aayisha book reviewed by santhi saravanan நூல் அறிமுகம்: ஆயிஷா - சாந்தி சரவணன்aayisha book reviewed by santhi saravanan நூல் அறிமுகம்: ஆயிஷா - சாந்தி சரவணன்

புத்தகத்தின் பெயர் : ஆயிஷா
ஆசிரியர்:எழுத்தாளர் இரா. நடராசன்
பதிப்பகம்:பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்:24
விலை:25/-

ஒரு வார்த்தை ஒரு வாக்கியம் ஒரு புத்தகத்திலிருந்து நமக்கு ஒரு மாற்றத்தை அளிக்கும் என்பதை கேட்டுள்ளேன்.   அதை இந்த புத்தக வாசிப்பு எனக்கு அளித்தது. எத்தனை எத்தனையோ ஆயிஷாக்களை தொலைத்துவிட்டு பெற்றோர்கள் நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம்.

பொதுவாக அடக்குமுறை என்றவுடன் அரசியல், முதலாளி தொழிலாளர் வர்க்கம் என தான் நம் கண் முன் காட்சி விரிகிறது. ஆனால் நித்தம் நாம் நமது குழந்தைகள் மீது செலுத்தும் அதிகாரமும்  அடக்குமுறையையும்  நாம் ஏன் உணர்வதில்லை? பெற்றோர்கள் மட்டுமின்றி பள்ளிகளுக்கு பெரும் பங்கு இதில் உள்ளது.

குழந்தைகள் ஒரு கற்சிலைப் போல். அதற்குள் பல அரிய  சிற்பங்கள் ஒளிந்துக் கொண்டுள்ளது.   சமூகம், ஆசிரியர், பெற்றோர்கள் என அனைத்து வல்லுநர்களும் தனது அறிவு என்ற கற்பிக்கப்பட்ட உளியின் ஊடே அந்த சிலையை வெளிக் கொணராமல் அந்த சிற்பத்தை சிதைத்து விடுகிறார்கள் என்பது நிதர்சனம்.

“கையக்  கட்டு… வாயைப் பொத்து… ” 

இந்த சொலவடையை பயன்படுத்தாத  ஆசிரியர் இருக்கிறார்களா?  இல்லை என்பதே நமது பதிலாக இருக்கும்.  குழந்தைகள் கேள்விகளை கேட்பது இயல்பு.

ஏன் நிலா மேலே இருக்கு?

யாரு கொண்டு போய் வைச்சாங்க? 

ஏன் ஸ்கூல் போக வேண்டும்?  நட்சத்திரம் பகலில் எங்கே இருக்கிறது? 

நிலாவிற்கு பாட்டி எப்படி போனாங்க?

இது போன்ற கேள்விகள் பல பல…..

குழந்தைகளின் ஒவ்வொரு கேள்விக்கு பின் அறிவியல் இருக்கிறது. அதை நாம் சிறு வயதிலேயே சிதைத்து விடுகிறோம்.

சொல்லி கொடுப்பதை அப்படியே படித்து எழுதினால் வெறும்  மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் பொம்மைகளைத் தானே உருவாக்க முடியும்.  சிந்திக்க அனுமதித்தால் தானே புதிய சிந்தனைகள் பிறக்கும்.  புதியதாக கண்டுபிடிப்புகள் பிறக்கும்.   பொம்மைகளை உருவாக்க போகிறோமா?  சிந்தனையாளர்களை வழிநடத்த போகிறோமா?  நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

குழந்தைகள்  அவர்களின் இயல்பிலேயே வளர்வது தானே சரி.

எல்லா பெற்றோர்களுக்கும் அவர்களின் குழந்தைகள் “தாமஸ் ஆல்வா எடிசன்” போல சிறந்த விஞ்ஞானியாக, அறிவியலாளராக, கண்டுபிடிப்பாளராக, , தொழிலதிபராக பன்முகத்தன்மையோடு வளர வேண்டுமென விரும்புகிறார்கள்.

ஆனால் “தாமஸ் ஆல்வா எடிசன்”  அவர்களின் அன்னை “நேன்சி மேத்தீவ்ஸ் எலியட்” போல நாம் நம் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி வளர்கிறோமா ? என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி?

அப்படி என்ன செய்தார் அந்த அம்மையார். அனைவரும் அறிந்த செய்தி தான். பள்ளியிலிருந்து  ஆசிரியர்கள் அவரை கல்வி கற்றுக் கொள்ள இயலாதவர் என கடிதம் எழுதி அவரின் கல்வி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து அனுப்பினர்.

எடிசன், “ஆசிரியர் என்ன கடிதம் கொடுத்தார்”, என  அவரின் தாயிடம் கேட்ட போது. உனக்கு சொல்லிக்  கொடுக்கும் அளவிற்கு திறமையான  ஆசிரியர் பள்ளியில் இல்லை  என சொல்லி தன் மகனுக்கு தானே பாடம் கற்றுக் கொடுத்து வாசிப்பின் சுவையை நுகர வைத்து, முற்று புள்ளியை, தொடர செய்ய கூடிய செயலை  அவர் செய்தார். இல்லையெனில் இப்புத்தகத்தில் வரும் ஆயிஷா போல் அவர் வாழ்க்கை வேறு ஒரு கோணத்தில் பயணித்து  இருக்கும்.

கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  எல்லா ஆசிரியர்களும் இப்படி தான் என சொல்லி விட முடியாது. விதிவிலக்கு அனைத்து இடத்திலும் உண்டு.  பல மாணவர்கள் வாழ்க்கை உயர காரணமாக  பல ஆசிரியர்கள் இருந்தும் உள்ளார்கள்.

ஆசிரியராக பெற்றோர்களாக அவர்களின் திறமையை வெளிக்கொணர்வது தானே சமூகத்தின் வேலை.

ஒரு முற்றுபுள்ளியை, தொடர் புள்ளியாக, ஆச்சிரியக்குறியாக, கேள்விக்குறியாக மாற்றுவதும்   ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கையில் தான்  உள்ளது. முக்கியமாக ஆசிரியர்களுக்கு இதில்  பெரும் பங்கு உள்ளது.

தோழர் பர்வீன் சுல்தானா அவர்கள் ஒரு மேடையில் பகிர்ந்த செய்தி.   Alice in wonderland படத்தில் திடிரென அரசி Alice ஓடு ஒடு என்பார்கள்.  Aluce  ஒட ஆரம்பித்து விடுவார்.  ஓடிக்கொண்டே கேட்டாராம் ஏன் ஒடுகிறோம் என?  அதற்கு அரசி  நாம் நிற்கும் இடத்தில் நம்மை நிற்க வைக்கவே நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நாம் நிற்கும் இடம் நிலைக்கும் என. அது போல தான் நாம் நம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பது ஒரு தொடர் செயல். பெரும்பாலும் ஆசிரியர் வேலை கிடைத்தவுடன் ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள முயலுவதில்லை.   மெக்கானிக்கலாக புத்தகத்தில் இருப்பதை அப்படியே மாணவர்களுக்கு கடத்தி விட்டு மதிப்பெண்கள் எடுக்க மட்டுமே முயற்சி செய்கிறார்கள். புதுமை எதுவும் இல்லை.  அதற்கு பள்ளிக்கு தேவையில்லை. பல மனப்பாட எந்திரங்களை  உருவாக்க அவசியம் என்ன?   ஒவ்வொரு குழந்தைகளும் தனித்தன்மை உடையவர்கள். அவர்கள் சிந்தனைகள் வேறு. அந்த சிந்தனைகளை செழுமையாக வளர்த்து எடுக்க ஒரு துணை ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை. அதை பள்ளிகளில் ஆசிரியர் ஊடே துணையாக நின்று மேம்படுத்தானால் சிறப்பு.

ஒரு மழலை ஆயிஷாவின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகிறது?  அவளது கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா? அவளின் எதிர்காலம் என்ன ஆனாது என்பதை இந்த புத்தக வாசிப்பு நமக்கு உணர்த்தும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.

ஆசிரியர் ஆயிஷா இரா. நடராசன் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

நன்றி

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/ayisha/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *