மேற்குக் கரையைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள நிறவெறிச் சுவரின் சில இடங்களில் இஸ்ரேல் இராணுவத்தின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் மற்ற பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அப்படியான ஒரு சோதனைச் சாவடியில் கடந்த ஜனவரி 08 ஆம் தேதி அன்று, நின்று கொண்டிருந்த கூட்டத்தில் ரியாத் அல்-மாலிகியும் இருந்தார். சாதராண பாலஸ்தீன மக்களுக்கு இது தினசரி நடைமுறைதான். இருப்பினும் ரியாத் அல்-மாலிகி தங்களுடன் நின்றதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ரியாத் அல்-மாலிகி சாதாரண பாலஸ்தீன பிரஜை அல்ல என்பதும் அவர் பாலஸ்தீன அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்பதும் தான் இந்த ஆச்சரியத்திற்கான காரணம்.

இஸ்ரேலில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தீவிர வலதுசாரி அரசு, பாலஸ்தீன மக்களின் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரியாத் அல்-மாலிகின் சிறப்புச் சலுகைகள் ரத்து செய்ப்பட்டுள்ளன. பாலஸ்தீன அரசாங்கத்தின் உயர்ப் பதவியில் இருப்பவருக்கே இதுதான் நிலைமை என்றால்? சராசரி பாலஸ்தீன மக்களின் மீது இஸ்ரேல் அரசும், இராணுவமும் செலுத்தும் ஒடுக்குமுறையை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும். கடந்த ஆண்டு மட்டும் இஸ்ரேல் இராணுவத்தால் 225 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் மாதத்தில் மட்டும் 35 பேர் கொல்லப்பட்டனர். இப்படி அப்பாவி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொள்வது ஒன்றும் புதிய செய்தியல்ல கடந்த 75 ஆண்டுகளாகத் தொடரும் ஒரு சாதராண நிகழ்வுதான்.

இஸ்ரேல் என்கிற நாடு 1948 ஆம் ஆண்டு பல்லாயிரம் அப்பாவி பாலஸ்தீன மக்களைப் படுகொலைச் செய்து அதன் இரத்தத்தின் மீதுதான் உருவானது. அப்படியான படுகொலைகளைத் தாங்கள் செய்யவில்லை என்று இன்று வரை இஸ்ரேல் அரசு மறுத்துவருகிறது. மேலும் அந்தப் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் பின்னாளில் அந்நாட்டின் பிரதமர் உள்பட பெறும் பொறுப்புகளை வகித்தனர் என்பதுதான் இஸ்ரேலின் வரலாறு.

இப்படியான சூழலில் கடந்த ஆண்டு வெளியான இஸ்ரேலைச் சேர்ந்த இயக்குனர் அலோன் ஸ்வாரஸ் இயக்கிய தந்தூரா (Tantura) மற்றும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த டேரின் ஜே சல்லாம் இயக்கிய பர்ஹா போன்ற திரைப்படங்கள் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேலின் இன அழிப்பு நடவடிக்கை குறித்து ஒரு விவாதத்தை உருவாக்கியது.

தந்தூரா என்கிற ஆவணப்படம் 1948 ஆம் ஆண்டு மே மாதத்தில் தந்தூரா கிராமத்தில் இருந்த பாலஸ்தீன அப்பாவி மக்களை யூத அமைப்பின் இராணுவப் பிரிவு கொன்றதையும் மேலும் பலரை வலுக்கட்டாயமாக கிராமத்தை விட்டு அப்புறப்படுத்தியதையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்தவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்ததுடன் கடுமையான விமர்சனங்களும் திரைப்படம் குறித்து எழுந்துள்ளது. எனவே தமிழ்ச் சூழலில் தந்தூரா திரைப்படம் மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை உரையாட முயற்சிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பாலஸ்தீனம் அழிக்கப்பட்டு இஸ்ரேல் உருவானதன் சுருக்கமான வரலாறு

முதல் உலகப்போரின் இறுதிப்பகுதியில் ஒட்டமான் பேரரசு வீழ்ச்சி அடைந்ததை அடுத்து மத்திய கிழக்கு பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டு ஏகாதிபத்திய நாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. இந்த பங்கீட்டில் 1917 ஆம் ஆண்டு பாலஸ்தீனம் ஆங்கிலேயர்களின் வசம் செல்கிறது. அன்று தொடங்கி 1948 இல் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்படும் வரை ஆங்கிலேயர்களின் வசம்தான் பாலஸ்தீனம் இருந்தது.

யூதர்களுக்கு என்று தனியாக ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் அது தங்களுடைய புனிதத்தலமான ஜெருசெலம் அமைந்திருக்கும் பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் ஜியோனிச வாதிகளால் 19 ஆம் நுற்றாண்டின் இறுதிக் காலங்களிலேயே முன் மொழியப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக 1901 ஆம் ஆண்டு யூத நெட்வொர்க் நிதி உருவாக்கப்பட்டு அதன் மூலமாக பாலஸ்தீன பகுதிகளில் நிலம் விலைக்கு வாங்கப்பட்டு யூதர்கள் குடியமர்த்தபட்டனர். 1900க்கு முன்பு 3000த்திற்கும் குறைவாக இருந்த யூதர்களின் எண்ணிக்கை 1918 ஆம் ஆண்டு 50 ஆயிரமாக உயர்ந்தது. இந்த முயற்சிகள் ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகு இன்னும் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக யூதர்களின் மக்கள் தொகை 1948ஆம் ஆண்டில் 5 லட்சத்தை எட்டியது. யூதர்களைப் பாதுகாக்க ஜியோனிசவாதிகள் ஹகன்னா என்கிற ராணுவ அமைப்பை 1920 இல் உருவாக்கினர். இந்த ராணுவ அமைப்புதான் பின்னாளில் மிகப்பெரிய அளவில் பாலஸ்தீனியர்களைப் படுகொலைச் செய்தது.

ஆங்கிலேயே ஆட்சியின் அதிருப்தி காரணமாக பாலஸ்தீன மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான எழுச்சிமிக்கப் போராட்டம் ஒன்றை 1936 இல் தொடங்கினர். இந்தப் போராட்டம் 3 ஆண்டுக் காலம் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இப்போரில் ஆங்கிலேய ராணுவத்துடன் ஹகன்னா இணைந்து சண்டையிட்டது. இந்த சண்டைக்களம் ஹகன்னாவிற்குப் பாலஸ்தீன கிராமப் பகுதிகளில் சண்டையிடுவதற்கான பயிற்சிக் களமாக அமைந்தது. மேலும் இந்த சண்டையில் பாலஸ்தீன மக்களுக்கான தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் போராட்டமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

சண்டை ஒரு புறம் நடந்து கொண்டிருந்த போதே, ஜியோனிச வாதிகளின் தலைவரும் இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்தவருமான டேவிட் பென்-குரியன் ஆணைக்கிணங்க 1937 இல் எளிமேலேச் திட்டம் என்று சொல்லப்படும் பாலஸ்தீனத்தை ஆங்கிலேயர்கள் வெளியேறும் பட்சத்தில் ராணுவ நடவடிக்கையின் மூலம் எப்படி கைப்பற்ற வேண்டும் என்கிற திட்டத்தை உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததைப் போல் ஆங்கிலேயர்கள் உடனடியாக வெளியேறவில்லை. பத்தாண்டுகள் கழித்து 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் ஆங்கிலேயர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தனர். மேலும் பாலஸ்தீன பிரச்சனையைப் புதிதாக உருவாக்கப்பட்ட ஐநா அவையிடம் ஒப்படைத்தனர்.

ஐநா சபையால் இதற்குத் தீர்வுகாண 11 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் 6 மாத காலத்திற்குப் பிறகு இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நவம்பர் மாதத்தில் பாலஸ்தீனத்தைப் பிரித்து இஸ்ரேலை உருவாக்கும் தீர்மானம் ஐநா சபையில் முன்மொழியப்பட்டது. இந்த குழுவினருக்கு மத்தியக் கிழக்கு குறித்துப் போதுமான அறிவு இல்லை என்பது உட்பட பல விமர்சனங்கள் இக்குழு மீது வைக்கப்பட்டது. இருப்பினும் இந்தத் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றபட்டது. இதில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து இதை ஆதரித்தன. ஏற்கனவே யூதர்கள் மேற்குலகிலும், அமெரிக்காவிலும் தங்களுக்கு ஆதரவாக லாபி செய்திருந்தாலும் இரண்டாம் உலகப் போரில் இவர்கள் பாதிக்கப்பட்டதும் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதும் பல நாடுகளின் ஆதரவை இவர்கள் பெறுவதற்கு உதவியாக இருந்தது. இருப்பினும் இத்தீர்மானத்தை எதிர்த்து 11 நாடுகள் வாக்களித்தன அதில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

1948 இல் நடந்த இன அழிப்பு நடவடிக்கை

ஐநா சபை தீர்மானம் நிறைவேற்றப் பட்டவுடன் பாலஸ்தீனத்தில் உள்நாட்டு கலவரம் நடக்கத் தொடங்கியது. இதைக் காரணமாக வைத்து ஹகன்னா அமைப்பினர் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினர். மேலும் இதனுடன் ஆங்கிலேயர்களை அங்கிருந்து விரைவாக வெளியேற்றுவதற்கு ஆங்கிலேய ராணுவத்தின் மீதும் கடுமையான தாக்குதலை யூதர்களின் ராணுவம் நிகழ்த்தியது. ஏற்கெனவே நன்கு திட்டமிட்டிருந்த ராணுவ நடவடிக்கைகளைத் தாக்குப் பிடிக்க முடியமால் பாலஸ்தீன ராணுவம் பெரும் பின்னடைவைச் சந்திக்கிறது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக சிரியா, எகிப்து, ஜோர்டன் போன்ற நாடுகளைச் சேர்ந்த படைகள் துணைக்கு வந்தன. இது ஓர் அளவிற்கு சேதத்தைக் குறைக்க பயன்பட்டதே ஒழிய, யூத ராணுவத்தை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை.

1937 இல் எளிமேலேச் திட்டத்திற்குப் பிறகு வந்த காலங்களில் மேலும் இரண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. இதையெல்லாம் மேன்மைப் படுத்தி 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி டேவிட் பென் கொரியன் தலைமையில் பிளான் டலேட் (Plan Dalet) என்று பெயரிடப்பட்ட பாலஸ்தீன மக்களைத் தங்களுடைய சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றிவிட்டு யூதர்களுக்கான தனி நாடாக இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்பதற்கானத் திட்டம் இறுதி செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்காக உளவுப்பிரிவின் மூலம் பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் பல நுட்பமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அப்படி திரட்டப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் பாலஸ்தீன பகுதிகளை 12 அலகுகளாகப் பிரித்த ஹகன்னா அமைப்பினர் அதில் சண்டையிடுவதற்கு 12 படைப்பிரிவுகளை உருவாக்கி முழுமையான போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அதேவேளையில் இவர்களின் தொடர்த் தாக்குதலின் காரணமாக ஆங்கிலேய ராணுவம் முழுமையாக மே மாதம் 14 ஆம் தேதி பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது. உடனடியாக டேவிட் பென் கொரியன் இஸ்ரேல் என்கிற நாடு உருவானதாக அறிவித்தார். அடுத்த நாளே அமெரிக்க அதிபர் ஹாரி ட்ருமன் அந்நாட்டை அங்கீகரித்தார். அதனை ஒட்டிவந்த நாட்களில் பல நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரித்தனர். அதற்கு அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்ட பிளான் டலேட்யின் அடிப்படையில் பாலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் அழிக்கும் வேலையைத் தொடங்கியது. இந்த இன அழிப்பு நடவடிக்கை ஜனவரி மாதம் 1949 வரை தொடர்ந்தது. இந்த நடவடிக்கையின் மூலம் 8 லட்சம் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக்கப்பட்டனர். 410 கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதுடன் 15,000 பேர் இதில் கொல்லப்பட்டனர். இப்படி அழிக்கப்பட்ட பல கிராமங்களில் ஒன்றுதான் தந்துரா.

தந்துரா ஒரு அழகிய கடற்கரைக் கிராமம்

ஹைபா நகரத்தின் தென்பகுதியில் 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அழகான கடற்கரைக் கிராமம்தான் தந்துரா. 1948 இல் 1500 பேர் மட்டுமே வாழ்ந்த ஒரு சின்ன கிராமம். இக்கிராமம் ஐநா சபையால் இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தது. மே 15ஆம் தேதி யூத புலனாய்வு அதிகாரியின் மூலம் கிராமத்தின் முக்கியமானவர்களுக்குச் சரணடையச் சொல்லி செய்தி அனுப்பப்படுகிறது. சரணடைந்தால் தாங்கள் இந்த கிராமத்திலிருந்து வெளியேற்றப் படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகச் சரணடைய மறுக்கின்றனர். எனவே மே 22 ஆம் தேதி இரவு தந்துரா கிராமம் ஹகன்னா அமைப்பினரின் அலெக்ஸ்ன்றோனி படைப்பிரிவினரால் சுற்றிவளைக்கப்படுகிறது.

அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். மேலும் இராணுவம் ஒரு பெண்ணை மானபங்கம் செய்தது. அதை தடுக்கச் சென்ற அவருடைய வயதான மாமாவும் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இறந்தவர்களின் பிணங்களைக் கடற்கரைக்கு அருகில் இராணுவம் புதைத்தது. அத்துடன் உயிர் பிழைத்தவர்களை அந்த கிராமத்தைவிட்டு வலுக் கட்டாயமாக இராணுவம் வெளியேற்றியது. அதற்குப்பிறகு அந்த கிராமம் வாகனங்களைக் கொண்டு முழுமையாக அழிக்கப்பட்டு ஐரோப்பாவில் இருந்து பாதிக்கப்பட்டு வந்த யூதர்களை அந்த கிராமத்தில் குடியமர்த்தியது இஸ்ரேல் நிர்வாகம். இது போன்றுதான் மே மாதம் தொடங்கி ஜனவரி மாதம் 1949 வரை 6 மாத காலம் பல பாலஸ்தீன கிராமங்கள் ஹகன்னா இராணுவப் பிரிவினரால் அழிக்கப்பட்டதுடன் பலர் படுகொலையும் செய்யப்பட்டனர்.

இந்தப் படுகொலைகளின் மேல்தான் தங்கள் நாடு உருவாக்கப்பட்டது என்பதைத் தொடர்ந்து மறுத்து வருவகிறது இஸ்ரேல். அதேபோல் பாலஸ்தீனர்கள் தாங்களாக அமைதியாக கிராமங்களை விட்டு வெளியேறினார்கள் என்றும் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறனர். அன்றே இதற்கு ஆதரவாக உலக அளவில் பிரபலமான பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் பகுதிக்கு அழைத்து வந்து ஊடகங்களில் அந்தப் பொய் பிராச்சாரத்திற்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட வைத்தனர் இஸ்ரேலியர்கள். இவர்கள் செய்த மிகப்பெரிய இனப்படுகொலையை மறைப்பதற்கு இது பேருதவியாக அமைந்தது.

டெடி கேட்ஸின் ஆய்வு

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் டெடி கேட்ஸ் (Teedy ketz) என்கிற ஹைபா பல்கலைகழகத்தில் படித்த மாணவன் தன்னுடைய முதுகலைப் படிப்பிற்காக ஹைபா பகுதியைச் சேர்ந்த 5 கிராமங்களைத் தேர்வு செய்து அக்கிராமங்களில் 1948 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்தார். அவர் அவ்வாறு தேர்வு செய்த கிராமங்களில் ஒன்று தந்துரா. இந்த ஆய்விற்காகப் பாதிக்கபட்ட பாலஸ்தீனர்கள், போரில் ஈடுபட்ட அலெக்ஸ்ன்றோனி படைப்பிரிவினர் என மொத்தம் 135 நபர்களிடம் நேர்காணல் செய்ததார் டெடி. அதேபோல் அந்த நேர்காணல்கள் அனைத்தையும் டேப்பிலும் பதிவு செய்து கொள்கிறார். இப்படி பதிவு செய்ப்பட்ட 140 மணி நேர ஆடியோ பதிவு டெடியிடம் இன்றைக்கும் உள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் இஸ்ரேல் இராணுவம் வலுக்கட்டயமாக பாலஸ்தீனர்களைக் கிராமங்களில் இருந்து வெளியேற்றியது என்றும் தந்துரா கிராமத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்டவர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர் (பெரும்பாலானவர் ஆண்கள்) என்றும் தான் எழுதிய ஆய்வை 1998 ஆம் ஆண்டு டெடி சமர்ப்பித்ததார். அந்த ஆய்வுக்காக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்றார்.

அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் இவர் ஆய்வை இஸ்ரேலில் யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. 2000 ஆம் ஆண்டு பல்கலைகழக நூலகத்திற்குச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் கண்ணில், டெடி கேட்ஸ்யின் ஆய்வு படுகிறது. அடுத்த சில நாட்களில் அந்த ஆய்வை மையமாக வைத்து மரிவ் என்கிற பத்திரிகையில் செய்தி ஒன்றை வெளியிடுகிறார் அந்த பத்திரிகையாளர். இது இஸ்ரேலில் பெரும் புயலைக் கிளப்புகிறது. அலெக்ஸ்ன்றோனி படைப்பிரிவின் முன்னாள் இராணுவ வீரர்கள் தாங்கள் அதுபோல் சொல்லவில்லை என்று மறுத்ததுடன் டெடி மீது அவதூறு பரப்பியதாக வழக்கும் போடப்பட்டது. நீதிமன்றங்களில் டெடிக்கு எதிரான போக்கு நிலவியதுடன் பல வகையிலும் டெடி மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். இதன் அழுத்தம் காரணமாக டெடி அந்த ஆய்வு தவறு என்று கடிதம் கொடுத்ததுடன் அதை பின்வாங்குவதாகவும் அறிவித்தார். அவருக்கு மீண்டும் அந்த ஆய்வை சமர்ப்பிக்க பல்கலைகழகம் வாய்ப்பு வழங்கியது. முதலில் அழுத்தம் காரணமாகத் தன்னுடைய ஆய்வைத் தவறு என்று சொன்ன டெடி தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு பழைய மாதிரியே ஆய்வைச் சமர்ப்பித்தார். இந்த முறை மிகவும் குறைவான மதிப்பெண் வழங்கப்பட்டதுடன் அவருடைய ஆய்வும் நூலகத்தில் இருந்து அப்புறப் படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த இருபது ஆண்டுகள் இதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயக்குனர் அலோன் ஸ்வாரஸ்க்கு இது தொடர்பானத் தகவல்கள் கிடைத்தவுடன் டெடியைச் சந்திக்கிறார். இந்த சந்திப்புதான் தந்துரா என்கிற ஆவணப்படம் உருவாகக் காரணமாக அமைந்தது.

தந்துரா ஆவணப்படம்

90 வயதைக் கடந்த தந்துராவில் வசிக்கும் யூதர் ஒருவரிடம் இருந்துதான் தந்துரா படம் தொடங்குகிறது. படத்தின் முதல் சில நிமிடங்களில் அந்த முதியவருடன் மூன்று 90 வயதைக் கடந்த பெண்களும் உட்கார வைக்கப்பட்டு, தந்துராவில் 1948 இல் என்ன நடந்தது என்று வினவுகிறார் இயக்குனர். இந்த நான்கு நபர்களும்தான் ஜூன் மாதம் 1948 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து வந்து தந்துராவில் குடியேறியவர்களில் இன்றைக்கும் உயிருடன் இருப்பவர்கள். இவர்கள் தந்துராவில் படுகொலைகள் எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பதுடன் படத்திற்கான டைட்டில் போடப்படுகிறது.

இந்தப் படம் பெரும்பாலும் டெடியின் ஆய்வை மையமாக வைத்துத்தான் நகர்கிறது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெடி சக்கர நாற்காலியில் பயணிக்கும்போதே பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். அவருடனான நேர்காணலைத் தொடங்கும் இயக்குனர், உங்களுக்கு எப்போது சிரமம் ஏற்பட்டாலும் சொல்லுங்கள் நிறுத்திக் கொள்ளலாம் அதபோல் உங்களுக்கு என்ன நினைவிருக்கிறதோ அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்வார். அதற்குப் பதிலளிக்கும் டெடி தன்னை மூன்று முறை பக்கவாதம் தாக்கியுள்ளது என்றும் அதில் முதல் பக்கவாதம் ஏற்பட்டது இந்த ஆய்வு தொடர்பான நெருக்கடியின் விளைவாக என்று சொல்லும் பொழுது பார்வையாளர்கள் டெடியின் நெருக்கடியை முழுமையாக உணரமுடிகிறது.

டெடியிடம் நடக்கும் மேற்கொண்ட உரையாடலில் அந்த 140 மணி நேர ஆடியோ டேப் தன்னிடம் இப்போதும் இருப்பதை இயக்குனரிடம் கூறுகிறார். உடனே அதைப் பார்க்கலாமா என்று வினவுகிறார் அந்த இயக்குனர் அதற்கு டெடி தன்னுடைய வீட்டில் ஒரு அறையைக் காண்பித்து இதில் தான் உள்ளது தாராளமாக அதை நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்கிறார். டெடியின் மனைவி குறுக்கிட்டு அந்த அறைக்குப் பெயர் தந்துரா அறை என்றும், அந்த அறைக்குள் அந்த டேப் உள்பட தந்துரா தொடர்பாகப் பல்வேறு ஆவணங்கள் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார். டெடிக்கு தந்துரா மீதுள்ள ஆய்வின் ஆர்வத்தையும் ஆழத்தையும் நமக்கு விளங்கப்படுத்தவே இந்த காட்சிகள் அமைக்கப்ப ட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

டெடி நேர்காணல் மேற்கொண்ட அலெக்ஸ்ன்றோனி படைப்பிரிவின் முன்னாள் வீரர்கள் சிலர் தற்போது உயிருடன் உள்ளனர். அவர்களில் சிலரைத் தேர்வு செய்து மீண்டும் நேர்காணல் செய்கிறார் இயக்குனர். இதில் சிலர் நாங்கள் படுகொலைகள் எதுவும் செய்யவில்லை என்று மறுக்கின்றனர். சிலர் ஆமாம் நாங்கள் பாலஸ்தீனியர்களைச் சுட்டுக்கொன்றோம் என்று ஒப்புக்கொள்கின்றனர். அதில் ஒருவரிடம் நீங்கள் எத்தனைப் பேரைச் சுட்டுக் கொன்றீர்கள் என்று வினவுகிறார் இயக்குனர். அதற்கு அந்த இராணுவ வீரர் எனக்கு கணக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் என்னுடைய துப்பாக்கியில் 250 குண்டுகள் இருந்தன அதைப் பயன்படுத்தி என்னால் எவ்வளவு பேரைச் சுட முடிந்ததோ அவ்வளவு பேரைச் சுட்டேன் என்பார். மேலும் இன்னும் ஒரு வீரர் இது யுத்தம் அதில் இது போன்ற கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்று கொலைகளை நியாயப்படுத்துவார். அவர்கள் கொலைகளைச் செய்ததை மறைக்கும் பொழுது ஒருவித பதட்டத்துடன் சிரிக்கின்றனர். அந்த உடல்மொழி அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் கொலைகள் நடைபெற்றதை உறுதி செய்ய அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மூன்று அரேபியர்களையும் நேர்காணல் செய்துள்ளார் இயக்குனர்.

டெடி ஆய்வைத் தாண்டி சில கல்வியாளர்களிடமும் நேர்காணல் செய்து தந்துராவில் என்ன நடந்துள்ளது என்பதை வெளிப்படுத்த முற்படுகிறார் இயக்குனர். டெடியின் ஆய்வைப் பற்றி பேசும் பேராசிரியர் ஒருவர் ஹிட்லர் எழுதிய மெயின் கேம்பே நம்முடைய நூலகத்தில் இருக்கும் பொழுது டெடியின் ஆய்வை நூலகத்தில் இருந்து நீக்கியது எவ்வளவு அபத்தமானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இயக்குனர் நேர்காணல் செய்த பேராசிரியர்கள் சிலர் டெடியின் ஆய்வை மறுப்பதுடன் தந்துராவில் படுகொலைகள் எதுவும் நடைபெறவில்லை என்று வாதிடுகின்றனர். மேலும் இந்நேர்காணலில் மிகவும் முக்கியமான வரலாற்று ஆய்வாளரான இலான் பாப்பேவின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. அவர் தந்துராவில் பெரிய அளவில் படுகொலைகள் நடந்தது என்றும் அதபோல் பாலஸ்தீன மக்களைப் படுகொலைச் செய்து அதன்மேல் தான் இஸ்ரேல் உருவானது என்பதையும் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

படத்தில் இரண்டு தரப்புகளையும் சம அளவில் பிரதிபலிக்க வேண்டும் என்கிற ரீதியில் நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற தோற்றம் இருந்தாலும் ஒரு கட்டத்தில் படத்தில் தந்துராவில் படுகொலைகள் நடைபெற்றது என்பதைத் தெளிவாகப் புரியவைத்து விடுகிறார் இயக்குனர். மேலும் அந்தக் கிராமத்தில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில்தான் படுகொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பயன்படுத்தி நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

பெரும்பாலும் பிரச்னையின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இறுதிப் பகுதயில் தீர்வு தொடர்பாக விவாதிக்கப்படும் விடயங்கள்தான் இந்த படத்தின் நோக்கத்தை சந்தேகிக்கும் படியாக அமைந்துவிடுகிறது. ஒரு பேராசிரியர் அமெரிக்கா ஆஸ்திரேலியாவில் எப்படி தாங்கள் பூர்வகுடிகளை கொன்றோம் என்பதை ஒத்துக் கொண்டார்களோ அதேபோல் நாமும் இந்தக் கொலைகளை ஒத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

இறுதியாக இயக்குனர் ஐரோப்பாவில் இருந்து வந்து தந்துராவில் வசிக்கும் அந்த நான்கு முதியவர்களிடம் இங்கு இறந்தவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கலாமா என்பதைப் போன்ற உரையாடல் ஒன்றை நிகழ்த்துகிறார். முதலில் வலுவாக நால்வரும் அதை வேண்டாமென்று மறுக்கின்றனர் ஆனால் அடுத்த சில நொடிகளில் அதில் ஒருவர் நான் மாறுபடுகிறேன் நினைவுச் சின்னம் அமைக்கலாம் என்கிறார். அதற்கு அடுத்த சில காட்சிகளில் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதுடன் படம் முடிவடைகிறது.

படத்தினுடைய முதல் பிரேமிலேயே 1948 இல் நடைபெற்றதைப் பொறுத்தவரை இஸ்ரேலுக்கு சுதந்திரப்போர் என்றும் பாலஸ்தீனர்களுக்கு அது நக்பா (ஆங்கிலத்தில் catastrophe) என்கிற வாசகத்துடன்தான் தொடங்குகிறது. ஆனால் படத்தின் இறுதிக் காட்சியில் எழுப்பப்படும் நினைவுச் சின்னத்தில் சுதந்திரப் போரில் உயிர் நீத்தவர்களுக்கு என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். கொலைகள் நடந்ததை அங்கீகரிக்க முனையும் இயக்குனர் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டுள்ள கதையாடலின் படி 1948 இல் நடைபெற்றதைச் சுதந்திரப் போர் தான் என்றும் அந்த போரில் தான் தந்துராவில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள் இறந்தார்கள் என்கிற கோணத்தில் படத்தை முடிக்கிறார். நினைவுச் சின்னமெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை திரும்பவும் தங்கள் இடங்களுக்கே திரும்பி செல்லத்தான் விரும்புகின்றனர் பாலஸ்தீனர்கள். இதைப் பேச மறுப்பதன் மூலம் இயக்குனரின் அரசியல் நமக்குத் தெளிவாகிறது.

ஏற்கனவே “ஏய்டாஸ் சீக்ரெட்” என்கிற இவருடைய முதல் ஆவணப்படம் யூதர்கள் இரண்டாம் உலகப் போரின் போது படுகொலைச் செய்யப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதற்காக பரவலாகப் பாராட்டப்பட்டதுடன் பல விருதுகளையும் பெற்றார். மேலும் இவர் ஒரு இடதுசாரி முகாமைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இவரிடம் இருந்து ஒரு நேர்மையான படைப்பு எதிர்ப் பார்க்கபட்டது. அந்த எதிர்ப்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும் விதத்தில் தந்துரா ஆவணப்படம் எடுக்கப்படவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

பேரா. அருண்கண்ணன்
இயக்குநர்- தொழில் கல்விக்கான லயோலா கல்விக்கழகம்,
லயோலா கல்லூரி,
சென்னை

நன்றி: வளரி, ஜெம்சென் சென்னை இயேசு சபை ஊடக மையம்,
காட்சி தகவலியல் துறை, இலயோலா
கல்லூரி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “தந்துரா: உண்மையயைப் பிரதிபலிக்கும் ஓர் ஆவணப்படமா? கட்டுரை – பேரா.அருண்கண்ணன்”
  1. ஒரு ஆரோகியமான விவாதமாக இருக்கும் என்றே நம்புகிறேன். ஒரு படைப்பாளி தன்னை ஒரு பக்கம் சார்ந்தவராக காட்டி கொண்டு ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணும் போது நடுநிலை வகித்து கொள்வது சரியாக இருக்காது என்பதில் தெளிவு கொள்ள முடிகிறது. இதை எனக்கு அனுப்பி படிக்க வைத்ததற்கு நன்றி சார். மற்றும் இந்த ஆவணபடத்தை பார்க்க விரும்புகிறேன். Source இருந்தால் share செய்யவும் சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *