நமது பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டி அமைத்தால் மக்கள் தன்னை அரசரென வணங்குவர் .குடி மக்களை ராஜ விசுவாசமுள்ளவர்களாக ஆக்கிவிடலாம் என்ற அரசியல் நோக்கமே இந்த கோவில் கட்டும் திட்டமாகும்.. இதனால் மக்களின் ஆன்மீக உணர்வுகளைச் சந்தை சரக்காக மாற்றும் வர்த்தகமே விரிவடையும். நெருக்கடியில் தவிக்கும் அமெரிக்கப் பாணி ஆதிக்க முதலாளித்துவ கட்டமைப்பிற்கு முட்டுக் கொடுக்கும்   இந்திய இரண்டடுக்கு  பொருளாதார கட்டமைப்பு நீடிக்குமே தவிர ஆன்மீக இந்தியாவோ நவீன இந்தியாவோ உருவாகாது.

ராமராஜ்யம் உருவாகுமா?

         மோடி அரசின் ஆன்மீக நடவடிக்கைகள் இந்தியாவை அமெரிக்கப் பாணி அந்நிய முதலீடுகளின் ஏகபோக வேட்டைக் காடாக்குமே தவிரக்  கம்பன்  காட்டிய ராம ராஜ்யம் உருவாகாது. அப்படியே உருவானாலும், கும்பகர்ணன் சாகும் நேரத்தில் ராமனிடம்  கேட்டது கனவாகுமே தவிர நனவாகாது “ என் தம்பி உன்னிடம் அடைக்கலம் கேட்டுள்ளான் அவனைச் சாதி வெறியனாக மாற்றிவிடாதே” என்று கும்பகர்ணன் கேட்டதாகக் கூறும்  கம்பன் வரிகளாவன

“ நீதியால் வந்த தொரு நெடுந் தரும நெறியல்லால்

சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி

ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த

வேதியாய் இன்னம் உனக்கு அடைகலம் வேண்டினேன்” (யுத்தகாண்டம்)

 கம்பர் அவர் காலத்து அரசர்களெல்லாம் நீதியால் வந்ததொரு நெடும் தரும நெறி தவறி  வேதம் கூறும் சாதியால் வந்த சிறு நெறியைத் தழுவியதையே கும்பகர்ண வாயால் சொல்கிறார் இந்த சாதி கட்டமைப்பு அரசர் காலத்து நிர்வாக முறைக்குமட்டுமல்ல  முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்து நிர்வாக முறைக்கும் பொறுத்தப்படுகிறது. அதற்கொரு வரலாறு உண்டு.  அதற்கு முன்னர்

ஆன்மீகத்தை விற்கும் வியாபாரிகளிடம் சில கேள்விகள். 

 இந்தியாவின் 2011  மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  கோவில்கள்,  மசூதிகள்,தேவாலயங்கள் , மற்றும் பிற வழிபாட்டிடங்கள் என  30லட்சம் இருப்பதாகவும்  அதே  நேரத்தில்  நாட்டில், கல்வி நிலையங்ளோ( மழலையர் பள்ளியிலிருந்து உயர்கல்வி வரை) இருப்பது வெறும் 20 லட்சம். இவ்வளவு கோவில்களிருக்கிற  இந்தியாவில் புதிதாக ராமர் கோவில் எதற்கு?

 இன்னொரு கேள்வி! 

இக்காலங்களில் அயோத்தியில் பாப்ரி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னரே  ராமர் கோவில்கள் நிறைய இருந்தன , இடித்ததற்குப் பின் ஒரு டஜனுக்கு மேல் முளைத்துவிட்டன. அவைகளுக்குப் போட்டியாக அரசே ஏன் கோவில் கட்ட வேண்டும்.?

 பிரதமர் நிதியிலிருந்து ராமர் கோவில் கட்ட . 61 ஹெக்டர் நிலம் வாங்க  2019 நவம்பரில் பிரதமர் நிதியிலிருந்து 447 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.– |ராமர் கோவில் கட்டுவதற்கு என்று 1990லிருந்து ஆர் எஸ் எஸ் அமைப்பு 1400 கோடி திரட்டி வைத்துள்ளது.

 மோடி வெள்ளிச் செங்கல்லைப் பதிக்கிற அன்று ராம பக்தர்கள் அனுப்பும் பணம் குவிகிறது  வெளியில் தெரிந்த 1847கோடி ரூபாயோடு எத்தனை ஆயிரம் கோடி சேருகிறது  என்பது வெளியே தெரியாது.

 இதை உதாரணமாகக் கொண்டு முதலமைச்சர்கள் கும்பிடுகிற தெய்வங்களுக்கு கோவில்கள் கட்ட முதலமைச்சர்கள் நிதியில் ஒதுக்க ஆரம்பித்தால் நாடு என்னவாவது?

இன்னொரு கேள்வி

30 லட்சம் கோவில்களில் விரல்விட்டு எண்ணுகிற கோவிலைத் தவிர மற்றவை பாழ்பட்டுக் கிடக்கின்றன.. அவற்றிலிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்கள் களவு போகிறதே அதையெல்லாம் கவனிக்காமல் அயோத்தியில் பல ஆயிரம் கோடியில் கோவில் எதற்கு?

 அடுத்ததொரு கேள்வி!

 பிரதமர் மோடி குஜராத் வாசியானதால் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங்க மேத்தாவின் குஜராத்தி மொழி  வைஷ்ணவ ஜனதே தேனே ஹகியே என்று தொடங்கும் ராமபஜனையை குழந்தைப் பருவத்திலேயே கேட்டிருப்பார். காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் தவறாது பாடப்படும் பஜனையாகும். யார் உண்மையான வைணவன். யார் உண்மையான  ராமபக்தன் என்பதைக் காட்டுகிற அந்த 20 வரிகள் கொண்ட  அந்த பஜனையில்

 வைஷ்ணவன்,என்போன்யாரென,கேட்பின்
வகுப்பேன்,அதனை,கேளுங்கள்…
பிறருடைய,துன்பம்,தனதென,எண்ணும்
பெருங்குணத்தவனே,வைணவனாம்;
உறுதுயர்தீர்த்ததில்,கர்வம்,கொள்ளான்
உண்மை,வைணவன்,அவனாகும்;
உறவென,மனிதர்கள்,உலகுள,யாரையும்
வணங்குபவன்,உடல்மனம்சொல்,இவற்றில்
அறமெனத்,தூய்மை,காப்பவன்,வைணவன். (நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை மொழி பெயர்ப்பு)

—————-

என்று அடுக்கிக் கொண்டே போகிற பஜனை இறுதியாக ஒரு வரி வருகிறது.

 (ராமா நாம தாலி ரககேங்கி சகல தீர்த்த தேரேமாரே

 வானா-லோபி-ந கபட ரசித்தா சே காம குரோத நிர்வாயரே)

 ராம நாமத்தை உச்சரித்தால் போதும் ஷேத்திராடனம் போகவேண்டாம் அவன் உடம்பே கோவிலாகிவிடும் அவன் உடம்பில் காமம்,குரோதம்,கபடம் தங்காது அப்படிப்பட்ட ராம பக்தனைச்  சந்திக்க நர்சு என்ற தான் விரும்புவதாக அந்த பஜனை முடியும்.. ராமனை வழிபட இந்த பஜனை போதும் கோவில் வேண்டாம் என்ற எண்ணம் ஏன் நாசிக் இந்துத்துவா பீடத்திற்குத் தோன்றவில்லை

 இந்த பணத்தைக் கொண்டு   ராமரின் பெயரில்  இலவச கல்வி வளாகம்,  இலவச மருத்துவமனைகள், இலவச முதியோர் இல்லம்,கட்டலாமே! கடவுள் தத்துவத்தை ஆராயும் ஆராய்ச்சி மையம் காணலாமே? ஏன் ஆயிரம் தெய்வங்களை இச்சமூகம் கண்டது அறியாமையாலா, அறிவு வளர்ச்சியாலா? அரசர்கள் அல்லது மஹாபுருஷர்கள் திருவிளையாடலா?  என்பதை ஆராய  முதலீடு செய்யலாமே.!  .

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் ...

கோவில்கள் வரலாற்றுத் தடையங்கள் படும்பாடு  

 இந்து மத கோவில்கள், புண்ணியத் தலங்கள் எதற்குப் பயன்படுகிறது என்பதை ஊடகங்கள் காட்டுகின்றன. இந்தியாவின் கோவில்களிலிருந்து கடந்த 20 வருடங்களாகச்   சிலைகள்,நகைகள் போன்ற  கலைப் பொருட்கள்  ஆயிரக்கணக்கில் திருடு போவதை அரசு தரும் புள்ளிவிவரமே காட்டுகிறது. தமிழ் நாட்டில் ஆளும் ஆன்மீக திலகங்களின் கடைக்கண் பார்வையால் சிலை திருட்டு பல ஆயிரம் கோடி புரளும் வர்த்தகம் என்பதை மறுக்க முடியுமா? 

  உண்மையில் கோவில் கட்டுவது வேதமரபல்ல. தீ வளர்த்து ஆடு மாடுகளை யாகத் தீயில் நெய்யால் வேகவைத்து பிரசாதம் செய்து சாப்பிடுவது அல்லது காடுகளுக்குச் சென்று தவமிருப்பதுதான். வேத மரபாகும் பிற மத தாக்கத்தால் கோவில்கள் உருவாகின.

 கோவில்கள் பேணவேண்டிய வரலாற்றுச் சின்னங்களாகும். நமது முன்னோர்களின் ஆன்மீகத்தின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் கால கண்ணாடிகள். அதனைப் பேணாமல் சடங்குகள் மூலம்   மூடநம்பிக்கைகளை வளர்க்கும் வர்த்தக பொருள்களாக ஆக்கப்பட்டிருக்கின்றன. 

கடந்த 150 ஆண்டுகளாக  எல்லா கோவில்களும் வியாதிகளின் உறைவிடமாகவும் எல்லா இந்து மத விழாக்களும் தொத்து நோய்களின் பிறப்பிடமாகவும் இருந்து வருகின்றன. பிள்ளையார் ரசாயன மாசை நீரிலும் நிலத்திலும் கலக்கவே பயன்படுவதைக் காண்கிறோம். 

நமது முன்னோர்கள் இல்லறம்- துறவறம் இரண்டையும் பின்பற்றினர். மதத்திற்கு மதம் பிடிக்காமலிருக்க இந்த  துறவிகள் ஞானிகளாக இருந்தனர். இவர்களாலும் பிறமதங்களின் தாக்கத்தாலும்  தெய்வத்தை வேலை வாங்க என்று பலியும் யாகமும் செய்த காட்டுமிராண்டி  கொடூர மதமாக இருந்த வேதாந்த மதம் மாறுதலுக்குள்ளாகிறது.. யுக தர்மங்கள் காட்டும் பலரக இதிகாசங்கள் புராணங்கள் பிறந்தன.பக்தி இலக்கியங்கள் தோன்றின..இரண்டுவகை கீதைகள் பிறந்தன.

 அவைகள் எல்லாம் வரலாறல்ல நமது முன்னோர்களின்  மனவோட்ட மாற்றங்களைப் பிரதிபலிக்கும் கற்பனை படைப்புகள். உணவு தேடி புலம் பெயருகிற மானுடத்தின் மனோநிலையிலிருந்து கூடி வாழவாழ அவசியமான மனோநிலை வரலாற்று ரீதியாக வளர்வதைக் கணக்கிட இந்த படைப்புகள் புலன் விசாரணை செய்ய உதவும் தடையங்களாகும். ஆனால் அதுதான் வரலாறு என்ற மூடநம்பிக்கைக்குத் தள்ளிவிடுகிற குற்றத்தைப்  பிரதமரே செய்கிறார். 

 இன்று நாம் காண்பதென்ன? நம்மைவிட நமது முன்னோர்கள் அறிவாளிகள் என்ற மூடநம்பிக்கையை வளர்த்ததால் போக்கிரிகளே துறவிகளாயினர். அவர்களது பேச்சாற்றலால்  பல வித பேராசைகளால் தத்தளிக்கும் மத்தியத்தர வர்க்கத்தை ஈர்த்தனர். இந்த துறவிகளின் முதலீடுகள்  சொத்துக்களின் மதிப்பு பல டிரில்லியன் ரூபாய்களாகும்,

 மறைந்த சத்தியசாயிபாபா  சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடியாகும். ஒரு டிரில்லியன் கோடி ரூபாய் வரவு  செலவு செய்யும் மடமென நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்து   பாபா ராம் தேவின் பதஞ்சலி சரக்கு வர்த்தகம் 11 ஆயிரம் கோடி என்று அவரே கூறுகிறார் .ஈஷா பவுன்டேஷன் சத்குரு ஜக்கி வாசுதேவ் 112 அடி உயரச் சிவனைக் கட்டி மோடியை விழுந்து கும்பிடவைத்தவர்.இவரது ஆன்மிக சரக்குகளை விற்கும் வியாபாரத்தில் பல ஆயிரம்  கோடி புரள்கிறது. மாதா அமிர்தமாயி கல்வி வியாபாரத்தில் சில ஆயிரம் கோடி திரட்டியுள்ளார்.

 மதச்சார்பற்ற மற்றும் மதச் சார்புள்ள ஆள்வோரின் தயவின்றி இவர்கள் இவ்வளவு சொத்து சேர்த்திருக்க முடியாது இதே காலத்தில் ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளாகி மதிப்பிழந்த சாமியார்களுமுண்டு.சந்திரசாமி, குர்மீத் ராம்ரகீம்சிங், அஸ்ரம்பாபு,பிரேமானந்தா,சுவாமி அமிருதா சைத்தன்யா, சுவாமி சடாசாரி சாந்த் ராம்பால், பரமஹம்ச நித்தியானந்தா இவர்கள்  அனைவரும் பாலியல் குற்றங்களால் பொது மக்கள் கோபத்திற்கு உள்ளானதால் அரசு நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்தம் வந்தது. இவர்களது பல ஆயிரம் கோடி சொத்துக்கள் சங்பரிவாரத்தின் கைகளுக்குப் போய்விட்டன..   இந்த சாமியார்களின் பண பலமே.பா.ஜ.க அரசியலின் ஆன்ம பலமானது . 

மதச்சார்பற்ற அரசியல் உண்டா?

  அரசியலில் இரண்டுவகைதான் இன்று இந்தியாவில் இருக்கின்றன ஜனநாயகத்தை மதிக்கிற அரசியல் ஜனநாயகத்தை மிதிக்கிற அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்குகிற அரசியல் அதிகாரத்தைக் குவிக்கிற அரசியல்.என்ற இரண்டுதான் உண்டு.  மதச்சார்பற்ற காங்கிரசும் அதிகாரத்தைக் குவித்தது. அடிப்படை உரிமைகளைப் பறித்தது. பொருளாதார கொள்கையிலும் பா.ஜ.க காங்கிரசையே காப்பி அடிக்கிறது. மாநில உரிமைகளைக் காங்கிரசைவிட ஒரு படி மேலே போய் பறிக்கிறது.

PM Modi: மோடி: அன்று மைக் பிடித்தார் ...

இந்திய அரண்மனை அரசியலும் ஆன்மீகமும். 

 இந்திய அரசமைப்பு உருவான பண்டைய காலத்திலிருந்து ஆளுவோரின் மதநம்பிக்கைகள் பின் நாளில் விடுதலை இயக்கத்தினரின் மதநம்பிக்கைகள் இவைகளை பரிசீலித்தால் இரண்டுவகையான ஆன்மீக அரசியல்கள் மோதியதைக் காணமுடியும்.

 அசோகர், அக்பர், காந்தி இவர்கள் வழியில்  உருவாகும் மதநல்லிணக்க ஆன்மீக அரசியல் இதற்கு நேர் எதிராக அவுரங்கசீப், பிரிட்டிஷ் அதிகாரிகள் . கோல்வால்கர் வழியில் உருவாகும் மதவெறி ஆன்மீக  அரசியல் என்று இரண்டு ரகமும் போட்டி போட்டன..

பிரிட்டிஷ் அரசு இந்துத்துவா அரசியலை வளர்த்தெடுக்கக் கையாண்ட யுக்திகள் பல. அதில் ஒன்றுதான் பாபர்மசூதிக்கடியில் ராமர் பிறந்தமிடமிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பியது. கும்பமேளா போன்ற ஷேத்திராடனம். துவரகா.உஜ்ஜெயஜனி.வார்னாசி ஹரிதுவார் காஞ்சி புனித ஷேத்திரங்கள் என்பதை பிரிட்டிஷ் அதிகாரிகள் அங்கீகரித்து பெரும் திரளாக மக்கள் குவிய உதவினர். போன ஆண்டு காஞ்சியில் அத்திவரதரை தரிசிக்க 50 லட்சம் மக்கள் திரண்டனர் இதில் எத்தனை பேர் பக்தியால் வந்தனர் என்று கணக்கிடமுடியாது.. இன்று மோடி அயோத்தியைப் புனிதமாக்குகிறார். தமிழக பா.ஜ.க ராமேஸ்வரத்தையும் ஆக்கிட கோருகிறது. 

புராதன அலகாபாத்  கும்பமேளாவை பெருந்திரள் மக்கள் கூடும் விழாவாக ஆக்கிட  பிரிட்டிஷ் அரசு எடுத்த நடவடிக்கைகளை பேராசிரியர் காமா மாக்களின் எழுதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்ட  “தி மாடர்ன் பிகினிங் ஆப் தி ஏன்சியன்ட் கும்பமேளா இன் அலகாபாத்” (இன்று அதன் பெயர் பிரயாக்ராஜ்) என்ற புத்தகம் பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  பெரும் திரள் மக்கள் பங்கேற்கும் விழாவாக மாற்றி நதிகளை அசுத்தப்படுத்தும் பண்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறது. 

 கேள்வி யென்னவெனில் அசோகர் அக்பர்.காந்தி காட்டிய ஆன்மீகத்தைப் பின்பற்றாமல்  மதவெறி கோல்வால்கர், மோடி வழியில் மக்கள் திரளுவதைப் புரிந்து கொள்வது எப்படி இன்றைய இந்தியப் பொருளாதார கட்டமைப்பே இதற்குக் காரணமாகும் 

பெரும்பாலான உழைக்கும் மக்களை நவீன தொழில்களோடு இனைக்காமலே  கோவில் திருவிழாக்கள், குடும்ப விழாக்கள்  சார்ந்த  கைத் தொழில்களையே பிழைக்கும் வழியாக்கிவிட்டன. அயோத்தியில் மோடி ராமர் கோவிலுக்குப் பூமி பூசை செய்கிற தேதியன்று ஒரு லட்சம் லட்டுகள் பிரசாதமாக அயோத்தியில் வழங்கப்பட்டன. . தோரணங்கள் கட்அவுட்டுகள் என்று அன்றுமட்டும் செலவான பல நூறு கோடிகளில் உழைப்பாளிகள் கையில் சில நூறாவது சேர்ந்திருக்கும்

  கோவில் விழாக்கள் என்பது பல நூறு கோடி புரளும் சேவைத் தொழிலாகும் இந்து திருமணம் என்பது மிகப் பெரிய தொழிலாகிவிட்டது 90 சத உழைப்பாளிகளின் வாழ்வாதாரமாக இவைகள் இன்றுள்ளன.

   நவீன அறிவியல்  தொழில் நுட்ப பார்வை கொண்ட கல்வி எல்லா மட்டங்களிலும் இலவசமானால் இந்துத்துவா அரசியல் கலவரமில்லாமலே அஸ்தமனமாகும் இல்லையெனில் தன்னெழுச்சி பூமியாக இந்தியா மாறும். 

One thought on “ ராமர் கோவிலும், அரசியலும் – வே .மீனாட்சிசுந்தரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *