தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 15 – டாக்டர் இடங்கர் பாவலன்
தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
15.தாய்ப்பால் வகுப்பறை-ΙΙΙ
பள்ளிக்கூடத்தில் தான் வீட்டுப் பாடம் தருவார்கள், இங்கேயுமா? ஆம், மருத்துவமனையில் கற்றுக் கொண்ட விசயங்களை வீட்டிலே தனிமையில் அமர்ந்து பிள்ளையும் நீங்களுமாக பயிற்சி எடுக்க வேண்டாமா? என்ன தான் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாலும் தனியாய் ஒரு விசயத்தை செய்யும் போது, நம்மைத் தனியே விட்டு இனி நீதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தள்ளிவிடும் போதும் தான் இன்னும் நிறைய விசயங்களைப் புரிந்து கொள்ளவே முடியும்.
வீட்டிலிருக்கிற காலங்களில் உண்டாகிற சந்தேகங்களை நம் செவிலியரிடம் அலைப்பேசியில் பேசி குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். அதேசமயம் தாய்ப்பால் புகட்டி பிள்ளையை வளர்த்தெடுத்த பின்பாக நாற்பத்திரண்டு நாட்கள் கழித்து பிள்ளைக்கு முதல் தவணையாகத் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனைக்கு நாம் செல்ல வேண்டியிருக்கும் அல்லவா! அப்போது வீட்டில் செய்த வீட்டுப்பாடத்தின் மூலம் பிள்ளைகள் எப்படித் தேறியிருக்கிறார்கள், எவ்வளவு எடை கூடியிருக்கிறார்கள், இன்னும் எத்தகைய கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும், எத்தகைய உணவுகளைப் பிள்ளைக்கு எந்த வயதிலிருந்து கொடுக்கலாம் என்பன உள்ளிட்டவைகளையும் கேட்டுத் தெளிந்து கொண்டு வீடு வந்து சேரலாம் தானே!
மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டிற்கு கிளம்புகையில் மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் கேட்டு விடைபெற்றுக் கொள்ளும் முன்பாக சில விசயங்களில் நாமுமே தெளிவு பெற வேண்டியிருக்கிறது. வீட்டிற்குச் சென்ற பின்பாக தாய்ப்பாலூட்டலிலும், குழந்தை வளர்ப்பிலும் ஏதேனும் சந்தேகமிருக்கையில் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் அழைத்துப் பேசலாமா, நேரில் எப்போது வேண்டுமானாலும் வந்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாமா? மீண்டும் அடுத்து எப்போது வந்து குழந்தையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டியிருக்கும், அதற்கு இடைப்பட்ட காலங்களில் என்னென்ன மருந்துகளைத் தொடர்ந்து நாங்கள் எடுக்க வேண்டியிருக்கும், மேலும் தன்சுத்தம், மார்பகம், குழந்தை பராமரிப்பு மற்றும் தாயிற்கான உணவுகள் தொடர்பாக ஏதேனும் முக்கிய ஆலோசனைகளைக் கேட்டுவிட்டு வீடு திரும்பலாம்.
வீடு திரும்பியவுடனே தான் நம்முடைய வீடுகளில் வழக்கமாயிருக்கிற சம்பிரதாய நடவடிக்கைகள் துவங்கிவிடுகிறதே! அப்போது பிள்ளை பெற்றவள் புகுந்த வீடு தீட்டாகிவிடுகிறது, அதனால் தானே பதினாறாம் நாள் வெள்ளையடித்து தீட்டைக் கழிக்கிறார்கள். அவள் புழங்குகிற பாத்திரங்கள்கூட அச்சமயத்தில் தீட்டாகிவிடும், அவற்றைத்தான் வீடு கூட்டுதல் என்று பழையனவற்றைக் கழித்துப் புது பாத்திரங்களை வாங்குகிறார்கள். அவர்களைச் சந்திக்கிற மனிதர்களுமே தீட்டுப்பட்டுவிடுவார்கள் என்பதால் தான் வீட்டில் தீட்டுக்கழிக்கிற பதினாறாம் நாள் வரையிலும் யாரும் வந்துசேர மாட்டார்கள். வீட்டில் கெட்ட ஆவிகள் நுழைந்துவிடக் கூடாதென்று மாதவிலக்கு உள்ளானபோது உலக்கையைப் போட்டவர்கள், இப்போது இரும்பினை வாசல் பார்த்துப் போட்டு வைப்பார்கள்.
இக்காலத்தில்தான் நற்குணமான வயசாளிகள் வந்து பிள்ளைக்குச் சேனை வைத்தால் அவர்களைப் போலவே நல்ல குணமாய் வருவார்கள் என்று தேனை, சர்க்கரைப் பாகுவை, பழைய கஞ்சியைக்கூட நாவில் தொட்டு வைக்கிற பழக்கமெல்லாம் நடக்கும். சில ஊர்களில் கழுதைப்பால் கொடுப்பது, கழுதைக் காதிலிருந்து கீறியெடுத்த இரத்தத்துளியை பஞ்சில் நனைத்து வாயில் சொட்டுவிடுவது உள்ளிட்டவைகளைச் செய்தால் சீக்கு அண்டாது, மஞ்சள்காமாலை வராது என்பது போன்ற அவர்களின் வழக்கமான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவர்.
பதினாறாம் நாள் விசேசத்தன்று ஒவ்வொரு சமூகத்திலும், மதத்திலும், பொருளாதாரம், தொழில், வழிபாடு சார்ந்து வெவ்வேறான சம்பிரதாயங்களைச் செய்வார்கள். அப்போது பிள்ளைக்குப் பேர் வைப்பது, அரைஞாண் அணிவிப்பது, தொட்டில் போடுவது உள்ளிட்ட சம்பிரதாயங்களெல்லாம் நடக்கும். அப்போதுதான் ஊர் உறவினர்களெல்லாம் ஒன்றுகூடி வந்து பிள்ளையைப் பார்த்து பாராட்டி சீராட்டுவதும், பெற்ற தாயை வாழ்த்திப் போற்றுவதும் எல்லாம் நடக்கும். அதேசமயத்தில் வந்தவர்கள் பிள்ளையின் பாலினம் சார்ந்து நாசுக்காக சொல்லிச் செல்வதும், பிள்ளையின் எடை வத்திப் போவது பற்றிய நெருப்பைக் கிள்ளிப் போட்டுப் போவதுமான இருக்கையில் புட்டிப்பால், சத்துமாவு, டானிக் என்று செயற்கையாக பாலூட்டலுக்கு தாயினை நகர்த்துவதும் நடக்கும்.
ஆக, இதிலிருந்தெல்லாம் ஒரே ஓட்டமாக தப்பிப்பிழைத்து கையோடு பிள்ளையையும் தப்புவித்து அவர்களுக்கு முழுக்க முழுக்க தாய்ப்பால் மட்டுமே தந்து வளர்த்தெடுப்பதெல்லாம் ஓட்ட பந்தயத்தைவிட அரியதொரு சாதனைதான். மேலும் வீட்டிலிருக்கிற காலங்களில் தாய்ப்பால் தொடர்பான சிக்கல்கள் எழும்போதுகூட அருகிலே உறவினர்கள் எவரேனும் பாலூட்டிக் கொண்டிருக்கையில் அவர்களிடம் உரிமையோடு போய் தாய்ப்பால் தொடர்பாகக் கலந்தாலோசித்துக் கொள்ளலாம். நம் பிள்ளைக்குப் பாலில்லை என்கிற போது அவசியப்பட்டால் அவர்களிடமே கொடுத்து பாலூட்டி அமர்த்தச் செய்யலாம். ஏனெனில் மனிதகுல வரலாற்றில் பெற்ற பிள்ளைக்குச் சகோதரி பாலூட்டிய, அத்தை பாலூட்டிய, அம்மா பாலூட்டிய நிகழ்வுகளெல்லாம் கூட நிகழ்ந்த மண்ணிது.
வீடுகளில் தாய்ப்பாலு புகட்டுவதற்கென தனியொரு இடத்தை ஒதுக்கிடத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். விருந்தினர்கள் திடுதிப்பென்று உள்நுழைகிற போது அசூசையாக அம்மாவிற்கு தோன்றாதளவிற்கு இடமிருந்தால் போதுமானதுதான். குழந்தையின் உடலுக்கு போதிய கதகதப்பு அவசியமாயிருப்பதால் அம்மாவின் தோலோடு நெருக்கம் தேவைப்படுகிற அதேசமயத்தில் வீடும் நல்ல வெளிச்சத்தோடு, கூடிய காற்றோட்டத்தோடு இருப்பது நல்லது. பாலூட்டுகிற பிள்ளையைப் போர்த்துவதற்கென தனியே துணிகளை நன்கு துவைத்து வெயிலில் உலர வைத்துப் பயன்படுத்துகையில் ஏனைய பூச்சிகள் வந்து பிள்ளையை துன்புறுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைக்கு மெத்தையென்றில்லாமல் வெறுமனே காட்டன் துணியில் போர்த்தி விரிப்பில் கிடத்தினாலே போதுமானதுதான். எப்போதும் தொட்டிலில் போடுவது என்றில்லாமல் அம்மா அயர்ந்து தூங்கியெழுகிற போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டில் பாலூட்டும் இடத்தில் அதற்குத் தேவையான அத்தனை பொருட்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முதுகுக்கும் மடியில் பிள்ளையை தாங்கிக் கொள்வதற்கான தாய்ப்பால் தலையணைகள், காட்டன் துண்டுகள், குழந்தைகள் சிறுநீர் மலம் கழித்த பின்பாகத் தேவைப்படுகிற மாற்று உடைகள், வெந்நீர் நிரப்பப்பட்ட பாட்டில்கள், தாய்ப்பால் நைட்டிகள், தாய்ப்பால் பிழிந்தெடுத்து சேகரிக்கப் பயன்படுகிற பொருட்கள், தாய்ப்பாலூட்டும் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய டானிக் மாத்திரைகள், மகப்பேறு மற்றும் தடுப்பூசி அட்டையென அருகாமையிலே வைத்துக் கொள்ளலாம். அதேபோல முக்கியமாக மருத்துவர், செவிலியர், மருத்துவமனை அலைப்பேசி எண், தடுப்பூசி அட்டவணை நாட்கள் போன்ற அத்தியாவசிய நாட்கள், நம்பர்களை டைரியில் குறித்து வைத்துக் கொண்டு அவசியப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் தானே!
– டாக்டர் இடங்கர் பாவலன்