இரா.மதிராஜ் கவிதைகள்

இரா.மதிராஜ் கவிதைகள்




இதயத் துடிப்பு
நிற்கும் போது
மட்டுமல்ல,
உன் நினைவுகள்
மறக்கும் போதும்
மரணிக்கிறேன்.

கண்ணிலிருந்து
வரும்
கண்ணீரும்
எரி தணலாய்
கொதிக்கிறது,

உன்னைப் பற்றிய
செய்திகளே
இன்னும்
என்னை
வாழ வைத்துக்
கொண்டிருக்கிறது.

உறவுகள் கூடி
இழுக்கும் தேரில்
உட்கார்ந்து
கொண்டிருக்கும்
நான்
அடிக்கடி
தனிமையாயிருக்கிறேன்.

அன்று என்ன
சொன்னாய்?
இப்போது என்ன
செய்து கொண்டிருக்கிறாய்
என்றொரு கேள்வி
கேட்கிறது,

ஆழ்கடல் பெரிதென்று
நினைக்கிறார்கள்
கண்ணீர்க் கடலில்
விழாதவர்கள்.

தேவதைகளின்
ஊர்வலத்தில்
குறுக்கே
சென்றவர்களும்
வாழ்க்கையைத்
தொலைக்கிறார்கள்.

உலகைச் சுற்றவைப்பது
சூரியனும், சத்திரனுமல்ல,
தானமும், தாயன்பும்
தான்.

இன்னும் ஆவலுடன்
பார்த்து ரசித்துக்
கொண்டிருப்பது
வெற்றி பெறாமல்
முயற்சி செய்துகொண்டிருக்கும்

மனிதன் தான்.

இரா. மதிராஜ்,
97884 75722.

ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்

ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்




தார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது –
வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள்
எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில்

நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள்
விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும் பறிகொடுத்து
படர்ந்து நிழல்தரும்
கிளைகளில் வசித்த
பறவைகள் அத்தனையும் வேறுகிளைகளைத்தேடி
அகதிகளாய்ப் பறந்துபோன பறவைகளின் வசிப்பிடங்களையும் தேடுகிறேன்

பறவைகளின் இடமாற்றத்தால் தடுமாற்றமானது
ஆறறிவுகள் அறியாமல்
செய்த வினைகளும்

கோடாரிகளை தூக்க கட்டுப்பாடுகள் இருந்திருந்தால்
காலியான ஆக்சிஜன் உருளைகள் தட்டுப்பாடோடு உருண்டிருக்கா.

வழியெங்கும் காற்றினை சுத்திகரிக்கும்
மரங்களின் ஆலைகளை அழித்தபின்
மனிதஇனத்தின் உயிர்காக்கும்
ஒட்டுமொத்த சுவாசக்காற்றையும் சுமந்து
அதே வழித்தடத்தில் பயணிக்கிறது சுவாச சுமையுந்துகள்

சுவாசங்களைப் புதுப்பிக்கும் விருட்சங்களின் விசேசங்களை அறிந்திருந்தால்
அவசியமிருந்திருக்காது மருத்துவ படுக்கைகளும்

ஏதோ ஒருகிளையின் பழத்தினை தின்றுதிரியும் பறவையின்
எச்சிலில் முளைக்கும் மரங்கள் தீங்கு செய்தோருக்கும் நிழல்தந்து
கார்பன் துகள்களை
உள்வாங்கி சுவாசிக்கும் உயிர்களுக்கு பிராண வாயுவினைத்தரும்
அதிசயமரத்தை விதைத்த ஆக்சிஜன் பறவையின்முன்
வெட்கப்பட்டு தலைகுனிந்து நிற்பதையறியாமல்
பறந்துசெல்கின்றன அப்பறவைகள்….

கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு

தர்மசிங் கவிதைகள்

தர்மசிங் கவிதைகள்




வேடங்கள்
*************
கொதிக்கும் வெயிலை
வலைக்குள் அடைத்து
நடுங்கும் குளிரை
நயமாய் துரத்துவோம்
என்றீர்கள்

மழையின் வேர்களை
நடவு செய்யும் முறையை
மழலைப் பருவத்திலேயே
புத்திக்குள் புகுத்துவோம்
என்றீர்கள்

சூரியக் கீற்றுகளை
கட்டுகளாக கட்டிவைத்து
உங்கள் உள்ளத்து இருளை
விரட்டியடிப்போம்
என்றீர்கள்

காற்றின் எல்லைகளை
வரைமுறைப் படுத்தி
உங்கள் சுவாசங்களுக்கு
உத்தரவாதம் தருவோம்
என்றீர்கள்

வசந்தத்தின் தூதுவர்களே
வருகவென்றோம்

முள் வேலிகளால்
எங்கள் பாதைகளை
முடக்க முயன்றபோது தான்
புரிந்தது

நீங்கள்
சொக்கும் சொற்களால்
வானம் படைப்பவர்கள்

நறுமணப் பூக்களால்
தீ வளர்ப்பவர்கள்

சிதைகளின் நெருப்பில்
குளிர் காய்பவர்கள்
என்பது…

எங்கள் வழியை மறித்தீர்கள்
வலியால் அழுதோம்
எங்கள் கைகளில் விலங்கிட்டீர்கள்
வலியால் அழுதோம்
எங்கள் அங்கங்களை உரசினீர்கள்
வலியால் அழுதோம்
எங்கள் மர்ம உறுப்புகளை
ஆயுதங்களால்
சிதைத்த போதுதான்
உயிர் வலியால்
நடுங்கிப் போனோம்

பலவான்களே!

உங்கள் இதயத்தில்
எப்போதாவது
ஈரம் கசிந்தால்
உங்கள் வேடங்களை
களைந்து விடுங்கள்

பாதுகாவலர்கள் எனும்
பதத்தை கேட்டாலே
நெருப்பு பொறி பறக்கிறது
நெஞ்சாங்கூடுகளில்…

வலி
******
காலை வேளையில்
இணைந்து நீராடும்
நண்பர்களோடும்

பணிக்குத் திரும்புகையில்
புன்னகைக்கும்
உள்ளூர் உறவுகளோடும்

பேருந்து நிறுத்தத்தில்
பத்துநிமிட
தோழர்களோடும்

அருகாமை இருக்கைகளில்
பயணிக்கும்
நாற்பது நிமிட நேர
சக பயணிகளோடும்

பணியிடத்தில்
பத்துமணி நேர
உடன் ஊழியர்களோடும்

புதிது புதிதாய்
நிதமும் சந்திக்கும்
வாடிக்கையாளர்களோடும்

இரவு வீடு திரும்புகையில்
மாமூலாகப் பயணிக்கும்
பேருந்தின்
நெருக்கமான நடத்துனர்களோடும்

இறங்குமிடத்தில்
வீடுதிரும்ப
தயாராகிக் கொண்டிருக்கும்
தையல்கடை நண்பரோடும்

அண்டை நாட்டு
நிகழ்வுகளையும்
உள்நாட்டு அரசியலையும்
குடும்ப வலிகளையும்
சின்னச்சின்ன
மகிழ்வுயகளையும்

பரிமாறிக் கொள்ளும்
வாய்ப்பினை இழந்து

அலை பேசியோடும்
தொலைக் காட்சியோடும்
போராடுகிற நிலையில்
வீட்டுக்குள் முடக்கிய
இந்த கொரோனா கால
” லாக் டவுண் ”
மனநலத்தை சோதிக்க

உள்ளுணர்வில்
மனதை மௌனமாக
உறுத்திக் கொண்டேயிருக்கிறது

வீட்டுச் சுவர்களை
தனது எல்லைகளாக்கி
நாட்களை நகர்த்தும்
வாழ்க்கைத் துணையின்
வலி…

நமக்கென்ன?
****************
பிளந்த மண்டையிலிருந்து
பீரிடுகிறது ரத்தம்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

கைகளின் மொத்த பலமும்
லத்தி வழி நுழைகிறது
முழங்கால்களில்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

முதுகில் வரிவரியாய்
ஆயுதங்கள் முத்தமிட்ட
சிவப்புத் தடங்கள்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

விரலுக்கு மீறிய
வீக்கங்கள்
வெண்கட்டுகளுக்குள்
அவனுக்குத்தானே
நமக்கென்ன?

கிழித்து வீசப்பட்ட
துப்பட்டாக்களில் படிந்து கிடக்கிற
கண்ணீரின் ஆறாத வலிகள்
அவளுக்குத் தானே
நமக்கென்ன?

சுதந்திரமாய் சீறும்
துப்பாக்கி முனையின் முன்
அவனது மார்பு தானே
நமக்கென்ன?

அந்நியருக்கான நேற்றைய
வலி வடிவங்களில்
இன்று நானாக இருக்கலாம்
நாளை நீயாக இருக்கலாம்
மறுநாள் அவனாக இருக்கலாம்

நம் மௌனமே
நம் வாழ்வுக்கு ஆதாரமானால்
நாளையே படரும்
நம் செவிப்பறைகளிலும்

” அவனுக்குத்தானே
நமக்கென்ன?”…

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்…

பொக்கை (கள்) கவிதை – சாந்தி சரவணன்

பொக்கை (கள்) கவிதை – சாந்தி சரவணன்




அலாரம் அடித்தது போல்
ஆதவன் உதயமாகிவிடுகிறான்
யுகங்களாய் நகர்கின்றன
நொடிகள்!

எப்படிக் கழிப்பது இந்த
பகற்பொழுதை
என்பதே அவர்களின்
அச்சம்!

இரவுப் பொழுதில்
வராத தூக்கத்தை
ஏமாற்றி
போர்வைக்குள்
கண் முடி ஒளிந்து கொள்கிறார்கள்!

ஆனால்
பகலில்
பேச்சுத் துணையின்றி
பெற்ற மனம் பரிதவிக்கிறது!

கொஞ்சி யானை விளையாட்டு விளையாட
பேரன் பேத்தி அருகில் இல்லை!

சாப்பிடிங்களா என கேட்க
மகனும் மகளும் பக்கத்தில் இல்லை!

உறவுகளின் விழாவில்
கலந்துக்கொண்டு
உறவாட வழியில்லை!

பொக்கைகள் இரண்டும்
அண்ணாந்து விட்டத்தை பார்த்தபடி
பல மணி நேரம்
ஊடகங்கள்
பார்த்தபடி
சில நேரம்
நினைவலைகளில்
வாழந்தபடி
நடைப்பிணமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
சிலர்
முதியோர் இல்லங்களிலும்
சிலர்
தனித்துவிடப்பட்டத் தாழ்வாரங்களிலும்!

– திருமதி. சாந்தி சரவணன்