மத்திய அரசாங்கம், இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரக் கருதுகிறது. இதற்காக 2019 டிசம்பரில் மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, இந்தியத் தண்டனைச் சட்டத்திலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும், குண்டர் கும்பல் கொலைபுரிகின்ற பிரச்சனையைக் கையாளக்கூடிய விதத்தில், திருத்தங்கள் செய்வதற்குத் தேவையான மாற்றங்களை மதிப்பிடுவதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

மே 4 அன்று ஓர் அறிவிக்கையின் மூலமாக, உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு தில்லி, தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தலைமையில் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் ஜி.எஸ். பாஜ்பால், ஜபல்பூர், தாராசாஸ்த்ரா தேசியப் பல்கலைக் கழக முதல் துணை வேந்தர், பால்ராஜ் சௌஹான், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜேத்மலானி, தில்லி, முன்னாள் மாவட்ட – அமர்வு நீதிபதி, ஜி.பி. தரேஜா ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கிறது.

இந்தக் குழு, ஜூலை 4 அன்று பொதுக் கலந்தாலோசனைக்காக ஒரு வினாப்பட்டியலை (questionnaire) வெளியிட்டிருக்கிறது. இதில் கடுமையான குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின்கீழ் பொது விலக்குகள், அரசுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வகையான பிரிவுகள் குறித்தும் சுமார் 50 கேள்விகள் அடங்கியிருக்கின்றன.

மேலும், மனித உடலின்மீது ஏற்படுத்தப்படும் குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்தும் பொதுக் கருத்து இக்குழுவால் கோரப்பட்டிருக்கிறது. இதற்காக மக்களுக்கு அது அளித்துள்ள கால அவகாசம் ஜூலை 17 வரையிலாகும். அதாவது அது வெளியிடப்பட்ட தேதியிலிருந்து வெறும் 13 நாட்களேயாகும்.

டெல்லி வன்முறை சம்பவத்தை ...

இது தொடர்பாக இக்குழுவிற்கு ஜூலை 8 அன்று உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள நீதியரசர்கள், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் கிரிமினல் நீதி பரிபாலன அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் 69 பேர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள். அதில் அவர்கள், “ நீதி சம்பந்தமாக அரசமைப்புச்சட்டத்தின் விழுமியங்கள், தனிநபரின் கண்ணியம் மற்றும் தனிநபர்களின் உள்ளார்ந்த மதிப்புக்கு முன்னுரிமை அளித்துள்ள அரசமைப்புச்சட்டத்திற்கு ஒத்துப்போகக்கூடிய விதத்திலும் அங்கீகரிக்கும் விதத்திலும் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்,” என்று கோரியிருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் தங்களுடைய கடிதத்தில், அமைக்கப்பட்டுள்ள குழுவில், சமூக அடையாளங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய விதத்திலும், தொழில்முறை பின்னணி மற்றும் அனுபவங்களைக் கொண்ட பல்வேறு தரப்பினரும், இடம் பெறாததைச் சுட்டிக்காட்டிக் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

சட்டங்களில் திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக 22ஆவது இந்திய சட்ட ஆணையம் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த ஆணையம்தான் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமானால் பரிந்துரைத்திட வேண்டும். இந்த ஆணையத்திற்கு என்று முழு நேர உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சொந்த செயலகம் மற்றும் ஊழியர்கள் இருக்கிறார்கள். மிகவும் வளமையான பாரம்பர்யமிக்க சட்ட நிபுணர்கள் இந்த ஆணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம், இவ்வாறு திருத்தங்கள் செய்ய வேண்டிய பணிகளை, ஏன் இந்த ஆணையத்திடம் வழங்க விரும்பவில்லை என்று தெரியவில்லை.

அரசாங்கம் அமைத்துள்ள குழு தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தங்களுக்கு உண்மையானவர்களாக இருப்பதை உத்தரவாதப்படுத்திட, அதன் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் அமைந்திட வேண்டும் என்றும் அதற்கு கீழ்க் கண்ட விவரங்களை பொது வெளியில் பகிர வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் இக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

1. இக்குழுவை அமைத்திட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை,(அ) இக்குழுவின் ஆய்வு வரையறைகள் (Terms of Reference) மற்றும் (ஆ) இக்குழு தன் பணியைச் செய்துமுடிப்பதற்கான காலக்கெடு ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

2. தில்லி, தேசியச் சட்டப் பல்கலைக் கழகத்தால் அல்லது அதன் உறுப்பினர்களால் அல்லது ஆராயச்சி மையங்களால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அல்லது வேறேதேனும் அதிகாரக் குழுமத்துக்கு இக்குழுவின் செயல்பாடுகள் சம்பந்தமாக ஏதேனும் முன்மொழிவுகள் (proposal) அல்லது கருத்துக் குறிப்புகள் (concept note) அனுப்பியிருக்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்திட வேண்டும்.

3. இக்குழு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலோ அல்லது வேறெந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலோ இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படுமா என்பதையும், குறிப்பாக இது சமர்ப்பித்திடும் அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தினால் கலந்தாலோசனை செய்யப்பட்ட பின்னரே இறுதிப்படுத்தப்படுமா அல்லது வேறெந்த அமைச்சகத்துடன் கலந்தாலோசனை செய்து இறுதிப்படுத்தப்படுமா என்பதையும் தெரிவித்திட வேண்டும்.

மேலும், மேற்படி கடிதத்தில் இந்தக்குழு அளிக்கப்போகிற அறிக்கையானது நாட்டின் கிரிமினல் நீதி அமைப்புமுறையில் கடுமையான முறையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகையால், இது மேற்கொள்ளவிருக்கும் திருத்தங்கள் தொடர்பாக அர்த்தமுள்ள விதத்தில் பரந்து விரிந்த அளவில் அனைத்துத்தரப்பினருக்கும் வாய்ப்பும் பொறுப்பும் கொடுத்து கருத்துக்களைக் கோரிப் பெற வேண்டியது இக்குழுவிற்கு அவசியமாகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே இதன் செயல்பாடுகள் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

IPC, CrPC in for change as Union home ministry tries to speed up ...

மேலும் இதுதொடர்பாக அவர்கள் கீழ்க்கண்டவாறு ஏழு கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள்.

(1)இக்குழு பதில்கள் கோரியிருக்கிற கேள்விகள் அனைத்தையும் ஒரே தவணையில் வெளியிட வேண்டும்.

(2)இக்கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிப்பதற்குக் குறைந்தபட்சம் மூன்று மாத கால அவகாசம் அளித்திட வேண்டும்.

(3)இந்த வினாப்பட்டியல் நாட்டிலுள்ள பெரியமொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும்.

(4)கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு வார்த்தைகளுக்கு வரம்புகள் விதித்திருப்பதை நீக்கிட வேண்டும்.

(5)பல்வேறு விதங்களில் நிபுணத்துவம் பெற்றிருப்பவர்களையும், பல்வேறு தரப்பினரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

(6)விவரங்களை சேகரிப்பதற்கு கூடுதலான முறையில் நிர்வாக ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

(7)வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப்படுத்தி, நிறைய பேர் செயல்படும் விதத்தில் குழு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள குழு, யாரோ அடையாளம் தெரியாத சிலரால் பொறுக்கி எடுக்கப்பட்டு தரப்பட்ட நபர்கள் போன்றே தோன்றுகிறது. இந்தக் குழு பல்வேறு தரப்பினரைக் கொண்ட ஒரு குழு என்று சொல்ல முடியாது. பெண்கள், தலித்துகள் மற்றும் இதர விளிம்புநிலைப் பிரிவினர், அதாவது தொழிலாளர்கள் விவசாயிகள் இதில் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். நாட்டில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற குடிமை சமூகம் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது. இக்குழு அணுகுமுறை ஆவணம் அல்லது பரிந்துரைகள் எதையும் வெளியிடவில்லை. மாறாக ஒரு வினாப்பட்டியலை மட்டும் வெளியிட்டிருக்கிறது. இவர்களின் செயல்பாட்டில் பொதுமக்கள் பங்கேற்கும் விதத்தில் எந்த கட்டமைப்பு ஏற்பாடும் (structured mechanism) இல்லை.

அரசாங்கம் இப்போதாவது தன் தவறை உணர்ந்து திருத்திக்கொண்டு, மாற்றங்களைச் செய்திடும் பணியை, இந்திய சட்ட ஆணையத்திடம் ஒப்படைத்திட வேண்டும். அல்லது தான் அமைத்திருக்கிற குழுவை மேலும் விரிவான ஒன்றாக குறிப்பிட்ட ஆய்வு வரையறைகளுடனும், காலக்கெடுவுடனும் அமைத்திட வேண்டும். அடுத்த சில மாதங்கள் இவை தொடர்பாக சுறுசுறுப்பான முறையில் விவாதங்கள் நடக்கக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும்.

(கட்டுரையாளர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்.)

(People’s Democracy, 19.7.2020)

 

 

One thought on “கிரிமினல் சட்டங்களில் மாற்றங்கள்: அரசின் குழு அவசரப்படுவது ஏன்? -சோம் தத்தா சர்மா (தமிழில்: ச.வீரமணி)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *