சிறந்த கவிதை நூல் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

ஆசிரியர் பச்சோந்தி. இயற்பெயர் ரா.ச.கணேசன்.  இவர் தற்போது ஆனந்த விகடனில் பணிபுரிகிறார். 2015ல் “வேர்முளைத்த உலக்கை”யும் 2016ல் “கூடுகளில் தொங்கும் அங்காடி” என்னும் நூலும்  இதற்கு முன் வெளிவந்த இவரது கவிதை தொகுப்புகள் ஆகும்.

இந்நூலை ” வம்சி” பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நூலின் அச்சுக் கோர்ப்பும் அட்டை வடிவமும் மிக நுட்பமாக வந்திருக்கிறது. இந்த நூலின் தலைப்பு. “அம்பட்டன் கலயம்” என்ற சொல்லுக்குள் இல்லாத அரசியல் இல்லை,  அவமானம் இல்லை, கண்ணீர் இல்லை என்று சொல்லலாம்.

மண்டையோடுகளுடன் போராடிய விவசாயிகளுக்கு இந்நூலை இவர் சமர்ப்பணம் செய்துள்ளார். அம்பட்டன் கலயத்தை தொடும் பொழுது சுடவே செய்கிறது காரணம் இது அடித்தட்டு மக்களின் வெக்கை மிகுந்த வாழ்வை விசாரணை செய்திருக்கிறது.

ஈரப்பசை துளியும் இல்லாத இளைத்துப் போன உயிர்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை படம் பிடித்திருக்கிறது. நிலம் இழந்த விவசாயிகளின்,  செத்து மடிந்து கொண்டிருக்கும் தாவரங்களின்,
எட்டு வழிச் சாலையால் அழிந்துபோன வாழ்க்கைகளின் ரத்த சாட்சியம்தான் இந்த தொகுப்பு.

தொகுப்பு முழுக்க உதிர்ந்து கிடக்கின்றன வாழ்வின் காயத் தழும்புகள். உதாரணத்திற்கு ஒன்றிரண்டைப் பேசலாம் ‘எலும்பு வேலி’ எனும் தலைப்பில் உள்ள கவிதையில்,  “வேலியெல்லாம் உதிர்ந்து கிடக்கும் வேப்ப முத்துக்களை வேப்பங் கன்றுகளாக்கும் அப்பாவுக்கு  இரண்டு கைகளும் இரண்டு அரிவாள்கள். இரண்டு கால்களும் இரண்டு கடப்பாரைகள்” -என்கிற இந்த வரிகள், வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் இங்கே மரம் நடுபவன் யார்? பசிக்கு நடுவில் இயற்கையைப் பாதுகாத்து வந்தவன் யார்? பெற்ற பிள்ளைக்கும் கொடுக்காமல் மரங்களுக்கும் செடிகளுக்கும் பயிர்களுக்கும் தண்ணீர் ஊற்றி வளர்த்தவன் யார்? இப்படி  நெஞ்சுச் சூடு கொண்ட பலரின் வாழ்வை
தூசியைப் போல துடைத்தெறிவது யார்? என்கிற கேள்விகளை எழுப்புகின்றன.

அரசாங்கம் என்கிற பெயரிலும் அல்லது அரசியல் தலைவர் என்கிற பெயரிலும் யார் யாரோ வந்து போகிறார்கள். வந்து வந்து தான் போகிறார்கள் யாரும் வாழ்வுக்கு வழி சொல்லவில்லை. பாறையின் உட்பகுதிக்குள் மனித இனம் வாழ்ந்து விடவா முடியும். ஓர் அங்குலம் அசைந்தாலும் முள்ளால் தைக்கப்படுகிறத வாழ்வைப் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் என்பதன் வெளிப்பாடாக,  “கிழிந்த உடையில் சூரியன் ஊறியது”என அதி நுட்பமாக வலியை வரைந்து காட்டுகிறார்~ (பெயரற்ற வீடு எனும் கவிதை) “யாராக இருப்பார்கள்? நடைபாதை விளக்கொளியில் வேர்க்கடலை விற்பவர்?  பிரண்டை கட்டு விற்பவர்? குப்பைத்தொட்டியை அள்ளித் தின்பவர்?
கீழ்ப் படிக்கட்டில் பாலித்தீன் விரிப்புகளில் வாழைப் பழங்களை விற்பவர்? யாராக இருப்பார்கள்?

தெருவுக்குப் பெயர் இல்லை. கதவுக்கு எண் இல்லை.  அவர்கள்தான் என்று சொல்ல  அடையாள அட்டை இல்லை.  எட்டுத் திசைகளிலும் சிரிப்பொலியில் திறந்து திறந்து மூடுகிறது அவர்களது வெளி”  எனச் சொல்கிறார். இது நாம் அன்றாடம் தெருக்களில் சந்தைகளில் சந்தித்து இவர்களின் வலி அறியாமல் பேரம்பேசி திட்டிக் கடக்கின்றோமே என்கிற நம்மின் மனசாட்சியை உலுக்கி எடுக்கிறது.

“கொஞ்சம் கூட நகராமல் ஏன் அந்த நாய் அலையும் ஈரத்தின் மீதே படுத்திருக்கிறது? கடலின் நுரைகளில் எதைப் பறிகொடுத்தது? எதை எதிர்பார்க்கிறது? ஏதோ ஒன்று. இருந்துவிட்டுப் போகட்டுமே! நிவாரண முகாம்களுக்குச் சற்றுச் சென்று  எச்சில் இலையாவது நக்கி விட்டு வரலாம்தானே?

பாவம் அந்த கடல்! எத்தனை முறை “நான்தான் பாவி” என்று அடி வயிற்றில் அடித்துக் கொள்ளும்”-“இருந்துவிட்டுப் போகட்டும்” என்கிற தலைப்பில் உள்ள இந்தக் கவிதை உள்ளுக்குள் வெப்பமேறிக் கிடைக்கிற சொல்ல முடியாமல் தவிக்கிற நுண்ணரசியலை ஊசிக் குத்தலாய் வெளிப்படுகிறது.

‘உறங்காத சாலை’ என்கிற கவிதை, “சிறிய பொந்துக்குள் குப்பைத் தொட்டியை இழுத்துச் செல்கிறது எலி. மாவெயில் பெய்கிறது  மாமழை காய்கிறது  நடைமேடையோ சிறு பொந்து. ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை நடுவில்  உறங்குவதே இல்லை அந்தச்சாலை”என அல்லாடும் மனித வாழ்வின் சாலையை இப்படி சித்தரிக்கிறார். இந்த உறங்காத சாலை சதா உழைத்து எலும்பு உடைய வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களின் இருப்பிடமாக இருக்கிறது.

இந்தச் சாலை நெடுகிலும் குப்பைகளோடும், எலிகளோடும் மாமழை காய்ந்து மாவெயில் பெய்யும் இந்த நடைமேடை தான் என் சனங்களின் நிலையான வாழ்விடம் என்று நினைக்கிற போது நெஞ்சு பதைக்கிறது. நாம் பார்க்கும் ஒன்றை அடர்த்தி குறையாமல் இறக்கி வைத்தாலே அல்லது
எழுதி வைத்தாலே அதில் அழகியல் வந்து அமர்ந்து கொள்ளும் என்பதற்கு உதாரணமாக இந்நூல் செய்யப் பட்டிருக்கிறது.

“நர நரத் தண்டுகளோடு கோபுரம் கோபுரமாய் பூத்துள்ளன மொச்சைப் பூக்கள்”
என்று சொல்கிற போதும் ‘கோயம்பேடு’ பற்றிய கவிதையில் “தலைகீழான காளான்களை போல் தொங்கும் விளக்குகள்” என்று சொல்கிற போதும் நமக்கு தேவையான பிம்பங்கள் நிறம் மாறாமல் வாசம் மாறாமல் மனதில் தங்கி விடுகின்றன.

மாட்டுக் கறி சுக்கா செய்முறை என்ற கவிதையைப் படித்துவிட்டுப் போய் மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டு வராமல்  மீண்டும் அந்தத் தொகுப்பை தொடர முடியாத அளவிற்கு மாட்டுக்கறியின் சுவை நம்மை தொற்றிக் கொள்கிறது. மாட்டுக்கறி உண்பவர்களைத் தீட்டு என்பவன் கூட இந்த கவிதையை வாசித்தால் இரண்டு துண்டங்களையாவது திருடித் தின்பான் என்பது என் எண்ணம்.

“கையோடு வீடு”  என்கிற தலைப்பில்…. “வீட்டைத் தூக்கிக்கொண்டு அலைகிறேன்.  புதிதாய் வாங்கிய இடத்தில் கட்டிய  கனவு வீடு. இப்போது அங்கே முடிவற்ற தார்ச்சாலை செல்கிறது  அரளிக் காற்று வீசியபடி அதைச்  சொந்த ஊருக்குத் தூக்கிச் செல்கிறேன்.  அங்கே ஓர் அணு உலை புகைத்தபடி இருந்தது. மாமன் ஊருக்குத் தூக்கிச் சென்றேன் அங்கே மீத்தேன் வாயு வெடித்தபடி இருந்தது.

அத்தை ஊருக்குத் தூக்கிச் சென்றேன் அங்கே நிலக்கரி வெட்டியபடி இருந்தது. இனி எங்கே தான் தூக்கிச் செல்வது இவ்வீட்டை? பேசாமல் கையிலேயே வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்…

என் காட்டுக் குருவிகளோடு!
என் காட்டுக் காற்றோடு!
என் காட்டுப்பூச்சிகளோடு !
என் காட்டு வானத்தோடு!”

இந்தக் கவிதை எத்தனை விமர்னங்களைக் கொண்டது என்பதை அனுபவமற்ற மனிதர் அறியார். ஒருவேளை வீட்டை வாழ்நாளெல்லாம் தன் முதுகில் சுமந்து திரியும் நத்தை அறியக் கூடும். வெடிகளைப்போட்டு பறவைகளை விரட்டி விடுவது மாதிரி ஏழைத் தொழிலாளர் வர்க்கத்தை…..
“உழைத்து வீடடைந்தால் கொஞ்சம் நேரம் உறங்க”விடாமல் துரத்தியடிக்கும் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கால் வீடுகளும் மனிதர்களும் மட்டுமா நாசம் போகிறார்கள்? இந்த அழகிய பூமியும்தான்.

பூமியை வெவ்வேறு விதமாகத் திருடுகிறார்கள்.  இதில் மரித்துப் போவது முதலில் ஏழைகள்தான். ஆனால் இந்தக் காரியங்களால் ஒருநாள் பூமி உடைந்து நொறுங்கும்போது இந்தத் திருடர்களின் சூத்திலும் திரி இருக்கும் என்பதை எண்ண மறுக்கிறார்கள்.

இப்படியாக இந்தக் கவிதைத் தொகுப்பு சமூகத்தின் மிகுந்த அக்கறையுடன் களமாடி வென்றிருக்கிறது. மனித இனத்திற்காக மட்டுமன்றி சகல உயிரினங்களின் உரிமைகள் பறிக்கப் படுவதற்காகவும் போராடுகிறது நூல்.

நிலம், நீர், காற்று, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், அம்மா,அப்பா, அக்கா, தம்பி, மாமரம், சந்தியாகு மாமா என பக்கங்கள் நெடுகிலும் அதனதன்  இத்துப் போன வாழ்வைப் பதியம் போட்டு மறுவாழ்வுக்கு வழிசெய்யும் “அம்பட்டன் கலயம்” மரியாதைக்குரியது. இந்த நூலை நமக்களித்த “வம்சி’யின் பணி சிறந்தது. நூலாசிரியர் கவிஞர் பச்சோந்தி போற்றத் தக்கவர்.

நன்றி!
-இயக்குநர் தோழர்.ஏகாதசி, பாடலாசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *