சரிதா ஜோவின் *மந்திரக் கிலுகிலுப்பை* – இரா. இரமணன்நூல்: மந்திரக் கிலுகிலுப்பை
ஆசிரியர் : சரிதா ஜோ
பக்கங்கள் : 120
விலை : ₹ 120.00
பதிப்பகம் : சுவடு

சிறுவயதில் அம்புலிமாமா வரும் நாளன்று பொது நூலகம் எப்போது திறக்கும் என்று காத்திருந்து சிறுவர் பகுதியான மாடிக்கு ஓடி மற்றவர்கள் எடுக்குமுன் எடுத்துப் படித்ததை நினைத்துப் பார்க்கிறேன். 70வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் என்னை இப்பொழுது மீண்டும் அந்த உலகத்திற்கு அழைத்து சென்றுவிட்டார் சரிதா ஜோ. ஆனால் அம்புலிமாமாவிலும் சரி அது போன்ற பிற சிறுவர் இதழ்களிலும் நரி என்றால் தந்திரம்,புலி என்றால் கொடூரம், பாம்பு என்றால் விஷம் என்கிற உணர்வுகளே சொல்லப்பட்டன.

‘மந்திரக் கிலுகிலுப்பை’யில் மனிதனால் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட யானை,ஒட்டகசிவிங்கி போன்ற பெரும் விலங்குகளின் பரிதாபமும் அவற்றை விடுவிக்க ரதி எடுக்கும் முயற்சிகளும் சொல்லப்படுகின்றன. கதையினூடே அமேசான் காடுகள், துருவப்பகுதிகள், பாலைவனங்கள், கடல் என புவியின் முக்கியப் பகுதிகள் குறித்தும் அங்கு வாழும் விலங்குகள் குறித்தும் சொல்லிவிடுகிறார்.

வழக்கமாகப் பாட்டிகள்தான் கதை சொல்வார்கள். இதில் பாட்டியின் அம்மா (பூட்டி?) கதை சொல்வதாக காட்டியிருப்பது ஒரு புதுமை என்றே தோன்றுகிறது. ‘கிலுகிலுப்பை’ என்கிற தலைப்பும் சரி அது பனை ஓலையிலானது என்பதும் நம் குழந்தைகளுக்கு நம் மண் சார்ந்த விசயங்களை நினைவுபடுத்தும் நல்ல முயற்சி. பாட்டியின் வீட்டில் கிடைக்கும் தின்பண்டங்கள், விளையாட்டுகள், விடுகதைகள் நம்மை அந்த காலத்திற்கு அழைத்து செல்கின்றன.

May be an image of 2 people, people standing and text that says 'க இலக்கிய டே களம் வெல்வோ ட'
கதைசொல்லி, எழுத்தாளர் சரிதா ஜோ

விலங்குகளுக்கு நெளியன்,பொதக்கையன் என்று பெயர் சூட்டியிருப்பது சிறுவர்களின் உணர்வோடு ஆசிரியர் எந்த அளவு ஒன்றிப்போயிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. ஆமைக்கு மட்டும் ஸ்லோ மோஷன் என்று ஆங்கிலப் பெயரை வைத்து விட்டார். மெதுவன் போல் ஏதாவது ஒரு பெயர் வைத்திருக்கலாம்.

மந்திரக் கிலுகிலுப்பை தொலைந்து போவது, ரதி வீட்டிற்குத் திரும்பவேண்டிய வேளையில் மந்திரமே முடிந்துபோவது போன்ற ஆர்வத்தைத் தூண்டுகிற விஷயங்கள் சிறுவர்களின் சிந்தனையை வளர்க்கும். அதேபோல் அனகொண்டாவிடம் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பதும் அறிவியல்பூர்வமாக உள்ளது.

இன்னும் பல சுவாரசியங்கள் புத்தகத்தில் உள்ளன. சிறுவர்களும் பெரியவர்களும் படிக்கவேண்டிய ஒன்று.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)