Gnanam Kavithai By S. Lingarasu ஞானம் கவிதை - ச. லிங்கராசு

ஞானம் கவிதை – ச. லிங்கராசு

பயிர் வளர்க்க ஆசைப்பட்டேன்
பயிர் வளர்த்தேன் கூடவே
களை வளர்ந்து நின்றதனால்
களை இழந்தேன்
களை அழிக்க முயன்றேன்
பயிர் இழந்தேன்
உயிர் நிலைக்க ஆசைப்பட்டேன்
உண்டு கொழுத்தேன்
உயிர் பறிக்கும் நோயின் வசம்
உயிலைக் கொடுத்தேன்
கவி எழுத ஆவல் கொண்டேன்
கசடானது
கற்பனையின் வறட்சியினால்
கைவலித்தது
இசை பாட முயற்சி செய்தேன்
வசையானது
ஏனிந்தத் தோல்விகள் என்று
எண்ணிய போதினில்
எல்லாமே எல்லோருக்கும்
சாத்தியமா? என்றொரு
கேள்வியில் ஞானம் பிறந்தது

Kizhintha Mukathirai Poem S. Lingarasu கிழிந்த முகத்திரை கவிதை - ச.லிங்கராசு

கிழிந்த முகத்திரை கவிதை – ச.லிங்கராசு
முகத்திரையை ஒதுக்கும்
உங்கள் எண்ணத்தில்
உங்கள் முகத்திரை கிழிந்ததே
உலகளவில்
அறிவீர்களா?
அறிந்தும் அறியாததைப் போல்
பாவனை செய்வதே
உங்கள் அரசியல்

மக்களையே நினைக்காது
மதங்களை மோத விட்டு
வாக்கு அறுவடை செய்ய முனையும்
உங்கள் மதிகெட்ட போக்கு
இன்னும் எத்தனை நாட்களுக்கு?

அறிவியல் மாநாடுகளில்
அளந்து விடும் புராணப் புரட்டுகளால்
அதிரும் சிரிப்பலைகளை அறிவீர்களா நீங்கள்?

மாட்டுக் கறிக்குப் பூட்டு
ஆனால் ஏற்றுமதிக்கு விலக்கு
என்ன உங்கள் அரசியல் என்றே
எவருக்கும் இங்கு புரியவில்லை

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற தமிழகத்தில்
எல்லோருக்கும் ஒரு மதம்
ஒரு மொழி என்றால் காக்கையும்
குருவியும் கைக் கொட்டி
சிரியாதோ?

கடவுளும் மதமும் கடைச்சரக்கு
உங்களுக்கு
நினைத்த போதெல்லாம்
ஆட்சிக்காக காட்சிப் பொருளாக

இன்னும் எத்தனை நாட்களுக்கு
இந்த இறுமாப்பு?
மக்கள் தீர்ப்பை உங்கள்
மகேஷ்வரனாலும் மாற்ற முடியாது

Aadum varai Aadattum Poem By S Lingarasu ஆடும் வரை ஆடட்டும் கவிதை - ச.லிங்கராசு

ஆடும் வரை ஆடட்டும் கவிதை – ச.லிங்கராசு
வேடிக்கை ஆட்சியில்விநோத சட்டங்கள்
வாடிக்கை இவருக்கு வாடுகிறார் மக்களும்
புதிய கல்வியாம் புதுமை திட்டமாம்
அதிகார துணிச்சலில் அமைத்திடவே முனைகிறார்
ஒரு நாடு மொழிஒன்றே ஓங்கியே ஒலிக்கிறார்
வரும்துன்பம் அறியாது வாய்ப்பிதற்றி நிற்கின்றார்
கோவிலாம் வீடாம் கோடியிலே அமையுதாம
பாவியாய் ஏழைகள் பரிதவித்து நிற்கின்றார்
உழவரை ஏய்த்திட உயர்த்தினார் சட்டத்தை
அழவில்லை போராடி அடக்கினர் கொட்டத்தை
எத்தனை நாள் இந்த ஏற்றமும் தோற்றமும்
அத்தனைக்கும் பதிலுண்டு ஆடும் வரை ஆடட்டும்

Agarathiyal avasthai poem by S.Lingarasu ச.லிங்கராசின் அகராதியால் அவஸ்தை கவிதை

அகராதியால் அவஸ்தை கவிதை – ச.லிங்கராசு‘சுவற்றிலேயே எழுதாதே’ என்று
அந்த சுவற்றிலேயே எழுதும்
திறமைசாலிகள் அல்லவோ நாம்
மதுவும் புகையும் உடல் நலனைக்
கெடுக்கும் என்று எழுதும் நாம்
வாழ்க்கை ஏழைகளுக்குக் கேடு
விளைவிக்கும் என்று எதில்
எழுதுவோம்?
எச்சரிக்கை மீறிக் குடித்து குடி மூழ்கிப் போவதைப் போல்
எச்சரித்தாலும் ஏழைகள் வாழ்ந்து
கெட்டுப் போகும் கட்டாயத்தில்
இருப்பதால் எழுதவே அவசியம்
ஏது என்கிறோமா?
மனித மாண்புகளை மறந்து,மறுத்து வாழும் இந்த
மனிதர்கள்
உயர்வு தாழ்வு கற்பிப்பதில் மட்டும்
உயர்ந்து நிற்கிறார்களே!
வர்ணத்தில் வராதவர்கள் என்று
வகைப்படுத்தி வசை பாடுவதில்
மட்டும்
வல்லவர்களாய் இருக்கிறார்கள்
இந்த வாழத் தகுதியற்றவர்கள்
முட்டியும் மோதியும் முன்னேறத்
துடிக்கும் மக்கள்தான் இந்த
மூளை மழுங்கியவர்களின்
இலக்காகி மூர்ச்சையாகிறார்கள்
கலை என்னும் போர்வையில்
கண்டதும் பேசி
மனிதாபிமானம் என்ற வேரில்
அமிலம் ஊற்றுகிறார்கள்