வேலைவாய்ப்பும் கோவிட்-19-ம் தமிழ்நாட்டில் நிலவும் போக்குகளும், பிரச்சனைகளும் – ப.கு. பாபு, விகாஸ்குமார் மற்றும் பூனம்சிங்

(* சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (Madras Institute of Development Studies)>[email protected]

** அஸீம் பிரேம்ஜி பல்கலைக் கழகம், பெங்களூரு (Azim Premji University, Bangaluru) >[email protected]

*** தேசிய தொழிற்பணி பொறியியல் கழகம், மும்பை (National Institute of Industrial Engineering) >[email protected])

கோவிட்-19 நோய்த்தொற்று உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களைச் சீர்குலைத்து, ஊரடங்குக்கு மத்தியில் வேலைவாய்ப்பைத் தக்கவைப்பது எப்படி என சவாலான பணியைகொள்கை வகுப்பவர்களுக்கு வழங்கியுள்ளது. நாட்டின் மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகவும், அதேவேளையில் மிக மோசமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகவும்உள்ள தமிழகம் எதிர்கொள்ளும் சவால்களை சுருக்கமாக இந்தக்கட்டுரைஆராய்கிறது.

தொற்றுநோய் பரவலுக்கு முன்பாகவே வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்பின்மை குறித்த விவாதங்கள் அறிவுபுலம்சார் மற்றும் அரசியல் சார்ந்த தளங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து2017 நவம்பர் 7ல்பணமதிப்புநீக்க நடவடிக்கை மற்றும் 2017 ஜூலை 1ஆம் தேதி புகுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைவரி (GST) வீழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு மதிப்பிட உதவும் விதமாக, தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சீர்குலைவை ஒரு பெரிய வரைபடத்தில்(larger canvas) பதிவு செய்வது பயனுள்ளதாக இருக்கும். பெரிய உற்பத்தியைக் கொண்டுள்ள, வெளியிலிருந்து அதிகமாக வருகின்ற புலம்பெயர்ந்தவர்களைப் பெறுகின்ற இதர மாநிலங்களுடன் ஒப்பிடுவதும் அறிவுறுத்துவதாக இருக்கும். சிறிய உற்பத்தித்துறையைக் கொண்டுள்ள, ஆனால் நாட்டின் இதர பகுதிகளுக்குப் புலம்பெயர்வோரின் பெரும்தோற்றுவாயாக இருக்கும் ஒரு பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தையும் நாங்கள் சேர்த்துள்ளோம்.

தரவுகள்

நீண்ட ஊரடங்குகளின் மூலமாக தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வாய்ப்பின் விலையை மதிப்பிடுவது மற்றும் முன்னோக்கிச் செல்ல வேண்டிய வழியைக் கண்டறிவது ஆகியவை அரசாங்கத் தரவுகளின் போதாமையால் தடைபடுகின்றன1. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (CMIE) வேலை வாய்ப்புத்தரவுத் தொடர் ஒப்பீட்டளவில் புதியது என்றாலும் அதன் தரவை நாம் நம்பியிருக்க வேண்டியுள்ளது, ஏனெனில் இது மே 20202வரையிலான தரவுகள் இந்த ஆய்வுக்கான ஆதாரங்களில் ஒன்றாகும். வேலைவாய்ப்பின் மீது தொற்றுநோயின் தாக்கத்தைப் புரிந்து கொள்வதற்குCMIE ன் இந்திய மாநிலங்கள் வாரியான (மாதாந்திர) தரவுத்தளத்தை (States of India {Monthly}) நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்தத் தரவுகளில் தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய மாநிலங்களை உள்ளடக்கிய 2016 ஜனவரி முதல் 2020 மே வரையிலான காலத்திற்கு தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறித்த மாதாந்திர அவதானிப்புகள் உள்ளடங்கும். பகுதி (நகர்ப்புற-கிராமப்புற), பாலினம் (ஆண்-பெண்) மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட தாழ்மட்டத் திரட்டுகளில் (lower levels of aggregation) வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களையும் CMIE வழங்குகிறது.

ஊரடங்கின் காரணமாக CMIE ன் கணக்கெடுப்புகளின் வரம்பு அளவு குறைந்துள்ளது, அத்துடன் மாதிரி அளவுகடுமையாகக் குறைந்துள்ளது. இதில் தொடர்புடைய சில விபரங்கள்  கவனிக்கத்தக்கவை. முதலில், மாதிரி அளவு குறைந்திருப்பதால் முந்தைய காலகட்டங்களுடன் மார்ச், ஏப்ரல் மாதத்தில் மற்றும் மே மாதங்களுக்குரிய தரவு ஒப்பிடத்தக்கதல்ல. இரண்டாவது, தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கணக்கெடுப்பிலிருந்து விடுபடும் வாய்ப்பு உள்ளதால் தொழிலாளர்களின் உண்மையான பங்கேற்பு விகிதம் இன்னும் மோசமாகலாம். மூன்றாவது, மாதிரி ஆய்வு செய்யப்படாததால் ஏற்படும் மாற்றங்களால்,மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பு குறிகாட்டிகளில் ஏற்படும் மாற்றங்கள் எந்த அளவிற்கு இயக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. நான்காவதாக, வழக்கமான மாதிரி அளவைக் காட்டிலும் சிறியது என்பதாலும், ஆய்வுக்கு உட்படாத வகைகளில் உள்ள அறியப்படாத வேறுபாடுகள் காரணமாகவும் கிராமப்புற, கல்லூரி பட்டதாரி பெண்கள் போன்ற நுண்மையான வகைகளின் மீது ஏற்படும் தாக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்தத் தரவைப் பயன்படுத்த முடியாது.

தொழிலாளர் பங்கேற்பு மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் போக்குகள்

குறுகியகாலப்போக்குகள்

2020 மார்ச் பிற்பகுதி மற்றும் ஏப்ரல் மாதத்தில் கடுமையான ஊரடங்கின் போது தமிழகத்தின் வேலையின்மை 4 கடுமையாக வீழ்ச்சியடைந்தது. ஆனால் ஓரளவுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது மே மாதத்தில் பெருமளவு திருப்பம் பதிவானது. இருப்பினும், மே மாதத்தில் குறைந்த விகிதத்தில் இருந்தாலும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் தொடர்ந்து சரிந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டது தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப அனுமதித்தாலும் வேலைக்குத் திரும்ப அவர்கள் இன்னும் தயங்குகிறார்கள்அல்லது போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்கள், தகவல் பற்றாக்குறை மற்றும் நோய் பயம் காரணமாக திரும்ப முடியவில்லை.

சமமற்ற தாக்கம்

சாதி மற்றும் மதம் சம்பந்தப்பட்ட போக்கு தெளிவாகத் தெரியவில்லை. எனினும்,நகர்ப்புறங்கள், ஆண்கள் மற்றும் உயர்கல்வி பெற்றவர்கள் விஷயத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதத்தின் சரிவு வேகமாக உள்ளது. கல்வியற்றவர்களின் 5 மத்தியில் வேலையின்மை அதிகரிப்பதும் அதை அடுத்துக் குறைவதும்மிகப்பெருமளவுஏற்பட்டுவருகிறது.கல்லூரிப் பட்டதாரிகளை விட இடைநிலை அளவில் பள்ளிக் கல்வி பெற்றவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் அவர்களின் விஷயத்தில் வேலையின்மை குறைவதும் மெதுவாக நடந்து கொண்டிருக்கும்போது, உழைப்பில் அவர்கள் பங்கேற்கும் விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. கல்வியின் அளவை திறனுக்கான மாற்றாகக் கருத முடியுமானால், திறமையான மற்றும் திறமையற்ற பணியாளர்களைக் காட்டிலும்முழுத் திறனற்ற கொண்ட பணியாளர்களை ஊரடங்கு பாதித்திருப்பதாக தரவு தெரிவிக்கிறது.

நீண்டகாலப்போக்கு

CMIE தரவுகளின்படி, குறைந்தபட்சம் ஜனவரி 2016 முதல்தொழிலாளர் பங்கேற்பு வீதத்தில் தொடர்ந்து சரிவை கண்டுள்ளது 6 என்று உள்ளது.(படம் 1).

படம் 1: தமிழ்நாடு: தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் (தொபவி), வேலைவாய்ப்பின்மை விகிதமும் (வேவி)(ஜனவரி 2016 — மே 2020)

குறிப்பு: பஇ – படிப்பு இன்மை; 5 வவ – 5 வகுப்பு வரை; 6-10 வவ – 6-10 வகுப்பு வரை; 10-12 வவ – 10-12 வகுப்பு வரை; பப&மேல் – பட்டப்படிப்பு & அதற்கு மேல்.

Source. Prepared using Centre for Monitoring Indian Economy. States of India (Monthly).

இருப்பினும்,தொழிலாளர் பங்கேற்பின் மீது பணமதிப்பு நீக்கத்தின் விளைவாக தொழிலாளர் பங்கேற்பு வீதம் எதிர்மறையாக இருப்பினும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகுதொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. 7ஜிஎஸ்டி விஷயத்தில், நகர்ப்புறத்தில்மட்டும்தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில்ஒரு குறிப்பிடத்தக்க சரிவு உள்ளது. கோவிட்-19 பரவல் மூலமாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற வட்டாரங்களில்8 தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறிப்பிடத்தக்க சரிவை அடைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள்

சராசரி நிலை கொண்டுள்ள மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைவாக இருக்கிறது. ஏப்ரல்,மே மாதங்களில் சராசரிநிலை கொண்டுள்ள மாநிலங்களுடன் ஒப்பிடும்போது வேலையின்மை விகிதம் அதிகமாக இருக்கிறது (அட்டவணை 1).

முக்கிய மாநிலங்கள் வேலையின்மை விகிதத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை பதிவு செய்த போதிலும், சராசரி மாநிலத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொற்றுநோய் தொடங்கிய பின்னர் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் வேலைவாய்ப்பு குறிகாட்டிகள் மோசமாக உள்ளன. இன்னும் குறிப்பாக,தொழிலாளர் பங்கேற்பு வீதத்தின் போக்குமற்ற தென்னிந்திய மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களிலிருந்து தமிழகம் வேறுபடுகிறது (படம் 2). இதர மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் நகர்ப்புற தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மே மாதத்தில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது.

அட்டவணை 1

தமிழ்நாட்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலையின்மை விகிதம்

தொழிலாளர் பங்கேற்பு விகிதம்

மே

குறைவு

அதிகம்

ஏப்ரல்

குறைவு

கேரளா, டெல்லி, ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா#

இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், அஸ்ஸாம், ராஜஸ்தான்

அதிகம்

மத்திய பிரதேசம்,## குஜராத், சத்தீஸ்கர், ஜார்கண்ட்

பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, கர்நாடகா, ஹரியானா

தொழிலாளர் பங்கேற்பு விகிதம்

மே

குறைவு

அதிகம்

ஏப்ரல்

குறைவு

சத்தீஸ்கர், உத்தரகாண்ட், அஸ்ஸாம், மேற்கு வங்கம், ராஜஸ்தான்#

இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், தெலுங்கானா, மத்திய பிரதேசம், டெல்லி. கேரளா

அதிகம்

குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம்,## ஒடிசா, கர்நாடகா

ஹரியானா, ஜார்கண்ட், தமிழ்நாடு

குறிப்பு: இது 21 முக்கிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது.  #ஏப்ரல்மாதத்தில் மத்தியதர மாநிலம்; ##மே மாதத்தில் மத்தியதர மாநிலம்.

Source. Prepared using Centre for Monitoring Indian Economy. States of India (Monthly).

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை போல, தமிழ்நாடும் ஒரு பெரிய உற்பத்தித் துறையைக் கொண்டிருப்பதில் பெருமிதம்கொள்கிறது, கோவிட்-19 பரவலின் தாக்கத்தால் மிக உயர்ந்த பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் நான்கு மாநிலங்களில் இந்த மாநிலங்களும் உள்ளது. ஒன்றும் தற்செயலானதல்ல. நகர்ப்புற தமிழ்நாட்டில் மே மாதத்தில் வேலையின்மை விகிதம் வெகுவாகக் குறைந்து வந்தபோது, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதுதொடர்ந்து உயர்ந்து வந்ததுகுறிப்பிடத்தக்கது.9 சுவாரஸ்யமாக, கர்நாடகா, ஹரியானா, மற்றும் தெலுங்கானா போன்ற மென்பொருள்/புதியபொருளாதார மையங்கள்,தொழிலாளர் பங்கேற்பு வீதத்தில் மிகக் கூர்மையான சரிவைக் காணவில்லை; முதல் இரண்டும் அதிகரிப்புகளைக் கண்டன. பெரும்பாலான மாநிலங்களில், கிராமப்புற தொழிலாளர் பங்களிப்பு அதிகரித்ததற்கு ஒரு வேளை அறுவடை தொடர்பான நடவடிக்கைகள், மற்றும் கோவிட்-19 இன் தொற்றுக்குறைவு, நகர்ப்புறத்தில் குடியேறி இருந்தவர்கள் (வெளியேறி விட்டு மீண்டும்) திரும்பி வருவது ஆகியவை காரணமாக இருக்கலாம். இருப்பினும்,ஏப்ரல், மே மாதங்களில் கிராமப்புற தமிழ்நாடு தொழிலாளர் பங்கேற்பில் வீழ்ச்சியை சந்தித்தது.

படம் 2: மாநிலங்களின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (தொபவி) மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் (வேவி)

Source. Prepared using Centre for Monitoring Indian Economy. States of India (Monthly).

தமிழ்நாட்டில் தொழில்கள் சந்திக்கும் சவால்கள்

CMIE தரவுகளின் படி, அறிவிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் நீண்ட கால சரிவுக்கு, ஒரு புறம்,பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அறிமுகம் போன்ற பொதுவான பொருளாதார அதிர்ச்சிகள்,மறுபுறம், மாறிவரும்சூழல், சுற்றுச் சூழல் கட்டுப்பாடு இறுக்கப்படுவது, அதிகரித்து வரும் சர்வதேசப்போட்டி போன்ற தொழில்துறை சார்ந்த சிக்கல்களின் கலவை, ஆகியவை காரணமாக இருக்கலாம். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியின் அறிமுகம் ஆகியவை ஏராளமான சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களைக் கொண்ட சிவகாசி பட்டாசு தொழில் மற்றும் திருப்பூர் ஜவுளித் தொழில் போன்றவற்றைமிக மோசமான பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றன. பணமதிப்புநீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றுடன் மின் பிரச்சினைகள் மற்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு மானியம் வழங்குவதில் தாமதம் காரணமாக 2017 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 50,000 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது (எல். ராஜகோபால், 2018).#

அவ்வப்போது பல அதிர்ச்சிகளைக் கடந்துவரும்பட்டாசுத் தொழில், சவால்களின் பல பரிமாணத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 90% இந்த நகரத்தில் நடைபெறுகிறது, இது மிகப்பெரிய உள்ளூர் வேலைவாய்ப்புகளில் ஒன்றாகும், இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்துள்ளது.இதில் பல படிப்பறிவில்லாப் பெண்களும் அடங்குவர் (ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ், 2019).##இந்தத்தொழில் குறைந்தது மூன்று சவால்களை எதிர்கொள்கிறது. முதலாவதாக, மாசுபடுத்தும் தொழில்களை புறக்கணிக்கக் கோரும் பிரச்சாரங்களால் அது பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, ஒழுங்குமுறைச் சூழலில் ஏற்பட்ட மாற்றத்தால் இது பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. உச்சநீதிமன்றத்தின் அக்டோபர் 2018 தீர்ப்பு பசுமை மற்றும் மேம்பட்ட பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதிக்கிறது, அத்துடன் பட்டாசு தயாரிப்பில் பேரியம் சல்பேட்டையும் தடை செய்கிறது (கே. ராஜகோபால், 2018).###மூன்றாவதாக, சீனாவிலிருந்து மலிவான பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் தொழில்துறை சார்ந்த போட்டியையும் எதிர்கொள்கிறது. எனவே, இத்தொழில்துறை மாறிக்கொண்டிருக்கும் ரசனை மற்றும் ஒழுங்கு முறைகளையும், வளர்ந்து வரும் சர்வதேச போட்டியையும் சமாளிக்க வேண்டும். இது திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மண்டலம் மற்றும் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மண்டலத்தில் உள்ள பிற தொழிற்பேட்டைகளுக்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டின் பிற தொழில்களும்தொற்றுநோய்க்குஅப்பாற்பட்டசுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டுள்ளன. தொழிற்சாலையால் ஏற்பட்ட கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிரஉருக்காலை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து தேவையான ஒப்புதல்களைப் பெறத் தவறிவிட்டது (வைத்தீஸ்வரன் &மஜும்தார், 2018).+ 2018 ஆம் ஆண்டில், சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த தொழிற்சாலையை தமிழக அரசு மூட வேண்டியிருந்தது. அதேபோல், வேலூரில்உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு ஆகியவற்றிலுள்ளஜவுளி (மற்றும்பின்னலாடை) தொழில்களும்அதிகரித்து வரும்மாசுகட்டுப்பாட்டு செலவினங்களை எதிர்கொள்கின்றன. ஜவுளித் தொழில்களால் அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாலும், கழிவுகள் வெளியேற்றப்படுவதாலும் திருப்பூர் சுற்றுச்சூழல் ‘இருண்ட இடம்’ என்று குறிப்பிடப்படுகிறது (தேஷ்பாண்டே, 2020).++தொழில்துறை மாசுபாடு, ‘விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் உற்பத்திசெய்யும் சாத்தியத்தை மோசமாக பாதித்தது மட்டுமல்லாமல், தொழில்துறையில் பொருளாதார வாய்ப்புகளையும் கணிசமாகக் குறைத்துள்ளது’ (வெங்கடாச்சலம், 2015: 173). +++

முன்னோக்கிய பாதை

கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் விளைவாக பொருளாதார தாக்கத்தைப் பற்றிமுறையாக ஆய்வுசெய்வதற்கு தொற்றுநோயியல், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார செயல்பாடுகளின் மாதிரிகளை ஒன்றிணைக்கவேண்டும். இந்த சுருக்கமான குறிப்பு ஆரம்பகால போக்குகளில் சிலவற்றை முன்னிலைப்படுத்த முயற்சித்திருக்கிறது. தொடர்ந்து இரண்டு மாதங்களில் தொழிலாளர் பங்களிப்பு குறைந்த நகர்ப்புற மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின்அனுபவத்துடன் தமிழகத்தின் அனுபவம் ஒத்துப்போகிறது என்று CMIE தரவு தெரிவிக்கிறது. கோவிட்-19 ஆல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் இந்த மூன்றும் உள்ளதோடு, நாடு முழுவதும்ஏற்பட்டுள்ளநோய்த்தொற்றில் பாதிக்கும் மேற்பட்டவைஇவற்றில்தான்பதிவாகி உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.

பெருமளவில் உற்பத்தியை அதிகம் சார்ந்திருக்கக் கூடிய தமிழகம் போன்ற மாநிலங்கள், வேலையைவீட்டிற்கு மாற்றுவதற்கான இயலாமை மற்றும் பணியிடத்தில் சமூக விலகலைப் பராமரிப்பதற்கான தேவைகள் காரணமாக கோவிட்-19 க்கு முந்தைய பொருளாதார நடவடிக்கைகளுக்கு தாமதமாக திரும்புவதைக் காணலாம். அத்துடன்,தமிழகத் தொழில்களும் விவசாயத் துறையும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அதிகம் நம்பியுள்ளன, ஏனெனில் பெரும்பாலான பூர்வீகத் தொழிலாளர்கள் படித்தவர்களாக, திறமையற்ற வேலைகளில்ஈடுபட விரும்பாதவர்களாகஇருக்கிறார்கள். உதாரணமாக, “திருப்பூர் மற்றும் தேசிய தலைநகர் பிரதேசத் தொழிற்பேட்டைகளைப் பற்றிய ஆய்வுகள் 70-100 சதவீத தொழிலாளர்கள் பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் பிற ஏழை மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள்,” என்பதைக் காட்டுகின்றன (தேஷிங்கர், 2020). & இந்த தொற்று சூழ்நிலையில் இது இரட்டை சவாலை முன்வைக்கிறது: ஒருபுறம், தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு மீண்டும் இடம்பெயர்ந்ததன் காரணமாக திறன்குறை தொழிலாளர்கள் பற்றாக்குறையை மாநிலம் எதிர்கொள்கிறது, மறுபுறம், வேலை தேடும் திறன்மிகு தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். எனவே, குறைந்த பட்சம், குறுகிய காலஅளவில், அரசு ஒரு திறன் பொருத்தமின்மையை எதிர்கொள்கிறது. திறன்குறை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஈர்ப்பதற்கும், தொழில்களை மறுதொடக்கம் செய்வதற்கும் உகந்த சூழலை அரசு உருவாக்க வேண்டும்,அவ்வாறில்லாமல் முழுமையற்ற திறன்கொண்ட மற்றும் முழுத்திறன் கொண்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த முடியாது.

சமூக வேறுபாடுகளையும் அரசாங்கம் உணர வேண்டும். மே மாதத்தில்ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், ஆண்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களைப்பொறுத்தவரை வேலையின்மை வேகமாக குறைதுள்ளது. மேலும், உயர்கல்வி பெற்றவர்கள் விஷயத்தில் வேலையின்மை மிகக் குறைவாக இருந்தது. பெண்கள் மற்றும் கல்லூரிக் கல்வி பெறாதவர்களை மீண்டும் உழைப்புப்படைக்குள் கொண்டு வருவதில் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

எவ்வாறாயினும், தமிழ்நாட்டின் தொழில்துறை துயரங்கள் தொற்றுநோய்க்கு முந்தியவை என்றும் அதைக் கடந்தும் அவை தொடரும் என்றும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில்உள்ள நடுத்தர மற்றும் சிறிய அளவிலான தொழில்கள்அனைத்தும் மாறிவரும் ரசனைகளையும், கடுமையாகிவரும்சுற்றுச்சூழல்கட்டுப்பாட்டுவிதிகளையும், அதிகரித்துவரும் சர்வதேசப் போட்டியையும் சமாளிக்கும் சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் சவால்களுக்கான பதில் MSME-களை முழுமையாக இழுத்து மூடுவதல்ல. சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியதொழிற்பேட்டைகள் ஆர்&டி அமைப்பில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது சுற்றுச்சூழல் அல்லது ஒட்டுமொத்த சமூக நலனை மனதில் வைத்துக்கொண்டு,தொழில்நுட்ப நெருக்கடிகளைச் சமாளித்து முன்னேறுவதற்கு, அரசாங்கம் பொது ஆர்&டி முதலீட்டில் இறங்க வேண்டும்.

பொருளாதார நடவடிக்கைகள் மீதான மொத்த தடைகள் பெரும்பாலும் ஒரு நல்வாழ்வு மாநிலத்தில் எதிர் விளைவை ஏற்படுத்தக்கூடியவை. உதாரணமாக, நம்மைப் போன்ற நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை மீது ஒரு முழுமையான தடைஎன்பது குழந்தைகளையும் அவர்களது ஏழைக் குடும்பங்களையும் கொத்தடிமைஉழைப்பு, மிகக் குறைந்த ஊதியங்கள் அல்லது குழந்தை விபச்சாரம் போன்ற தீவிர வகை வேலைகள் போன்ற மிக மோசமான உழைப்பு வடிவங்களுக்குத் தள்ளக்கூடும் என்ற உண்மையை அரசாங்கம் மறக்க முடியாது(பாசு, 1999).&& அரசாங்கங்களும் நீதிமன்றங்களும் விரும்பத்தகாத ஆனால் தவிர்க்க முடியாத வர்த்தக பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகளை மனதில் கொள்ள வேண்டும். திண்டுக்கல் போன்ற இடங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்படுவது அவற்றில்ஒன்று. உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான தடையின் விளைவு ஒருதலைப்பட்சமான தீர்வுகளின் தாக்கத்தைவிளக்குகிறது- இழந்த வேலைவாய்ப்பு மற்றும் தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் பாதிப்புகள்ஆகியவற்றின் இரட்டைத்தாக்குதல். திரும்பி வரமுடியாத நிலையை எட்டுவதற்கு முன்னதாக இரண்டையும் காப்பாற்றுவதற்கு, சாத்தியமான தணிப்பு உத்திகளை (மொண்டல்&சிங், 2011)&&& ஆராய்ந்திருக்கலாம்.

ஒட்டு மொத்த பொருளாதார சூழ்நிலை இருண்டதாக இருந்தாலும், தற்போதைய நெருக்கடி தன்னகத்தே ஆற்றுப்படுத்தும் ஒரு வெளிச்சக்கீற்றைக் கொண்டிருக்கலாம். பலவிதமான பொருட்களுக்காக இந்தியா மற்ற நாடுகளை, குறிப்பாக சீனாவை,சார்ந்திருப்பதைஇந்த தொற்றுநோய் அம்பலப்படுத்தி உள்ளதுடன், வெளிநாடுகளைஅவ்வளவாகச் சார்ந்திராத விநியோகச் சங்கிலிகளைவிரைவாகக்கட்டமைக்குமாறு அரசாங்கத்தை உசுப்பிவிட்டிருக்கிறது. ஒரு இணையான வளர்ச்சிப்போக்கில், லடாக்கில் நடைபெற்றதுரதிர்ஷ்டவசமான எல்லை மோதல் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதற்கும் மக்களின்உறுதிப்பாட்டைஇன்னும்வலுப்படுத்தி உள்ளது.தொடர்ச்சியான பொருளாதாரஅதிர்ச்சிகளால்தாக்கப்பட்டுள்ள உள்நாட்டு தொழில்கள் மீண்டும் உயிர்த்தெழுவதற்கு மிகவும் தேவையான மூச்சுவிடும் நேரத்தை இந்த வளர்ச்சிப் போக்குகள் வழங்கக்கூடும். வேகமாக உருவாகி வரும் புதிய பொருளாதார சூழல் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கும் மாநிலங்கள் வேகமாக மீண்டெழுந்துவிடும். புதிதுபுதிதாகஉருவாகி வரும் சவால்களை சமாளிப்பதற்கு, வழி மரபாக வரும் கொள்கை அணுகுமுறைகளுக்கு அப்பாற்பட்டுப் புதுமையான தீர்வுகளைமாநில அரசாங்கங்கள் பின்பற்ற வேண்டும். இதற்கு, மாறிவரும் பொருளாதார நீரோட்டங்களுக்கு ஏற்ப விரைவாகத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

அறிக்கைகள் வெளியீட்டில் நீண்ட இடைவெளிகளுடன் கூடிய பெரிய அளவிலான தேசிய கணக்கெடுப்புகளுக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும், குறைவான துல்லியமானதாக இருந்தாலும், கொள்கை வகுப்பதில் தவறாமல் ஊட்டமளிக்கும் துல்லியமான முடிவுகளை மையப்படுத்திய தேவை அடிப்படையிலான ஆய்வுகளுக்கு மாநில அரசுகள் ஆணையிட வேண்டும்.

———————————————————————————————————————-

1இந்தியாவில் கொள்கை வகுப்பாளர்கள் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு இதுவரை பின்வருபனவற்றைச் சார்ந்திருந்தனர் (தரவு கிடைக்கக் கூடிய கடைசி ஆண்டு அடைப்புக்குறிக்குள் குறிக்கப்படுகிறது): தசாப்தமக்கள் தொகை கணக்கெடுப்பு (2011),

தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தால் நடத்தப்பட்ட காலாண்டு வேலைவாய்ப்பு- வேலையின்மை ஆய்வுகள்- (2011–2012),

தொழிலாளர் பணியகம் (2015), ஆண்டு வேலைவாய்ப்பு–வேலையின்மை ஆகியவற்றின் ஆய்வுகள்

தொழிலாளர்பணியக (Labour Bureau) காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வுகள் (2017).

இந்தஆதாரங்களில்எதுவும் சமீபத்திய ஆண்டுகளுக்கான தகவல்களை வழங்கவில்லை.

எனவே, 2017 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வக அலுவலகத்தால் நடத்தப்பட்ட குறிப்பிட்ட கால கட்டத்தின் தொழிலாளர் படை ஆய்வு (Periodic labour force survey-PLFS)ஒன்று தான் பணமதிப்பு நீக்கத்திற்குப் பிந்தைய கால கட்டத்திற்குள்ள ஒரே அரசாங்க ஆதாரமாகும். இருப்பினும், இந்த PLFS ஒரே ஒருஅவதானிப்பைத்தான் வழங்குகிறது, அதையும்கூடதேசியமாதிரிஆய்வின் 68வது சுற்றுடன் ஒப்பிட முடியாது.  (தேசிய புள்ளிவிவர அலுவலகத்தில் பக்.1–5. 2019. ஆண்டு அறிக்கை, குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பு (ஜூலை 2017 – ஜூன் 2018).புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், இந்திய அரசு.

22016 முதல் வேலைவாய்ப்பு குறித்த மாதாந்திர தகவல்களை CMIE வெளியிட்டுள்ளது, பொருளாதாரம் பல அதிர்ச்சிகளைச் சந்தித்த மிக சமீபத்திய காலத்திற்கான மிகச் சில மூலாதாரங்களில் இது ஒன்றாகும். CMIE மாதிரி சட்டகம் மற்றும் வழிமுறை (CMIE, 2020: 194) செப்டம்பர் 2017-க்குப் பிறகு மாற்றப்படாமலிருப்பதால்,தொழிலாளர் பங்கேற்பு வீதத்தின் அளவின் மதிப்பீடுகளுடைய துல்லியம் பற்றி ஏதேனும் கவலைகள் இருந்தாலும் மாற்றத்தின் திசையை ஊகிக்க அவர்களின் தரவை நம்மால் பயன்படுத்த முடியும்.

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம். 2020.

இந்தியாவில் வேலையின்மை: ஒரு புள்ளி விவர விவரம்,

ஜனவரி-ஏப்ரல் 2020.

 

3 பெர்ட்ராண்ட் மற்றும் பலர். (2020) ஊரடங்கின் மத்தியில் அதன் வழக்கமான 45 சதவிகிதம் மாதிரியுடன் சிபிஎச்எஸ் தொடர்ந்து இயங்கி வந்தது என்பதை நினைவில் கொள்க. ‘இருப்பினும், மாதிரி ஆய்வுமேற்கொள்ளப்படாதபரப்பளவு மற்றும் இடஞ்சார்ந்த விநியோகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் எங்களால் பெற முடியவில்லை. 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய வேலையின்மை குறித்த சமீபத்திய CMIE அறிக்கை இந்த விஷயத்தில் (CMIE, 2020) மௌனம் சாதிக்கிறது. பிற தரவு சேகரிப்பு முயற்சிகளும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது (பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, 2020).

மரியான் பெர்ட்ராண்ட், கௌசிக் கிருஷ்ணன், & ஹீதர் ஸ்கோஃபீல்ட்.

2020,மே 11.

கோவிட் -19முடக்கத்தின் கீழ் இந்திய குடும்பங்கள் எவ்வாறு சமாளிக்கின்றன? 8 முக்கிய கண்டுபிடிப்புகள் (வலைப்பதிவு). சமூகத்துறை சார்ந்தருஸ்டாண்டி கண்டுபிடிப்பு மையம், சிகாகோ பல்கலைக்கழகம்; இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம். 2020. இந்தியாவில் வேலையின்மை: ஒரு புள்ளிவிவர விவரம்,ஜனவரி-ஏப்ரல் 2020;

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா. 2020,ஜூன் 12. ஏப்ரல் மாதத்திற்கான முழு ஐ.ஐ.பி தரவை அரசு நிறுத்திவைத்திருக்கிறது. அவுட்லுக்.

4 வேலையின்மை விகிதம் ‘வேலை செய்யத் தயாராக இருக்கும் வேலையற்றோர் மற்றும் தீவிரமாக வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கையாகக் கணக்கிடப்பட்டு தொழிலாளர் சக்தியின் சதவீதம்’, என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்.2020. இந்தியாவில் வேலையின்மை: ஒரு புள்ளி விவரம் சுயவிவரம், ஜனவரி-ஏப்ரல் 2020. ப. 191 இல்.

5 பிப்ரவரியில் தரவு எதுவும்இல்லாததாலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான தரவு 100% வேலையின்மை முதல் பூஜ்ஜியம் வேலையின்மை வரை கட்டுப்பாடில்லாமல் ஊசலாடுவதாலும் இதுமாதிரிகளெல்லாம் கலந்து உருவான ஒரு கட்டற்ற கலைப்பொருள் போலத் தோன்றுகிறது.

6 வேலைவாய்ப்புக் குறிகாட்டிகளைக் கணக்கிடுவதற்கு அடிப்படையாக பயன்படுத்தப்படும் உழைப்புச் சக்தியில்,(அ) வேலையில் இருக்கும் நபர்கள் மற்றும் (ஆ)வேலை செய்யத் தயாராக, தீவிரமாக வேலை தேடும், வேலையற்ற நபர்கள்ஆகிய ​​இரண்டு வகைகளுக்குள் வருகின்ற15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள்உள்ளடங்குவர். ப. 190, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்.2020. இந்தியாவில் வேலையின்மை: ஒரு புள்ளி விவரக் கணக்கு(Statistical profile), ஜனவரி-ஏப்ரல் 2020.

7 சுவாரஸ்யமாக, உத்தரபிரதேசத்தில், பணமதிப்பு நீக்கத்திற்கு முன்னதாகத் தொடங்கிய தொழிலாளர் பங்கேற்பின் சரிவு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் தொடர்ந்தது, அப்போதிருந்து அதுகுறைவாகவே இருந்து வருகிறது.

8ஆண்டு மற்றும் மாதம் சார்ந்த குறிப்பிட்ட விளைவுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்ட பின்னர், பணமதிப்புநீக்கம், GST மற்றும் கோவிட் -19 ஊரடங்குமாதிரிகள் ஆகிய காலங்களை ஒட்டிய தமிழகத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற தொழிலாளர் பங்கேற்பு வீதத்தை (Labour Participation Rate-LPR) நாங்கள் மறுபரிசீலனை (regress) செய்தோம். நாங்கள் இரண்டு தனித்தனி மறுபரிசீலனைகளை நடத்தினோம், ஒன்று மே 2020 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது, மற்றொன்று 2016-2019 காலகட்டத்திற்கு உட்பட்டது. இதன் விளைவாக, பணமதிப்புநீக்கம் கிராமப்புற அல்லது நகர்ப்புற LPR ஐ அவ்வளவாகப் பாதிக்கவில்லை. மறுபுறம், ஜிஎஸ்டி நகர்ப்புற  LPR இல் குறிப்பிடத்தக்க எதிர்மறையைக் கொண்டிருந்தது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற LPRகளின்மீது கோவிட் -19 / ஊரடங்கின் உடனடித் தாக்கம் எதிர்மறையாகவும் குறிப்பிடத்தக்கவையாகவும்உள்ளன.

9 தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்திருக்குமானால் வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்கள் மேம்பட்ட நிலையில் இருக்கும் என்கிற அவசியம் இல்லை.

#எல்.ராஜகோபால். 2018, ஜூன் 9. 50,000தொழில்கள் மூடப்பட்டதற்கு மையமும்(அரசு), தமிழகமும் (அரசு)  குற்றம் சாட்டப்பட்டுள்ளன.. – புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்.

##ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ். 2019, அக்டோபர் 25.

தமிழ்நாட்டில் சிவகாசியில் உள்ள $800 மில்லியன் பட்டாசுத் தொழில்மாசு எதிர்ப்பு இயக்கத்தால் பாதிக்கப்பட்டது.- என்.டி.டி.வி.

###கிருஷ்ணதாஸ் ராஜகோபால். 2018, அக்டோபர் 23.

பட்டாசுகள் மீது முழுத்தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு. – தி இந்து.

+பரணி வைதீஸ்வரன் &ராக்கி மஜும்தார். 2018, மே 29.

தூத்துக்குடி எதிர்ப்பு: தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடுகிறது. – தி எகனாமிக் டைம்ஸ்.

++நீதாதேஷ்பாண்டே. 2020, ஃபிப்1.

இந்தியாவின் ஜவுளி நகரம்-திருப்பூர் ஒரு கரும்புள்ளி – திவயர்

+++எல்.வெங்கடாசலம்.2015

தொழிற்சாலை அரங்கத்தின் சூழல் தாக்கங்கள் : திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா ஜவுளி தொழில் அரங்கம் குறித்த ஒரு நேர்வு ஆய்வு – ரிவியூ ஆஃப் டெவலப்மென்ட் அண்ட் சேஞ், XX(2) : 165-175

&பிரியா தேஷிங்கர். 2020, ஜூன் 16.

முகமற்றவர்களும் விரட்டப்பட்டவர்களும்: இந்தியா

COVID-19 காலங்களில் சுற்றியலைந்து புலம்பெயர்பவர்கள்.

(வலைப்பதிவு). டவுன் டு எர்த்.

&&கௌசிக் பாசு.1999.

குழந்தைத் தொழிலாளர்: காரணம், விளைவு மற்றும் சிகிச்சை, சர்வதேச தொழிலாளர் தரங்களைப் பற்றிய கருத்துகளுடன். பொருளாதார இலக்கிய இதழ், 37 (3): 1083-1119.

&&&N.C. மொண்டல் &V.P.சிங். 2011.

தென்கிழக்கு இந்தியாவில் ஒரு தோல் பதனிடும் மண்டலத்திற்கான உமிழ்நீரின் நீர் வேதியியல் பகுப்பாய்வு. – ஜர்னல் ஆஃப் ஹைட்ராலஜி, 405: 235-247.

கோவிட் -19 தொடர்

நாம் ஒரு தொற்று அதிர்ச்சி மற்றும் ஆழ்ந்த பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில்இருக்கிறோம். இது அசாதாரண கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகிறது.இருப்பினும், ஒரு புதிய ஆராய்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அவசியமானவரம்பற்ற நேரம் நம்மிடம் இல்லை. இந்த நிலைமை கிடைக்கக்கூடிய தரவுகளின்அடிப்படையில் உடனடிச் சிந்தனையையும் செயலையும் கோருகிறது. அவ்வப்போதைய கொள்கை சார்ந்த கட்டுரைகளின் கோவிட் -19 தொடரில், எம்ஐடிஎஸ் அறிஞர் குழு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சிக்கல்களைப் பற்றிச் சிந்திக்கிறது, சமகால சவாலுக்கு அவர்களின் பணிகளைத் தகவமைக்கிறது, ஒன்றோடொன்று தொடர்புடைய துறைகளோடும் சிக்கல்களோடும் உள்ள தொடர்புகள் குறித்து கவனத்தை ஈர்க்கிறது, குறுகிய காலத்திலிருந்து இடைக்காலம் வரையான கொள்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது. இந்தத் தொடர்மாநிலத்தின் தொற்றுநோய்க்குப் பிந்தைய சமூக-பொருளாதாரக் கொள்கையின் வடிவமைப்பில் ஒரு பயனுள்ள உள்ளீடாக இருக்கும்.

பி.ஜி. பாபு, இயக்குநர், எம்ஐடிஎஸ்

தமிழில் : மிலிடரி பொன்னுசாமி