்யும் நிலை அரசு ஏற்படுத்தி வரவேண்டும். கடல் ஆமை இனப்பெருக்க காலத்தில் அவற்றின் கூடுகள், வாழிடங்களில் தொந்தரவு மனிதர்களால் வராமல் காத்திடுவது அவசியம் ஆகும்.கடல் வளத்தின் மேம்பாடு, இந்த ஆமைகள் மூலம் உள்ளது, என்பதை பலரும் அறியாமல்அவற்றை வேட்டையாடுதல் தவிர்க்க, உரிய பாதுகாப்பு நடவடிக்கை உறுதி செய்யும் நிலை தொடர்ந்து இருப்பது அவசியம் ஆகும்.

பொதுவாக ஊர்வன வகை சிற்றின விலங்குகள், மக்களால் எப்போதும் விரும்பப் படாதவை ஆகும். ஆனாலும் அவற்றை தோற்றத்தின், அடிப்படையில் எண்ணாமல், அவற்றின் சூழல் முக்கியத்துவம் பற்றியறிந்து அவற்றை பாதுகாக்கும் விழிப்புணர்வு பெறவும் வேண்டும். பருவ கால மாற்றங்கள், கடல் மட்ட உயர்வு, வேட்டை போன்ற எதிர்மறை நிகழ்வுகள் கடல் ஆமைகள் முழுமையான அழிவினை விரைவில் கொண்டு வருவதற்கு முன் ஆபத்து அறிந்து இந்த சுற்று சூழல் சவாலினை எதிர்கொண்டு வெற்றி பெற முயற்சி செய்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *