ஆகஸ்ட் 20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்: எதையும் ஆதாரத்துடன் நம்புங்கள்… அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது –  பி.ராஜமாணிக்கம்

ஆகஸ்ட் 20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்: எதையும் ஆதாரத்துடன் நம்புங்கள்… அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது – பி.ராஜமாணிக்கம்




ஆகஸ்ட்:20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்:

எதையும் ஆதாரத்துடன் நம்புங்கள்… அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது
பொ.இராஜமாணிக்கம், மேனாள் பொதுச் செயலர், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு

நமது நாட்டிலுள்ள சுமார் 40 மக்கள் அறிவியல் இயக்கங்கள் ஒன்றிணைந்துள்ள அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஐந்தாவது ஆண்டாக இத் தினத்தை அனுசரிக்கிறது. இத் தினமானது அறிவியல் மனப்பான்மை வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மஹாராஷ்ட்ரா மாநிலம், புனேயில், ஆகஸ்ட் 20ல் சனாதானவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட டாக்டர் நரேந்தர் தபோல்கரின் நினைவு நாளன்று அனுசரிக்கப்படுகிறது.

August 20th National Science Attitude Day: Believe anything with evidence… More evidence is more reliable - P. Rajamanickam ஆகஸ்ட் 20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்: எதையும் ஆதாரத்துடன் நம்புங்கள்… அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது -  பி.ராஜமாணிக்கம்

நரேந்திர தபோல்கரின் அர்ப்பணிப்பு:

1945ல் பிறந்த நரேந்திர தபோல்கர் 12 வருடம் மருத்துவராகப் பணியாற்றியவர். அதன் பின்னர் மருத்துவப் பணியைக் கைவிட்டு சமூக நீதிக்கான சமூக செயல்பாட்டாளராக மாறினார். தலித்துகளுக்காகவும் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்காகவும் துவக்கத்தில் போராடினார்.

அதன் பின்னர் மக்களின் உயிர்ப் பறிக்கும் மூட நம்பிக்கைகளில் இருந்து காப்பாற்ற அதற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டவர். இதற்கென 1989ல் மஹாராஷ்ட்ரா மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தைத் துவக்கினார். மேலும் போலிச் சாமியார்களின் சாகசங்களை எதிர்த்து மக்களிடம் அவர்களின் மோசடிகளை அம்பலமாக்கினார்.

2010 முதல் மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என குரல் கொடுத்தார். இது இந்து மததிற்கு எதிரானது என அம் மாநிலக் கட்சிகளான பாரதீய ஜனதா, சிவ சேனா அமைப்புகள் கடுமையாக அவரை எதிர்த்தனர். இந்தப் பின்னணியில் தான் ஆகஸ்ட் 20, 2013ல் இந்துத்வா சனாதான குழுக்களை சார்ந்தோர் அவரை காலை நடைப் பயிற்சி சென்ற போது சுட்டுக் கொண்டனர். இவர்கள் சனாதன சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவரைத் தொடர்ந்து கோவிந் பன்சாரே, டாக்டர் கல்புர்கி, கெளரி லங்கேஷ் என வரிசையாக பகுத்தறிவு வாதிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் கொலை செய்தனர். அதன் பின்னர் அறிவு ஜீவிகள், விஞ்ஞானிகள், பகுத்தறிவுவாதிகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்தும் மாபெரும் பிரச்சார இயக்கமாக தேசிய அறிவியல் தினத்தை அனுசரிப்பது என மக்கள் அறிவியல் இயக்கங்கள் அறிவித்தன.

அறிவியல் மனப்பான்மைக்கான இயக்கம்:
எதையும் ஆதாரத்துடன் நம்புகள் என்றும் அதிக ஆதாரம் மிக்கதே மிகவும் நம்பகமானது என எளிய முறையில் மக்களிடம் விளக்கிய நரேந்தர் தபோல்கரின் கொள்கையின் அடிப்படையில் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. அறிவியல் தொழில் நுட்பம் வளர்க்கும் நோக்கம் மட்டுமிலாமல் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் நோக்கில் நமது அரசியல் அமைப்புச் சட்டதில் கடமைகளின் பிரிவு 51 எ எச்ன் கீழ் அறிவியல் மனப்பான்மையையும் மனித நேயத்தையும் வளர்த்துக் கொள்வதும், விசாரித்தறிவதற்கும், புதிய மாற்றத்திற்கான மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும் என இப்பிரிவு கூறுகிறது (Refer: Article 51 A (h) in The Constitution Of India 1949: to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform)

இந்த வருடம் 75வது விடுதலை ஆண்டின் இறுதியில் இந்தியா என்ற கருத்துருவாக்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அறிவியல் அணுகுமுறையில் மக்களிடம் விளக்கும் இயக்கமாக நடத்தப்பட உள்ளது. இந்தியா என்ற கருத்துவாக்கம் எல்லோரையும் உள்ளடக்கியது என்பதும்,சகிப்புத்தன்மை கொண்டதும், அது பன்முகத்தன்மை கொண்ட மக்களின் பண்பாடுகளைப் போற்றுவதும், மதிப்பதும் ஆகும். இது அறிவியல் மனப்பான்மை கொண்ட சமூகத்தின் மூலமே சாத்தியம் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் அறிவியல் வளர்சிக்கு மதச்சார்பின்மையும், மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகமும் அவசியம் என்பதும் இவ்விரண்டையும் உறுதி செய்ய அறிவியல் மனப்பான்மை அவசியம் என அறைகூவல் விடுக்கப்படுகிறது.

தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார,அறிவியல், தொழில்நுட்ப , வளர்ச்சிப் போக்கில் காணப்படும் அறிவியலற்ற அணுகுமுறைகளை மக்களிடம் விளக்கும் இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பது மட்டுமல்லாமல் போலி அறிவியலை வளர்க்கும் போக்கும், தற்சார்பு வளர்ச்சி என்பது கைவிடப்பட்டு அயல் நாட்டினை நம்பிய ஆத்மநிர்பாரத் என்ற போலி தற்சார்பையும் அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கும் இயக்கமாக நடத்தப்படுகிறது.

குறிப்பாக புதிய தேசியக் கொள்கை, அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை ஆகியனவற்றில் காணப்படும் பிற்போக்கான பரிந்துரைகளை விளக்கும் இயக்கமாக நடத்தப்பட உள்ளது. பண்டைய புராணங்களில் கூறப்பட்டுள்ள புனைவுகளை அறிவியலாக முன்நிறுத்தும் போக்கினைக் கைவிடவும், நவீன அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்பான மரபணு ஆராய்ச்சியை மனித இன வேறுபாடாக்கி மனித இனத்திற்குள்ளேயே உயர்வு தாழ்வு இனமாக பிளவுபடுத்தும் அறிவியலற்ற போக்கினை எதிர்க்கிறது.

”அறிவியல் மனப்பான்மை என்பது இயற்கை அறிவியலில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை சமூக வளர்ச்சிப்போக்கிலும் கையாளுவது ஆகும். சமூகத்தை உற்றுநோக்குவது, அதன் பிரச்சினைகளைக் கேள்விக்குள்ளாக்குவது, அதற்கான காரணங்களைக் கண்டறிய ஆராய்வது, அதன் அடிப்படையில் பிரச்சினைக்களுக்குத் தர்க்க ரீதியாகத் தீர்வு காண்பது. இந்த தர்க்க ரீதியான முறையை கைக் கொள்ளாமால் சென்றால் நமது சிந்தனை துருப்பிடித்துப் போவது மட்டுமில்லாமல் வன்முறை சிந்தனைக்கு வழிவகுக்கும். தற்போது காணப்படும் வன்முறைகள் அறிவியல் மனப்பான்மையின் வளர்ச்சியின்மையையே காட்டுகிறது. எனவே அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதற்கான நிகழ்வுகள் பள்ளிகள் கல்லூரிகளில் இளம் வயதிலேயே தொடங்கப்பட வேண்டும். இது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை மையப்படுதியதாக இருத்தல் அவசியம் ” என்கிறார் உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானி பார்த்தா மசூம்தார்.

ஃபிப்.28 தேசிய அறிவியல் தினம் பிரபலமாகக் கொண்டாடப்படுவது போல் ஆகஸ்ட் 20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக பிரபலமாக நாம் அனைவரும் கைகோர்ப்போம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *