உடனடியாக முடிவெடுக்க வேண்டிய பிரச்சினைகளின் போது, “இப்போது இல்லை என்றால் எப்போதுமே இல்லை”  என்று  மக்கள் சொல்வது இயல்பானதுதான்.  ஆனால் இன்று வரையில் திரைப்பட நடிகராக இருப்பவரும்,  நாளையிலிருந்து அரசியல்வாதியாகவும்  இருக்கப் போகிறவருமான ரஜினிகாந்த் இவ்வாறு சொன்னது, வழக்கம்போல முக்கியத்துவம் தரப்பட்டு அரசியல் பஞ்ச் வசனமாக்கப்ப்ட்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் தனது அரசியல் வருகை பற்றி விரைவில் அறிவிப்பதாக அவர் சொன்னபோதெல்லாம் வருவார், வரமாட்டார் என்று நடந்துகொண்டிருந்த லாவணிக்கு முடிவு கட்டியதை வரவேற்கிறேன்.

இத்தனை ஆண்டுகள் கடந்தபின் இந்த வயதிலா வருவது என்று கேட்கத் தேவையில்லை. வாக்களிப்பதற்குத்தான் குறைந்தபட்ச வயது உண்டே தவிர அரசியலுக்கு வருவதற்கு வயது வரம்பில்லை. இது அரசியல்வாதிகள் என்ற தனிப்பிறவிகளுக்கு உரியது என்று ஒதுங்காமல், மக்கள் நலனில் அக்கறை உள்ள யாரும், எல்லோரும் அரசியலுக்கு வரலாம், வரவேண்டும். அப்படி வருகிறபோதுதான் சிஸ்டம் சரியாகும் என்பதால் எந்த வயதிலும் வருவதை வரவேற்கிறேன்.

தனது உடல்நிலை குறித்தும், மருத்துவர்களின் அறிவுரை குறித்தும் வெளியான தகவல்கள் உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். உடல்நிலையையும், மருத்துவர்களின் அறிவுரையையும் மீறிப் பொதுவாழ்க்கைக்கு வருகிறார் என்பதையும் வரவேற்கிறேன்.

கற்பனை உரிமை எனக்கும் இருக்கிறது என்பதால் இப்படியும் ஒரு கற்பனை செய்து பார்க்கிறேன்: ஒருவேளை, கொஞ்சமும் எதிர்பாராத வகையில் அவரிடமிருந்து முற்போக்கான மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் அரசியல் வருமானால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம்?

விளையாட்டுககளம், தொழில்களம், போர்க்களம், அரசியல் களம் என எந்தக் களமானாலும் எதிராளிகள் என்று நினைக்கிறவர்களைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதே போல், அந்த எதிராளின் தூதர்கள் என்று நினைக்கிறவர்களையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

Will Rajinikanth's bet on 'spiritual' politics, 'change' mantra catapult  him ? - DTNext.in

தொடக்கத்திலேயே ஒரு தாவல்

ஆயினும் கொண்டாடி வரவேற்க முடியவில்லையே ஏன்? கட்சியைத் தொடங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அந்த நொடியிலேயே தலைமைப் பொறுப்பாளர்களாக யாரை அறிவித்தார் என்ற அடிப்படையில் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தாக வேண்டும். கட்சியைத் தொடங்கும் வரையில் அங்கேயே இருக்கட்டும் என்று இவர்  விட்டுவைத்திருந்தாரா, அல்லது  இனிமேல் அங்கே போய் இருக்கட்டும் என்று அவர்கள் அனுப்பிவைதிருக்கிறார்களா  என்ற கேள்விகள் வந்துள்ளன. எப்படியானாலும், கட்சியைத் தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு கட்சித்தாவல் நடந்திருக்கிறதே! ஒரு கட்சியில் பிளவு ஏற்படுகிறபோது,  ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள்  இன்னொரு பிரிவுக்கு மாறுவது பொதுவாக நடக்கக் கூடியதுதான். இந்தத் தாவலை அப்படிச் சொல்ல முடியாதே!

திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஒரு தனிமனித கார்ப்பரேட். தொழிலுலகின் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே இதுவரை குரல்கொடுத்து வந்திருக்கிறார். அது தூத்துக்குடி கார்ப்பரேட்டானாலும் சரி, எட்டுவழிச்சாலை காண்டிராக்ட் கார்ப்பரேட்டுகளானாலும் சரி, நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் ஆதாயங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். உலக அளவிலேயே கூட பெருந்தொற்றுக் காலத்திலும் அந்த வேட்டைகளைப் பெருக்கிக்கொள்ள முடிகிற, சட்டங்களை வளைக்க வைக்க முடிகிற, வாங்கிய வங்கிக்கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குப் பறக்க முடிகிற, வரிச்சலுகைகளையும் வழக்குத் தள்ளுபடிகளையும் பெற முடிகிற, அந்தப் பெருமுதலாளித்துவத்தால்தான் கார்ப்பரேட்டுகளால்தான் ஒட்டுமொத்த தேசத்தின் சிஸ்டமே சீர்குலைந்திருக்கிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான அரசாங்க நடவடிக்கைகளைப் போலவே சிஏஏ, காஷ்மீர் போன்ற பிரச்சினைகளிலும அரசாங்க நடவடிக்கைகளை ஆதரித்தே பேசி வந்திருக்கிறார்.

Indian movie superstar Rajinikanth to launch political party -  StamfordAdvocate

எழுச்சியும் ஆன்மீகமும்

தமிழகத்தின் சிஸ்டம் மட்டுமே சரியில்லை என்பது போல் பேசுகிறவர், அதைச் சரிப்படுத்துவதற்கான வழி ஆன்மீக அரசியல் என்கிறார். ஒரு பக்கம் மக்களின் எழுச்சி தேவை என்று சொல்லிக்கொண்டு இன்னொரு பக்கம் ஆன்மீகம் என்பதன் பொருள் என்ன? சிஸ்டத்தைச் சரிப்படுத்துவதற்காக, மாற்றங்களுக்காக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்துவதுதான் அரசியல் இயக்கம். இவரோ மக்கள் எழுச்சி பெற்றால் அரசியலுக்கு வருவேன் என்றார். இப்போது அந்த எழுச்சி ஏற்பட்டுவிட்டதா என்ற  கேள்வி ஒருபுறம் இருக்க, எழுச்சி மக்களின் எழுச்சியைத் தண்ணீர் தெளித்து அடக்குவது போன்ற ஆன்மீக வாதம் எதற்கு என்ற கேள்வியும் சேர்கிறது.

ஆன்மீகம் என்பதற்கு ஆன்மாவோடு சம்பந்தப்பட்டது என்பது உட்பட  பலவகையான விளக்கங்கள் தரப்படுகின்றன. ஆனாலும் இறை நம்பிக்கை, மதப்பற்று இவையெல்லாம் ஆன்மீகமாக முன்வைக்கப்படுகின்றன.  இப்படிப்பட்ட நம்பிக்கைகள் கூட தனி மனித உரிமைகள்தான். நம்பாமல் இருப்பதும் உரிமைதான்.

நாளை சமுதாயத்தையே புரட்டிப் போடுகிற ஒரு புரட்சி வெடிப்பதாக வைத்துக் கொள்வோம், அதில் கலந்துகொள்கிற பல பேர் “வெற்றிவேல் வீரவேல்” என்ற  முழக்கத்தோடுதான் – இந்த வேல் முழக்கம் வேறு வகையானது(!) – வருவார்கள். பலர், “யா அல்லா, புரட்சி வெற்றி பெற அருள்வீராக” என்று தொழுகை நடத்திவிட்டு வருவார்கள். இன்னும் பலர் “கர்த்தரே புரட்சி வெற்றி பெற ஆசிர்வதியும்” என்று ஜெபம் நடத்திவிட்டு வருவார்கள்.  இன்னுமுள்ள வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அவரவர் நம்பிக்கை சார்ந்த பிரார்த்தனைகளுடன் வருவார்கள்.  இத்தகைய நம்பிக்கை இல்லாதவர்களும் புரட்சியில் இருப்பார்கள்.

புரட்சி வெற்றி பெற்ற பிறகும்கூட,  அதனால் உருவான நன்மைகளும் மாற்றங்களும் நிலைத்திருக்க வேண்டும்  என்ற வேண்டுதலோடு பிரார்த்தனைகள் தொடரும்.  இன்றைய வாழ்க்கை அச்சமற்றதாக, நாளைய வாழ்க்கை உத்தரவாதமானதாக உறுதிப்பட உறுதிப்படத்தான் இந்த நம்பிக்கைகள் படிப்படியாக உதிரும்.   அப்படியானால் இப்போது பகுத்தறிவுப் பரப்புரைகள் தேவையில்லையா?  மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிற, சிந்திப்பதற்கு உதவுகிற வகையில் அந்தப் பரப்புரைகள் இருக்கவேண்டும்.

இன்றைய நிலையில், உண்மையிலேயே அனைத்து மக்களின் ஒற்றுமையும் நல்லிணக்கமும்தான் இவர் முன்வைக்கிற அரசியலின் நோக்கம் என்றால், மக்களின் மத உணர்வுகளைக் கிளறி விடுகிற அரசியல் ஆபத்தானது, இவர் முன்வைக்கிற ஆன்மீகத்துக்கே கூட எதிரானது.

Rajinikanth likely to launch his political party next year - The Week

பெரியாரியத்தை எதிர்ப்பதென்பது

இவர் தனது ஆன்மீக அரசியல் தமிழகத்தின்  பெரியாரியத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் எதிரான கோட்பாடாகவே முன்வைத்து வருகிறார். இந்த இரண்டுக்கும் எதிரான  கருத்துள்ளவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.  அந்த இடைவெளியைத் தனதாக்கிக்கொள்ளவே  ஆன்மீக அரசியல் பேசுகிறார்  இவர்.  பெரியாரியத்தை,  திராவிடியத்தை, பொதுவுடைமைச் சித்தாந்தத்தை எதிர்ப்பது என்பது  அடிப்படையில்  சமூகநீதியை, சாதி மறுப்பை, பெண்ணுரிமையை,  சமத்துவத்தை எதிர்க்கிற அரசியல்தான்.

திராவிட இயக்கக் கட்சிகள்  மேற்கொண்ட சில அணுகுமுறைகள்,  திராவிட இயக்கக் கட்சிகளின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள்  விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல.   ஆனால்,  அரசு அலுவலகங்களில் வங்கிகளில் இன்னும் இதுபோன்ற இடங்களில் இன்று  கருத்த முகங்களைக் காண முடிகிறது  என்றால்  சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையைச் செயல்படுத்திய திராவிட இயக்கத்தின்  பங்களிப்பு முக்கியக் காரணம்.  அரசியல் உட்பட பல துறைகளிலும்  பெண்களின் ஆளுமை இந்த அளவிலேனும் உருவாகியிருப்பது திராவிட இயக்கத்தின்  மற்றொரு முக்கியமான பங்களிப்பு.  பல நடவடிக்கைகளைச் சொல்ல முடியும் என்றாலும் ஒரே ஒரு உதாரணமாக,  பேருந்துகளை அரசுடைமையாக்கிய நடவடிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.  அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வந்தபின் வந்த பிறகுதான் கிராமங்களுக்கு, பழங்குடி மக்களின் மலைப் பகுதிகளுக்கு  பேருந்துகள்  சென்று வரத் தொடங்கின.  அதனால் ஏற்பட்ட சமூக அசைவு மிக முக்கியமானது.

இத்தகைய நடவடிக்கைகளால்தான்,  பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னணி இடங்களை பெற முடிந்திருக்கிறது என்று அண்மையில் வெளியான ஆய்வுகள் காட்டுகின்றன.  அமர்த்தியா சென் போன்ற அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.  அண்மையில்  அமெரிக்காவில் ஒரு பல்கலைக கழகத்திலேயே  நடத்தப்பட்ட ஓர் உரையரங்கத்திலும் இது பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.  இப்படிப்பட்ட வளர்ச்சியை மறுப்பதுதான் பெரியாரிய எதிர்ப்பு. கடவுள் இல்லையென்று சொன்னவர் பெரியார் என்று மட்டுமே சித்தரிப்பது இதையெல்லாம் பார்க்க விடாமல் தடுக்கிற ஒரு உத்திதான்.

 

மொழி, சாதி, பெண்ணுரிமை

பெரியாரியம் திராவிடம் மார்க்சியம்  இவை மொழி உரிமைக்காகவும் நிற்கின்றன.  இந்தியைத் திணித்தால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படும் என்று இவர் சொன்னது உண்மைதான்.   ஆனால்   நாட்டின் ஆட்சி மொழியாக ஒரே  தேசிய மொழி இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறார். அப்படி ஒரே ஒரு மொழி தேசிய மொழியாக இருக்க வேண்டிய தேவையில்லை என்ற அறிவியல்  கண்ணோட்டம் இல்லையே?

சாதி ஒழிப்புப் பேரியக்கத்தோடு இணைந்தது சாதி ஆணவக்கொலை எதிர்ப்புப் பேராட்டமும். சாதி வரப்புகளைத் தாண்டிய காதலர்களைக் கொலை செய்வது மட்டுமல்ல,  பலப்பல நிர்ப்பந்தங்களால்  காதலர்களைப் பிரித்துக் காதலையே கொலை செய்வது சாதி ஆணவம். சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் என்று சொல்கிறவருக்கு சாதி ஆணவம் பற்றி  என்ன நிலைப்பாடு?

பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரையில், தனது திரைப்படங்களில் தாயைப் போற்றிப் பாடியிருக்கிறார்.  “அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே” என்ற  பாட்டுக்கும் இவருடைய நடிப்புக்கும்  உருகாமல் இருக்க முடியாது.  ஆனால் காதலி, மனைவி போன்ற  மற்ற பெண்கள்?  அவர்களை மட்டம் தட்டுகிற படங்களோடுதான் இவருடைய படங்களும் சேர்ந்தன.  பொம்பள பொம்பளையா இருக்கணும்,  அளவுக்கு மேல பொம்பளை கோபப்படக்கூடாது என்பதான வசனங்களுக்கு மாதர் இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுண்டு.  படத்தின் கதைப்படி வருகிற  ஒரு வசனத்தை,  இயக்குனர் எதிர்பார்க்கிறபடி பேசுகிறபோது அந்த நடிகரை விமர்சிக்கலாமா  என்று சிலர் கேட்பதில் பொதுவானதொரு நியாயம் இருக்கிறது. ஆனால்,  ஒரு கார்ப்பரேட் சூப்பர் ஸ்டாரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வசனமோ காட்சியோ படத்தில் இடம் பெற்று விட முடியாது.  இவருடைய கபாலி,  காலா  ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஒப்பீட்டளவில் பெண்ணுக்கு சமத்துவம் வழங்கப்பட்ட காட்சிகளோடு வந்தன.   அந்த இரண்டு படங்களையும் இயக்கியவரின் சமூகக் கண்ணோட்டம், கொள்கை உறுதி அதன் பின்னால் இருந்தன.  அதற்குப் பிறகு?

The Rajinikanth dilemma in Tamil Nadu politics - News Analysis News

விவாதிக்க வேண்டியவர்கள்…

ரஜினிகாந்த் அவர்களே, இப்படிப்பட்ட  அரசியல் சமூகப் பிரச்சினைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம்,  உங்களுடைய நண்பர்களோடு  இதுவரை விவாதித்திருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டிருப்பதில் பயனில்லைதான். இப்போதாவது நீங்கள்  விவாதியுங்கள்.

இவரை முன்னிறுத்துகிறவர்கள் யார், அவர்களுடைய வியூகம் என்ன என்பதையெல்லாம் தாண்டி, இந்தச் சூழல் உருவானது எப்படி,  இதற்கு ஒரு இடைவெளி கிடைத்தது எப்படி? சரியான மாற்று அணுகுமுறைகள் என்ன? நாட்டின் ஜனநாயகத்திற்கும்,  அரசின் மதச்சார்பின்மைக்கும், சமுதாயத்தின் சமத்துவத்துக்கும் நிற்கிற இயக்கங்களே,  இப்போதாவது நீங்கள் விவாதியுங்கள்..

தன்னை வாழவைத்த தெய்வங்கள் என்று இவர் வணங்குகிற தமிழக மக்களே, இவருடைய அரசியல் வருகையை வரவேற்கக்கூடியவர்களே, இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகள் பற்றி, அவற்றின் விளைவுகள் பற்றி, இவருடைய இந்த வழிகள் பற்றி இப்போதாவது நீங்கள் விவாதியுங்கள்.

ஏனென்றால் இன்னிக்கு இல்லைன்னா என்னிக்குமே இல்லை.

(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு, ‘இப்ப இல்லைன்னா என்னிக்குமே இல்லை’ என்ற தலைப்பில் நடத்திய முகநூல் நேரலை உரையரங்கில் பேசியதன் அடிப்படையில் எழுதப்பட்டது. உடன் பங்கேற்றவர் பத்திரிகையாளர் பிரகாஷ், ஒருங்கிணைப்பு: தேன்மொழி.)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *