நூல்: ஆயிஷா
ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 15
புத்தகம் வாங்க கிளிக் செய்க:  https://thamizhbooks.com/product/ayesha-ayisha-era-natrasan/

ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரையாக, நமக்கு முன்னே விரிந்து…பரந்து தன் இயல்புகளால் நம்மை நெகிழவைக்கும் ஆயிஷா… முடிவில் அதே இயல்புகளாலேயே திரும்பி வாராததொரு பயணத்திற்குப் பலியாகும் தன் பெருந்துயரத்தை, இந்தப் படைப்பின் வழியே வார்த்தைகளுக்குள் புதைத்து வலியாடுகிறாள் நம்மை.

இந்த குறு நாவலை எழுதியவர் ரா. நடராசன். பள்ளி தலைமை ஆசிரியரான இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

திண்டிவனத்திற்கு அருகே… கல்லூரி மாணவனொருவன்.. தான் கண்டுபிடித்த பாம்புக்கடிக்கான மருந்துக்குத் தன்னையே பரிசோதனைக் கருவியாக்கி பரிதாபமாக உயிரிழந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது தான் இந்த “ஆயிஷா”.

மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கல்வி முறைக்குச் சிறிதும் பொருந்தாத வகையில்… கல்வி முறையில் பெரும் மாற்றத்தினை விதைப்பதாக 1985 ம் ஆண்டு.. இருபது பக்கத்திற்குள்ளாக எழுதப்பட்ட இந்த நூல்… மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு பத்தாண்டுகளைத் தாண்டி 1996 ம் ஆண்டு கணையாழி இதழின் குறுநாவல் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றதன் தொடர்ச்சியாகத் தான் வெளிச்சத்திற்கு வர முடிந்தது.

அதன் பிறகு.. பெரும் வரவேற்பு பெற்ற இந்த நூல்.. ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரதிகளும், எட்டுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புமாக மிகப் பெரும் சாதனையைப் பெற்றுத் தந்தது. இதுமட்டுமில்லாது குறும்படமாகவும் , படக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த படைப்பு இது. இதன் தொடர்ச்சியாகத்தான்… இதன் ஆசிரியர் “ஆயிஷா நடராசன்” என்றே அறியப்பட்டார்.

வெறும் இருபது பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த படைப்பு… வாசகர்களின் மனதில் கலிவி முறை குறித்தான பல்வேறுபட்ட கோணங்களையும் பக்கம் பக்கமாகத் திறந்துவிட்டே செல்கிறது எனலாம்.

கேள்விகளைத் தொடுத்தே பழக்கப்பட்ட ஆசிரியப் பெருமக்களுக்கு… தான் தொடுக்கும் இடத்திலிருந்து முளைத்தெழும் கேள்வியை எப்படி சீரணிக்கமுடியும்?!
இப்படியான ஒரு அமைப்பின் கீழான வழமையில் … கேள்விகளும் அவற்றுக்கான தேடலுமாக வளையவரும் பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா.. தன் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கிறாள்.

அப்படியானதொரு கேள்வியின் புள்ளியில் தான் இந்த முன்னுரையை எழுதும் அறிவியல் ஆசிரியரும் ஆயிஷாவைச் சந்திக்கிறார். அந்தக் கேள்வி தன்னைத் தாக்கும் வரைக்கும்… தான் ஒரு பொருட்டாகவே நினையாத ஆயிஷா தான்… அதன்பிறகான அவளின் உறவில்.. தனது எந்திரத்தனமாயிருந்த சராசரி ஆசிரியைத் தன்மையை விடுத்து … கற்றலும் தேடலுமான நுகர்வின் முடிச்சில் தான் ஒரு புது ஆசிரியையாக உயிர்ப்பித்து மீண்டெழுந்த கதையை நினைவு கூறுகிறார்.

நியூட்டனும், பிராங்க்ளினும், The Most Dangerous Man In America வுமாக ஆயிஷாவின் கைகளில் தவழும் புத்தகங்களும், ஆயிஷாவின் கேள்விகளும் அவளது அறிவுசார் தேடல்களும் அடுத்தடுத்து அவளைச் சந்திக்க நேர்கையில் தன்னை பிரமிப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்று தான் வெகுவாக மிரண்டு போனதாகக் கூறும் இந்த அறிவியல் ஆசிரியர்.. அது முதல் ஆயிஷா தன்னை முழுவதுமாக வென்றுவிட்டதை இப்படியான வார்த்தைகளில் நமக்கு உணர்த்துகிறார்.. ” ஒரு செக்கு மாட்டிற்கு இதை விட அமர்க்களமாக யார் தான் ஊசி போட முடியும்..?”

இவ்வாறான புத்தகங்கள் ஏன் தமிழில் எழுதப்படவில்லை என்ற கேள்வியை இவர் முன் எடுத்து வைக்கும் ஆயிஷா….அதற்கான பொறுப்பையும் தன்னிடமே ஒப்படைக்க… அதன் பிறகு ஆயிஷாவைப் போலவே தானும் ஒரு புத்தகப் புழுவாக மாறிப்போன மாயங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.



பாடப் புத்தகத்தைப் பார்த்து ஆசிரியர் ஒப்பித்தலின் வழியே.. அப்படியே கேட்ட வார்த்தைகளையும் புத்தகத்தில் பார்த்த வார்த்தைகளையும் வரி பிசகாது தேர்வில் கக்கிவிடும் முறைமைக்குத் தப்பி… பாடம் குறித்த தனது புரிதலை தேர்வில் எழுதியதன் விளைவாக.. ” சொந்த சரக்குக்கெல்லாம் மார்க்கு இல்லை. நோட்சுல இருக்குறத அப்படியே எழுது..” என்று குற்றம் சாட்டப்பட்டு கெமிஸ்ட்ரி ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறாள் ஆயிஷா.

அடுத்து வந்த நாட்களில்… பதினோராம் வகுப்பு மாணவி ஒருத்திக்கு… வீட்டுப் பாடத்தில் கணக்கு ஒன்றை இவள் சொல்லித்தரப்போக.. பெற்றோர் வரைக்கும் புகார் விடுத்து பள்ளிக்கூடம் தண்டிக்க… பெற்றோர்களும் இவளைக் கண்டிக்கச் சொல்லி ஆசிரியரிடமே தன் பங்குக்கு முறையிட்டு நிற்க.. இப்படியாக தொடர்ந்து நாலாபுறமுமாக… தனது அறிவுத் தாகத்திற்கு… அதிகார போதையின் பிரம்பு மொழி தண்டனையாய் வரிவரியாய் குருதி குடிக்கப்படுகிறாள் ஆயிஷா.

இதுதவிர, எந்த ஆசிரியரிடமும் தனியாக டியூசன் செல்லாத காரணத்தாலும்.. வகுப்பில் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறாள் ஆயிஷா.

கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தனது தொழிலைக் கடினமாக்கும் ஒரு மாணவியை எந்த ஆசிரியர் தான் விரும்புவார்.. அதன் விளைவு… ஒவ்வொரு வகுப்பிலும் மாற்றி மாற்றி அடிக்கு மேல் அடி வாங்கும் தனது ரணமாகிப்போன துயரந்தோய்ந்த நாட்களின் முடிவில்.. ” டீச்சர் அடிச்சா வலிக்காம இருக்க ஏதாச்சும் மருந்து இருக்கா” என்று ஆயிஷா கேட்கையில்.. அய்யோ ஆயிஷா என்று வலியில் துடி துடிக்கிறது நம் இதயமும்.

அடுத்து வந்த நாளில், சர். ஹம்ப்ரி டேவியையும் அவரது கண்டுபிடிப்பான அறுவை சிகிச்சையின் போது உடலை மரத்துப் போகச் செய்கிற நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவைப் பற்றியுமான வகுப்புக்குப் பிறகு தான் விளையாடத் தொடங்குகிறது விதி…

டீச்சர்களிடம் தான் வாங்கும் அடி
வலிக்காது மரத்துப் போக வேண்டி
வேதியியல் லேபில் தனக்குக் கிடைத்த நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவை தனக்குத் தானே பரிசோதித்துக் கொண்டதன் விளைவாக…தன் ஒட்டுமொத்த ஆயுளையுமே தொலைத்து மொத்தமாய் மரத்துப்போன ஆயிஷாவின் மரணம் பாரித்துக் கிடக்கும் ஒரு அறிவுத் தேடலின் முகத்தைத் தன் அதிகாரப் பசிக்கு காவு வாங்கிக்கொண்ட கல்வித் துறையின் மேதாவித்தனத்தை வாசிக்க வாசிக்க கனத்துப் போகிறது நெஞ்சம்.

ஆயிஷாவை வாசித்து முடிக்கையில் இப்படியான சூழல்களில் இன்றுவரைக்கும் எந்தவிதமான மாற்றங்களும் இல்லையெனும் உண்மையின் வெக்கை அறைகிறது நம்மை.

பள்ளிக்கூடங்களின் உருவில் பலிகூடங்களாக உலகெங்கிலும் உலவிவரும் கல்வித்துறை அமைப்பின் கோரமுகத்தைத் தோலுரித்துக் காட்டிய எச்சரிக்கை மணி தான் இந்த ஆயிஷா.

ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோர்களும் அவசியம் வாசித்துணர வேண்டிய அற்புதமான படைப்பு இது.

இனிவரும் காலங்களில் இப்படியான ஆயிஷாக்களின் இழப்புகளை நாம் சந்திக்காதிருத்தலே இந்தப் படைப்பின் ஆகப்பெரும் வெற்றி எனலாம்.

நூல்: ஆயிஷா
ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 15
புத்தகம் வாங்க கிளிக் செய்க:  https://thamizhbooks.com/product/ayesha-ayisha-era-natrasan



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *