பெரு: ஆட்சிக் கவிழ்ப்பும் படிப்பினைகளும் கட்டுரை -அ.பாக்கியம்
தென் அமெரிக்கா நாடான பெருநாட்டில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி சிந்தனையாளரும், விவசாயிகளுடைய தலைவரும், ஆசிரியருமான பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டு, ஜூன் மாதம் பதவியேற்றுக்கொண்டார்

தென் அமெரிக்க நாட்டில் இடதுசாரி மற்றும் முற்போக்காளர்களின் எழுச்சியின் தொடர்ச்சியாக பெருநாட்டிலும் இந்த மாற்றம் ஏற்பட்டது. மக்கள் தலைவராக, போராட்ட களத்திலி ருந்து காஸ்டிலோ வெற்றி பெற்றார். ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட அனைத்து முயற்சி களையும் செய்தார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினுடைய எதிர்ப் பினை எதிர்கொண்டுதான் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை செய்தார். அவரது முயற்சிகளுக்கு பெரும்பான்மை பலத்துடன் இருந்த வலதுசாரி பாராளுமன்றம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தது.
காஸ்டிலோ எடுத்த முயற்சிகள்
- கல்வியறிவின்மையை போக்குவதற்கு உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை கல்விக்கான முதலீட்டை அதிகப்படுத்தினார். இதற்கான சமூகத் திட்டங்களை அமல்படுத்தினார்
- 2.2 மில்லியன் சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
- விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிக்கான திட்டங் களை உருவாக்கி அமல்படுத்தினார்
- 300 க்கும் மேற்பட்ட விவசாய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி கிராமப்புற கூட்டுறவு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார்.
- பெரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 350 இடங்களில் 13 மில்லியன் மக்கள் பயனடையும் முறையில் 84 கோடி டாலர் ஒதுக்கி நிதி உதவி செய்தார்.
- சமையல் எரிவாயு விலையை 2.8 டாலராக குறைத்து வழங்கினார்.
- அரசியல் அமைப்பை திருத்தி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
- ஜனாதிபதியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அடிப்படை விதியாக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த “தார்மீக இயலாமை“ என்ற வார்த்தையை நீக்குதல்,
- மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஜனாதிபதியை வலது சாரிகள் பெருபான்மை என்ற பெயரால் பதவி நீக்கம் செய்யும் முறையை மாற்றிட திருத்தங்களை கொண்டுவந்தார்.
இவற்றையெல்லாம் சொத்துடைமை வர்கத்தால் சகித்துக் கொள்ள முடியுமா?
தார்மீகமற்ற தாக்குதல்
காஸ்டிலோவிற்கு பெரும்பான்மை இல்லாத சூழலை பயன்படுத்தி அடிக்கடி கவிழ்க்க முயன்றனர். அமெரிக்கா தலைமையிலான சுரங்க முதலாளிகளும், ஆலை முதலாளிகளும், ராணுவமும், ஆயுதப்படைகளும், கத்தோலிக்க தேவாலயங்களும், இடதுசாரி ஜனாதிபதி காடிலோவை நீக்குவதற்கான இம்பீச்மென்ட் அதாவது “தார்மீக இயலாமை” முறையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தனர்.
பல நேரங்களில் இந்த பெரும்பான்மையை எதிர்கொள்வதற்காக தனது மந்திரிகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக நிரந்தர தார்மீக இயலாமை என்ற தீர்மானத்தை கொண்டு வந்து தோற்கடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
அதிகார துஷ்பிரயோகம் செய்வது, சட்டம் இயற்றுபவர்களை பதவிநீக்கம் செய்வது, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பாராளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது, ஊழல், கருத்து திருட்டு, கிளர்ச்சியை தூண்டி விட்டது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது (7.12.22) செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஸ்டிலோவை ஆதரித்த முன்னால் பிரதமர் அணிபால் டோரஸ் (Anibal Torres) இந்த குற்றச்சாட்டுக்காகவே இவரை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்று அவர்களின் சட்டம் கூறுகிறது.
“நிரந்தர தார்மீக இயலாமை” என்பது 180 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டு அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு விதி. இந்த விதிக்கு புறநிலை வரையறை எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். 19-ம் நூற்றாண்டில் இதை பைத்தியக்காரத்தனம் என்று கருதினார்கள். இப்போது இடதுசாரி ஜனாதிபதி இதை நீக்குவதற்கு எடுத்த முயற்சிகளை தடுத்து ஊழல் குற்றச்சாட்டை இதன் மூலம் சுமத்தி ஏகாதிபத்திய முதலாளிகள் ஆட்சியை கவிழ்த்து இருக்கிறார்கள்.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் 18 மாத காலம் போட்ட சதி திட்டத்தை இப்பொழுது நிறைவேற்றி இருக்கிறார்கள். கார்டிலோ ஓ.ஏ.எஸ் (OAS-ORGANISATION OF AMERICAN STATES) என்ற அமைப்பிலும் முறையிட்டார்.
பயனில்லை.
வாஷிங்டனுக்கு ஒரு நிலையற்ற உலகம் இருந்தால் தான் தனது மேலாதிக்கத்தை செலுத்த முடியும். பெருநாட்டில் 2016 ம் ஆண்டுகளிலிருந்து அடுத்தடுத்து 5 ஜனாதிபதிகள் மாற்றப்பட்டு கொண்டே இருந்தநிலை அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. காஸ்டிலோ பதவிக்கு வந்த பிறகு எங்கே ஒரு நிலைத்தன்மை உருவாகி விடுமோ என்ற அச்சத்தில் பெரு நாட்டை நிலையற்ற தன்மைக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற சுயநலத்தால் அமெரிக்க தூதரகம் அனைத்து உதவிகளும் செய்து ஆட்சியை கவிழ்த்தது.
துணை அதிபராக இருந்த திருமதி டினா போலுவார்டெ (Dina Boluarte) உடனடியாக அதிபராக பதவிஏற்க சொல்லி அவரை அங்கீகரித்து காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஆதரித்தது.
டினா போலுவார்ட்டின் நியமனத்தை பெரு அரசாங்கம் கொண்டாடுகிறது என்று அமெரிக்க வெளியூர் துறை செய்தி தொடர்பாளர் கூறுகிறார். ஜனநாயக ஸ்திர தன்மையை உறுதி செய்ததற்காக பெரு நாட்டின் சிவில் நிறுவனங்களையும், அதிகாரிகளையும், வெள்ளை மாளிகை பாராட்டியது என்றால் அவர்களை தவிர இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு வேறு யாரு அடித்தளமாக இருந்திருக்க முடியும்.?
உலகம் எதுவும் சொல்லாது அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்காவால் தூண்டப்பட்ட மற்றொரு சதி. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு லத்தீன் அமெரிக்காவின், இடது சக்திகளின் முன்னேற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தாக்குதல். இந்த தாக்குதல், தந்திரங்கள், பொய்கள் நிறைந்த, ஒரு உண்மையான போரின் துவக்கமாகும் என்று வெனிசுலாவின் தேசிய அரசியல் அமைப்பு சபையின் தலைவர் டியோஸ்டாடா கப்பல்லோ கூறினார்.
மெக்சிக்கோ நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஓப்ராடோர் பொருளாதார மற்றும் அரசியல் உயர் அடுக்கு பிரிவினர் திட்டமிட்டு காஸ்டிலோவை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், காஸ்டிலோவுக்கு மெக்சிகோ அரசியல் புகலிடம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.
பொலிவியா நாட்டு ஜனாதிபதி லூயிஸ் ஆர்சின், காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஏற்கவில்லை என்றும், இது போன்று பொலியாவில் இரண்டு முறை முயற்சித்ததையும் ஓ. ஏ.எஸ் அமைப்பு மீண்டும் தவறான மதிப்பீடு செய்து, பெரு நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணை போயிருக்கிறது என்று கண்டித்தார்.

பெருவின் தலைநகரில் மிகப்பெரும் போராட்டங்கள் காஸ்டிலோவிற்கு ஆதரவாக நடைபெற்று வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் அதிகாரத்திற்கு வருவதும், அவற்றை அமெரிக்க ஏகாதிபத்திய தலைமையிலான பெரும் முதலாளிகள் ஆட்சியை கவிழ்ப்பதும் 1971-ம் ஆண்டு சிலி நாட்டில் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஏகாதிபத்திய முதலாளித்த சுரண்டலுக்கு எதிராக மீண்டும் மீண்டும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு கொண்டு இருக்கிறது.
பெரு நாட்டிலும் காஸ்டிலோ சில நேரங்களில் சமரசம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர் சார்ந்திருந்த கட்சி பெரு லிப்ரே(Free Peru) பல நே
ரங்களில் அவருடன் இணைந்து இருக்கவில்லை. 130 பாராளுமன்ற பிரதிநிதிகளில் 101 பேர் காஸ்டிலோ எதிராக வாக்களித்தனர். பெரு லிப்ரா கட்சியின் உறுப்பினர்கள் 37 பேர்களும், ராஜினாமா செய்த அமைச்சர்களும் இவருக்கு எதிராக வாக்களித்து உள்ளனர்.
இவற்றை காஸ்டிலோ அறிந்த போதிலும் வலதுசாரிகளின் கையில் அகப்பட்டு இருக்கக்கூடிய பாராளுமன்றத்தை கலைத்தால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பிக்கையில் முன் முயற்சி எடுத்தார்.
தொழிலாளர்களும் விவசாயிகளும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கலாம், ஆனால் நாட்டை ஆள்பவர்கள் பொருளாதார பலம் கொண்டவர்கள், ஊடகங்கள் மற்றும் அரசு எந்திரத்தை கட்டுப்படுத்துபவர்கள். அரசாங்கத்தை மாற்றினால் மட்டும் போதாது, அமைப்பின் அடிப்படை மாற்றத்திற்காக நாம் போராட வேண்டும். ஆனால் அங்கு செல்வதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்பும், அணி திரட்டலும், நாம் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு புரட்சிகர தலைமையும் தேவை என்பதை இன்றைய சூழல் கோருகிறது.
பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று தெரிந்தும் காஸ்டிலோ மக்களை தெருக்களில் இறக்குவதற்கான முயற்சிகளை ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து எடுத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது.
பல நேரங்களில் பெரும்பான்மை இல்லை என்ற நிலைமையில் சமரசப் போக்கில் நடத்துவதற்கு முயற்சி செய்தாலும், முதலாளித்துவ வர்க்கம், தங்கள் வகுப்பைச் சேராத ஒருவரை, சாதாரண மக்களிடமிருந்து வந்த ஒருவரை, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு அனுமதிக்காது என்ற வரலாற்று அனுபவம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
பெருவின் அரசியல் நிலை நெருக்கடியாக உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் உள்ள இடதுசாரிகளை முற்போக்காளர்களை ஒழித்துக் கட்டுவதற்கான திட்டத்தோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறது. அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அனுபவம், காலம் மாறிவருவதைக் காட்டுகிறது.
அமெரிக்கசதியால் கவிழ்க்கப்பட்ட பிரபலமான அரசியல்வாதிகளை மீண்டும ஆட்சிக்கு திருப்பி அனுப்புகிறார்கள். புதிய தாராளமயப் பொருளாதாரத்தில் ஏமாற்றம் அதிகரித்து வருகிறது, அமெரிக்காவால் இதில் எதுவும் செய்ய முடியாது. வாஷிங்டன் பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளில் அதன் கைப்பாவை தலைவர்களை கொண்டு எடுபுடி அரசை நிறுவும் வாய்ப்பை கூடிய விரைவில் இழக்கும்.

அரசியல் போராட்டத்தின் அடுத்த கட்டமாக தொழிலாளர்களும் விவசாயிகளும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமல்ல, உண்மையான சக்தி தொழிலாள வர்க்கம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட, புரட்சிகர ஏழை விவசாயிகளின் அணி திரட்டலை நிரூபிக்கும் வகையில் அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
தென் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி தலைவர்கள் மக்கள் போராட்டத் தலைவர்களாக இருக்கிறார்கள். மக்களிடமிருந்து அன்னியபட்டவர்களாக இல்லை. களப்போராட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
அ.பாக்கியம்.

மோடிக்கு முதல் பரிசு கட்டுரை – அ.பாக்கியம்
1991 முதல் அனைத்து பொதுத்துறை விற்பனையில் 72% மோடியின் ஆட்சியில் நடைபெற்று உள்ளது.
1991 மற்றும் 1999 க்கு இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் பொதுத்துறை விற்பனை மூலம் ரூ. 17,557 கோடி (இன்றைய நிலையில் சுமார் ரூ. 91,800 கோடி) மட்டுமே ஈட்டப்பட்டது.”
“வாஜ்பாய் அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை விற்பனையை மீண்டும் முடுக்கிவிட்டது. வெறும் ஐந்தாண்டுகளில் (1999-2004) ரூ. 27,599 கோடி (இன்று சுமார் ரூ. 93,300 கோடி) சம்பாதித்தது.”
“காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கத்தின் முதல் பதவிக்காலம் (2004 முதல் 2009 வரை) இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்தது,
முதலீட்டுத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இதன் விளைவாக, இந்தக் காலகட்டத்தில் பங்கு விலக்கல் வருவாய் வெறும் ரூ.11,591 கோடி மட்டுமே. இன்றைய மதிப்பில் வெறும் 32,000 கோடி ரூபாய்.
“UPA-II-ல் (2009-14), காங்கிரஸ் மிகவும் வலுவான நிலைப்பாட்டில் இருந்தது,
பொதுத்துறை விற்பதில் இன்னும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த காலகட்டத்தில், அரசாங்கம் ரூ. 1.2 லட்சம் கோடியை (ரூ. இன்று 2.4 லட்சம் கோடி) வெறும் ஐந்தாண்டுகளில் விற்பனை செய்தது.
“மொத்தத்தில், UPA தனது 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ. 1.32 லட்சம் கோடிக்கு விற்பனை செய்தது – இன்றைய நிலையில் ரூ. 2.74 லட்சம் கோடிக்கு சமம்.”
“மோடி அரசாங்கத்தின் முதல் ஆட்சிக் காலத்தில் மட்டும் (2014-19), பங்கு விலக்கல் மூலம் மொத்தமாக ரூ. 3.2 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது, அது இன்று ரூ. 4.7 லட்சம் கோடியாகும்.
தொற்று நோய் காலத்திலும் மோடி மொத்தம் ரூ. 1.26 லட்சம் கோடி பொதுத்துறையை விற்பனை செய்துள்ளார். இன்றைய மதிப்பில் ரூ. 1.48 லட்சம் கோடி ஆகும்.
மொத்தத்தில் 1991ஆம் ஆண்டிலிருந்து பொதுத்துறை விற்பனை செய்ததில் 72 சதவீதத்தை மோடி ஆட்சியில் மட்டுமே நடந்துள்ளது.
– அ.பாக்கியம்
லூலா வெற்றியின் முக்கியத்துவம் கட்டுரை – தமிழில் ச.வீரமணி
பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் லூயிஸ் இனாசியா லூலா (Luiz Inacio ‘Lula’ da Silva) வெற்றி பெற்றிருப்பது, உலகம் முழுவதும் ஒருவிதமான நிவாரணப் பெருமூச்சுடன் வரவேற்கப்பட்டிருக்கிறது. அதிதீவிர வலதுசாரியான ஜெயிர் போல்சனாரோ (Jair Bolsonaro)வைத் தோற்கடித்து பிரேசில் ஜனாதிபதியாக அவர் வென்றிருப்பது, பிரேசிலின் எதிர்காலத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க பிராந்தியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2022 அக்டோபர் 30 அன்று நடைபெற்ற தேர்தலில், லூலா, (PT) எனப்படும் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 50.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற போல்சனாரோவிற்கு 49.1 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. 1980களில் ஜனநாயகம் மீளவும் புதுப்பித்து சீரமைக்கப்பட்ட பின்னர் இப்போது நடந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே 21,25,334 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பதவியிலிருந்த ஒரு ஜனாதிபதி தேர்தலில் தோற்பது என்பதும் இதுவே முதல் தடவையாகும்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதே லூலா எளிதாக வெற்றிபெற்றுவிடுவார் என்று தேர்தல் கணிப்பாளர்கள் பலர் முன்கூட்டியே ஊகித்திருந்தார்கள். அதேபோன்றே பல்வேறு ஆய்வுகளும், போல்சனாரோவைவிட லூலா இரண்டு இலக்க புள்ளிகள் முன்னணியில் இருப்பார் என்று காட்டின. எனினும், இக்கணிப்புகள் அனைத்தும் அக்டோபர் 2 அன்று நடைபெற்ற முதல் சுற்று முடிவின்போது தவறு என்று மெய்ப்பிக்கப்பட்டன. செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கையில் போல்சானாரோ 43.20 விழுக்காடு வாக்குகளே பெற்றிருந்த அதே சமயத்தில், லூலா 48.43 விழுக்காடு பெற்று வென்றார். வெற்றி பெறும் வேட்பாளர் 50 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் தோல்வியடைந்ததால், இரண்டாம் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் லூலா 50.9வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
லூலா 2003க்கும் 2010க்கும் இடையே இரு தடவை பிரேசில் ஜனாதிபதியாக இருந்தார். இது அவருக்கு மூன்றாவது தடவை. இந்தத் தடவை அவருக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. ஏனெனில் இந்தக் காலகட்டத்தில் பிரேசில் கணிசமான அளவிற்கு மாறியிருக்கிறது.
லூலா முதல் தடவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பண்டங்கள் சந்தையில் ஓர் ஏற்றம் இருந்தது. இதன் காரணமாகத் தொழிலாளர் கட்சி அரசாங்கம் சமூக நலத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டுவந்து, பல லட்சக்கணக்கான பிரேசில் மக்களை, வறுமையின் கோரப் பிடியிலிருந்து மீட்டது. 2014 இறுதிக்குள், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலாவும் அவரைத் தொடர்ந்து அவருக்குப் பின்னே வந்த டில்மா ரூசூஃப் (Dilma Rousseff)-உம் சேர்ந்து பிரேசில் பசி-பட்டினிக் கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகப் பிரகடனம் செய்தனர்.
இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. உணவு மற்றும் சத்துணவு இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீதான பிரேசிலியன் ஆய்வு வலைப்பின்னல் (Brazilian Research Network on Food and Nutritional Sovereignty and Security) ஒன்றின்படி, 3 கோடியே 31 லட்சம் மக்கள் தற்போது பசி-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள், இது சென்ற ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும் என்றும் தெரிவிக்கிறது.
கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட சமயத்தில் பிரேசிலில் சுமார் 7 லட்சம் மக்கள் இறந்துவிட்டார்கள். இதற்கு ஆட்சிபுரிந்த போல்சனாரோவின் நிர்வாகச் சீர்கேடே காரணமாகும். கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்ற கூற்றையே போல்சனாரோ ஏற்க மறுத்தார். அதனால் அது பரவுவதைப்பற்றி அவர் கிஞ்சிற்றும் கவலைப்படாது இருந்தார். இதனால் நாட்டில் சுகாதார நெருக்கடியைக் கையாள முடியாத நிலை இயற்கையாகவே ஏற்பட்டது. அறிவியலை மறுத்த போக்கும், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக சுகாதாரச் செலவினங்களில் வெட்டை ஏற்படுத்தியதும் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை அதிகரித்தது. அந்த சமயத்தில் தடுப்பூசிகள் உற்பத்தியிலும், அவற்றை விநியோகிப்பதிலும் நடைபெற்ற ஊழல்கள், அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற குணத்தைத் தோலுரித்துக் காட்டின.
போல்சனாரோ பகுத்தறிவற்ற, அறிவியலற்ற நபர் மட்டுமல்ல, புவி வெப்பமயமாதலை மறுக்கின்ற நபராகவும் இருந்தார். இந்தப் பார்வைகளும் இதனுடன் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாடும் பிரேசிலின் பாதுகாப்பு வளையத்தை பலவீனப்படுத்த இட்டுச் சென்றன, மழை பெய்துவந்த அமேசான் காடுகள் பெரிய அளவில் எரியத் தொடங்கின. நடைபெறும் ஆபத்தை சூழலியல்வாதிகளும் (environmentalists), பசுமை செயற்பாட்டாளர்களும் (green activisits) விரிவான அளவில் எடுத்துச் சொல்லி இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தபோதிலும், இந்த நபர் அவற்றை யெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. இந்த நிலங்கள் பெரும் வேளாண்-வர்த்தகக் கார்ப்பரேஷன்களுக்கும், பெரும் நிலப்பிரபுக்களுக்கும் விவசாயத்திற்காகத் திறந்து விடப்பட்டிருக்கின்றன.
அரசியல் அரங்கில், போல்சனாரோ ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமான தாக்குதல்களை ஏவினார். பிரேசிலில் முன்பிருந்தவந்த ராணுவ மற்றும் எதேச்சாதிகார ஆட்சிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவினைத் தெரிவித்தார். தன்னுடைய பாசிஸ்ட் ஆதரவு கொள்கைகளை வெட்கமேதுமின்றி வெளிப்படையாகவே பறைசாற்றத் தொடங்கினார், தொழிற்சங்கங்களையும், பூர்வகுடி மக்களையும், பெண்களையும், பெரும்பான்மை இன மக்களிடமிருந்து வித்தியாசமான பாலியல் நடைமுறைகளைக் கடைப்பிடித்திடும் சிறுபான்மையினரையும் (sexual minorities) கடுமையாகத் தாக்கினார். கம்யூனிச விரோத, இடதுசாரிகள் விரோத சிந்தனைகளைக் கொண்டாடினார்.
இவருடைய அறிவியலற்ற, பகுத்தறிவற்ற, சிறுபான்மையினருக்கு எதிரான, கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடுகளின் காரணமாக இவர் சுவிசேஷ கிறித்தவர்களின் ஆதரவினைப் பெற்றிருந்தார். இவர்கள்தான் இவருடைய முக்கியமான ஆதரவு தளமாகும். பிரேசிலியன் அரசியலிலும் சமூகத்திலும் வலுவான பிற்போக்கு சக்தியாக விளங்கும் சுவிசேஷ கிறித்தவ போதகர்கள், போல்சனாரோவிற்குப் பின்னர் அணிதிரண்டிருந்தனர், அவருடைய அறநெறி நிலைப்பாடுகளுக்கு ஆதரவு அளித்தனர். இத்தகைய மதஞ்சார்ந்த வலதுசாரிகள் இடதுசாரிகளுக்கு எதிராகத் தீவிரமாக போதனைகள் செய்து வந்தார்கள். ‘லூலா ஆட்சிக்கு வந்தால் தேவாலயங்களையெல்லாம் மூடிவிடுவார்’ என்று கூறி வந்தார்கள். இந்தவகையில்தான் போல்சனாரோ வலதுசாரி சிந்தனாவாதிகளை அணிதிரட்டினார். அதன்மூலம் சமூகப் பிரிவுகளை ஆழமானமுறையில் ஏற்படுத்தி வந்தார்.
போல்சனாரோவின் ஆதரவுத் தளமாக சுவிசேஷ கிறித்தவர்கள் இருப்பதோடு அல்லாமல், நவீன தாராளமய, சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக ஆதரித்திடும் உயர் வர்க்கத்தினர், வர்த்தகப் புள்ளிகள் மற்றும் பெரு முதலாளிகள் வர்க்கத்தினரும் அவரை ஆதரித்து வந்தார்கள். வேளாண கார்ப்பரேஷன்கள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களும் இவருடன் இருந்தனர். இவ்வாறு போல்சனாரோவின் பின்னால் அனைத்துத் தீவிரவாத வலதுசாரிகளும் அணிவகுத்திருந்தனர். இவ்வாறு ஆளும் வர்க்கங்கள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் ஆதரவு போல்சனாரோவிற்கு இருந்ததன் காரணமாகத்தான் இவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களும் இவருக்கு ஆதரவாக இருந்தன. இவர்கள் அனைவரும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டு, பொய் மூட்டைகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பினர்.
இதற்கு நேரெதிராக, லூலாவிற்கோ சமூகத்தின் வறிய பிரிவினர் முழுமையாக ஆதரவு அளித்தனர். இவ்வாறு ஏழை மக்கள் முழுமையாக லூலாவுடன் இருப்பதால் பயந்துபோன போல்சனாரோ, குறைந்த வருமானம் ஈட்டும் குடிமக்களுக்கு நேரடியாக பணம் அளிக்கும் ஒரு சமூக நலத் திட்டத்தை ஆக்சிலியோ பிரேசில் (Auxilio Brasil) என்ற பெயரில் கொண்டுவந்து அவர்களை வென்றெடுத்திட முயற்சித்தார். கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் போல்சனாரோவின் அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வியடைந்து, அனைத்துத்தரப்பினராலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ஒரு குறுகியகாலத் திட்டமாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்தத் திட்டமானது மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று ஏழை மக்கள் மத்தியில் இருந்த லூலாவின் ஆதரவு தளத்தில் சற்றே சரிவை ஏற்படுத்தியதால், போல்சனாரோ இத்திட்டத்தைத் தொடர்ந்தார்.
இவ்வாறான அனைத்து முயற்சிகளின் விளைவாகவும், போல்சனாரோ லூலாவிற்கு கடும் போட்டியை இப்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் அளித்தார். மேலும் போல்சனாரோ வலதுசாரி சக்திகள் மற்றும் மத்தியக் கட்சிகளின் (centre parties) ஆதரவுடன் நாடாளுமன்றத்திலும் (Congress), ஆளுநர்களுக்கான தேர்தல்களிலும் (governorships) மற்றும் பிராந்திய அளவிலான சட்டமன்றங்களிலும் (regional assemblies) (இவை அனைத்துக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலுடன், முதல் சுற்றுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.) பெரும்பான்மை பெறவும் இட்டுச் சென்றது. போல்சனாரோ மொத்தம் உள்ள 27 மாநிலங்களில் 14இல் வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் (Congress) வலதுசாரிக் கட்சிகள் தங்கள் பிரதிநிதித்துவத்தை (மொத்தம் உள்ள 513 இடங்களில்) 249 இடங்களை (இது பாதிக்குச் சற்றே குறைவு) அதிகரித்துக்கொண்டுள்ளன. லூலாவின் தொழிலாளர் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 141 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
இவ்வாறு வலதுசாரிகள் பிரதிநிதித்துவம் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் வலுவாக உள்ளதால் லூலா தன் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவதை சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றன. இவர் ஆட்சி புரியும் காலத்தில் இவர்களுடன் சில சமரசங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.
லூலா வெற்றி பெறுவதற்காக ஏற்கனவே சில சமரசங்களைச் செய்துகொண்டிருக்கிறார். இவர் தேர்தல் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும்போது சுவிசேஷங்களில் உள்ள போதனைகளிலிருந்தும், கடவுள் குறித்தும் சுவிசேஷ கிறித்துவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் சில வேண்டுகோள்களை விடுக்க முயற்சித்தார். இவருடைய துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர், ஜெரால்டோ அல்க்மின் (Geraldo Alckmin), இவருடைய முன்னாள் போட்டியாளர் மற்றும் மத்தியக் கட்சியின் (Centre Party) தலைவர். லூலாவின் கூட்டணி, கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், தாராள-முதலாளிகள் (liberal-bourgeois) என அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், வலதுசாரிகள் வளர்ச்சியை முறியடிப்போம், அமேசான் காடுகளைப் பாதுகாப்போம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என்கிற ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்துள்ளனர்.
லூலாவின் வெற்றி பிரேசில் முழுவதும் உள்ள ஏழை மக்களால், ‘சுதந்திரமும் ஜனநாயகமும் மீளவும் கிடைத்துவிட்டது’ என்கிற உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரே, இந்த வெற்றியை ஜனநாயக இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியிருக்கிறார். அவர், வறுமை, பசி-பட்டினிக் கொடுமை, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல் மற்றும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து அதனைப் பாதுகாத்தல் ஆகிய பிரச்சனைகள் உடனடியாக கவனம் செலுத்தப்படும் என்று உறுதிமொழியை அளித்திருக்கிறார்.
லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரித் தலைவர்களின் ஆட்சி அதிகரித்துக் கொண்டிருப்பது, உலகத் தலைவர்களை ஜனாதிபதி லூலாவை வாழ்த்துவதற்கு இட்டுச் சென்றுள்ளன. இவருடைய வெற்றி நிச்சயமாக ‘பிரிக்ஸ்’ (‘BRICS’), (இதில் இந்தியாவும் ஓர் அங்கம்) மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள ‘செலாக்’ (CELAC) போன்ற பன்னாட்டுக்குழுக்களுக்கும் புதியதொரு நம்பிக்கையைக் கொண்டுவரும்.
இப்போது நடைபெற்ற தேர்தல்களில் போல்சனாரோ தோற்கடிக்கப்பட்டபோதிலும், அவர் பெற்றுள்ள வாக்குகளிலிருந்து சாமானிய மக்கள் மத்தியில் வலதுசாரி சித்தாந்தம் எந்த அளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. லூலா நிர்வாகம், தான் அளித்திட்ட தேர்தல் உறுதிமொழிகளை அமல்படுத்தத் தவறினால், ஜனநாயகத்தை மீட்டெடுக்கத் தவறினால், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கத் தவறினால், பசி-பட்டினிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், வலதுசாரிகள் மீளவும் தலைதூக்குவதற்கு இருக்கின்ற அச்சுறுத்தலைத் தடுக்க முடியாது.
(நவம்பர் 2, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
“கழிசடை” கவர்னர் கட்டுரை – அ.பாக்கியம்
இப்போது கேரள முதல்வரின் மீது மீண்டும் தங்கக் கடத்தலை கையில் எடுப்பேன் தலையிடுவேன் என்று கழிசடைத்தனமான களத்தில் இறங்கி உள்ளார் கேரள கவர்னர் ஆதி முகமது கான்.
தனது பதவி வெறும் சம்பிரதாயமான தகுதி என்பதை மறந்துவிட்டார். அவருக்கு இருக்கும் சுதந்திரமான அதிகாரங்களுக்கு எல்லைகள் உண்டு என்பதையும் அதை மீறினால் மற்றவர்கள் தலையிடுவார்கள் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை.
நிதி அமைச்சர் தனது மகிழ்வுக்கு ஏற்றபடி நடக்கவில்லை நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சர் பினராய் விஜயன் அன்புக்கு பஞ்சமில்லை என்று பதில் அளித்து விட்டார்.
பின்னர் துணை வேந்தர்களை வெளியேற்ற முயற்சி செய்து ராஜினாமா கோரி கடிதம் வழங்கினார். யாரும் ராஜினாமா செய்யவில்லை. அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்தார். யாரும் பதில் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் துன்புறுக்கக் கூடிய முறையில் கவர்னர் நடக்க கூடாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இப்போது மத்திய புலனாய்வு அமைப்புகள் பலமுறை விசாரணை செய்தும் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பிறகும் அதை கையில் எடுப்பேன் என்று கவர்னர் புலம்புகிறார்.
பாஜக தலைவர்கள் எழுப்பும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கவர்னர் எழுப்புகிறார். இவர் RSS-ன் அடமான பொருளாக இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேற ஆதாரம் தேவையில்லை.
கும்மணம் ராஜசேகரன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது பாஜகவின் ஊடகத் துறை தலைவராக இருந்த ஹரி எஸ் கர்த்தா இப்போது ஆளுநரின் கூடுதல் தனி உதவியாளராக இருக்கிறார்.
இந்த கர்த்தாவை நியமித்தது மாநில அரசுதான். ஆனால் இது 18. 01.2019 மாநில ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் நடைபெற்றது. எனவே இவர் பாஜகவின் ஊது குழலை வாயிலே வைத்துக் கொண்டு ஊதிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகும்.
உ.பி.யை விட கேரளா சிறந்த மாநிலம் என்று சொன்னால் அது என்ன தேச துரோகமா. கடந்த தேர்தலின் போது யோகி ஆதித்யநாத் கேரளாவை இழிவு படுத்தி அறிக்கை வெளியிட்டார். கேரள மக்கள் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை விமர்சித்தார்களே தவிர கவர்னரை யாரும் விமர்சிக்கவில்லை.
இப்போது உ.பி. விட கேரளா சிறந்த மாநிலம் என்று பாலகோபால் சொன்னால் தேசத் துரோகம் என்று கவர்னர் முத்திரை குத்துவது புத்தி கெட்ட காரணத்தினால் தான்.
கேரளா போதைப் பொருட்களின் தலைநகரம் என்று ஆளுநர் குற்றம் சாட்டுகிறார் ஒரு பத்திரிக்கையாளரின் சந்திப்பில் இந்த முட்டாள்தனத்தை அவர் வெளிப்படுத்தினார். எந்த தகவல் அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார் என்று விளக்கவில்லை. எரிச்சலில் எரிந்து விழுகிறார்.
இந்திய அரசு வெளியிட்ட விபரங்கள் கூட ஆளுநரின் கருத்துக்கு முரணாக உள்ளது.
இந்தியாவிலேயே போதைக்கு எதிரான செயல்களை நடத்துகிற மிக முன்னுதாரணமான மாநிலம் கேரளா. இங்கு நடைபெறும் போதைக்கு எதிரான செயல்கள் கண்டு கவர்னர் ஏன் பொறாமைப்படுகிறார். இந்த விஷயத்திலும் கேரளா உ.பி. யை விட மிக மிக முன்னிலையில் இருக்கிறது.
தற்போது கேரளாவுக்கு இருக்கும் ஒரே வருமானம் மது மற்றும் லாட்டரி என்ற முட்டாள்தனமான கருத்தை கவர்னர் முன் வைத்துள்ளார்.
இந்திய அரசின் புள்ளிவிவரப்படி ஆரிப் முகமது கானின் சொந்த ஊரான உ.பி.யில் நிலையை விட கேரளாவின் நிலை மேம்பட்டது.
ஜிஎஸ்டி வரிக்குப் பிறகு கேரளா அரசுக்கு லாட்டரி மூலம் கிடைக்கும் லாபம் விற்பனை வரியில் மூன்று சதவீதம் மட்டும் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.
மதுவிலும் மிக மிக குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. மதுவிலும் ஆற்றிலும் இன்றைய அரசு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. எத்தனை ஆட்சி மாறினாலும் இந்த நிலை கேரளாவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் கேரளா தேசிய சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. அரசியல் செயல்முறை மூலம் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் மலையாளிகள் அனைவரும் இதை நினைத்து பெருமை கொள்ள உரிமை உண்டு என்பதை ஆர் எஸ் எஸ் என் அடிவருடியாக இருக்கும் ஆரிப் முகமது கான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆளுநரின் மிரட்டல் கேரளாவில் பலிக்காது என்று முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடுமையாக எச்சரித்து உள்ளார்.
– அ.பாக்கியம்





