பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்: ச.வீரமணி

பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்: ச.வீரமணி1. பகத்சிங் பிறந்தநாள் ஆண்டுவிழா:

(பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன)

சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்: ச.வீரமணி)

2020 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 113ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.

விடுதலை நாயகன் பகத்சிங் 2

பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.

தில்லி வெடிகுண்டு வழக்கு

இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.

இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:

சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.

புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):

பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: “எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் – மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மள அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்”

ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத் சிங்! – Malaysiakini

பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர் அவர்களைப் பார்த்து, இந்த முழக்கத்தின் பொருள் என்ன என்று கேட்டார். புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள் என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

 ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக்கொண்டுள்ள இப்போதை சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான். உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமானமுறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது.  ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்

இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.

‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.

இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.

எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.

சுதந்திரப் போராட்ட விடிவெள்ளி பகத் சிங் - Puthiya Vidial, Puthiya Vidiyal

சமூக அமைப்புக்கு எதிராகவே,
எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல

தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …”  “நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

“இந்திய மக்களாகிய நாம்,” என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய  இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.

வகுப்புவாதம் (எதிர்) மதச்சார்பின்மை

1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.

விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து – முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.

இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.

இதற்கு மாற்றுமருந்து என்ன? . ‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். “மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை,” என்று அவர்கள் நம்பினார்கள்.

தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.

மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.”

எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:

“இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர்.  கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.”

Remembering Udham Singh: The avenger of the Jallianwala Bagh Massacreஊடகங்கள்

மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:

“நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.”

“இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில்  வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன.  ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.

“செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், “இந்துஸ்தான் என்னவாக மாறும்?” என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.”        

இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.

Introduction of electoral bond is violation of Constitution: Sitaram Yechury

சமூக நீதி

பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:

“… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் – தீண்டமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது.  அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?”

பகத்சிங், “நான் ஏன் நாத்திகன்” கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!

இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *