நூல் அறிமுகம்: தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய *தோட்டியின் மகன்* – மதுமிதா கோபிநாத்நூல்: தோட்டியின் மகன் 
ஆசிரியர்: தகழி சிவசங்கரப்பிள்ளை, தமிழில் சுந்தர ராமசாமி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பக்கம்: 173
விலை: 195
காலைக் கடனுக்கு மட்டுமே கழிவறையைத் தேடுவோருக்கும்.. மொத்தப் பிறவிக் கடனையே கழிவறைக்குள் தேடுவோருக்குமான முரண்பட்ட
வாழ்வியல் கூறுகளில் படிந்திருக்கும் துர்நாற்றங்கள் அத்தனையும் தூர்வாறிப் போடுகிறது இந்தப் புதினம்.
அன்றாடக் கடமைகளில் ஒன்றான மலம் கழித்தலுக்கும் பின்னால்…  இப்படியான ஒரு உலகம் இயங்கிவருவதும் … அப்படியொரு உலகத்தை  இதுவரைக்கும் யாரும் திரும்பிப் பார்க்காத… திரும்பிப் பார்ப்பது பற்றி யோசிக்காத களமுமாக…  ” தோட்டியின் மகன்”.
தகழி சிவசங்கரப் பிள்ளையின்  மலையாளப் புதினமான “தோட்டியுடே மக”  என்னும் படைப்பே… தமிழில்  “தோட்டியின் மகன்” என்று சுந்தர ராமசாமியால் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
” கடவுள் ஒன்ன காப்பாத்துவாரு.. என் வாளியையும் மம்பட்டியையும் ஒனக்குத் தாரேன்.. அத வச்சு நீ பொளச்சுக்க” என்று முப்பது வருடங்களாக ஆலப்புழா முனிசிபாலிட்டியில் தோட்டி வேலை செய்து.. மலக்குழிக்குள்ளேயே புதைந்து போன தன் வாழ்வின் அழுகிப்போன மொத்த பக்கங்களையும் தன் மகன் சுடலைமுத்துவிடம் கை மாற்றிவிட்டு இறந்து போகிறான்.. தகப்பன் இசக்கிமுத்து.
இறந்து போன தன் தகப்பனின் இடுகாட்டுச் செலவுக்கும் கூட வழியின்றி..  ஆண்டாண்டு காலமாக அந்தத் தகப்பன் முங்கியெழுந்த மலக்குழிக்குள்ளேயே அவனைப் புதைத்ததும்.. புதைத்த மறுகணமே  நாய்களுக்கு இரையாகிப் போனதுமான அந்தக் கணத்து அவலமும்.. வாழ்வு முழுக்க தன்னைத் துரத்த..
தோட்டியின் மகன் தோட்டியாகத்தான் தன் வாழ்வைத் தொடர வேண்டுமா… அவனும் சுத்தபத்தமாக நல்ல துணியுடுத்தி.. யாரிடமும் கையேந்தாமல் உழைத்து நாலு காசு பணம் சேர்க்கக் கூடாதா… என்ற ஆதங்கத்தின் முடிச்சுகளுக்குள்ளாகவே உழன்று தவிக்கிறான் சுடலை முத்து.
தோட்டியின் மகன் | எழுத்தாளர் ஜெயமோகன்Sundara Ramasamy
தான் விரும்பாமலே தனக்கு திணிக்கப்பட்ட இந்த தோட்டி வேலையும்.. துர்நாற்றமும் எக்காரணம் கொண்டும் தான் தன் மகனுக்கு கொண்டு சேர்த்துவிடக்கூடாது..  என்ற தன் இலட்சியத்தைத் தன் வாழ் நாள் முழுக்கப் பிடிவாதமாக இழுத்துப் போர்த்திக்கொண்டு போராடும் சுடலைமுத்துவின்
நீண்ட நெடிய பயணம்… நாம் இதுவரை சந்திக்காத ஒரு உலகத்தின் இருண்ட பக்கங்களையெல்லாம் திறந்து காட்டுவதில்… அரண்டு மிரண்டு  போகிறது நமது நெஞ்சம்.
எப்படியாவது இந்த துர்நாற்றம் துரத்தும் வாழ்விலிருந்து தப்பித்து ஓடி.. நல்ல வீடு, நல்ல சூழல், நல்ல படிப்பு என்று தன் அடுத்த தலைமுறைக்கான காலத்தினையாவது மீட்டுக் கொடுத்துவிட வேண்டுமென்று  சுடலைமுத்து எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும்… அதற்கான பாதையில் அவன் சந்திக்கும் தொடர் தோல்விகளுமாக பக்கத்துக்குப் பக்கம்.. வரிக்கு வரி.. குளம் கட்டிக் கொள்கின்றன நமது கண்கள்.
பிச்சாண்டி, சுந்தரம், இவர்களது மகன்கள், வள்ளி, மோகன் என்று புத்தகம் முழுக்கவே ரணங்களை மட்டுமே சுமந்து திரியும் பாத்திரங்களின் மன அடுக்குகளில் விரவிக்கிடக்கும் குமுறல்களும்… கோப தாபங்களுமாக..  நிகழ்வில் நாம் சந்திக்கும் வாழ்வுக்கும் அப்பாற்பட்டதாக எத்தனையெத்தனை கோரமுகங்களைத் தன்னுள்ளே புதைத்துக் கொண்டுள்ளது இந்தக் காலம் என்ற உண்மை நெஞ்சில் அறைகிறது.
ஓவல்சீயர்கள், முனிசிபல்கள், சேர்மன், அரசாங்கம், நாட்டாமைக்குப் பெயர்போன மேட்டுக்குடியினர் என்று மனம் முழுக்க துர்நாற்றங்களை மட்டுமே சுமந்தலையும் சூழல்களிடையே.. ஒரு தோட்டியின் வாழ்வென்பது தோட்டியாக மட்டும் தான் தொடரமுடியுமென்னும் மன நோய்க்குப் பலியாகிக் கிடக்கும் சமூகத்தை.. எந்தக் கொள்ளை நோய் வந்து திருத்தியமைத்துவிட முடியும்.
160 பக்கங்களுக்குள்ளாக வலியும், வேதனையும், இயலாமையும், ஆற்றாமையும், அவமானமுமாகப் பின்னிக்கிடக்குமொரு சமூகத்தினரின் விடியாத பொழுதுகளென.. நிறையப் பேசுகிறது.. “தோட்டியின் மகன்”. உண்மையைப் பேசுகிறது. அந்த உண்மையின் தீண்டலுக்குள்
ஆயிரமாயிரம் அதிர்வுகள்…
விம்மி வெடிக்கின்றன நம்மில்.