Raja Sir Savalai Ramaswami Mudaliar Choultry Park town. Source - https://500px.com/photo/268957101/ Photography - Arun Chandrasekaran



போதிய அளவுக்கான ஊடக வெளிச்சம் கிடைக்காத ஒரு முக்கியமான அம்சத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது என்பது ஆறுதல்.

சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ஆர்.எஸ். சரவணனின் பொதுநல வழக்குதான் இந்த கவனத்தில் நிற்கிறது. ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலையின் மேல் புதிதாகச் சாலை அமைப்பதால் பழைய கட்டிடங்கள் தாழ்ந்து விடுகின்றன. இதனால் பாரம்பரியப் புராதனக் கட்டிடங்கள், கோவில்கள், அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடம் கூடத் தாழ்ந்து போய் விட்டது.

புதிதாகச் சாலை அமைக்கும் போது ஏற்கனவே இருக்கும் சாலையைக் கீறித் தோண்டி, அகற்றிவிட வேண்டும். அதன் பின்னரே அங்கு புதிய சாலையைப் போட வேண்டும். அவ்வாறு தோண்டாமல் பழைய சாலை மீதே புதிய சாலை அமைத்து விடுகின்றனர். எழும்பூர் அருங்காட்சியகம், சென்ட்ரல் ரயில் நிலையம், போர் நினைவுச் சின்னம், சென்னை பல்கலைக்கழகக் கட்டிடம், ரிப்பன் கட்டிடம் போன்றவை தாழ் நிலைக்குச் சென்று விட்டன. சென்னையில் கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் என வழிபாட்டுத் தலங்களும் தாழ்நிலை.

– இப்படியாக பொதுநல மனுவின் வாசகங்கள் நீள்கின்றன.

1976-77-78 ஆகிய ஆண்டுகளின் கால கட்டத்தில் செய்தியாளனாக நான் தலைமைச் செயலகத்துக்குச் செல்லும் போதெல்லாம் வார் மெமோரியல் எனும் போர் நினைவுச் சின்னத்தில் மழைக்கு ஒதுங்கியதுண்டு. அப்போதெல்லாம் போர் நினைவுச் சின்னத்தின் சுற்று வட்டாரச் சுவரையொட்டி அமைக்கப்பட்ட திண்ணையில் அமர்ந்தவாறு கால்களைத் தரையில் தவழவிட்டு ஆட்டியபடியே பொழுதுகளைக் கழித்த நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. இப்போதோ..‌ அதே நினைவிடத்தில் திண்ணையைத் தின்றவாறு சாலையின் மண்ணைக் காண முடியும். சாலையில் இருந்து சர்வ சாதாரணமாக நடந்தபடியே நினைவகத்தினுள் செல்ல முடியும். அந்த அளவுக்கு திண்ணையின் தள உயரத்துக்கு அங்குள்ள சாலையின் மட்டம் உயர்ந்துள்ளது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா? இதே போன்ற நிலை சராசரி மனித வாழ்வுக்குரிய எல்லா வீடுகளுக்கும் பொருந்தும். மடிப்பாக்கத்தில் சில சாலைகளில் மழை பெய்தால் சாலையில் ஓடும் தண்ணீர் இருபுறமும் இருக்கும். வீடுகளுக்குள் பாய்வது என்பது மழைக் கால நிகழ்வுகள் .
இதற்குக் காரணம் என்ன தெரியுமா?

அந்த சாலைகளில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் வாழ்கின்றனர். அவர்களின் செல்வாக்குக் காரணமாக அங்கு சீர்கெடும் சாலைகளை அடிக்கடி தடிமனானப் பராமரித்து வருவதுண்டு. இதனால் வீடுகளின் வாசற் படிகளுக்கும் மேலாக சாலைகளின் உயரம் எகிறி விட்டது. எனவேதான் சாலையில் பெய்யும் மழையின் தண்ணீர், பள்ளப் பகுதிகளான கீழ்ப் பக்க வீடுகளின் வாசல்களை வாய்க்கால் வழிகள் எனக் கருதி வழிந்தோடிக் கொண்டு இருக்கிறது.



இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின்னர் லட்சக் கணக்கான தனி வீடுகள் இடித்துத்தள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடும். அடுக்கு மாடி வீடுகள் கட்டி இருப்போர் தங்களின் தாழ்தள வீடுகளை மட்டும் இடித்துத் தள்ளிவிட்டு இதர மாடி வீடுகளை மட்டுமே பயன்படுத்தும் நிலை வரத்தான் போகிறது.

தரையைக் காலியாக விட்டுவிட்டுத் தூண்கள் எழுப்பித் தளங்கள் கட்டும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. தாழ்தள வெற்றிடமானது வாகன நிறுத்தங்களாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் புத்தாண்டுகள் கழிந்த பின் இன்று ‘கார் பார்க்கிங்’ என இன்றி மழை நீரின் ‘ரெயின் பார்க்கிங்’ என்ற நிலை உருவாகி விடும். ஒரு காலகட்டத்தின் பின் இவற்றில், கீழ் நிற்கும் தரை அளவுக்கு முதல் தளமே வந்துவிடவும் வாய்ப்புண்டு.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த மனுவுக்கு உரிய பதிலை நான்கு வாரங்களுக்குள் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இத்தகு அபாய நிலையை அரசுத் தரப்பில் உள்ள அறிஞர்கள், நகரமைப்பு நிபுணர்கள் உணரவில்லையா என்று எண்ணக்கூடும். ஆனால் அவர்கள் நன்றாக உணர்ந்தே உள்ளனர். எனவேதான் சாலை அமைக்கும் திட்டப் பணிகள் பற்றிய விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி சாலையின் மேல்புறத்தை நன்றாகத் கொத்திக் கீறி அகற்றிவிட்டுப் பின்னர் தான் சாலையைப் போட வேண்டும். இதை சாலைப் பணிகளின் ஒப்பந்தக்காரர்கள் அறிவார்களா? நன்றாக அறிவர். இருந்தும் ஏன் செய்வதில்லை?
அதிகாரிகள் இதை ஏன் செய்வது இல்லை?

எல்லாமே சுயநலம்தான். தங்களின் ஆதாயம் பெருக…அவர்கள் மக்கள் நலனைப் பணயம் வைத்துத் தாயம் ஆடுகின்றனர். கீறிக்கீறிச் சாலை அமைத்தால் அந்த சாலையானது பல ஆண்டுகளுக்கு பலமாக இருக்கும். கீறுவதாகப் பாவனை காட்டிவிட்டு சாலை போட்டால் தான் ஒற்றை மழைக்கே சாலை வற்றிப் போகும். பின்னர் மீண்டும் ஒப்பந்தம், மறுபடியும் ஆதாயம்.

மத்திய- மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம், சாலைகளை அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள் என்று தனி புத்தகங்களே உண்டு. எனினும் இவை கற்பு குலையாமல் அலமாரிகளில் அலங்காரப் பொம்மைகளாக உறங்கிக் கிடக்கின்றன. தேனெடுப்பவன் புறங்கையை நக்கலாம், ஆனால் தேன் அண்டாவிலேயே கையை விட்டால்…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *