Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.



’பெரியார்’ என்ற ஒரு மனிதர் நம்மிடமிருந்து பௌதீகமாய் மறைந்துபோய் நாற்பத்தியாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்; ”தந்தை பெரியார்” என்ற இந்தச் சொல் அளவிற்கு இந்த நூற்றாண்டின் தமிழ்நில அரசியல்தளத்தில் அதிகம் வசையிடப்பட்ட, கொண்டாடப்பட்ட ஒன்று இருக்கமுடியாது. ‘பெரியார்’ என்று அரசியல் மிகைப்படுத்தும் ஈ.வெ.ராமசாமி-யின் பேச்சுக்களும் எழுத்துக்களும் வெற்றுக்கூப்பாடுகள் எந்தவொரு சிந்தனையுமற்ற அற்பங்கள். பாா்ப்பனர், பார்ப்பனியம் என குறிப்பிட்டு, வெறுப்பரசியலை உருவாக்கி வெறும் பரப்புரையாகவே வீணாகிப்போனது அவரது வாழ்வு என்ற ஒரு தரப்பின் மேற்புரிதலில், வெறும் பரப்புரையாக அரசியல் தளத்தில் மட்டுமே, இன்று விவாதிக்கப்படும் பெரியாரை, அவரது சொற்களை; சிந்தனை தளத்திற்குள் உள்வாங்கி, இன்றைய தலைமுறைகள் எப்படி உரையாடத்துவங்குவது.

தன்மையில்; பெரியாரின் எழுத்துக்கள், சொற்கள் எதுவும் நுண் வாசிப்புத் தேடல் கொண்ட மனிதர்களுக்கானதல்ல. அது ஒரு பெருந்திரளை வாசிக்கச்சொல்லி, அதன் வழியாக சிந்தனைத்தளம் தாண்டிய சமூகச்செயல்பாடாக மாற வேண்டி பயன்விளைவு நோக்கியது. அந்தளவில், பெரியாரின் எழுத்துக்களும் சொற்களும் அவற்றின் மொழிபும், உணர்ச்சித்தளத்தில் செயல்படுவை. ஆங்கில அரசுடனான அத்தனை பொறுமையான உரையாடல்களிலும் இந்திய சமூகம் ஏமாற்றப்படுவதாய் உணர்ந்த காந்தி பேசிய ”வெள்ளையனே வெளியேறு; செய் அல்லது செத்துமடி” என்பதன்ன உணர்ச்சித்தளமது. அங்கு சிந்தனைத்தேடல் கொண்ட எவர்க்கும் தேடியடைய ஒன்றுமில்லை. எனில், எது பெரியாரை நோக்கி நம்மை செலுத்துகிறது.

மானுட வரலாற்றில் முதல்முறையாக, ஒரு மனிதன் தன்னளவில், தன் சமூகவெளிக்குள் தன் சுயத்தை உணர்ந்து கொள்ளாமல் இழிந்து கிடக்கும் நிலைமீட்சிக்கு ”சுயமரியாதை இயக்கம்” (Self Respect Movement) என ஒரு சமூக இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனையே, இந்திய நிலப்பரப்பிற்குள் அதுவரை, தத்துவார்த்த தளத்தில் மட்டும் பேசப்பட்டு வந்த தனிமனித ”சுயம்” (Self) என்ற ஓர் உணர்நிலையை; பெருந்திரள் மக்கள் வெளிக்குள் உரையாடும் நிலைக்கு கொண்டுவந்தது.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.இங்கு மனிதன் மட்டுமல்ல, எந்தவொரு உயிரும் அதனளவில் தன் சுயத்தை உணராமல் இருக்கையிலேயே சுரண்டப்படுகிறது. தம் சுயம் வெட்டப்படுகையில் ஒவ்வொரு தனிமனிதனும், விலங்கு நிலைகொண்டு, அடிமை ஊழியத்திற்கு தள்ளப்பட்டு சுரண்டப்படுவான். குட்டியாய் கிடக்கையில் காலில் அழுத்திய சங்கிலியில் தன் சிந்தனை வெட்டப்பட்ட யானை ஆயுள் முழுக்க தன் பலமெனும் சுயத்தை மறந்து அடிமையாய்க் கிடக்கும் நிலை.

இப்படியாக சகமனிதனை தன்பிறப்பின் அடிப்படையிலேயே சுயமிழக்கச்செய்வது சனாதன வர்ணாசிரமக் கட்டமைப்பு. இந்திய நிலப்பரப்பில் ஆன்மீகமாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் ’வர்ணாசிரமம்’; உண்மையில், ஓர் அரசியலதிகார கட்டமைப்புக் கோட்பாடு (Authoritarian Political Ideology). எந்தவொரு அதிகாரக்கட்டமைப்பு கோட்பாடும் தன்னளவில், ஒரு தத்துவார்த்த பின்புலத்தை உருவாக்கிக்கொள்ளாமல் நிற்கமுடியாது. ஹிட்லரின் நாசிசம் நின்ற ஆரிய மேட்டிமை பெருமிதம் போன்று, அனைத்து அதிகாரக்கட்டமைப்புக் கோட்பாடும் ஒரு தத்துவார்தத்தைத் தன் இருப்பிற்குக் கட்டமைத்துக்கொள்ளும்.
இந்தப்புரிதலில், வர்ணப்படிநிலை கட்டமைப்பில் தாழ்நிலையில், ஒரு மனிதனை தன்னிலையற்று சுயத்தை அழிக்கச்செய்யும் ஒரு தத்துவார்த்த புள்ளியிலும், அதே புள்ளியில் இந்த அதிகாரக்கட்டமைப்பின் உச்சத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் ஒரு மானுட உயிரின் இயல்சுயம் (Normal Self) மீறிய ஒரு பெருமிதச்சுயத்தை (Superior Self) கட்டமைத்துக் கொண்டிருப்பதிலுமான, இந்த இரு முரண் சுயங்களின் (Contradictive Selves) விளைவிலேயே, இங்கு வர்ணாசிரம் என்ற சமூகச் சுரண்டல் கட்டமைப்பு தாக்குப்பிடிக்கிறது என்பதை உணர்ந்ததில் பெரியார் இந்திய நிலப்பரப்பின் தனித்த சிந்தனையாளராகிறார்.

“ஒரு தீண்டத்தகாதவனாக இருந்து கொண்டு இந்த நாட்டின் அடையமுடியா அனைத்து உயரங்களையும் அடைந்தபின்னும் இந்திய நிலப்பரப்பின் சாதியக்கட்டமைப்பு, என்னை நடுக்கம் கொள்ளச்செய்கிறது. ஏனெனில் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து சுரண்டல் சமூக அமைப்புக்களும் ஒரு பௌதீகத்தன்மை கொண்டவை. இந்தியாவின் வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பு எந்த பௌதீக நிலையுமற்ற அரூப மனநிலையாக இருப்பது, அதை நெருங்கி உடைக்கமுடியா பயங்கரத்தன்மை கொண்டதாக இருக்கிறது” என்று தன் இறுதி நாட்களில் அம்பேத்கர் எழுதுகிறார்.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.ஆம், வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பின் அந்த அரூப வேர் மனநிலைகளில் ஒன்று, தன் சுயத்தை உணரவே முடியாமல் அமிழ்ந்து கிடக்கும் தாழ்வுணர்ச்சி மனநிலை (Inferior Self) மற்றது தன்னை அதியுன்னதமாக உணர்ந்து நிற்கும் மீயுணர்ச்சி மனநிலை (Imperious Self). இந்த மனநிலைகளை புரிந்துகொள்ளமுடியா அரூபங்கள் என அம்பேத்கர் அஞ்சுகிறார். இல்லை; அவை நெருங்கி உணர்ந்து அடித்து உடைக்கப்படக்கூடிய பௌதீகம் கொண்டவை என கண்டுகொண்டுள்ளார் பெரியார். வர்ணாசிரம சுரண்டலின் வேர்; இந்த இருவேறு துருவத் தன்னிலைகளின் (Contradictive Selves) மனக்கட்டமைப்பு என்பதை பெரியார் சிந்தித்ததாலே அந்த இரண்டையும் உடைக்க வேண்டிய செயற்பாட்டில் இறங்குகிறார். அதற்காக பொதுச்சமூகத்தை திரட்டுகிறார்.

ஒரு பார்ப்பனிய மனம், எதன் வழியாக இந்த மீயுணர்வு சுயத்தை அடைகிறது என்பதை பெரியார் ஆராய்கிறார். அது அவர்களின் வர்ணம் (நிறம்), பொதுவில் அறிந்துகொள்ள முடியாமல் அவர்களுக்குள்ளாகவே புழங்க வைக்கப்பட்டு, பொதுச் சமூக பயன்பாட்டிற்கு சென்று விடமால் பொத்தி வைக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மொழி, வேத உச்சாடங்கள், ஸ்மிருதிகள், புராணகற்பனைகள், அவர்களது பொதுச்சமூகத்திலிருந்து தீண்டாமல் உள்ளடைவு செய்து கொள்ளும் தனித்த வாழ்வியல் செயற்பாடுகள் இதன் வழியாகவே ஒரு பார்ப்பனிய மனம், தன்மீயுணர்வு சுயத்தை அடைந்து தக்கவைத்துக் கொள்கிறது.
மாறாக, பார்ப்பனரல்லா பண்பாட்டு மனங்கள் மேற்சொன்ன அதே கூறுகளை கொண்டு, தங்கள் இயல்வாழ்நிலையின் அன்றாடங்களை, கலைகளை, படைப்புகளை, ஆன்மீக நம்பிக்கைகளை தாழ்ந்தவையாக்கிக்கொள்ளும் உணர்நிலை எய்தி, வீழ்ந்துபட்டு தங்கள் சுயத்தைப் பறிகொடுக்கின்றன.

இந்த மீயூணர்வு (Imperious), தாழ்நிலை (Inferior) என்ற முரண் சுயங்களை (Contradictive Selves), அவற்றை உணர்ந்து கொண்டுள்ள அந்தந்தத் தரப்பின் திரள் மனங்கள்(Collective Conscious) உணராதவரை, இந்திய நிலப்பரப்பின் இந்த வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பை தொடக்கூட முடியாது என பெரியார் கண்டறிந்தாலேயே, அந்த இரு முரண்சுயங்களையும் உடைத்தெரியும் சொற்களை பேசினார், எழுதினார்.

மானுடச் சமூகப் பரிணாமத்தில், ’அடிமைச்சமூகம்’ (Slavery) என்ற பண்புக்கூறு உலகம் முழுவதும் தோன்றிய ஒரு ’உழைப்புச்சுரண்டல்’ ஏற்பாடு. அது ஒரு விதத்தில் உழைப்பிலிருந்து ஒரு சிறு மக்கள் திரளை விலக்கி அமரவைத்திலிலே, மனித சமூகம் கலை இலக்கிய உருவாக்கம் நோக்கி நகரமுடிந்தது. ஆனால், உலக நிலப்பரப்பெங்கும் இந்த அடிமைசமூக முறையில்; உழைப்பை சுரண்டி பயன்படுத்தும், அனுபவிக்கும் சமூகப்படிநிலைகளில் மாற்றங்கள், மேல் கீழ்த்திருப்பங்கள் என்பவை வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தவகையில், ஒரு எளிய புரிதலிலே; இந்திய நிலப்பரப்பின் வர்ணாசிரம அதர்ம வகைப்பாடு என்பது நிரந்தரமாக உழைக்கும், அடிமைத் தொழிலாளர்களை போதுமான அளவில் எப்பொழுதும் குறைவின்றி வைத்திருக்கும் ஒரு சமூக ஏற்பாடு என்பது புரியும். இந்த ஏற்பாட்டின் பயனாளிகள், சந்தேகமே இல்லாமல் இந்த அடுக்கின் மேல் அமர்ந்திருப்பவர்கள்தான். இந்தச்சுரண்டல் அடுக்கடுக்காக பகிரப்பட்டு உச்சத்தில் முழுமையாக உட்கொள்ளப்படுகிறது. அடிமைச் சமூக வகைப்பாட்டு முறையில் இது ஓர் இயல்நிலைதான். ஆனால் இங்கு எது, இந்திய வர்ணாசிரம் சமூக அமைப்பை மிகக் கொடூரமான தாக்குகிறதென்றால்; இந்த சுரண்டலடுக்கின் மேலிருந்து கீழான படிநிலைகள்; சில நூற்றாண்டுகளல்ல, சில ஆயிரமாண்டுகள் எந்தவொரு சிறு அசைவுமின்றி இன்று வரையில் அப்படியே அசைக்கப்படமுடியாமல் தொடர்வதுதான்.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.இல்லை, இந்த வர்ணாசிரம அடுக்கின் மேலிருப்பவர்கள் மிகுந்த அறிவு கொண்டவர்கள், ஒரு மரபுத்தொடர்ச்சியான கல்வி கொண்டவர்கள் என்றால்; ஏன், எப்படி… அந்தக் கல்வியும் அறிவும் அவர்களுக்கு மட்டுமானதாக ஆயிரமாண்டுகளாக உள்ளது, என்பதை சிந்திக்கும் எவரும் கேள்வி கேட்க வேண்டும். இல்லை அவர்கள் அதற்கான சூழலை உருவாக்கி தக்க வைத்துக்கொள்கிறார்கள் என்றால்; அது எவ்வாறு? அவர்களால் மட்டும் சாத்தியமாகிறது, என்பது கேட்கப்படவேண்டும். இல்லை; ஏன், அவர்கள் அந்த பிழைத்திருத்தலுக்கான அறிவை சமூகம் முழுமைக்கும் பகிர மறுக்கிறார்கள் எனபது உரையாடப்படவேண்டும்.

இங்கு பார்ப்பனியம் என்பது; தமிழக அரசியல் சிந்தனைத் தளத்தில் வெற்று பிராமண எதிர்ப்பு என்பதாக தட்டையாக புரிந்து கொள்ளப்படுகிறது. இல்லை; அது ஜெர்மனியின் நாசிசம், இத்தாலியின் பாசிசம் போன்று இந்திய நிலப்பரப்பு தன் மானுட படிமலர்சியில் கண்டறிந்த ஒரு அரசியல் சித்தாந்தம் (Political ideology). ஆம், பார்ப்பனியம் ஒரு மனவியல் கட்டமைப்பு (Psychological Phenomenon), இதன் மனவியல் கூறுகள் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என நம் அனைவருக்குள்ளும், இந்திய நிலப்பரப்பின் எல்லா மனங்களுக்குள்ளும் பரவி இருப்பதையும்; அது காலங்காலமாக தன்னைத்தானே படி எடுத்துக் கொள்வதையும் மிகத்தீவிரமாக ஆய்ந்து எழுதியிருக்கிறார் அம்பேத்கர்.

ஆம், பார்ப்பனியம் ஒரு அரசியல் கோட்பாடு; அது வெறுமனே பிராமணர்களையோ அல்லது வேறெந்தவொரு குறிப்பிட்ட சாதியையோ சார்ந்ததன்று. அது இந்திய முழுமைக்குமான ஒரு சமூக மனநிலை அமைப்பொழுங்காகி கெட்டிப்பட்டுள்ளது, அதை இந்திய நிலப்பரப்பிற்குள் எந்தவொரு தனிமனித நினைப்பாலும் விட்டுவிலகமுடியா தன்மையுடைத்ததாகிவிட்டது. இந்தச் சுரண்டலரசியல் கோட்பாட்டமைப்பை கேள்விக்குள்ளாக்க, விவாதிக்க ஒரு பெருந்திரள் சமூககட்டமைப்பு மனநிலையை உருவாக்க வேண்டும். இந்தப் பெருந்திரளை சிந்தனைத்தளத்தில் துளியேனும் சாத்தியப்படுத்தியதே பெரியாரின் வரலாற்றுப்பாத்திரம்.

வர்ணாசிரமம், கேள்விக்குள்ளாக்கப்படுவதில் அதிகம் அஞ்சுபவர்களாக பிராமணர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் இந்த சமூகப்படிநிலையின் உச்சப்பங்கு இந்திய வர்ணப்பிரமிடின் உச்சத்தில் அமர்ந்து இருக்கும் அவர்களுக்கே சென்று சேருகிறது. அதற்காக இயல்பிலேயே இந்தக் கோட்பாட்டமைப்பை பாதுகாத்து நீட்டித்து தக்கவைக்க, அதிகம் மெனெக்கெட வேண்டிய தேவை அவர்களுக்குள்ளது. அதற்காக அரசியல், சமூகம், ஆன்ம நம்பிக்கைகள், தொழில் துறை பொருளுற்பத்தி என அனைத்து தளத்திலும் கடுமையாக செயல்பட்டு ’பார்பனியம்’ என்ற அரசியல் கோட்பாட்டை காலந்தோறும் மீட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது அப்படியே தன்னியல்பில் வர்ண பாகுபாட்டின் அடுத்தடுத்த படிநிலைகளைகளால் கடத்தப்பட்டு சமூகம் முழுமைக்குமாக தக்கவைக்கப்படுகிறது. ”இந்தியாவில் சாதிகள்” என்ற கட்டுரையில், இதை சாதிகளின் போலச்செய்தல் பண்பு (Imitating phenomenon) என்பதாக அம்பேத்கர் விரிவாக ஆராய்கிறார்.
இந்த நூற்றாண்டின் தவிர்க்கமுடியா இந்திய சிந்தனையாளரான காந்தி; வர்ணசிரமம் என்ற ’சுரண்டல் அரசியல்’ எதிர்ப்பை, ஒரு கோட்பாடாக, ’தீண்டாமை ஒழிப்பு’ என வெகுமக்கள் தளத்திற்கு நகர்த்த முயற்சிக்கையிலேயே; காந்தியத்தின் வீரியத்தை உணர்ந்த ஒரு பார்ப்பனிய மனம் காந்தியை பௌதீகமாக அகற்றியது.இந்தப் பார்பனிய கோட்பாட்டமைப்பு எவ்வளவு கொடுமையானதென்றால், அதை மறுத்து வெளியேறும் எந்த தனிமனத்திற்கும் தனித்து இயங்கும் சமூக பாதுகாப்பற்ற நிலையை ஒரு சமூக உளவியலாக ஆக்கிவைத்துள்ளது. இந்த அச்சத்தின் உச்ச விளைவுகளே இன்றும் நிகழும் ஆணவக்கொலைகள். ஆம், இந்திய நிலப்பரப்பில் பார்பனியம் இன்று மிக மிக இறுக்கமான சமூக அரசியல் நிறுவனம் (Socio-political entity). அது தனக்குள் எந்த ஜனநாயக விழுமியத்தையும் (Democratic Belief) அனுமதிப்பதில்லை. இந்த ஜனநாயக மறுப்பே அதை ஒரு அழிவுக்கோட்பாடாக்குகிறது.

ஒரு தனிமனித மனத்தை சுயமிழக்கச்செய்து; தன்னியல்பில் அவனை, விளிம்பு நிலைக்கு தள்ளும் பார்ப்பனிய கோட்பாட்டின் உள்ளார்ந்த பண்பைக் கண்டறிந்த புள்ளியில் பெரியார் மிக முக்கியமான சிந்தனையாளர் ஆகிறார். இந்திய சாதியமைப்பில் வர்ண அடிப்படை, பார்ப்பனர் மேலிருந்து சத்திரியர், வைசியர், சூத்திரர், சண்டாளர் என கீழ்நோக்கி விரியும் சமூகப் பிரமீடாக வேத காலம் முதல் விளங்கிக்கொள்ளப்பட்டிருந்த, இந்திய நிலப்பரப்பின் அடிமைச்சமூக வர்ணாசிரம முறைமையை, அதன் இயங்கு நிலையை; அம்பேத்கரும் பெரியாரும் மட்டுமே, பார்ப்பனரை வேராக இருத்தி கீழிருந்து அடுக்கடுக்காக பிற வர்ணங்களை மேல்நோக்கி விரித்து சமூக விளிம்பிற்கு தள்ளும் தலைகீழ் பிரமீடாக விளக்கினார்கள். அதனாலேயே; இருவரும் தொடர்ந்து பார்பனியத்தின் மூலவேரான பிராமணர்களை நோக்கி பேசினார்கள், செயல்பட்டார்கள். இதுவே பெரியாரை வெறும் பார்ப்பன வெறுப்பாளர் என்ற தட்டைப்புரிதலுக்கு வழிவகுக்கிறது.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.

“முட்டாளே, நீ சூத்திரனாம் பாப்பானுக்கு பணிவிடை செய்யனுமாம் உனக்கு அறிவில்லையா, சிந்திச்சு பார்க்கமாட்டியா” என ஒரு பொது மாந்தனை நோக்கி உணர்நிலையில், அவன் சுயம் சார்ந்த கேள்விச் சொற்களில் தாழ்சுயத்தை (Inferior Self) உடைக்க முற்படுகையில்; பார்ப்பனர்களை வந்தொட்டிகள், நீங்கள் நிலமற்றவர்கள் புராணப் பொய்யையும் புரட்டையும் சொல்லி சுரண்டித்தின்பவர்கள், பாவிகள் என்ற சொற்களில் பிராமண மனங்களின் மீயுணர் சுயத்தை (Imperious Self) சிதைக்க முற்படுகிறார் பெரியார். ஏனெனில் இந்த முன் சொன்ன சூத்திர தாழ்சுயமனமூம், பின் சொன்ன பிராமண மீயுணர்மனமுமே சனாதன வர்ணாசிரம் என்ற கோட்பாட்டின் தாங்குநிலைப்புள்ளிகள். இந்த தாங்குநிலைபுள்ளிகள் அசைக்கப்படுகையில் வர்ணாசிரமம் சிதைவுறத்துவங்கும். நவீன இந்திய மனம் தேடும் அனைவருக்குமான அதிகாரப்பரவலாக்க சமூக ஜனநாயகம் (Social Democracy) இந்திய நிலப்பரப்பில் செயல்படத்துவங்கும்.
மானுடகுல படிமலர்ச்சியில் வேட்டை சமூக காலம் முதல் எந்திரங்களை சிந்திக்கச்செய்யும் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும், உலகமெங்கும் ஒரு சமூகமென்பதின் அடிப்படை அலகான தனிமனித மனங்கள் மீதான உண்மையான அதிகாரம் என்பது புரோகித வர்க்கத்திடமே (Pontifex Class) இன்றும் குவிந்துள்ளது என்பதை எளிதில் உணரமுடியும். இது நவீன அமைப்பியல் கருத்தியல்களான சமூகம், அரசதிகாரம், படைத்துறை, பொருளியல் உற்பத்தி என்பவை தாண்டிய தனிமனிதன அகநிலையை கைக்கொள்ளும் அதிகாரம்.

இந்த அதிகாரம் செயல்படும் புள்ளி என்பது ஒவ்வொரு தனித்த அகத்தின் ஆதி அச்சம் சார்ந்தது. இது மனித மனங்களுக்கானது மட்டுமானதல்ல அனைத்து உயிர்களுக்குமான அச்சம். இதன் ஆழ்நிலை என்பது தன் பௌதீக இருப்பு குறித்த இயற்கை மீதான அச்சம். இந்த அச்சத்தை அதிகாரக்கைப்பற்றலுக்கு பயன்படுத்தும் தன்மையை எல்லா உயிரின சமூகங்களுக்குள்ளும் காணமுடியும். ஆனால் அதை ஒரு முறைப்படுத்திய தன்மையில் தீவிர நடைமுறையாக்கி அதிகாரக்கைப்பற்றலுக்குப் பயன்படுத்தியது, மனிதசமூகம் மட்டுமே. வேட்டைச்சமூகத்தில், அச்சம் மறுத்து இருள்குகைக்குள் சென்று திரும்பிய ஒரு மனிதனின் பௌதீக இருப்பு, அவனை; அந்தச் சமூகத்தின் மேம்பட்ட உயிரியாக்கி வணங்கத்துவங்கியதில் தோன்றியது புரோகித வர்க்கம் (Pontifex Class). இந்த வர்க்கம் வரலாறு நெடுகிலும், இந்த அச்சத்தை தன் தேவைக்கேற்ப வளர்த்தெடுத்து தன் சமூக அதிகாரத்தை தக்க வைக்கிறது. இது மானுடகுலம் முழுமைக்குமான பொதுமைத்தன்மையானாலும். உலகம் முழுதும் காலம் நெடுகிலும், இந்த புரோகித வர்க்க அதிகார கைப்பற்றல் மாறிக்கொண்டே வந்துள்ளது. இந்திய நிலப்பரப்பில் ஒரு பெரிய பரந்துபட்ட புரோகித வர்க்க சமூக அதிகாரக்க கைப்பற்றல் என்பது என்றும் மாறாத்தன்மை கொண்டதான ஒரு சிறப்பு (Peculiar) பண்பைக் கொண்டதாக உள்ளது. இதுவே மானுடவியல் நோக்கில் ஆய்வுக்குள்ளாக்க வேண்டிய மிக தீவிரமான பகுதி.

இந்திய நிலப்பரப்பின் இந்தப்புரோகித சமூக அதிகாரத்தின் மாறாத்தன்மையை சிந்தித்ததில் பெரியார் கவனிக்கப்பட வேண்டியவர். இந்த மாறாத்தன்மையை ஒரு குழப்பமாக அஞ்சாமல் அதன் உடைவு நோக்கி பேசியதில் அவர் ஒரு தெளிந்த சிந்திப்புக்கொண்ட செயற்பாட்டாளராகிறார்.

இங்கு, பார்ப்பனியம் என்பது தன்னை (Self) விட பிற (other) அனைத்தையும் மறுத்து தாழ்வாக்கி பிறனின் பௌதீக இருத்தலையே தீமை என்பதாக்கி சுரண்டி அழிக்கப்பட வேண்டியது என தானும் உணர்ந்து கொண்டு, சுற்றி இருக்கும் அனைத்து மனங்களையும் அதை நோக்கி இழுத்து சமூகம் முழுமைக்கும் எப்பொழுதும் ஒரு வெறுப்பை, ஏற்றதாழ்வை தக்கவைத்துக்கொள்ளும் பேரழிவு சிந்தாந்தம் (Destructive Ideology). இது அதிகம், இந்திய நிலப்பரப்பின் இளம் மனங்களுக்குள் திணிக்கப்படுவது புரோகிதம் வழியான பக்தி உணர்ச்சி வழியாகவே.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.ஒரு நாடு, அந்த நாட்டை ஆளும் அதிகாரவர்க்கம், தனக்கான தேசிய குடிமக்களை உருவாக்க சில உணர்ச்சிகர தளங்களை உருவாக்கி அதை ஒரு இயல்வாழ்வியல் நடைமுறையாக்கி, அறியாமலே தனித்த மனங்களை கட்டுப்படுத்தி; தன் தேவைக்கேற்ப பயன்படுத்தத் துவங்கும். உதாரணம் எல்லா நாடுகளிலும் பள்ளிக்குழந்தை மனங்களில் தேசியகீதம் பாடுவதை ஒரு நடைமுறையாக்கி; தேசியம் (Nationality) மீதான நம்பிக்கை விதைத்து அந்த இளம்மனத்தை அது உணரலாமே உணர்ச்சியால் கட்டமைத்து நன்மையாகவோ தீமையாகவோ பயன்படுத்திக் கொள்வது (இந்திய தேசிய உணர்ச்சியின் நன்மை, நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுமையும் நிகழ்ந்த போராட்டங்கள், அதே உணர்ச்சி யின் தீமைப்பயன்பாடு அதே தேசிய உணர்ச்சிவழி ஹிந்து ராஜ்யா என முழங்கியபடி தனி மனிதர்களை தீயிட்டு கொளுத்துவது).

“இந்திய நிலப்பரப்பின் இளம் மனங்களை கட்டமைக்கும் இயல்பை; எந்தச்சலனமுமற்று சமூக அமைப்பின் அடிப்படை அலகான குடும்பத்திற்குள்ளேயே அதன் உறுப்பினர்களாலே கட்டமைக்கும் வழியை உருவாக்கிக் கொணடதிலேயே பார்ப்பனியம் இந்த மண்ணில் இன்றும் நீடிக்கிறது. ஆம், உயர்குடி என்று தங்களை நம்பிக்கொண்டிருக்கும் பிராமணர்கள் உருவாக்கும் வழிபாட்டு நடைமுறைகள் இந்திய நிலப்பரப்பின் பெருவாரி குடும்பங்களுக்குள்; உயர்வானதாக நம்பவைக்கப்படுவதில் ஒரு குழந்தையின் மனதிற்குள் பார்ப்பனியம் என்ற மனவியல் கட்டமைப்பு அதன் அரூபத்தன்மையில் விதைக்கப்படுகிறது. பிராமண வழிபாட்டு நடைமுறையில் இருக்கும் ஆடம்பர அழகியலை (Luxurious Aesthetics) உள்ளேற்றிக்கொள்ளும் ஒரு குழந்தை இயல்பிலே ஆடம்பரமற்ற எளிய இயற்கையின்பாற்பட்ட பண்பாட்டு வழிபாடுகளை ஏற்கும் உற்சாகமற்று, அதை தாழ்வுற்றதாய் நம்பிக்கொள்கிறது. இதிலிருந்து ஒரு இந்தியக் குழந்தையின் மனத்தில் மேல், கீழ் உருவாக்கப்பட்டு தன்னிலிருந்து பிறனை (Other) விலக்கும் தீண்டாமையை இயல்பாக்கிக்கொள்கிறது. இந்தக் குழந்தை மனம் முதிர முதிர இன்னும் சரிசெய்ய முடியாததாகி ஆதிக்கப்பெருமிதம் கொண்டு குற்ற உணர்வற்று பிறனை சுரண்டுதல் என்பதாக; அப்படியே அடுத்த தளத்தில் விரிந்து, ஒரு சமூக கட்டமைப்பாகி ஒரு மனிதன் தன் சக மனிதனிடம், ஓர் ஆண் ஒரு பெண்ணிடம், ஒரு சாதி இன்னொரு சாதியிடம் என எங்கும் அதிகாரம் பரவலாகும் சம உரிமை என்னும் சாத்தியப்பாட்டை இல்லாமல் ஆக்கி படிநிலை சமமின்மை (Graded inequality) மனநிலையாக விரிகிறது. இதை வர்ணாசிரமம், ஒரு தனிமனித குழந்தை மனம் உருவாக்க அடித்தளத்திலிருந்து செயல்படும் சிந்தனை அமைப்பாக (School of Thought) போலியான குடும்ப ஆன்மிக வழிபாட்டு நம்பிக்கை வழி உருவாக்கி வைத்துள்ளது. இதுவே இன்றும், சாதியத்தை இந்திய நிலப்பரப்பிற்குள் தக்கவைத்துக் கொண்டிருகிறது. இந்த சிந்தனை முறைமையை (School of Thought) உடைக்கவே; பெரியார், கடவுள் வழிபாட்டு மறுப்பை கையிலெடுக்கிறார்.

இங்கு மனிதமனங்கள் பாகுபடுத்தப்படுவது பெரிய சுரண்டல் அடிமை வணிகம் (Slavery trade). இதற்காகவே, இங்கு இத்தனை சாதிப்பிரிவுகள், மேல் கீழ் மனநிலை உருவாக்கம் என கண்டறிந்ததோடு; மானுடத்தின் சரிபாதி தொகையில் இருந்துகொண்டு, மேற்சொன்ன எந்த படிநிலைகளுக்குள்ளும் வராமால் உலகின் அனைத்து படிநிலைகளுக்கும் கீழாய் தாழ்வுற்று நிறுத்தப்பட்டிருக்கும் பெண்களின் மனநிலையை தட்டி எழச்சொல்லி, இன்னும் உரக்கப்பேசி எழுதியதாலே பெரியார், ஒரு சமூகவியலறிஞராகிறார்.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.

தீவாய்ப்பாக, வெறும் அரசியல் பரப்புரை கருத்துருவமாக மட்டுமே ஏற்பவர் மறுப்பவர் என இருதரப்பாலும், பெரியார்; இங்கு உள்வாங்கப்பட்டுள்ளார். ஆனால் இந்தியச் சிந்தனை மரபில் இருபதாம் நூற்றாண்டின் தவிர்க்க முடியா கண்ணி பெரியார். கருப்புச்சட்டையோடும் புரளும் வெண்தாடியோடும் பெரியார் என இன்று அமர்ந்திருக்கும் அந்த உருவம் நிகர்மைச்சமூகம் (Socialistic Society) என்ற அரசியல் கருத்துருவின் இந்திய வடிவம். மானுடசமத்துவத்தையும், சமூகம் முழுமைக்குமான அதிகாரப்பரவலாக்கத்தையும் ஏற்கொள்ளும் பக்குவமற்று தான் மட்டும், தான்சார்ந்தமட்டுமென வேட்டைச் சமூக நிலையிலேயே நின்றுவிட்ட மனங்களை உள்ளூர தொந்தரவுசெய்து உரையாட அழைக்கும் பெருங்கருத்துருவம் பெரியார்.

சக மனிதனை தனக்கு இணையாக இருத்தமுடியாத, சமூகக் கீழ்மையை புரிந்து கொள்ளவே முடியாமல் இருந்த பொது மன வெளிக்குள்; அந்தக்கீழ்மை நோக்கிய சிந்தனை துளியேனும் தோன்றியதற்கு காரணமான பெரியாரின் சமரசமற்ற சமூகச்செயற்பாடுகள் இந்தியச்சமூக வரலாற்றில் மிகப்பெரும் சாதனை. இந்தப்புள்ளியில் பெரியார், சகமனிதனை தனக்கு இணையாக எண்ணும் அனைத்து மனங்களுக்கும், ஓர் ஆற்றலூட்டும் சிந்தனை.

இங்கு, புனிதப்படுத்தப்படும் எதுவும் ஒரு நிலையில் தேங்கிப்போய் அதிகாரகுவிப்பாகி வன்முறை சுரண்டலாக மாறிப்போகும். இது அனைத்து சிந்தனைகளுக்கும் காலப்போக்கில் நிகழும் சிக்கல். ஆனால், எந்த நிலையிலும் ஏற்பவரோ மறுப்பவரோ பெரியாரை, அவரது கருத்துக்களை தத்துவப்படுத்த முடியாது. ஏனெனில் பெரியாரும் அவரது கருத்துக்குகளும் தன்னியல்பில் உள்ளூர புனிதப்படுத்துதலுக்கு எதிரானவர்கள். இந்தப்பண்பே ஒரு பாய்ம நிலையில் பெரியாரை எங்கும் தேக்கமுறா தன்மையில் நீட்டித்து உரையாடவைக்கிறது.

ஏறக்குறைய காந்தியும், பெரியாரும் ஒரே காலத்தில் சமூக அரசியலுக்குள் நுழைந்தவர்கள். சற்று ஆழ்ந்து யோசிக்கையில் காந்தியும் பெரியாரும் ஒற்றைச் சமூக இலக்கை நோக்கி இரு எதிரீட்டு வழிமுறைகளில் பயணித்த ஆளுமைகள். ஆம், காந்தி ஆழமான தனிமனித ஆன்மீக தேடல் வழியான சமூகம் பண்படும் ஒரு விடுதலை என்பதாக தனிமனித தன்னகவிழிப்பு நோக்கில் சிந்திக்கிறார். பெரியாரும் அதே தனிமனித சுயம் என்ற அகவிழிப்பின் வழியான சமூக மாற்றத்தை பேசுகிறார். காந்தி ஒவ்வொரு மனிதனும் மகாத்மாவாகும் சமூகத்தை கனவு செய்கிறார். இது ஏறக்குறைய நீட்ஷேவின் அதி மனிதன் என்ற கனவிற்கு ஒப்பானது. பெரியார் அதே போன்றதொரு உன்னத சமூகத்தை ஒரு மனிதன் எளிமையாக தன் சுயத்தை உணரும் இயல்மனித நிலையிலே எட்டிவிடும் சாத்தியங்களை பேசுகிறார். இன்னும் அடுத்த நிலையில் இந்திய நிலப்பரப்பின் வரலாற்றில் மார்க்ஸிய இயக்கங்களும், காந்திய இயக்கமும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமுமே பெருந்திரளாய் எளிய மனிதர்களை, குறிப்பாக பெண்களை தங்கள் குடும்ப வேலிதாண்டிய பொதுவெளிக்குள் கொணர்ந்து அரசியல்மயப்படுத்திய சமூக இயக்கங்கள். மேற்சொன்ன, அந்த அதிமனிதர்களின் தொகை குறையும்போது காந்திய அரசியல் அமைப்புக்கள் தளர்ந்து சிதைவுறத்துவங்குகிறது. இயல்மனிதர்களை கொண்டியங்கும் தன்மை கொண்டதாலே மார்க்ஸிய, பெரியாரிய அரசியல் அமைப்புக்கள் எப்போதும் எளிய மனிதர்களை கொண்டு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டுதாயுள்ளது.

Periyar: A method of recognition Birthday Special Article by Boobalan Subramaniam. Book Day is Branch of Bharathi Puthakalayam.

இன்னும் ஆழ்ந்து நோக்குகையில் காந்தியம் விழையும் அதிமனித சமூகத்தை அடையும் எளிய பாதையாக பெரியாரியம் வாய்ப்புக்கொண்டுள்ளது. ஒரு சமூகத்தின் உற்பத்தியில்,கல்வியில் அதிகாரப்பகிர்வில் அனைவருக்கு சமவாய்ப்பு எட்டப்படும் போது, அதன் உறுப்புகளான தனிமனிதர்கள் சுயத்தை உணர்ந்து கேள்விகேட்டு ஒரு உளநிறைவை எட்டி அதிமனித ஆன்ம நிலைநோக்கி இயல்பில் நகர்வார்கள். கடந்த நூற்றாண்டில் இந்த அதிகாரப்பரவலாக்கத்தின் கணிசமான பகுதியை பெரியாரிய சிந்தனைப்பின்னணிகொண்ட திராவிட இயக்க அரசுகள் தமிழகத்தில் சாத்தியப்படுத்தியுள்ளன. இதன் வழி சமூகம் முழுமைக்குமான கல்வி பரவலாகியதன் அடுத்த நகர்வாக தமிழகத்தின் ஒவ்வொரு சாதிய குழுக்களும் தமக்கான உரிமைகளை தாம் வாழும் இந்த நிலப்பரப்பின் உற்பத்தி, கல்வி, அரசதிகாரம் என அனைத்திற்குள்ளும் கோரத்துவங்கியிருப்பது பெரும் சாதனை. தற்காலநிலையின், சில துவக்ககால குழப்பங்களை கடந்து அனைத்திலும் அதிகாரம் பகிரப்பட்ட உளநிறைவு கொண்ட ஒரு ஆன்மமான காந்திய சிந்தனை சமூகத்தை, ஒரு வளர்நிலையில் இந்தப்போக்கு சாத்தியப்படுத்தும். ஏனெனில், படிநிலை சமூக அமைப்புநிலையே குற்றமனநிலை உருவாக்கத்தின் மூலம். இந்த படிநிலை சமூக அமைப்பு வீழ்கையில் குற்ற மனநிலைகள் தோன்றும் வாய்ப்புத்தேவைகள் குறைந்து காந்தியம் காண விழையும் அதிமனிதர்கள் சாத்தியமாவார்கள். இதை பெரியாரியம் நடைமுறையில் தமிழ்நிலப்பரப்பில் சாத்தியப்படுத்தும் பாதைகளை நிரூபித்துள்ளது.

என்றும் நமக்கு, காந்தியிடம் உரையாட ஒரு சாத்வீகமான ஒழுங்குடைய மனம் வேண்டும். அம்பேத்கருடன் உரையாட ஒரு தெளிந்த கற்றல் வேண்டும். மார்ஸுடனும் புத்தருடனும் உரையாட ஒரு தத்துவார்த்த சிந்திப்பு என்ற தகுதி வேண்டும். மேற்சொன்ன எந்த தகுதிப்பாடுமின்றி எளிய வெள்ளந்தியோடு, எவரும் பெரியாருடன் உரையாடி அவருடன் முரண்பட்டு, உடன்பட்டு தெளிவு கொள்ளமுடியும் என்பதாலே பெரியார்; இந்திய நிலப்பரப்பின் தனித்துவ சிந்தனையாளர் ஆகிறார்.

ஆம், பெரியார்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்ற பேரறத்தை தன் சித்தாந்த ஆன்மமாக போதிக்கிறார். அதை வாழ்வியலாக்கும் சிந்தனைக் கட்டமைப்பை (School of Thought) உருவாக்கச்சொல்லி நம்மை தூண்டுகிறார். பெரியாரின் வழியில் நம் கனவு, இந்த நிலப்பரப்பின் மனிதர்கள் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளித்து பேரன்பு கொண்டியங்கும் ஒரு நிகர்மைச் சமூகம்.

——————————–
சு.பூபாலன்
மணல்மகுடி நாடக நிலம்
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “பெரியார் : ஓர் அறிதல் முறை – சு. பூபாலன்”
  1. பெரியார் இன்றைக்கும் ஏன் தேவை என்கிற கேள்வியில் ஆரம்பித்து வெறும் பார்ப்பனீய எதிர்ப்பு மட்டுமே பெரியாரியமா அல்லது கடவுள் மறுப்பு தான் பெரியார் அறிவுறுத்திய கோட்பாடா என்கிற என்னுடைய பல்வேறு கேள்விகளுக்கு இந்த கட்டுரை சாமானிய மொழியில் பதிலளிக்கிறது. பெரியாரை, பொதுவுடமை சமூகத்தை புரிந்துகொள்ள ஒரு சாளரத்தை திறந்து விட்டிருக்கிறார் பூபாலன்.

  2. பெரியார் பற்றி நான் வாசித்ததில் மிகச்செரிவான கட்டுரை இது. பார்ப்பனியம் என்கிற அநீதியான ஒரு கருத்தியலின் வீரியத்தை, பரிமாணங்களை முழுமையாக, தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் கட்டுரையாளர். மேலும் பெரியார், அம்பேத்கர் பற்றி எழுதும்போது காந்தியைக் கீழ்மைப்படுத்துவது அல்லது குறை கூறுவது என்பது பொதுப் போக்காக உள்ள தற்காலச் சூழலில், ஒரு முழுமையான பார்வையுடன் வரலாறை, வரலாற்றுச் சூழல்களை அனுகியிருக்கிறது இக்கட்டுரை. பொதுத்தளத்தில் பரவலாக வாசிக்க, விவாதிக்கப்பட வேண்டிய கட்டுரை.
    பூபாலனுக்கு அன்பும் வாழ்த்துகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *