நூல் : சட்டைக்காரி நாவல்
ஆசிரியர் : கரன் கார்க்கி
பதிப்பகம் : நீலம் பதிப்பகம்
விலை : 375

எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. மனிதர்களையெல்லாம் தன்பால் ஈர்க்கும் காந்த சக்தி கொண்ட எழில்மிகு நகரம். எல்லோரையும் வாழவைக்கும் புகழிடம். இந்த நகரின் பண்பாடு, கலாச்சாரம், மக்களின் வாழ்வியல் வழித்தடங்கள் இவைகளை சில பல கதாபாத்திரங்களைக் கொண்டு கருத்துப்புணைவுக்குள் கர்ப்பம் தரிக்கின்றார் கரன் கார்க்கி. மெட்ராஸின் வரலாற்று வழித்தடம் நீண்ட நெடிய அம்சங்களைக் கொண்டதாக விளங்குகிறது. கிழக்கிந்திய கம்பெனிகளின் வியாபார தலமாக மாறிய மெட்ராஸ் தனக்கான அபரிமிதமான வளர்ச்சியை தொடர்கிறது. பிழைப்பைத் தேடி வந்தவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரமாக விளங்கிய இந்த மண் இங்கு வந்தவரை எல்லாம் வளம்மிக்கவராகவே மாற்றியது. ஆனால், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களின் கதி என்னவானது. சொந்த மண்ணிலேயே அகதிகளைப் போல் வாழும் நிலைதானே ஏற்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் எல்லாம் சுரண்டப்பட்டு வெப்பச்சலனம் நிறைந்த நகரமாய் உருமாறி இருக்கிறது. பல்வேறு பகுதியிலிருந்து ஆட்சி செய்ய வந்தவர்கள், மொழிபெயர்ப்பாளராக வந்தவர்கள் மூலம் தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம், போர்த்துக்கீஸ் போன்ற மொழிகளின் கலவையாய் ஒரு புது மொழி உச்சரிப்பையே உருவாக்கி, அதை எல்லோரும் வியந்து கேட்கும், நகைச்சுவை மிக்க மொழியாக மெட்ராஸ் பாஷை விளங்குகின்றது. இந்த பாஷையில், பண்பில் தான் ”சட்டைக்காரி” தனக்கே உரித்தான தனித்த தன்மைகளோடு நம் சிந்தனைக்கு உரம் சேர்க்கிறது. காதல், காமம், நட்பு, பாசம் இவை மனித வாழ்வியலின் அடிப்படை உணர்வுகள், இந்த அடிப்படை உணர்வுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு வடிக்கப்பட்ட காவியமாகவே சட்டைக்காரி விளங்குகிறது

என்னவாக இருக்கிறது.
மனிதன் எங்கோ தோன்றினான் எங்கேயோ, எப்படியோ கலந்தான். மனிதக் கலப்பு அழகான முகங்களையும், அறிவுசார் மனிதர்களையும் பிரசவித்துள்ளது. வரலாற்றுச் சம்பவங்களோடுதான் மனிதனின் வாழ்க்கையும் பயணப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் கரன் கார்க்கியின் சட்டைக்காரி நமக்கு சொல்லும் பாடம் இவைகள் தான்.

உடலும் உள்ளமும் பொறியியல் நிகழ்வுகள் போல் திரும்பத் திரும்ப அவனை காட்சிப்படுத்தி கொண்டிருந்தது. காதல் உணர்வை அறிவியல்பூர்வமாக சொல்லும் வரிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தாழ மண்டியிட முடியாதபடி அவளுக்கு அடிவயிற்றில் வலி வழக்கத்தை மீறியதால் லேசாக முனங்கினாள். அவளது தொடையிடுக்கில் உதிரம் பிசுபிசுப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு பெண் நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேனோ, ஒவ்வொரு மாதமும் இந்த துயரம் தாங்கமுடியவில்லை. வெறுப்பும், நச்சரிப்பும் நிறைந்த மாதவிடாய்க் கால பெண்ணின் உடல் மொழியை, உணர்வுகளை ஒரு ஆணாக இருந்து சிறப்பாக நேர்த்தியாக சொல்லுகின்றார். நாவலில் வரும் பெண் கதை மாந்தர்களை எப்படி மாண்புடன் சித்தரித்துள்ளார் என்பதர்க்கு உதாரணம்.

உள்ளமும் உடலும் விழித்துக் கொள்ளும் தருணங்களில் பிரார்த்தனையால் அடக்கி அதை அமைதிப்படுத்த முடிகிறது. உணர்வுகளுக்கு நிரந்தர உறக்கத்தை தர முடியாதே. இப்போது அது விழித்துக்கொண்டது இன்று ஏனோ அவளது உள்ளத்துடன் சேர்ந்து உடலும் மலர்ந்து மணம் வீசுகின்றது. அவளில் வீசிய அந்த மணத்தை அவளே விரும்பினால். இந்த வரிகள் இயல்பான பெண்ணைப் பற்றிய வரிகள் அல்ல மாறாக கணவனை இழந்து 13 ஆண்டு தவ வாழ்கையின் கோரப்பிடியில் இருந்து மீளத் துடித்த இளம் விதவையின் உள்ள குமுறல்கள், உணர்ச்சிகளின் ஏக்கக்குரல். வாழ்வதற்கான அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருக்கும் நம்பிக்கை நிறைந்த அலங்காரக் கண்ணாடித் தொட்டிக்குள் அடைபட்டுள்ள அழகிய தங்கமீனின் விடுதலைக்கான ஏக்கங்கள்.

இந்த தங்க மீன் தான் நீந்திக் கொண்டிருந்த கண்ணாடி தொட்டியில் இருந்து இயேசுவின் அரவணைப்பிற்குள் அழகான காதல் இணையராய் சமுதாய சீர்திருத்த முன்மாதிரியாய் கதைக்களம் நெடுகிலும் வலம் வருகிறாள்.
அன்பு, பாசம், ஆசை, நட்பு, பகை, இன்பம், துன்பம், உறவு, பிரிவு, இறக்கம், மகிழ்ச்சி, இகழ்ச்சி போன்ற வார்த்தை தலங்களில் இருந்து எழும் கரன் கார்க்கியின் சிந்தனை மேகங்கள் வானம் முழுவதும் பரவி மேகமாய் உருமாறி, மின்னலாய் மின்னி, இடி முழங்கி மழையாய் நிலம் நனைத்து ஆறாய் ஓடி நதியாய் சேர்ந்து கடலாய் பரந்து விரிந்து நம் இதயத்தில் பல்வேறு சிந்தனைக் கீற்றுக்களை எழுப்புகின்றது. இருள் முகம் கிழித்து வெளிச்சம் பிரகாசிக்கிறது.

மன்னர்களுக்கும் மந்திரிகளுக்கு முதலாளிகளுக்கும் உயர் குடியினர்க்கு மட்டும்தான் காவியம் எழுத முடியுமா? சாதாரண விளிம்புநிலை மக்களின் தினசரி வாழ்க்கையை, அவர்கள் சந்திக்கும் இன்ப, துன்பங்களையும் சாதனைகளையும்காவியமாக படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தேவையை உணர்ந்து உருக்கமான உணர்வுகள் தெறிக்கும் புது புது வார்த்தை கோர்வைகளால் நம்மை கட்டிப் போடுகிறார். இவர் படைத்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் நிஜவாழ்க்கையில் பார்த்துப் பழகிய உறவுகளை போல் எண்ணத் தோன்றுகிறது. இயல்பான வசண நடை வரிகள் நம்மையே கதாபாத்திரத்திற்குள் மூழ்கடிக்கிறது.

சிலவேளைகளில் துயரங்களுக்கு மத்தியிலும் தப்பிப் பிழைக்கும் இதமான வாழ்வை காதலின் வழியே ஆணுக்கும் பெண்ணுக்கும் காலம் அடையாளம் காட்டவே செய்கிறது. என்ற கரன் கார்க்கியின் வாழ்வியல் தத்துவமே குர்ஷித்-கனி, ஐஸக் மற்றும் அவரின் இரண்டு மனைவிகள் இயேசு-லிண்டா, மூசாஸ்-ஸ்லெட்டா ஆகியோரின் காதல், குடும்ப வாழ்வியலை நாவல் முழுவதும் மென்மையான மயில் இறகால் நம் இதயத்தை வருடுகிறது. காதலை மாட்சிமை பொருத்தமாய் பயணிக்க செய்கிறார்.
வாழ்க்கை விளையாட்டைப் போலவே போட்டியும் பொறாமையும் வெற்றியும், தோல்வியுமாய் மாறி மாறி வருகிறது. கால்பந்தாட்ட விளையாட்டு வர்ணனைகள், விளையாட்டு வீரர்களுக்ககே உரித்தான போட்டி மனப்பான்மை, தன்நம்பிக்கை, தற்புகழ்ச்சி விளையாட்டு இவை அனைத்தையும் சாதுரியமாக கையாண்டுள்ளார் இந்த கால்பந்தாட்டத்தை போல் சுழன்று சுழன்று கோல் அடிக்க முயற்சிக்கிறார்கள். கருணா, ஜெயா, நிக்கோலஸ், மைக்கேல், பஷீர், மூசா என கதை மாந்தர்கள் அனைவரும் கதைக்களம் முழுவதும் தங்களின் தடத்தினை பதித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நமது பழைய வாழ்கையை நினைத்துப் பார்ப்பதற்கான சிறந்த வாய்ப்பாக நாவல் அமைந்துள்ளது. காட்சிகளை தத்ரூபமாக காட்டுவதில் உவமை நயத்துடன் சட்டைக்காரி தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறது. ததும்பிக் கொண்டிருந்த கடைசி குவளையை முகம் சுளிக்காமல் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது போல் குடித்து காலியான குவளையின் கடைசிச் சொட்டையும் நுனிநாக்கில் சொட்டினான்.

உள்ளங்கையில் சுற்றும் பம்பரத்தை பார்ப்பதுபோல இயேசு தன் உள்ளங்கையை பார்த்துக் கொண்டிருந்தான்
முசாவின் கைகளில் உறுதியையும் ஸ்டெல்லாவின் கரங்களில் கடலின் குளிர்ச்சியையும் உணர்ந்த அலை பொங்கி ததும்புகிறது. மிக மிக அழகான நேர்த்தியான உவமை உவமேயம் கொண்ட அற்புதமான வரிகளை நாவல் நெடுகிலும் வறுமையின்றி வாரி வழங்கியுள்ளார்.
காலம் சின்ன சின்ன இடைவெளிகளில் மனிதர்களுக்கு எவ்வளவு பெரிய மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது.

நாவலை முழுமையாகப் படிக்கும் போது இந்த வரியை சாதாரணமாக நம்மால் கடந்து போக முடியாது கடைசி பத்து பக்கங்கள் முழுவதும் வாழ்வின் நினைவலைகள் நம் நிஜ உறவுகளை நினைவு படுத்துவதோடு கதைமாந்தர்களோடு வாழ்ந்த உணர்வையும் தந்து விடுகிறது
நீண்ட கதை களத்தில் பல கதாபத்திரத்தில் வரும் மாந்தர்களின் பிறப்பையும் இறப்பையும் மிகச் சுருக்கமாக கூறி கணநேரத்தில் நம் மனதை கனணமாக்கி சற்றுநேரத்தில் இலகுவாக்கும் மாயவித்தை கரன் கார்க்கியின் எழுத்தில் தென்படுகிறது. சுதந்திர இந்தியா கால, முன்னிட்டும், பின்னிட்டும் வரும் கதைக்காலம் அரசியல் பேசாது இருக்குமா? ஐசக் மிக நேர்த்தியான கௌரவமான கதாபாத்திரம் அனைத்துக் கதாபாத்திரங்களையும் மனித நேயத்துடன், மரியாதையுடன் கையாளுகின்றார். எப்படியாவது தன் இரண்டு மனைவிகள் மகளோடு வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்ற ஆசையின் நிமிர்த்தம் கடந்தகால, நிகழ் கால அரசியல் புரிதல் உள்ளவராக காட்டுவதோடு கதாபாத்திரம் வழியே மவுண்ட்பேட்டன் பிரபுவின் வருகை, செயல்பாடுகள், மதப் பழமைவாதிகளால் காந்தி கொள்ளப்படுவது, சாதி தொற்று, சனாதான வளர்ச்சி ஆங்கில இந்தியர்களின் எதிர்கால வாழ்க்கை போன்றவற்றை பேசுகின்றார்.

தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் கழகங்களின் அரசியல் நிகழ்வுகள், பெரியார் பற்றிய செய்திகள், ராஜீவ் காந்தியின் கொலை போன்றவை கதைக்கள நகர்வுக்கும் காலத்தையும் கதாபாத்திரத்தின் முதிர்வு நிகழ்வையும் உணர்ந்து கொள்ள சரியாக பயன்படுத்தியுள்ளார்.
கரன் கார்க்கியின் அரசியல் ஞானத்திற்கு இந்த நாவலில் வரும் ஒரு வரியே சாட்சி இதோ அந்த வரி . . . ,
பெரும்பான்மையை வெறியூட்டி குளிர்காய நினைப்பவர்களால் சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து, சமகாலத்திய அரசியல் குளறுபடிகளும், கூறிய இட ஒதுக்கீடு பிரச்சினைகளும் நினைவுக்கு வருகிறது. கதைமாந்தர்களின் பெரும்பான்மையானோர் சிறுபான்மையினர், விளிம்பு நிலை சார்ந்தவர்களாகவே காட்டப்பட்டுள்ளனர்.
இந்த நாவல் காலம் காலமாக தெரிந்தும், தெரியாமலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நடந்துவரும் இனக்கலப்பு பற்றி தெளிவாகப் பேசுகின்றது வெள்ளையர்கள் உலகெங்கும் போகிறார்கள் தங்களின் விதைகளின் வழியே மொழியையும் நிறத்தையும் தங்கள் சாதுரியத்தையும் பழக்கவழக்கங்களையும் முளைக்க வைக்கின்றனா். இந்த செய்தி நமக்கு எதை உணர்த்துகிறது.
சாதி, மதம், இனம், மொழி என உயர்த்தியும், தாழ்த்தியும் பேசும் மனிதனே உன்உடல் எந்த கலப்பினம் சார்ந்தது என்பதை உன்னால் அறுதியிட்டு சொல்லமுடியுமா? அறிவியல் துணை கொண்டு அறுதியிட்டால் நீ உண்மையாக நினைத்துக் கொண்டிருக்கும் உன் சாதியும், மதமும், மொழியும், இனமும் உன்னுடையது இல்லை என்பது தெரிந்து விடும். பொய்யான சாதியை மதத்தை, மொழியை, இனத்தை உரிமை கொண்டாட செய்யும் அரசியல் பொய் முகங்கள் கிழிந்து போகும். அதைத்தான் கரன் கார்க்கி எதிர் பார்க்கிறாறோ என எண்ணத் தோன்றுகிறது.

கதைமாந்தர்களின் வழியே இயல்பாக, யதார்த்தமாக சொல்லியிருக்கும் வார்த்தைகள் ஏழைகள் எப்போதும் எதையும் மறைத்து வைத்துக் கொள்வது வழக்கம் இல்லை அவர்களின் வாழ்க்கை எப்பொழுதும் உண்மையானதாக, வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒரே நேரத்தில் சமமாக கடக்கும் வாழ்வியல் தத்துவம் அறிந்தவர்கள் . இவர்களுக்கு இடையே நடக்கும் உறவு சண்டையும் நட்பு சண்டையும் நிரந்தரமானதல்ல. மெட்ராஸ் பாஷையில் வெளுத்து வாங்கும் கொச்சை வார்த்தைகள் நிறையவே இருக்கிறது என்றாலும் கொச்சையாக தென்படவில்லை. ஆக்ரோஷமான வசணங்கள், அளவுக்கு அதிகமான சாராய வாசனை மாமிச உணவு வகைகள் எதார்த்தமான நடைமுறை வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லியிருப்பது கரன் கார்க்கியின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு.
தற்போது வானுயர்ந்த கட்டிடங்களை தாங்கி நிற்கும் மெட்ராஸின் அந்தக்கால இயற்கை வளத்தை சொல்லி தற்போதைய நிலையை நினைத்து ஆதங்கப்படும் காட்சிப்படுத்துதல் மூலமாக பழைய நுகர்வு கலாச்சாரம் அக்கால பண்டிகை திருவிழா கொண்டாட்டம் அரசியல் நிகழ்வுகள் என அனைத்தையும் கண்முன் கொண்டு வருகிறார். கரன் கார்க்கி அவர்கள் இந்த சமூகத்தின் அறியாமை, மூட பழக்க வழக்கம் சாதி மத நம்பிக்கைகள் பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சனாதானங்களை வேரறுப்பதற்கான சிந்தனை விதைகளை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பேசுகின்றார். இவை எதுவும் திட்டமிட்டதாக இல்லை. இயல்பாகவே விரிவடைகிறது. வாகன நெரிசல், எரிபொருள் மூச்சுக் காற்றில் உயிர் சுவாசிக்க திணறிக் கொண்டு, வானுயர்ந்த கட்டிடங்கள், வசதியான வாழ்க்கை முறைகளினால் ஊதிப் பெருத்துப் போன ஊளச்சதை நிறைந்த இன்றைய சென்னையின் பழைய சதுப்பு நிலங்கள், காடுகள், மலைக்குன்றுகள், கடற்கரைகள், தீவுகள், நதிகள் எல்லாம் ஆதிக்க சக்திகளால் அபகரித்து, உருக்குலைந்து அழிக்கப்பட்டு காணாமல் ஆக்கியதற்கான பிறவிப் பலனை ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், சுனாமியால் அனுபவிக்கிறார்கள். இதில் ஐசக், மூசா, கர்ணா, ஜெயா போன்ற இந்த நாவலின் கதைமாந்தர்களின் வாரிசுகளும் இருக்கிறார்கள். அவர்களின் ஏக்கம், கோபம், பயம், விரக்தி மறு உருவாக்கம் செய்யவேண்டும் என்பதற்கான ஆர்வம், வேகம், நம்பிக்கை, உறுதி இவைதான் சட்டைக்காரி நாவல் மூலம் கரன் கார்க்கி எழுப்பும் விளிம்புநிலை மக்களின் ஒட்டுமொத்த கூக்குரல்.

சட்டைக்காரி – விளிம்பு நிலை மக்களின் சரித்திரம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *