நூல் அறிமுகம்: பாட்டிகள் சொல்லி எழுதபடாத வேறு சில கதைகள் “புதிர்வினை” – அ.கரீம்நூல்: புதிர்வினை சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்: கவிவாணன்
வெளியீடு: தமிழ் அலை பதிப்பகம்
விலை: ரூ. 120/-

கதைகளை காலகாலமாக சொல்லிக்கொண்டு இருக்கிறோம். மொழி தோன்றும்போதே அதன்போக்கில் கதைகளும் தோன்றிவிட்டது. கதைகள் கற்பனைகளை மட்டும் கடத்துவதல்ல உணர்வுகளையும் சேர்த்தே கடத்துவது. கதைகள் என்பது திண்ணையில் ஆசுவாசமாக உட்கார்ந்து தத்தமது உணர்வுகளைக் கடத்தும் பரிமாற்ற யுக்தி என்று கதைகள் குறித்த கட்டமைப்பை முன்வைக்கும்போது சொல்லப்படுவதுண்டு. அந்த கருத்திலிருந்து பார்க்கும்போது  பெரும்பாலும் திண்ணைகளில் அமர்ந்து பேசும் கதைகள் பெண் வாழ்வு குறித்துதான் அதிகம் இருக்கும். காலகாலமாக பாட்டி கதை சொன்னாரென்று தான் சொல்லுகிறோம் தாதாக்கள் கதை சொல்வதாக பெரும்பாலும் சொல்லுவதில்லை. தாதாக்களின் கதைகளைத்தான் பாட்டிகள் கொட்டி தீர்க்கிறார்கள்

பாட்டி சொன்ன கதைகளில் எழுதாத கதைகள் இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. “ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு” என்று கதை துவங்கும்போது தங்களது பால்ய காதலனை நினைவுபடுத்திக் கதை சொல்வதும், “ஒரு ஊருல ஒரு அரக்கன் இருந்தான்” என்று சொல்லும்போது தன் வாழ்நாளில் சந்தித்த  மோசமான ஒரு நபரைப் தனது கற்பனைகளால் தனக்கு உகந்தமாதிரி உருவகப்படுத்தி மனதில் உள்ள எல்லாவற்றையும் கதைகளுக்குள் பாத்திரங்கள் வழியே கொட்டி விடுவாள். அந்த ஜீவன்களின் குரலாய் கவிவாணன் “புதிர்வினை” சிறுகதைத் தொகுப்பை படைத்துள்ளார்.

கவிவாணனின் எல்லா கதைகளும் உதிரி மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. நாம் பார்த்தும் பார்க்காதாது போல கடந்து செல்வதை அவர் கதைகளாக்குகிறார். தொகுப்பின் தலைப்பு கதையான “புதிர்வினை” கதை கணவனால் இரு குழந்தைகளோடு கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வியல் பேசுகிறது. ஒரு ஆண் குழந்தை மற்றொன்று பெண் குழந்தை, இவர்களை எப்படி வளர்ப்பது என்று தவிக்கையில் பக்கத்து வீட்டில் இருக்கும் உசேன் மாமாவின் குடும்பம் அவர்களை அரவணைத்து பார்ப்பதும், உதவிகள் செய்வதுமாகக் கதை நீள்கிறது.

எப்படியும் மீண்டும் கணவன் வருவான் என்று சில ஆண்டுகள் அவள் எதிர்பார்த்தும் இனி வர வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்தவள் வாழ்வதற்காகப் போராடுவாள். இரண்டு குழந்தைகளில் பெண் குழந்தையை குழந்தைபேரு இல்லாத உசேன் மாமாவே தத்தெடுத்து கொள்வார். இருவரும்  வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்ற வித்தியாசம் எங்குமே இருக்காது அவ்வளவு நெருக்கம்.

 அருகருகே இருந்த குழந்தைகள் வெவ்வேறு வீடாக பிரிவதும் குழந்தைமை அவஸ்தையும் இந்த கதையின் பலம், கணவன் சென்று பதிமூன்று ஆண்டுகள் கழிந்திருக்கும், கணவன் தன்னை ஏன் விட்டு சென்றார் என்று கடைசிவரை அவளால் தெரிந்துகொள்ளவே முடியாது, அது அவளை உறுத்தும், பொருளாதார நெருக்கடியில் வாழ்வதே பெரும்போராட்டமாக இருக்கும். நோய்வாய்ப்பட்ட அம்மா மகனிடம் சொல்லும் கடைசி வார்த்தையே கதையின் மொத்த ஜீவன் “எப்போதாவது உன் அப்பா வந்தார்னா எங்கள ஏன்பா விட்டுட்டு போனே என்று ஒரு வார்த்தை மறக்காம கேளு” என்று சொல்லிவிட்டு இறந்துபோகும் வரிகள் வாசகனை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குமிடம்.

இந்திய பெண்களுக்கு சமையல்கட்டுதான் ஒரே உலகம் என்று கட்டமைக்கப்பட்ட கேடுகெட்ட பண்பாட்டில், வீட்டில் பெண்கள்  எவ்வளவு வேலை செய்தாலும் ஆண்களுக்கு போதாமை இருந்துகொண்டே இருக்கும் அதனை “தோசை” என்ற சிறுகதை மூலம் கவிவாணன் பதிவு செய்கிறார். காலையிலிருந்து வேலை செய்து களைத்து தூங்கும் மனைவியை வீட்டுக்கு வரும் கணவன் “சாப்பாடு செய்யாமல் என்ன தூக்கம்” என்று  பழுக்க காயவைத்த தோசை கரண்டியில் சூடு வைப்பதாக கதை முடியும். எல்லா ஆண்களையும் வெட்கி தலைகவிழ செய்யும் கதை தோசை.

“அழகுதாய் டீ கடை” “வந்து போகாத அப்பா” ‘முத்து மாரி (எ) நேகா” என்று பெரும்பாலான எல்லா கதைகளும் பெண்களின் வாழ்வியல் நெருக்கடி சமூக புறக்கணிப்பு அதை எதிர்கொள்ளும் போராட்டம் என்று பலவற்றை கதைகளாக்கி உள்ளார். சில கதைகளில் இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்த வேண்டிய பகுதிகளும் இருந்தது. மிக நல்ல வடிவமைப்போடு தமிழ் அலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கவிவாணனுக்கு வாழ்த்துக்கள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.